உறவுகள் மலர

 

கேளுங்கள், குறை சொல்லாமல்... !

இதோ, நமக்கு நன்கு அறிமுகமான ஒரு காட்சி: மாலை நேரத்தில் கணவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். மனைவி சமையல் அறையில் பரபரப்பாக பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

திடீரென தொலைபேசி அழைக்கிறது. யார் அதை எடுப்பது? தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் கணவனா, அல்லது சமையல் செய்துகொண்டிருக்கும் மனைவியா?

மற்றவர் செய்வார் என்று இருவரும் அமைதி காக்க, தொலைபேசி ஓயாமல் அழைத்து, அடம் பிடிக்கிறது. இருவருக்குமே எரிச்சல் உணர்வு எகிறுகிறது. "நான்தான் இங்கே சமைத்துக்கொண்டிருக்கிறேனே, நீங்க ஒரு வேலையும் பாக்காம டி.வி.தானே பார்த்துக்கொண்டிருக்கிறீங்க. அதைக் கொஞ்சம் எடுத்தால் என்ன?" என்று மனைவி குமுற, "வேலை முடிந்து எவ்வளவு களைப்பாக வந்திருக்கேன். கொஞ்சம் ஓய்வெடுக்கக்கூட முடியலியே" என்று கணவன் அங்கலாய்க்கிறார். மனைவி "அப்படி என்னதான் வேலை செஞ்சு முறிச்சிட்டீங்களோ" என்று புலம்ப, "இந்த வீட்டில நிம்மதியே கிடையாது" என்று கணவன் ஆத்திரப்படுகிறார்.

இந்த உரையாடல் அப்படியே அமுங்கி விடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆத்திரம் அதிகரித்து, வாய்ச்சண்டையில் போய், கண்ணீரில் முடியவும் செய்யலாம். சில வேளைகளில் அடிதடி வன்முறையிலும் கொண்டு சேர்க்கலாம்.

இது உறவுப் பரிமாற்றத்திலுள்ள சிக்கலின் வெளிப்பாடு. உறவை வளர்ப்பதற்குப் பதிலாக, குலைக்கும் நிகழ்வு. ஆனால், ஆய்வு செய்து பார்த்தால், கணவன், மனைவி இருவருமே இரக்கத்திற்குரியவர்கள்தான். ஒருவர் ஒருவர்மீது பரிவு காட்டுவதற்குப் பதிலாக, கோபம் கொண்டு உறவை முறிக்க முனைகின்றனர்.

இந்த நிகழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன:

1. நிகழ்வு: தொலைபேசி மணி அடிக்கிறது. கணவன், மனைவி இருவரும் எடுக்கவில்லை

2. பார்வை: கணவன் நினைக்கிறார்: "மனைவி எடுத்திருக்கலாம். ஆனால், நான் ஓய்வெடுப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, எடுக்கவில்லை". மனைவி நினைக்கிறார்: "கணவர் எடுத்திருக்கலாம், ஆனால், அவர் சோம்பேறி, அக்கறை இல்லாதவர், எனவே எடுக்கவில்லை".

3. உணர்வுகள்: கணவன், மனைவி இருவரும் எரிச்சலும், கோபமும் கொள்கின்றனர்.

4. விளைவு: வாய்ச் சண்டை, பூசல்கள்.

உளவியல் வல்லுனர்கள் இந்த நிகழ்வை ஆய்வு செய்து, இதற்கு மாற்றாக வேறு நான்கு படிகளைப் பரிந்துரைக்கின்றனர்.

1. நிகழ்வு: தொலைபேசி மணி அடிக்கிறது. கணவன், மனைவி இருவரும் எடுக்கவில்லை.

2. விமர்சனமற்ற பார்வை: கணவன் நினைக்கிறார்: "மனைவி எடுத்திருக்கலாம். ஆனால், அவள் சமையல் அறையில் வேலையில் இருக்கிறாள். எனவே, எடுக்கவில்லை". மனைவி நினைக்கிறார்: "கணவர் எடுத்திருக்கலாம், ஆனால், அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார், எனவே எடுக்கவில்லை".

3. உணர்வுகள்: கோபம், எரிச்சல் வரவில்லை. மாறாக, ஒரு விதமான புரிதல் மற்றும் பரிவு உணர்வு தோன்றுகிறது.

4. தேவையை வேண்டுகோளாக விடுத்தல்: கணவன் சொல்கிறார்: "டியர், எனக்குக் களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் இந்த தொலைபேசியை எடுப்பாயா? " மனைவி கேட்கிறார்: "ஏங்க, நான் சமையலின் நடுவே இருக்கிறேன். கொஞ்சம் தொலைபேசியை எடுப்பீங்களா? "

5. விளைவு: யாராவது ஒருவர் தொலைபேசியை எடுக்கிறார். யாருமே எடுக்காவிட்டாலும், ஆத்திரமோ, சண்டையோ வரவில்லை. ஒருவர் மற்றவரின் ஆளுமையைத் தாக்கிப் பேசவில்லை. உறவு குலையவில்லை.

பொதுவாக ஒவ்வொரு நிகழ்வையும் நாம் பார்க்கின்ற பார்வையில் ஒரு விதமான திறனாய்வு, விமர்சனம் (தரனபநஅநவெ) வந்துவிடுகிறது. இதுதான் உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. உணர்வுகள் சொல் அல்லது செயல் வன்முறையில் முடிகின்றன. எனவே, திறனாய்வற்ற, விமர்சனமற்ற பார்வையில் வளர நாம் தீவிரமான முயற்சியெடுக்க வேண்டும். நம்மை நாமே ஆய்வு செய்து, தன்னுணர்வில் வளர்ந்தால், விமர்சனமற்ற பார்வையை வளர்த்தெடுக்கலாம்.

சில எடுத்துக்காட்டுகள்:

1. இந்த ஆடையில் நீங்கள் நன்றாக இல்லை. (இந்த ஆடை உங்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.)

2. நேற்று நீங்கள் எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொண்டீர்கள். (நேற்று நீங்கள் நடந்த விதம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.)

3. இந்த மாணவன் சோம்பேறி. (இந்த மாணவன் விரைவாக செயல்படுவதில்லை. அல்லது இன்னும் வேகமாக செயல்படலாம்.)

அதுபோல, வேண்டுகோள் விடுப்பதும் உறவை வளர்க்கும் சிறந்த உத்தியாகும். பிறரைக் குறை சொல்வதற்கு, அல்லது குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக நமது தேவைகளை எடுத்துரைத்து, வேண்டுகோள் விடுப்பது சாலவும் நன்று.

சில எடுத்துக்காட்டுகள்:

1. ஏன் நீங்க சும்மா நின்றுகொண்டிருக்கிறீர்கள். (குறை)--- இதைக் கொஞ்சம் எடுத்துத் தருவீங்களா? (வேண்டுகோள்).

2. வேலை, வேலைன்னு ஏன் அலையிறீங்க? (விமர்சனம்) --- என்னோடும் கொஞ்சம் நேரம் செலவழிப்பீங்களா? (வேண்டுகோள்).

3. இதெல்லாம் ஒரு தேநீரா? (குறை) --- கொஞ்சம் பால் சேர்ப்பீங்களா? (வேண்டுகோள்).

நமது உரையாடல்களில் குறைசொல்லும், குறை காணும் சொற்களைத் தவிர்த்து, நமது தேவைகளை எடுத்துச்சொல்லும் புதிய அணுகுமுறையை ஒரு பழக்கமாக்க வேண்டும். எல்லா வேண்டுகோள்களும் நிறைவேற்றப்படாமல் போகலாம். ஆனால், உறவை வளர்க்கும்.

அடுத்த முறை, இந்த உத்தியைக் கடைப்பிடித்துப் பாருங்கள்! உங்கள் உறவுகள் மேம்படும்!

- தந்தை குமார்ராஜா -