திருவழிபாடு உட்புகுமுன் 1. முன்னுரை சமயங்களின் ஆழ்ந்த உணர்வுகளை எடுத்துரைப்பதற்கும் கடவுள்-பிறர் இவர்களோடு உள்ள உறவை ஆழப்படுத்துவதற்கும் வழிபாடுகள் வழிமுறைகளாகின்றன. எனவேதான் இடம், காலம், சூழல்களுக்கு ஏற்ற வழிபாடுகள் தேவை என்ற எண்ணத்தில், நிறுவனமாக்கப்பட்ட சமயங்கள் வழிபாடுகளை மாற்றி அமைப்பதற்கும், வழிபாடுகளைப் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை வழங்குவதற்கும் முன்வருகின்றன. இதற்குக் கத்தோலிக்கத் திருச்சபையும் விதிவிலக்கல்ல. இவ்வாறு காலத்தின் அறிகுறிகளை அறிந்து செயல்பட வேண்டும், நம்பிக்கை கொண்டோரிடையே கிறிஸ்தவ வாழ்வை நாளுக்கு நாள் வளர்க்க வேண்டும், மாற்றங்களுக்கு உட்பட்ட நிறுவனங்களை இக்காலத் தேவைகளுக்கு ஏற்ப நன்முறையில் தழுவி அமைக்க வேண்டும், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட வேண்டும், திருச்சபையின் அரவணைப்பில் அனைவரையும் கொண்டுவர வேண்டும் என்னும் நோக்கங்களுக்காகக் கூட்டப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் வழிபாடு பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளுள் முதலாவதாக வெளியிடப்பட்டது. திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கமே என்பது குறிப்பிடத்தக்கது. சங்கம் வெளியிட்ட கொள்கை விளக்கங்கள் யாவற்றிலும் மிகத் தெளிவான, திட்டவட்டமான ஒரு தொகுப்பு இது. இதற்குப் பின் வெளிவந்த ஒரு சில கொள்கை விளக்கங்களுக்கு இது அடித்தளமாகவும் இருந்தது. 2. ஏடு தோன்றிய வரலாறு இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளுள் முதலாவதாக வெளியிடப்பட்டது திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் என்றால் அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே திருவழிபாட்டுச் சீர்திருத்தம், மறுமலர்ச்சி இவற்றைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது பிரான்சு நாட்டிலே சிறப்பாக நிகழ்ந்தது. |
எனினும், வழிபாட்டு மறுமலர்ச்சி இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உயிர்பெற ஆரம்பித்தது. திருத்தந்தை பத்தாம் பீயு திருவழிபாட்டைத் திருத்தி அமைக்கும் காலம் வந்துவிட்டது என்று அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். வழிபாட்டில் திரு இசை (1903), சிறுவர்களுக்கு நற்கருணை வழங்குதல் (1905), திருப்புகழ் மாலைச் சீர்திருத்தம் (1911), செயலார்வத்துடன் திருவழிபாட்டில் பங்கேற்பு (1913) போன்றவற்றை அவர் வலியுறுத்தினார்.
1909 ஆம் ஆண்டு திருவழிபாட்டு மறுமலர்ச்சி இயக்கம் தொடங்கியது என்று சொல்லலாம். ஏனெனில் இந்த ஆண்டு பெல்ஜியத்தில் மலீன் என்ற இடத்தில் கத்தோலிக்கப் பொது மன்றம் ஒன்று கிறிஸ்தவ வாழ்வு, நம்பிக்கை, அருள்வாழ்வு, இவற்றை ஆழப்படுத்துவது திருவழிபாடுதான் என்று சுட்டிக் காட்டியது; வழிபாடு ஒரு குழுக்கொண்டாட்டம், கிறிஸ்துவின் மீட்புப் பணியின் செயலாக்கம் என்ற விளக்கம் எழுந்தது இரண்டு உலகப் போர்களுக்கு உட்பட்ட காலத்தில் குறிப்பாக ஜெர்மனியில் வழிபாட்டு மறுமலர்ச்சி இயக்கம் இறையியல் தத்துவங்களை வலியுறுத்தியது. 11ஆம் பீயு வழிபாடு பற்றி 1928 இல் வெளியிட்ட சுற்றுமடலில் வழிபாட்டில் மக்களுடைய செயலார்வமுள்ள பங்கெடுப்பை வலியுறுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மறுமலர்ச்சி இயக்கம் ஜெர்மனி நாட்டில் வலுப்பெற்றது. தூய பெனதிக்து சபையைச் சேர்ந்த துறவிகளே பெரும்பாலும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பிரான்சிலும் 1943 இல் திருவழிபாட்டு நடுநிலையம் அமைக்கப்பட்டது. நிறுவனமாகிவிட்ட வழிபாடுகள் வாழ்வோடு தொடர்பு இல்லாமல் போனதால் உலகப் போர்களுக்குப்பின் மறுமலர்ச்சியின் தேவை அதிகமாக உணரப்பட்டது.
திருவழிபாட்டு மறுமலர்ச்சி இயக்கம் படிப்படியாகப் பல இடங்களிலும் வளர்ந்துவந்த வேளையில் திருச்சபைத் தலைமை இடம் அந்த இயக்கத்திற்கு அதிகாரப் பூர்வமான ஆதவைக் கொடுக்க ஆரம்பித்தது. 12ஆம் பீயு திருவழிபாட்டு இயக்கத்தை ஆதரித்து அதன் மறுமலர்ச்சிக்குப் பல ஆக்கப்பூர்வமான வழிமுறைகளையும் கொடுத்தார். 'இறைவனின் இணைப்பாளர்' என்ற தலைப்பில் 1947ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட சுற்றுமடல் குறிப்பிடத்தக்கது. மேலும் பாஸ்காத் திருவிழிப்பு (1951), தூய வாரம் (1955), திருஇசை (1955) ஆகியவை குறித்துச் சீர்திருத்தங்களை அவர் கொணர்ந்தார்.
1950 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் ஐரோப்பிய நாடுகளில் திருவழிபாடு பற்றிய அகில உலகமாநாடுகள் நடைபெற்றன. இவற்றில் வல்லுநர்களும் ஆயர்களும் பங்கெடுத்து, குறிப்பிட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்தனர்.
1952லிருந்து திருச்சபையின் தலைமை இடமும் இம்மாநாடுகளில் பங்கேற்றது.
மேலே குறிப்பிட்ட மறுமலர்ச்சி இயக்கம் இரண்டாம் வத்திக்கான் சங்கத் திருவழிபாட்டுக் கொள்கை விளக்கத்திற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.
பொதுச் சங்கத்தில் திருவழிபாடு பற்றி விவாதிப்பதற்கு ஏடு ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவுக்குக் கர்தினால் கயத்தானோ சிக்கோ ஞானி தலைவராகவும், புனிஞ்ஞி அடிகள் செயலராகவும் பணியாற்றினர். திருவழிபாடு பற்றிய விவாதத் தொகுப்பு 1962 ஆம் ஆண்டு நடந்த முதல் பொது அமர்வில் அக்டோபர் 22ஆம் நாளிலிருந்து நவம்பர் 13 ஆம் நாள் வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 1963ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் திருவழிபாடு பற்றிய ஏட்டின் மீது இறுதி வாக்கெடுப்பு நடந்தது. 2147 பேர் ஆதரவாகவும் 4 பேர் எதிராகவும் வாக்களித்தனர். திருத்தந்தை ஆறாம் பவுல் சங்கத்தின் இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் அதனை வெளியிட்டார்.
3. ஏட்டின் உள்ளடக்கச் சுருக்கமும் கூறுகளும்
திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் வழிபாட்டின் இறையியலைச் சிறந்த முறையில் விளக்குகிறது. திருச்சபையில் வழிபாட்டின் பொருளும் செயல்பாடும் என்ன என்பதை முன்வைக்கிறது. விவிலியம், திருச்சபைத் தந்தையர், பிற கிறிஸ்தவ சபைகள் பற்றிய அணுகுமுறையை விளக்குகிறது; அருள்பணி சார்ந்த செயல்முறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. பண்பாட்டுமயமாக்கலுக்கும் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
இந்தக் கொள்கை விளக்கத்தின் அமைப்பு ஏழு இயல்களைக் கொண்டுள்ளது. திருவழிபாட்டைச் சீர்ப்படுத்துவதற்கும் அதைப் பேணி வளர்ப்பதற்குமான பொதுத் தத்துவங்கள் முதல் இயலிலும், நற்கருணை என்னும் மறைபொருள் இரண்டாவது இயலிலும், பிற அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் மூன்றாவது இயலிலும், திருப்புகழ்மாலை நான்காவது இயலிலும், திருவழிபாட்டு ஆண்டு ஐந்தாவது இயலிலும், திரு இசை ஆறாவது இயலிலும், திருக்கலை மற்றும் திருவழிபாட்டுப் பொருள்கள் ஏழாவது இயலிலும் விளக்கப்படுகின்றன.
திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் பல இறையியல் கூறுகளை உள்ளடக்கும். முதலாவதாக, இவ்வேடு நிறைவாழ்வு வரலாற்றைக் குறிப்பதாக இருக்கின்றது. இயேசு தமது முழு வாழ்வினால், முக்கியமாக தம் வாழ்வின் சிகரம் போன்ற நிகழ்வுகளாகிய இறப்பு, உயிர்த்தெழுதல், விண்ணெற்றம் ஆகியவற்றால் மனித இனத்தை மீட்டார். திருவழிபாடு இந்தப் பாஸ்கா மறைபொருளை மீண்டும் செயலாக்கி, அதில் நம்மைப் பங்கெடுக்க வைத்து, அதை நம் வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்கிறது. இந்தப் பாஸ்கா மறை பொருள் திருச்சபையின் தொடக்கமும் அடிப்படையும் குறிக்கோளும் ஆகும். ஆகையால் கிறிஸ்து என்றுமே திருச்சபையில் உடன் இருக்கிறார். எனவேதான் திருவழிபாடு திருச்சபையின் ஊற்றும் சிகரமுமாக இருக்கிறது. நிறைவாழ்வு அலுவல் ஒரு தொடர் தேடல் என்பதை இவ்வேடு வலியுறுத்துகிறது.
இரண்டாவதாக திருச்சபையைப் பற்றிய ஒரு புதிய புரிதலை இந்த ஏடு வழங்குகிறது. படிநிலை அமைப்பதாகத் திருச்சபையைப் பார்க்காமல், அதை இறைமக்கள் சமூகம் என்ற அடிப்படையில் அணுகுகிறது இந்தக் கொள்கை விளக்கம். எனவேதான் திருச்சபையின் உறுப்பினர்கள் அரச மக்கள், தூய இனம், பணியாளர் குலத்தினர், கடவுளின் அழைப்பிற்குச் செவிமடுத்துக் கிறிஸ்துவில் புதிய மனிதர்களாகி, கடவுளின் சாட்சிகளாகத் திகழ்கிறவர்கள் என்றெல்லாம் கூறுகிறது.
மூன்றாவதாக, கடவுள் இவ்வுலகில் குடிகொண்டுள்ளார், மனிதரின் விடுதலைக்காக உழைக்கிறார் என்ற தத்துவத்தையும் இவ்வேடு நமக்கு விளக்குகிறது.
நான்காவதாக, திருவழிபாட்டுக் கூட்டம் திருச்சபையின் இயல்பையும் பணியையும் குறித்துக் காட்டும் வெளி அடையாளம். அதாவது திருவழிபாட்டின் வழியாக கிறிஸ்துவின் மறை பொருளையும் திருச்சபையின் உண்மை இயல்பையும் இறைமக்கள் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிறார்கள்.
ஐந்தாவதாக, மேற்கூறிய இறையியல் கூறுகள் தவிர பல அருள்பணிக் கூறுகளும் இவ்வேட்டில் காணப்படுகின்றன. மக்களின் செயல் முறைப் பங்கேற்பு, வழிபாட்டில் விவிலியம், மறைக்கல்வியின் பங்கு, வழிபாடுகளில் பயன்படுத்தப்பெறும் மொழி, வழிபாடுகளில் பண்பாட்டுமயமாக்கலின் அவசியம் முதலிய பல கூறுகளை இந்த ஏடு அருள்பணிப் பார்வையில் அணுகுகிறது.
4. ஏட்டின் செயலாக்கத்தைப் பற்றிய விமர்சனம்
திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தைச் செயல்படுத்துவதற்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக அளவில் 1964ஆம் ஆண்டு சனவரி திங்கள் 6ஆம் பவுல் இக்கொள்கை விளக்கத்தைச் செயல்படுத்துவதற்குப் பணிக்குழு ஒன்றை நிறுவினார்.
1965ஆம் ஆண்டிலிருந்து இந்தக் குழு ''செய்திகள்'' என்ற தலைப்பில் ஒருமாத இதழை ஆரம்பித்தது. இந்த இதழ் வழியாகப் பலதகவல்கள் வழங்கப்பட்டன.
மேலே குறிப்பிடப்பட்ட பணிக்குழுவின் தலையாய கடமை வழிபாட்டு நூல்களைத் திருத்தி அமைப்பதுதான். வழிபாட்டிலுள்ள சடங்கு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழிபாட்டு மறைக்கல்வி தேவையாக இருந்தது. இதனால் 1964, 1967, 1970 ஆகிய ஆண்டுகளில் மூன்று போதனை ஏடுகள் வெளியிடப்பட்டன. 1964இல் வெளியிடப்பட்ட முதல் போதனை ஏட்டில் நற்கருணை பற்றிய பொதுவான தத்துவங்கள், பிற அருளடையாளங்கள், அருள் வேண்டல் குறிகள், திருப்புகழ்மாலை பற்றிய வழி முறைகள் அடங்கியிருந்தன. மேலும், வழிபாடு பற்றிய விவரங்களும் ஆயர்கள் செய்ய வேண்டியவையும் அதில் குறிப்பிடப்பட்டன.
இரண்டாவது போதனை ஏடு 1967இல் வெளியிடப்பட்டது. வழிபாடுகளில் தேசிய, மண்டல மொழிகளைப் பயன்படுத்துவதின் தேவை இவை ஏட்டில் வலியுறுத்தப்பட்டது. சடங்கு முறைகள் குறைக்கப்பட்டன.
1970 இல் மூன்றாவது போதனை ஏடு வெளிவந்தது. மாற்றப்படக் மூடாத சில வழிபாட்டு முறைகளை இந்த ஏடு குறிப்பிட்டது. மேலே குறிப்பிட்ட மூன்று போதனை ஏடுகளும் வழிபாட்டைப் பற்றிய கொள்கை விளக்கத்தைச் செயல்படுத்த வெளியான முக்கிய ஏடுகள் என்று சொல்லலாம். இவற்றைத் தவிர வழிபாடு பற்றிய கொள்கை விளக்கத்தின் பல குறிப்பிட்ட கோணங்களைப் பற்றிய விமர்சனங்கள், கருத்துப் பகிர்வுகள் மற்றும் விளக்கங்கள் வெளியிடப்பட்டன.
திருவழிபாட்டு மறுமலர்ச்சி இந்திய நாட்டிலும் ஏற்பட்டது. மண்டல அளவிலும் திருவழிபாட்டு நடுநிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. திருவழிபாடு பற்றிய பல கருத்தரங்குகள், செயலரங்குகள் நடத்தப்பட்டன. வழிபாடுகளில் கிறிஸ்தவமல்லாப் பிற சமயங்களின் நூல் பகுதிகளைப் பயன்படுத்தல், இந்தியப் பெரும் மரபுக் கூறுகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பண்பாட்டு மயமாக்கல் தீவிரமாக நிகழ்ந்தது. வழிபாட்டைப் பண்பாட்டுமயமாக்கத்துணையாகப் பன்னிரண்டு அம்சத் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த முயற்சியைச் சிலர் ''இந்து மயமாக்கல்'' என்று குறை கூறினர்.
5. தமிழகத் திருச்சபையில்...
திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் வெளிவந்து ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆக போகின்றன. ஆனால் இந்த ஏடு தமிழக மக்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பது கேள்விக் குறிதான். இவ்வேட்டைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். இந்த ஏட்டின் முக்கிய இறையியல் கூறுகள் மற்றும் அருள்பணித் தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வோடு தொடர்புள்ள வழிபாடுகள் தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டும். பெருமரபுக் கூறுகளை வழிபாட்டில் முன்வைக்காமல் சிறு மரபுக் கூறுகளையும் புகுத்தி வழிபாடுகளை மக்கள் கொண்டாட்டங்களாக மாற்றினால் அவை விடுதலை கொடுக்கும் வாழ்வுக் கொண்டாட்டங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறு வழிபாடு பொருள் நிறைந்ததாக விளங்கும். வத்திக்கான் சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் தமிழில் நிறைவெற்றப்படுவது மகிழ்ச்சி தரும் ஒன்று. திருப்பலிப் புத்தகம், அருளடையாளச் சடங்கு முறைகள், அருள்பணிக்கு உதவும் வழிபாட்டு நூல்கள் ஆகியவை தமிழில் பெயர்க்கப்பட்டன. என்றாலும் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, சிறப்பாகச் சிறு மரபுக் கூறுகளை உள்வாங்கி வழிபாட்டை வாழ்வோடு இணைக்கும் முயற்சி தீவிரமாக்கப்படுவது தேவை.
பணி. ம. ஜோ. பிரிட்டோ சே.ச
கோட்பாட்டியல் பேராசிரியர்
அருட்கடல்
சென்னை
திருவழிபாடு
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு வழங்கிய
கொள்கை விளக்கம்
முன்னுரை
திருச்சங்கம் திருவழிபாடு பற்றிய பேசுவதற்கான காரணம்
1. திருச்சங்கம்ழூ கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்தவ வாழ்வை நாளுக்கு நாள் வளப்படுத்த வேண்டும்; மாற்றங்களுக்கு உட்பட்ட அமைப்புகளை இக்காலத் தேவைகளுக்கேற்ப நன்முறையில் தழுவி அமைக்க வேண்டும்; கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள யாவரும் ஒன்றிப்பதற்கு உதவும் அனைத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும்; திருச்சபையின் அரவணைப்பில் அனைவரையும் கொணர வழிவகுக்கும் யாவற்றிற்கும் ஊக்கமளிக்க வேண்டும் என்னும் நோக்கங்களைக் கொண்டுள்ளது. எனவே திருவழிபாட்டைச் சீரமைத்துப் பேணி வளர்ப்பதற்கு வழிசெய்வதும் தனது கடமை எனத் திருச்சங்கம் உணர்வதற்குத் தக்க காரணமுண்டு.
திருச்சபையின் மறைபொருளில் திருவழிபாடு வகிக்கும் இடம்
2. திருவழிபாட்டில் மிகச் சிறப்பாகத் தூய்மைமிகு நற்கருணைப் பலியில் ''நமது மீட்பு அலுவல் நடந்தேறுகிறது.'' கிறிஸ்துவின் மறைபொருளையும் உண்மைத் திருச்சபையின் சரியான இயல்பையும் தம் வாழ்வின் வழியாகக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த இந்தத் திருவழிபாடு மிகச் சிறந்த முறையில் பயன்படுகின்றது. தன் இயல்பிலே, திருச்சபை மனிதத் தன்மையையும் இறைத் தன்மையையும் கொண்டுள்ளது; காணப்படுவது எனினும், காணக் கூடாதவற்றையும் கொண்டுள்ளது; செயலில் ஆர்வமும் தியானத்தில் பற்றும் கொண்டுள்ளது; மண்ணில் இருக்கை கொண்டாலும் பயணம் போவதாக உள்ளது. இஃது எம்முறையில் என்றால், திருச்சபையிலே, மனிதத்தன்மை இறைத்தன்மைக்கெனவும், காணப்படுவது காணப்படாததற்கெனவும், செயலானது தியானத்திற்கெனவும், நிகழ்காலத்தவை நாம் தேடும் வரப்போகும் நகரத்திற்கெனவும்2 அமைந்துள்ளன் முன்னயவை பின்னையவற்றிற்குக் கீழ்ப்பட்டும் உள்ளன. எனவே திருவழிபாடு தன்னகத்துள்ளவர்களை ஆண்டவரில் ஒரு தூய கோவிலாகவும் தூய ஆவிக்குள் கடவுளின் ஓர் உறைவிடமாகவும்3 கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும்4 வரையிலும் ஒவ்வொரு நாளும் கட்டியெழுப்புகிறது. அதே நேரத்தில் கிறிஸ்துவை உலகிற்குப் பறைசாற்றத் தேவையான அவர்களது ஆற்றலை வியத்தகு வகையில் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு, வெளி மக்களுக்குத் திருச்சபையை நாடுகளுக்கிடையே உயர்த்தப்பட்ட ஓர் அடையாளமாகத்5 திருவழிபாடு காட்டுகின்றது. ஒரே ஆயரும் ஒரே மந்தையாகிய மக்கள் குழுமம்6 உண்டாகும் வரை, சிதறி வாழும் கடவுளின் பிள்ளைகள் இந்த அடையாளத்தின் கீழ் ஒள்யாய்க் கூடுகின்றனர்.7
பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கும் இக்கொள்கை விளக்கத்திற்கும் உள்ள தொடர்பு
3. எனவே, திருவழிபாட்டின் வளர்ச்சிக்கும் அதன் சீரமைப்பிற்கும் தேவையான கீழ்க்காணும் தத்துவங்களை நினைவில் கொணர்வதும் நடைமுறை விதிகளை வகுப்பதும் தனது கடமை எனத் திருச்சங்கம் கருதுகின்றது.
இத்தத்துவங்களிலும் விதிகளிலும் ஒரு சில உரோமை வழிபாட்டு முறைகளுக்கும் பொருந்தும்; பொருந்தவும் வேண்டும். நடைமுறை விதிகளைப் பொறுத்த மட்டில் கீழே தரப்படுவன உரோமை வழிபாட்டு முறைக்கே உரியவை எனக் கருதப்பட வேண்டும்; ஒருவேளை அவற்றிலும் ஒரு சில தம் இயல்பாகவே மற்ற வழிபாட்டு முறைகளையும் பாதிப்பவையாய் இருக்கலாம்.
எல்லா வழிபாட்டு முறைகளும் போற்றுதற்குரியனவே
4. இறுதியாக, திருச்சபையின் மரபிற்கு நேர்மையுடன் பணிந்து, திருச்சங்கம் அறிக்கையிடுவது: சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தும்சம உரிமையும் பெருமையும் பெற்றவை எனத் தூய அன்னையாம் திருச்சபை கருதுகின்றது; இவ்வழிபாட்டு முறைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படவும் எல்லா வழிகளிலும் வளர்க்கப்படவும் வேண்டுமென அது விரும்புகின்றது: தேவைப்படுமிடத்து இம்முறைகளைச் சரியான மரபுகளின்படி கவனமாகவும் முழுமையாகவும் சீர்திருத்தவும், அவற்றிற்கு இன்றைய சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் தகுந்தாற் போலப் புத்துயிர் அளிக்கவும் வேண்டுமெனத் திருச்சங்கம் விழைகின்றது.
இயல் 1
திருவழிபாட்டைச் சீர்ப்படுத்தவதற்கும் இயல்பும்
திருச்சபையின் வாழ்வில் அதன் முதன்மையும்
கிறிஸ்து நிறைவேற்றிய நிறைவாழ்வுப் பணி
5. ''எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென'' (1 திமொ 2:4) விரும்பி, ''பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்'' (எபி 1:1) காம் நிறைவுற்றபோது தம் மகனை அனுப்பினார். இவரே ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி சொல்லவும் உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்8 மனிதர் ஆன வாக்கு; தூய ஆவியின் திருப்பொழிவு பெற்றவர்; ''உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருத்துவர்;''9 கடவுளுக்கும் மனிதருக்குமிடையே உள்ள இணைப்பாளர்.10 ஏனெனில், இவரது மனித இயல்பு, வாக்கு ஆகிய ஆளிடம் ஒன்றித்து நமது நிறை வாழ்வுக்குக் கருவியாக அமைந்தது. இக்காரணத்தால் கிறிஸ்துவில் ''கடவுளோடு நிறைவான உறவு கொணரும் நம் ஒப்பரவு நிகழ்ந்துள்ளது; கடவுளை நாம் முழுமையாக வழிபட முடிகிறது.''11 இவ்வாறு மக்கள் குலத்தை மீட்டுக் கடவுளை நிறைவாய் மாட்சிப்படுத்தும் பணியைப் பழைய ஏற்பாட்டு மக்களிடையே நிகழ்ந்த கடவுளின் மாபெரும் செயல்கள் முன் குறித்து நின்றன் கிறிஸ்து ஆண்டவர் சிறப்பாகத் தம் பேறுதரு துன்பங்கள், சாவினின்று உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் என்னும் பாஸ்கா மறை நிகழ்ச்சியின் வழியாக இப்பணியை நிறைவேற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியால் அவர் ''நம் சாவைத் தம் சாவினால் அழித்து, தம் உயிர்த்தெழுதலினால் நமக்கு மீண்டும் உயிர் அளித்துள்ளார்.''12 ஏனெனில் சிலுவையிலே துயில் கொண்ட கிறிஸ்துவின் விலாவிலிருந்து முழுத் திருச்சபை என்னும் அருளடையாளம்13 தோன்றியது.
திருச்சபை தொடர்ந்து ஆற்றும் நிறைவாழ்வுப் பணி திருவழிபாட்டில் நிகழ்கிறது
6. ஆகவே, கிறிஸ்து தம்மைத் தந்தை அனுப்பியதைப் போல்தம் திருத்தூதர்களைத் தூய ஆவியால் நிரப்பப் பெற்றவர்களாய் அனுப்பி வைத்தார்; அவர்கள் நற்செய்தியைப் படைப்பிற்கெல்லாம் அறிவித்து14 இறைமகன் இறப்பாலும், உயிர்த்தெழுதலாலும் நம்மைச் சாத்தானின் அதிகாரத்திலிருந்தும்15 சாவினின்றும் மீட்டுத் தந்தையின் ஆட்சிக்குக் கொண்டு வந்தார் என்பதைப் பறைசாற்றுவதோடு நில்லாமல், தாங்கள் பறைசாற்றிய நிறைவாழ்வுப் பணியை, திருவழிபாட்டு வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கி நிற்கும் திருப்பலியாலும் அருளடையாளங்களாலும் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை அனுப்பி வைத்தார். இவ்வாறு, திருமுழுக்கினால் மக்கள் கிறிஸ்துவின் பாஸ்கா மறைநிகழ்ச்சியில் இணைக்கப் பெறுகின்றனர்; கிறிஸ்துவோடு இறந்து அவரோடு புதைக்கப்பட்டு அவரோடு உயிர் பெற்று எழுகின்றனர்.16 ''அப்பா, தந்தையே என அழைக்கின்ற'' (உரோ 8:15) மகவேற்புக்குரிய உளப்பாங்கைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வண்ணம் தந்தை எதிர்பார்க்கும் உண்மையாய் வழிபடுவோர்17 ஆகின்றனர். இவ்வாறே, ஆண்டவரின் திருவிருந்தில் பங்கெற்கும்போதெல்லாம் அவர்கள் ஆண்டவர் வரும் வரையில் அவரது சாவை அறிக்கையிடுகின்றனர்.18 இதனால்தான் பெந்தக்கோஸ்து நாளில் திருச்சபை உலகில் தோன்றிய போது பேதுருவின் ''வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள்.'' மேலும் ''அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாக நிலைத்திருந்தார்கள்... கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள''' (திப 2:41-42,47). அந்நாளிலிருந்து திருச்சபை ஒன்று வழப் பாஸ்கா மறை நிகழ்ச்சியைக் கொண்டாட என்றுமே தவறியது இல்லை; எவ்வாறெனில், விவிலியத்தில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டவைகளை (காண் லூக் 24:27) வாசித்தும் ''சாவின் மீது அவர் கொண்ட வெற்றியையும் மாட்சியையும் திரும்பவும் வெளிப்படுத்தும்''19 நற்கருணைப்பலியை நிறைவேற்றியும் அதே நேரத்தில், கிறிஸ்து இயேசுவில் தமது ''மாட்சியைப் புகழ்ந்து பாடி'' (உபே 1:12) ''கடவுளின் சொல்லொண்ணாக் கொடைக்காக'' (2 கொரி 9:15), தூய ஆவியின் வல்லமையால் அவருக்கு நன்றி செலுத்தியும் கொண்டாடப்படுகிறது.
திருவழிபாட்டில் கிறிஸ்து உடனிருக்கிறார்
7. இம்மாபெரும் பணியை நிறைவேற்றக் கிறிஸ்து தம் திருச்சபையிலே எப்பொழுதும் சிறப்பாகத் திருவழிபாட்டுச் செயல்களிலே உடன் இருக்கிறார். ''சிலுவையிலே அன்று தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தவர், அதையே இன்றுதிருப்பணியாளர்களின் பணிவாயிலாக ஒப்புக்கொடுப்பவராக''20 திருப்பலியில் திருப்பணியாளரிடத்திலும் சிறப்பாக நற்கருணையில் அப்ப இரச வடிவங்களிலும் உடனிருக்கிறர். அருளடையாளங்களில் தமது வல்லமையால் எவ்வாறு உடனிருக்கிறார் என்றால் ஒருவர் திருமுழுக்கு அளிக்கும்போது கிறிஸ்து அதை அளிப்பவராகிறார்.21 தமது வார்த்தையிலும் அவர் இருக்கின்றார்; ஏனெனில், திருச்சபையில் விவிலியம் வாசிக்கப்படும் பொது அவரே பேசுகிறார். இறுதியாக ''இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்'' (மத் 18:20) என்று வாக்குறுதி அளித்த அவரே திருச்சபை கடவுளை வேண்டும் போதும் திருப்புகழ் பாடும்போதும் உடனிருக்கிறார்.
உண்மையிலேயே, கடவுளுக்கு மாட்சி நல்குவதும் மக்களைத் தூய்மையாக்குவதுமான இம்மாபெரும் பணியில் தன் ஆண்டவரைக் கூவி அழைத்து, அவர் வழியாக என்றும் வாழும் தந்தக்கு வழிபாடு நடத்தும் தம் அன்புமிக்க மணமகளாம் திருச்சபையைக் கிறிஸ்து என்றுமே தம்முடன் இணைத்துக் கொள்ளுகின்றார்.
ஆகவே, இயேசு கிறிஸ்துவின் திருப்பணிநிலை சார்ந்த அலுவலைச் செயலுபடுத்துவதே திருவழிபாடு எனக் கருதுவது பொருந்தும். இவ்வாறு செயல்படுத்தப்படும்போது புலன்களால் உணரக்கூடிய அடையாளங்களால் மனிதர் தூயோராதல் குறிக்கப்பட்டு, அந்தந்த அடையாளங்களின் இயல்புக்கேற்ப அது விளைவிக்கவும் பெறுகின்றது; இயேசு கிறிஸ்துவின் மறையுடலால் தலையாலும் அதன் உறுப்புகளாலும் வெளிப்படையான முழுவழிபாடு நடத்தப்படுகின்றது.
இதனால்தான், திருவழிபாட்டுக் கொண்டாட்டம் ஒவ்வொன்றும் திருப்பணியாளராகிய கிறிஸ்துவினுடையவும் திருச்சபை என்னும் அவரது உடலினுடையவும் பணி என்னும் முறையில் அனைத்திலும் உயர்ந்த திருச்செயல் ஆகின்றது. தகுதியிலும் நிலையிலும் இச்செயலின் ஆற்றலுக்குத் திருச்சபையின் வேறு எந்தச் செயலும் இணையாகாது.
மண்ணகத் திருவழிபாடும் விண்ணகத் திருவழிபாடும்
8. விண்ணகத் திருவழிபாட்டையே முன்சுவைப்பவர்களாக மண்ணகத் திருவழிபாட்டில் நாம் பங்கு கொள்ளுகின்றோம். பயணம் செய்யும் நாம் நாடுகின்ற தூய நகரான எருசலேமில் விண்ணகத் திருவழிபாடு நிறைவேறுகிறது. அங்கு உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்பவராகக்22 கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் வானுலகப் படையின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாம் ஆண்டவருக்கு மகிமைப் பண் இசைக்கின்றோம்; தூயவர்களை வணக்கத்துடன் நினைவுகூர்ந்து அவர்களோடு பங்கு கொண்டு தோழமை கொள்ள எதிர்நோக்குகிறோம்; மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது வாழ்வாகத் தோன்றி, நாமும் அவரோடு மாட்சிமையில் தோன்றும் வரையிலும்23 அவர் வருகைக்காகக் காத்திருக்கின்றோம்.
திருச்சபையின் பணி திருவழிபாட்டைச் சார்ந்தது மட்டுமன்று
9. திருவழிபாடு திருச்சபையின் செயல் அனைத்தையும் உள்ளடக்குவதில்லை. ஏனெனில் திருவழிபாட்டைத் தாம் அணுக இயலுமுன் மக்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் மனமாற்றத்திற்கும் அழைக்கப்பெற வேண்டும்: ''அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்,'' (உரோ 10:14-15).
எனவேதான் உண்மையான ஒரே கடவுளையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் எல்லா மக்களும் அறியவும், தங்கள் போக்குகளிலிருந்து அவர்கள் மனம் மாறவும், திருச்சபை கிறிஸ்தவ நம்பிக்கையைக் கடைப்பிடிக்காதவர்களும் மீட்பின் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றது.24 கிறிஸ்தவர்களுக்குத் திருச்சபை கிறிஸ்தவ நம்பிக்கையையும் மனமாற்றத்தையும் என்றும் போதிக்க வேண்டும்; அருளடையாளங்களைப் பெற அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்; மேலும் கிறிஸ்து கட்டளையிட்டயாவையும் கடைப்பிடிக்க அவர்களுக்குப் படிப்பிக்க வேண்டும்.25 அன்பு, இறைப்பற்று, திருத்தூதுப்பணி ஆகியவற்றில் ஈடுபட அவர்களை ஈர்க்க வேண்டும். கிறிஸ்துவை நம்புவோர் உண்மையிலேயே இவ்வுலகைச் சார்ந்திருராதவர்கள் என்றாலும், அவர்கள் உலகின் ஒளியாக இருக்கின்றார்கள்; மக்களுக்கு முன்பாகத் தந்தையைப் போற்றிப் புகழ்கின்றார்கள் என்பது இச்செயல்கள் வழியாக வெளிப்படும்.
திருவழிபாடு, சிறப்பாக நற்கருணை, திருச்சபையின் வாழ்வுக்கு ஊற்று
10. எனினும், திருவழிபாடு திருச்சபையின் செயல் முழுவதுமே நாடி நிற்கும் சிகரமாக அமைந்துள்ளது. அஃதுடன் திருச்சபையின் ஆற்றல் அனைத்திற்கும் அஃது ஓர் ஊற்றாகவும் உள்ளது. ஏனெனில், நம்பிக்கையாலும் திருமுழுக்காலும் கடவுளின் பிள்ளைகளாக்கப்படும் யாவரும் ஒன்றுகூடி வந்து, திருச்சபையின் அகத்தில் கடவுளைப் புகழ்வதையும், திருப்பலியில் பங்கெடுப்பதையும் ஆண்டவரின் இராவுணவை உண்பதையுமே திருத்தூது அலுவல்கள் தம் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளன.
அன்றியும், நம்பிக்கை கொண்டோர் ''பாஸ்கா அருளடையாளங்களால்'' நிறைவு பெற்று ''அன்புப் பற்றால் ஓர் உள்ளம்''26 படைத்தவர்களாய் இருக்கத் திருவழிபாடு தூண்டுகிறது. அவர்கள் ''தங்கள் நம்பிக்கையால் உணர்ந்து கொண்டவைகளைத் தங்கள் வாழ்வில் பற்றி நிற்குமாறு''27 கடவுளை வேண்டுகிறது. ஆண்டவர் மனிதர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை நற்கருணையில் புதுப்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் தீவிர அன்புச் சுடருக்குள் நம்பிக்கை கொண்டவர்களை ஈர்த்துப் பற்றியெரியச் செய்கிறது. ஆகவே, திருவழிபாட்டிலிருந்து, சிறப்பாக நற்கருணையிலிருந்து அருள் ஓர் ஊற்றிலிருந்து வருவதுபோல் வழிந்தோடி நம்மை வந்தடைகிறது. இவ்வாறு, கிறிஸ்துவிலே மக்கள் தூய்மையடைதலும் கடவுள் புகழ் பெறுதலும் சீரிய பயனுறுதியுடன் கைகூடுகின்றன. இவற்றையே திருச்சபையின் ஏனைய பணிகள் அனைத்தும் தம் குறிக்கோளாக நாடுகின்றன.
திருவழிபாட்டில் பங்கேற்க சரியான மனநிலை தேவை
11. ஆனால், இந்த முழுப்பயனையும் அடைய வேண்டும் என்றால், நம்பிக்கை கொண்டோர் சரியான மனநிலையுடன் திருவழிபாட்டை அணுக வேண்டும். அவர்கள் உரைக்கும் சொற்களோடு உள்ளமும் இணைந்திருக்க வேண்டும். கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருள் வீணாகா வண்ணம் அவரோடு இணைந்து உழைக்க வேண்டும்.28 ஆகவே திருவழிபாட்டு நிகழ்ச்சி சட்டப்படி செல்லத்தக்க, முறையான கொண்டாட்டமாய் இருப்பதற்குரிய விதிகளைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமன்றி, நம்பிக்கை கொண்டதோர் அறிவால் உணர்ந்து செயல்முறையிலும் பயனுள்ள விதத்திலும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்களா என்பதையும் அருள்பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
திருவழிபாடும் அருள் வாழ்வும்
12. திருவழிபாட்டில் பங்கு கொள்வதில் மட்டும் அருள் வாழ்வு அடங்கிவிடுவதில்லை. மாறாக, சமூகத்தோடு சேர்ந்து இறைவேண்டல் செய்யக் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது உள்ளறைக்குச் சென்று மறைவிலே தந்தையை வெண்டவும்,29 ஏன் திருத்தூதர் பவுல் படிப்பிப்பதுபோல இடைவிடாது இறைவனிடம் வேண்டவும்30 கடமைப்பட்டுள்ளார்கள். மேலும் சாவுக்குரிய நம் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படும் படியாக அவரின் சாவுக்குரிய துன்பங்களை என்றும் நாம் நமது உடலில் தாங்கிச் செல்ல வேண்டுமென்று அதே திருத்தூதர் நமக்குக் கறபிக்கிறார்.31 இதனால்தான் ''இந்த ஞானப் பலிப் பொருளை உவந்தேற்று'' நம்மையே தமக்கு ஒரு ''நிலையான காணிக்கையாக''32 ஆக்குமாறு நாம் திருப்பலியில் ஆண்டவரைப் பார்த்து வேண்டுகிறோம்.
பக்தி முயற்சிகளை ஆதரித்தல்
13. கிறிஸ்தவ மக்களின் பக்தி முயற்சிகள் திருச்சபையின் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இசைந்திருப்பின், சிறப்பாக திருத்தூது ஆட்சிப் பீடத்தின் கட்டளைப்படி நிகழுமாயின் அவை மிகவும் ஆதரிக்கத்தக்கன.
முறையாக ஒப்புதல் பெற்ற வழக்கங்களையும் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆயர்களின் ஆணைப்படி கடைப் பிடிக்கப்படும் தனிப்பட்ட சபைகளின் பக்தி முயற்சிகளும் தனி மதிப்புக்குரியன.
எனினும் திருவழிபாட்டுக் காலங்களைக் கருத்தில் கொண்டு இப்பக்திமுயற்சிகளை ஒழுங்கு ஆயர்களின் ஆணைப்படி கடைப்பிடிக்கப்படும் தனிப்பட்ட சபைகளின் பக்தி முயற்சிகளும் தனி மதிப்புக்குரியன.
எனினும் திருவழிபாட்டுக் காலங்களைக் கருத்தில் கொண்டு இப்பக்திமுயற்சிகளை ஒழுங்கு செய்யவேண்டும். திருவழிபாடு தன்னியல்பிலே இப்பக்தி முயற்சிகளைவிட மிகச் சிறந்தது. எனவே, இவை திருவழிபாட்டோடு இணைந்துசென்று அதிலிருந்து ஒரு வகையில் பிறந்து வந்து, அதற்கே மக்களை அழைத்துச் செல்லும் வகையில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
2. திருவழிபாட்டுப் பயிற்சியையும் அதில் செயல் முறையில்
பங்குகொள்ளுதலையும் ஊக்குவித்தல்
14. திருவழிபாட்டின் இயல்புக்கு ஏற்ப நம்பிக்கை கொண்டோர் அனைவரும் திருவழிப்பாட்டுக் கொண்டாட்டங்களில் முழுமையாகவும், உணர்ந்தும், செயல்முறையிலும் பங்கு கொள்ள அவர்களை இட்டுச் செல்ல வேண்டுமெனத்திருச்சபை அன்னை மிகவும் விரும்புகின்றார். இவ்வண்ணம் பங்கு கொள்வதற்குத் ''தேர்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்'' (1 பேது 2:9; காண் 2:4-5) எனப்படும் கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் ஆற்றலால் உரிமையும் கடமையும் கொண்டுள்ளார்கள்.
திருவழிபாட்டில் மக்கள் அனைவரும் நிறைவாகவும் செயல் முறையிலும் பங்கு கொள்ளுமாறு, திருவழிபாட்டைச் சீரமைக்கும் போதும் ஊக்குவிக்கும்போதும் சீரிய விதத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நம்பிக்கை கொண்டோர் உண்மையான கிறிஸ்தவ உணர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முதன்மையானதும் இன்றியமையாததுமான ஊற்றுத் திருழிபாடே. எனவே தேவையான பயிற்சி அளிப்பதன் மூலம் மக்கள் திருவழிபாட்டில் மேற்கூறிய விதத்தில் பங்குகொள்ளுமாறு அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணிகள் அனைத்திலும் ஆர்வமுடன் முயல வேண்டும்.
ஆனால், இது நிறைவேற வேண்டுமென்றால் முதன்முதலாக அருள்பணியாளர்கள் திருவழிபாட்டின் உள்ளுணர்விலும் அதன் ஆற்றலிலும் நன்றாக ஊறியவர்களாகவும், புலமை பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். இந்நிலை உருவாகாமல் இது நிறைவேறும் என்னும் எதிர்பார்ப்புக்கு இடமில்லை. ஆகவே முதன்முதலில் திருப்பணி நிலையினருக்குத் திருவழிபாட்டுப் பயிற்சி அளிக்க ஆவன செய்தல் இன்றியமையாதது. எனவே, கீழ்வருவனவற்றைச் சட்டமாகத் திருச்சங்கம் தீர்மானித்துள்ளது.
திருவழிபாட்டைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களை உருவாக்கல்
15. திருப்பணிப் பயிற்சியகங்களிலும் துறவறத்தாரின் படிப்பு இல்லங்களிலும் இறையியல் துறைகளிலும் திருவழிபாட்டியலைப் பயிற்றுவிக்க நியமிக்கப்படும் பேராசிரியர்கள் இதற்கென்றே தனித்து அமைக்கப்பட்ட நிறுவனங்களில் தங்கள் பணிக்குச் சரியான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
திருவழிபாட்டைப் பயிற்றுவிக்கும்முறை
16. திருப்பணிப் பயிற்சியகங்களிலும் துறவறத்தாரின் படிப்பு இல்லங்களிலும் திருவழிபாட்டியலை அவசியமான முக்கிய பாடங்களுள் ஒன்றாகவும், இறையியல் கல்லூரிகளில் முதன்மையான பாடங்களுள் ஒன்றாகவும் கொள்ள வேண்டும். இறையியல், வரலாறு, அருள் வாழ்வு, அருள்பணி, திருச்சபைச் சட்டம் ஆகிய கோணங்களிலிருந்து இப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். மேலும், ஏனைய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்கள், சிறப்பாகக் கோட்பாட்டியல், விவிலியம், அருள்வாழ்வு, அருள்பணி ஆகியவற்றைச் சார்ந்த இறையியலைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் தங்கள் பாடங்களின் இயல்பான தேவைக்கேற்பக் கிறிஸ்துவின் மறைபொருளையும் நிறைவாழ்வு வரலாற்றையும் எடுத்துரைக்கக் கவனம் எடுக்க வேண்டும். இதன் வழியாக இப்பாடங்கள் திருவழிபாட்டுடன் கொண்டுள்ள தொடர்பும் திருப்பணி நிலைப் பயிற்சியின் ஒருங்கிணைப்பும் தெளிவாகத் துலங்கும்.
திருப்பணிப் பயிற்சி பெறுவோர்க்குத் திருவழிபாட்டுப் பயிற்சி அளித்தல்
17. திருப்பணிப் பயிற்சியகங்களிலும் துறவற இல்லங்களிலும் திருப்பணி நிலையினருக்கு அருள் வாழ்வு சார்ந்த திருவழிபாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும்; திருச்சடங்குகளைப் புரிந்து கொண்டு அவற்றில் முழு மனத்துடன் பங்குகொள்ளத் தகுந்த விதத்தில் அவர்களை வழிநடத்தல் மூலமும், தூய மறை நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதன் மூலமும் திருவழிபாட்டு உள்ளுணர்வில் தோய்ந்த ஏனைய பக்தி முயற்சிகளைக் கைக்கொள்வதன் மூலமும் இப்பயிற்சி அளிக்கப்பெறவேண்டும். இவ்வாறே திருப்பணி நிலையினர் திருவழிபாட்டுச் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்;. இதன் விளைவாக, திருப்பணிப் பயிற்சியகங்களிலும் துறவற நிறுவனங்களிலும் நிலவும் வாழ்வு திருவழிபாட்டு உள்ளுணர்வில் ஊறித் திகழ இயலும்.
அருள்பணியாற்றும் திருப்பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய உதவி
18. ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் ஏற்கெனவே பணிபுரியும் மறைமாவட்டத் திருப்பணியாளர்களும் துறவறத் திருப்பணியாளர்களும் திருநிகழ்ச்சிகளில் தாம் செய்பவற்றை நாளுக்கு நாள் ஊன்றி அறியவும், திருவழிபாட்டுக்கு ஏற்ற முறையில் வாழ்ந்து அவ்வாழ்வைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கை கொண்டோர்க்கு அளிக்கவும் தகுந்த எல்லா வழிவகைகளிலும் உதவி பெற வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர்க்குத் திருவழிபாட்டுப் பயிற்சி அளித்தல்
19. நம்பிக்கை கொண்டோரின் வயது, நிலைமை, வாழ்க்கை முறை, சமய முதிர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்கள் திருவழிபாட்டுப் பயிற்சி பெறவும் உள்ளும் புறமும் திருவழிபாட்டில் செயல் முறையில் பங்கு கொள்ளவும் அருள்பணியாளர்கள் ஆர்வத்துடனும் பொறுமையுடனும் ஆவன செய்ய வேண்டும். இதனால் இவர்கள் கடவுளின் மறை நிகழ்ச்சிகளின் செல்வங்களைப் பகிர்ந்தளிக்கும் உண்மையான பணியாளர்களின் தலையாய கடமைகளுள் ஒன்றை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள். இப்பணியில் சொல்லால் மட்டுமல்லாது எடுத்துக்காட்டாலும் இவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் குழுவை நடத்திச் செல்ல வேண்டும்.
ஒலி ஒளிக் கருவிகளும் திருவழிபாடும்
20. திருநிகழ்ச்சிகள், சிறப்பாகத் திருப்பலி, ஒளிபரப்பப் பெற்றாலும் தொலைக்காட்சி வழியாகக் காட்டப்பட்டாலும் அவை முன்மதியுடனும் தகுந்த வணக்கத்துடனும் நடைபெறட்டும். இவை ஆயர்களால் நியமிக்கப் பெற்றவரும் இவற்றிலே தகுதி படைத்தவருமான ஒருவர் வழிகாட்ட அவரது கண்காணிப்பின்கீழ் நிகழ வேண்டும்.
3. திருவழிபாட்டைச் சீரமைத்தல்
21. திருவழிபாட்டில் கிறிஸ்தவ மக்கள் ஏராளமான அருளை அதிக உறுதியாய் அடையத் தூய அன்னையாம் திருச்சபை திருவழிபாட்டின் பொதுவான சீரமைப்புப் பற்றி ஆழ்ந்த கவனம் செலுத்த விரும்புகிறது. ஏனெனில் கடவுளால் நிறுவப்பட்டது என்னும் நிலையில் மாற்றத்திற்கு உட்படாப் பகுதியையும் மற்றும் மாற்றத்திற்கு உட்பட்ட பகுதிகளையும் திருவழிபாடு கொண்டுள்ளது. இவ்வாறு மாற்றத்திற்கு உட்படக்கூடிய பகுதிகள் காலப்போக்கிலே மாறக்கூடியவை மட்டுமன்று, திருவழிபாட்டின் உள்ளியல்புடன் சரியாக இயைந்து சொல்லக் கூறுகள் இவற்றிலே புகுந்திருப்பின் அல்லது பொருத்தம் குறைந்தனவாய் ஆகியிருப்பின் மாற்றப்பட வேண்டியவையுங்கூட.
இவ்வாறு சீரமைக்கும்போது, வாசகங்களும் சடங்குகளும் அவை தாம் குறித்துக் காட்டும் தூய நிகழ்வுகளை மிகத் தெளிவாக வெளிக் கொணரும்படி கவனம்செலுத்த வேண்டும். அவை கிறிஸ்தவ மக்களால் கூடுமானவரை எளிதில் புரிந்து கொள்ளத் தக்கனவாய் இருத்தல் வேண்டும்; மேலும் முழுமையாகவும், சமூகத்திற்குரிய விதத்திலும் பங்குகொள்ளக் கூடுமானவையாகவும் மிளிர வேண்டும். இதன் பொருட்டுத் திருச்சங்கம் கீழ்வரும் பொதுவிதிகளை வகுத்துத் தருகின்றது.
அ.பொது விதிகள்
திருவழிபாட்டை ஒழுங்குபடுத்தும் உரிமை திருச்சபை ஆட்சியாளருக்கே உரியது
22. 1. திருவழிபாட்டை ஒழுங்குபடுத்துவது திருச்சபை அதிகாரிகளுக்கு மட்டுமே உரித்தானது. இவ்வதிகாரம் திருத்தூதுப் பீடத்திற்கும் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஆயருக்கும் உண்டு.
2. சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், நிலைநாட்டப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, திருவழிபாட்டை ஒழுங்குபடுத்தும் உரிமையானது முறைப்படி அமைக்கப்பெற்ற, அந்தந்தப் பகுதிகளில் அதிகாரம்கொண்ட பலதரப்பட்ட ஆயர் பேரவைகளுக்கும் உண்டு.
3. எனவே, எவரும், திருப்பணியாளராக இருந்தாலும் கூட, தனது சொந்தக் கருத்திற்கேற்ப, திருவழிபாட்டில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றவோ கூடாது.
மரபும் வளர்ச்சியும்
23. நலமான மரபைப் பாதிக்காத முறையில் சட்ட முறைமையான வளர்ச்சிக்கு வழிவகுக்க, திருவழிபாட்டில் திருத்தி அமைக்கப்படவேண்டிய ஒவ்வொரு பகுதியையும் பற்றிய நுண்ணிய முன்னாய்வு எப்போதும் நிகழ வேண்டும். இந்த முன்னாய்வு இறையியல், வரலாறு, அருள்பணி ஆகிய கோணங்களிலிருந்து அமைய வேண்டும். மற்றும் திருவழிப்பாட்டின் பொருள், அதன் அமைப்பு சார்;ந்த பொதுவிதிகள், அண்மையில் திருவழிபாட்டில் நிகழ்ந்துள்ள சீரமைப்பிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளினின்றும் வெளிப்பட்டுள்ள அனுபவம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக உண்மையாகவும், திண்ணமாகவும் திருச்சபையின் நலனுக்குத் தேவைப்பட்டாலொழிய புது மாற்றங்களைப் புகுத்தக் கூடாது. புதிய அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் அமைப்புகளிலிருந்து ஒரு விதத்தில் உள்ளார்ந்த தொடர்புடைய முறையில் தோன்றி வளர்கின்றனவா எனவும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் திருவழிபாட்டுச் சடங்குகளைப் பொறுத்த மட்டில் அருகருகே இருக்கும் மண்டலங்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இராதவாறு இயன்ற மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
திருவழிபாட்டின் விவிலியம்
24. திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் விவிலியம் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. எவ்வாறெனில் விவிலியத்திலிருந்து வாசகங்கள் படிக்கப் பெற்று, மறையுரையில் விளக்கப்படுகின்றன் திருப்பாடல்கள் பாடப்படுகின்றன. மன்றாட்டுகளும் இறை வேண்டல்களும் திருவழிபாட்டுப் பாடல்களும் விவிலியத்திலிருந்து தான் உள்ளுணர்வும் தூண்டுதலும் பெறுகின்றன. விவிலியத்திலிருந்து திருவழிபாட்டுச் செயல்களும் அடையாளங்களும் தம் பொருளைப் பெறுகின்றன. ஆகவே திருவழிபாட்டைச் சீரமைக்கவும் வளர்ச்சியடையச் செய்யவும் தழுவியமைக்கவும் வேண்டுமாயின் விவிலியத்தின் மீது இதமான, உயிருள்ள பற்றுதலை வளர்க்க வேண்டும். கீழைச் சபையிருடையவும் மேலைச்சபையினருடையவும் வழிபாட்டு முறைகளின் மதிப்பிற்குரிய மரபு இத்தகைய பற்றுதலுக்குச் சான்று பகர்கின்றது.
திருவழிபாட்டு நூல்களைத் திருத்தி அமைத்தல்
25. வல்லுநர்களைப் பயன்படுத்தியும் உலகின் பல பாகங்களிலுள்ள ஆயர்களோடு கலந்து ஆராய்ந்தும் திருவழிபாட்டு நூல்களை மிக விரைவில் திருத்தியமைக்க வேண்டும்.
(ஆ) திருவழிபாடு திருச்சபை ஆட்சியாளருக்கும் சமூகத்திற்கும் உரிய செயல் என்னும் பண்பிலிருந்து பிறக்கும் விதிகள்
26. திருவழிபாட்டுச் செயல்கள் தனி நபரின் செயல்களன்று; மறாhக, அவை ''ஒன்றிப்பின் அடையாளம்''33 எனப்படும் திருச்சபையின் கொண்டாட்டங்கள். திருச்சபை ஆயர்களின் கீழ் ஒன்றுகூட்டப்பெற்று ஒழுங்காய் அமைக்கப்பட்ட தூய மக்களினமாகும்.
ஆகவே! திருவழிபாட்டுச் செயல்கள் திருச்சபை என்னும் முழு உடலமைப்பைச் சார்;ந்தவை; இவ்வுடலமைப்பு முழுதையும் வெளிப்படுத்தி, அதனைப் பாதிப்பவை. அவை இவ்வுடலின் உறுப்பினர் ஒவ்வொருவரோடும் அவர்தம் நிலை பணி, செயல்முறைப் பங்குகொள்ளல் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டிற்கேற்ப, வேறுபட்ட வகையில் தொடர்பு கொண்டு நிற்கின்றன.
சமூக வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் முதன்மை பெறுகின்றன
27. திருச்சடங்குகள் தத்தம் தனி இயல்பிற்கேற்ப, மக்கள் கூடிவந்து செயல்முறையில் பங்குகொள்ளும் நிகழ்வுகளாய் இருக்கும்போதெல்லாம் அவை சமூக வழிபாட்டுக் கொண்டாட்டங்களாய் அமைய வேண்டும். அவற்றைத் தனிமையிலும் தனியார் காரியம் போலும் கொண்டாடுவதை விட, கூடியவரையில் மேறகூறியவாறு கொண்டாடுவது சிறந்தது என்பதை உணர்த்த வேண்டும்.
இவ்வாறு சொல்வது, சிறப்பாகத் திருப்பலி, அருளடையாளங்களின் கொண்டாட்டங்களுக்குப் பொருந்தும் எனினும், எந்த ஒரு திருப்பலியும் எப்பொழுதும் பொதுத் தன்மையும் சமூகப் பண்பும் வாய்ந்தது என்பது தெளிவு.
திருவழிபாட்டில் ஒவ்வொருவருமே தத்தம் பணியைப் புரிதல்
28. திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஒவ்வொருவரும் திருப்பணியாளராய் இருந்தாலும் சரி, நம்பிக்கை கொண்டோராய் இருந்தாலும் சரி, தத்தம் பணிபுரியும்போது கொண்டாட்டங்களின் தன்மைக்கும் திருவழிபாட்டின் விதிகளுக்கும் ஏற்பத் தத்தமக்குரியதை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்; அதை முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும்.
29. பீடப் பணியாளர்களும் வாசகர்களும் விளக்க உரையாளர்களும் பாடகர் குழுவைச் சேர்ந்தோரும் உண்மையிலேயே வழிபாட்டுப் பணி புரிகின்றனர். ஆகவே இவர்கள், இம்மாபெரும் பணிக்குத் தகுந்ததும், இவர்களிடமிருந்து கடவுளின் மக்கள் உரிமையுடன் எதிர்பார்;ப்பதுமான நேரிய பக்தியுடனும் ஒழுங்குடனும் தத்தம் பணிகளை ஆற்றவேண்டும்.
எனவே, இவர்களது தனித்தனி நிலைக்கு ஏற்ப, திருவழிபாட்டு உணர்வை இவர்களுக்கு அக்கறையுடன் ஊட்டி இவர்கள் தத்தம் பணிகளை முறையாகவும் ஒழுங்காகவும் செய்யப் பயிற்சி அளிக்கவேண்டும்.
நம்பிக்கை கொண்டோரின் செயற்முறை பங்கேற்பு
30 செயல்முறையில் பங்குகொள்ளுதலை மேம்படுத்தும், நோக்குடன் மக்களின் ஆர்;ப்பரிப்பு உரைகள், பதிலுரைகள், திருப்பாடல்கள், பல்லவிகள், கீதங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். செயல்கள், மேலும் பொருத்தமான சைகைகள் மற்றும் உடல் அமர்வு நிலைகளை ஊக்குவிக்க வேண்டும். வழிபாட்டின் போது உரிய நேரத்தில் அமைதி காப்பதும் பொருத்தமாகும்.
31. திருவழிபாட்டு நூல்களைத் திருத்தம் செய்யும்போது நம்பிக்கை கொண்டோரின் பகுதிகளுக்கும் சடங்கு விதிகளை ஏற்படுத்துமாறு கவனமுடன் பார்;த்துக் கொள்ள வேண்டும்.
திருவழிபாட்டில் வகுப்புப் பாகுபாடுகள் இருத்தல் கூடாது
32. திருவழிபாட்டுச் செயலிலிருந்தும் திருப்பணியாளர் நிலையிலிருந்தும் பிறக்குமதனி மதிப்பும் திருவழிபாட்டு விதிகள் அடிப்படையில்நாட்டு அதிகாரிகளுக்கு உரிய மரியாதைகளும் தவிர எந்தத் தனிமனிதருக்கும் எந்தத் தனி வாழ்க்கை நிலைக்கும்சடங்குகளிலோ வெளி ஆடம்பரங்களிலோ முன்னுரிமை அளித்தல் ஆகாது.
இ. திருவழிபாட்டின் கற்பிக்கும் பண்பிலிருந்தும் அருள்பணி சார்;ந்த பண்பிலிருந்தும் அருள்பணி சார்;ந்த பண்பிலிருந்தும் பிறக்கும் விதிகள்
33. திருவழிபாடு முதன்முதலில் மாட்சிமைமிக்கக் கடவுளுக்கு நாம் செலுத்தும் வழிபாடு எனினும், அது தெவையான வளமிக்க அறிவுரையையும் கொண்டுள்ளது.34 திருவழிபாட்டில் கடவுள் தம் மக்களுடன் பேசுகின்றார்; கிறிஸ்து இன்னும் தொடர்ந்து நற்செய்தியை எடுத்துரைக்கிறார். மக்களோ பாடல்களாலும் இறை வேண்டலாலும் கடவுளுக்குப் பதில்மொழி கூறுகின்றனர்.
இது மட்டுமன்று, கிறிஸ்துவுக்குப் பதிலாக மக்கள் குழுவிற்குத் தலைமை வகிக்கும் திருப்பணியாளர் கடவுளை நோக்கி எழுப்பும் மன்றாட்டுகள் தூய மக்கள் அனைவருடையவும், சூழ்ந்து நிற்கும் அனைவருடையவும் பெயரிலேயே சொல்லப்படுகின்றன. இறுதியாக, கட்யுலனாகாப் பொருள்களைக் குறித்துக் காட்டுவதற்கென்று திருவழிபாடு பயன்படுத்தும் கட்புலனாகும் அடiயாளங்கள் கிறிஸ்துவால் அல்லது திருச்சபையால் தெரிந்தெடுக்கப்பட்ழருக்கின்றன. எனவே நமக்கு ''அறிவுரையாகவே எழுதப்பட்டவை'' (உரோ 15.4) வாசிக்கப்படும் போது மட்டுமின்றி, திருச்சபை கடவுளை நோக்கி வேண்டும்போதும் பாடும்போதும் செயலாற்றும்போதும் இவற்றில்பங்குகொள்வோரின் நம்பிக்கை ஊட்டம் பெறுகின்றது; கடவுளுக்குப் பகுத்தறிவுக்கு உகந்த பணிவு காட்டவும் அவரது அருளை இன்னும் தாராளமாய்ப் பெற்றுக்கொள்ளவும் கடவுள்மீது இவர்களின் உள்ளங்கள் தட்டி எழுப்பப்படுகின்றன.
எனவே திருவழிபாட்டைச் சீரமைப்பதிலே கீழ்க்காஞம் பொதுவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
திருவழிபாட்டுச் சடங்குகளின் அமைப்பு
34. சடங்குகள் சீரிய எளிமையோடு துலங்கட்டும்; சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கட்டும்; சடங்குகள் தேவையின்றித் திரும்ப நிகழ்தல் தவிர்க்கப்படட்டும்; நம்பிக்கை கொண்டோரின் புரிதல் திறமைக்கேற்ப அவை தபுவி அமையட்டும்; பொதுவாக அதிக விளக்க உரைகள் அளிப்பது தவிர்;க்கப்படட்டும்.
திருவழிபாட்டில் விவிலியம், மறையுரை, மறைக்கல்வி
35 திருவழிபாட்டில் சடங்குகளுக்கும் சொற்களுக்கும் உள்ள நெருங்கிய உறவு தெளிவாக வெளிப்படுவதற்கு:
1. திருக்கொண்டாட்டங்களிலே இடம் பெறும் விவிலிய வாசகங்கள் இன்னும் அதிகமாகவும் பல்வகையாய் வேறுபட்டனவாகவும் பொருத்தமானவையாகவும் இருக்க வேண்டும்.
2. மறையுரை திருவழிபாட்டுச் செயலின் ஒரு பகுதி. மறையுரை இடம்பெறும்சடங்குகளில் அதற்குரிய மிகப் பொருத்தமான இடத்தைச் சடங்கு விதிகளிலே குறிப்பிட வேண்டும். மறையுரை நிகழ்த்தும் திருப்பணியைத் தவறாமலும் ஏற்றவகையிலும் நிறைவேற்றுவதில் கவனம் வேண்டும். நிறைவாழ்வு வரலாற்றில் அதாவது கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சியில் இடம்பெறும் கடவுளின் வியத்தகு செய்களைப் பறைசாற்றுவதாக அமைய வேண்டிய மறையுரை, அனைத்திற்கும் மேலாக விவிலியம், திருவழிபாடு ஆகிய ஊற்றுகளிலிருந்து பெறப்படுவது சிறப்பு. கிறிஸ்துவின் இந்த மறைநிகழ்ச்சி என்றும் நம்மிலும் சிறப்பாக வழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் இருந்து செயலாற்றுகின்றது.
3. திருவழிபாட்டைச் சிறப்பாக விளக்கும் மறைக்கல்வி எல்லா வழிகளிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் திருப்பணியாளர் அல்லது தகுதிவாய்ந்த பணியாளர் ஒருவர் அதிகப் பொருத்தமான நேரங்களில் மட்டும் ஏற்கெனவே தரப்பட்ட சொற்களைக் கொண்டு அல்லது அதைப் போன்ற வேறு சொற்களைக் கொண்டு சிறு விளக்கக் குறிப்புகள் வழங்கும்படி சடங்குகளிலே வழி செய்ய வேண்டும்.
4. பெரிய திருவிழாக்களின் திருவிழிப்புகளிலும் வருகைக் காலம், தவக்காலம் ஆகியவற்றிலுள்ள சில வார நாள்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழாக்களிலும் முக்கியமாகத் திருப்பணியாளர் இல்லாத இடங்களில் இறைவாக்கு வழிபாட்டை ஊக்குவிக்க வேண்டும். திருப்பணியாளர் இல்லாத வேளையில் திருத்தொண்டல் அல்லது ஆயரால் குறிக்கப்பட்ட வேறொருவர் இவ்வழிபாட்டை நடத்தலாம்.
திருவழிபாட்டில் பயன்படுத்தப்பெறும் மொழி
36.1 தனிப்பட்ட சட்டத்தைப் பாதிக்காத வகையில் உரோமை வழிபாட்டு முறைகளில் லத்தீன் மொழி தொடர்ந்து கையாளப்படும்.
2. ஆனால் திருப்பலியிலும் அருளடையாளங்களை நிறைவேற்றுவதிலும் திருவழிபாட்டின் பிற பகுதிகளிலும் அந்தந்த இடத்து மொழிகளைக் கையாளுதல் மக்களுக்குப் பொதுவாகப் பெரும் பயன் தரக்கூடும். இந்த ஏட்டின் கீழ்வரும் பகுதிகளில் இதுபற்றித் தனித்தனியாக இயற்றப்பட்டிருக்கும் விதிகளின்படி சிறப்பாக வாசகங்களிலும் அறிவுரைகளிலும் ஆங்காங்கே இறைவேண்டல்கள் மற்றும்பாடல்களிலும் இம்மொழிகளை அதிகம் பயன்படுத்தலாம்.
3. இவ்விதிகளைக் கடைப்பிடித்து அந்தந்த இடத்து மொழிகளைக் கையாளுதலையும் அவற்றைக் கையாளும் முறைகளையும் பற்றித் தீர்மானிப்பது எண் 22 பிரிவு 2 இல் குறிப்பிட்டுள்ள, அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகளுக்கு எரியது. தேவைப்படுமாயின், அந்த அதிகாரிகள் ஒரே மொழி பேசும் அண்டை மண்டலங்களின் ஆயர்களுடன் கலந்து ஆயலாம். இவர்களின் முடிவுகள் திருத்தூதுப் பீடத்தின் ஒப்புதலை அல்லது உறுதிப்பாட்டைப் பெறவேண்டும்.
4 திருவழிபாட்டில் கையாளுவதற்கென்று இலத்தீன் மொழி வாசகங்களிலிருந்து அந்தந்த இடத்து மொழியில் ஆக்கப்பெறும் மொழிபெயர்ப்பு மேற்குறிப்பிட்ட அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகளுடைய ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஈ. வெவ்வேறு மக்களின் பண்பாட்டிற்கும் மரபிற்கும் ஏற்பத் திருவழிபாட்டை மாற்றி அமைப்பதற்கான விதிகள்
37. நம்பிக்கையையும் சமூகம் முழுவதன் நலனையும் சாராதவற்றில் வளைந்துகொடாத, ஒரே பாணியில் அமைந்த முறையைத் திருவழிபாட்டிலும்கூட திருச்சபை வலிந்து திணிக்க விரும்பவில்லை. மாறாக, வௌ;வேறு மக்களுக்கும் நாட்டினருக்கும் உரித்தான உளநலன்களையும் சிறப்பியல்புகளையும் அது போற்றி வளர்க்கிறது. மக்களின் பழக்க வழக்கங்களிலே மூட நம்பிக்கைகளுடனும் தவறுகளுடனும் இரண்டறக் கலவாத யாவற்றையும் திருச்சபை நன்மனத்துடன் ஆராய்கிறது; இயலுமாயின் அவற்றைப் பழுதின்றிப் பாதுகாக்கிறது. திருவழிபாட்டின் உண்மையான, சரியான உள்ளியல்போடு அவை இயைந்து சென்றால் திருவழிபாட்டிலும் கூட அவற்றைச் சில வேளைகளில் ஏற்றுக்கொள்கிறது.
இடங்களுக்கேற்பத் தழுவியமைத்தல்
38. உரோமை வழிபாட்டு முறையின் அடிப்படையான ஒருமைப்பாட்டைப் பாதிக்காத முறையில் பல்வேறு குழுவினருக்கும் மண்டலங்களுக்கும் மக்களுக்கும் சிறப்பாக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் வாழ்வோருக்குக்கும் ஏற்றாற்போல, முறையான வேறுபாடுகளுக்கும் தழுவியமைத்தலுக்கும் போதிய இடம் அளிக்கவேண்டும். திருத்தியமைக்கப்பெறும் திருவழிபாட்டு நூ;களிலும் இவற்றிற்கு இடம் கொடுப்பது தேவை. சடங்குகளை வடிவமைப்பதிலும் சடங்கு விதிகளை இயற்றுவதிலும் இத நன்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆயர் குழுக்களின் பொறுப்பு
39 திருவழிபாட்டு நூல்களின் மாதிரிப் பதிப்புகளில் வரையறுக்கப்பட்டிருக்கும் வல்லைக்குள்ளே, இக்கொள்கை விளக்கத்தில் காணும் அடிப்படை விதிகளுக்கு ஏற்ப, சிறப்பாக அருளடையாளங்களை நிறைவேற்றுதல், அருள்வேண்டல் குறிகள், திருப்பவனின், திருவழிபாட்டில் கையாளப்படும் மொழி, இசை, கலைகள் ஆகியவற்றைப் பற்றிய மாற்றங்களை வரையறுப்பது எண் 22 பிரிவு 2இல் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகளுக்கே உரியது.
திருவழிபாட்டைச் சிறப்பாக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் தழுவியமைத்தல்
40 திருவழிபாட்டை ஆழமான முறையில் தபுவியமைத்தல் பற்பல இடங்களிலும் சூழமைவுகளிலும் உடனடியாகத் தேவைப்படுவதாகும். இதில் சிக்கல்கள் எழக்கூடும். எனவே:
1. இக்காரியத்தில் ஒவ்வொரு நாட்டின் மரபுகளிலிருந்தும் பண்பாடுகளிலிருந்தும் எவையெல்லாம் திருவழிபாட்டில் சரியாகச் சேர்;த்துக்கொள்ளப்படத் தகுதி படைத்தன என்பதை எண் 22 பிரிவு 2 இல் கண்டுள்ள அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகள் விழிப்புடனும் முன்மதியுடனும் எண்ணிப் பார்க்க வேண்டும். பயனுள்ளவையாக அல்லது தேவையானவையாகக் கருதப்படும் மாற்றங்களைத் திருத்தூதுப் பீடத்திற்கு அறிவிக்க வேண்டும்; அதன் இசைவைப் பெற்று அவற்றைத் திருவழிபாட்டில் புகுத்தலாம்.
2. இத்தகைய மாற்றங்கள் தேவையான விழிப்புடன் நிகழும் வண்ணம் தேவைக்கு ஏற்பத் திருத்தூதுப்பீடம் தகுதி படைத்த ஒருகசில குழுக்களிடையேயும் வரையறுக்கப்பட்ட கால அளவுக்குள்ளும் முன்சோதனை முறைகளை அனுமதித்து அவற்றை நடத்துமாறு அந்தந்தப் பகுதிகளின் திருச்சபை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும்.
3. இம்மாற்றங்களைப் பொறுத்தமட்டில் திருவழிபாட்டின் விதிகள் குறிப்பாக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில்தனிப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துவது உண்டு. எனவே, இவ்விதிகளை இயற்றும் போது இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் துணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. மறைமாவட்டத்திலும் பங்கிலும் திருவழிபாட்டு வாழ்வை ஊக்குவித்தல்
மறை மாவட்டத்தில் திருவழிபாட்டு வாழ்வு
41. ஆயரை அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் குழுவின் தலைமைத் திருப்பணியாளராகக் கொள்ள வேண்டும். அம்மக்களின் கிறிஸ்தவ வாழ்வு ஒருவகையில் ஆயரிடமிருந்தே தோன்றி அவரையே சார்ந்திருக்கிறது.
எனவே ஆயரைச் சூழ்ந்து அமையும் மறைமாவட்டத் திருவழிபாட்டு வாழ்வை, சிறப்பாக மறைமாவட்டத் தலைமைக் கோவிலில் மையம்பெறும் அவ்வாழ்வை அனைவரும் மிக உயர்வாக மதிக்க வேண்டும். திருப்பணி நிலையினரும் பிற பணியாளர்களும் சூழ்ந்து நிற்க ஆயரின் தலைமையில் ஒரே பீடத்தில் நிகழும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், சிறப்பாக ஒரே நற்கருணைப் பந்தியில், ஒரே இறைவேண்டலில், தூய மக்கள் அனைவரும் முழுமையாகவும் செயல்முறையிலும் பங்குகொள்வதில்pதான் திருச்சபை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதை, அனைவரும் தெளிவாக உணர வேண்டும்.35
பங்குகளில் திருவழிபாட்டு வாழ்வு
42. ஆயர் தமது சபையெங்கும் எப்பொழுதும் தமது முழு மக்கள் குழுவுடன் இருக்க இயலாது. எனவே, சிறிய மக்கள் குழுக்களை அவர் உருவாக்க வேண்டிய தேவை எழுகிறது. இக்குழுக்களுள் அந்தந்த இடத்தில் ஆயருக்குப் பதிலாயிருக்கும் அருள்பணியாளரின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள பங்குகள் சிறப்பிடம் பெறுகின்றன. இவை உலகமெங்கும் நிறுவப்பட்டுள்ள காணக்கூடியத் திருச்சபையை ஒருவாறு முன்னிலைப்படுத்துகின்றன.
எனவே பங்கின் திருவழிபாட்டு வாழ்வையும் அந்த வாழ்வு ஆயரோடு கொண்டுள்ள தொடர்பையும் நம்பிக்கை கொண்டோரிடமும், திருப்பணியாளர்களிடமும் கருத்தளவிலும் நடைமுறையிலும் ஊக்குவிக்க வேண்டும். பங்குச் சமூக உணர்வு சிறப்பாக ஞாயிற்றுக்கிழமை திருப்பலியைச் சமூகமாகக் கொண்டாடுவதிலே தழைத்து வளருமாறு உழைக்க வேண்டும்.
5. அருள்பணி சார்ந்த திருவழிபாட்டுச் செயலை ஊக்குவித்தல்
43. திருவழிபாட்டை ஊக்குவிக்கவும் சீரமைக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி, கடவுள் தம் திட்டத்திலே நமது காலத்துக்கென செய்துள்ள முன்னேற்பாடுகளின் ஒருவித அடையாளம் எனவும் தூய ஆவி தம் திருச்சபையில் இயங்குவதின் அடையாளம் எனவும் கருதுவது பொருத்தமானதே. அன்றியும், திருச்சபையின் வாழ்விற்கும் இன்றைய மறையுணர்வு, செயல் அனைத்திற்கும் இந்த முயற்சி ஒரு சிறப்பியல்பாகத் திகழ்கின்றது.
ஆகவே, அருள்பணி சார்ந்த திருவழிபாட்டுச் செயலைத் திருச்சபையிலே மேன்மேலும் ஊக்குவிப்பதற்கெனத் திருச்சங்கம் தீர்மானிப்பதாவது:
நாட்டளவிலான திருவழிபாட்டுப் பணிக்குழு
44. எண் 22 பிரிவு 2 இல் குறிப்பிட்டுள்ளபடி அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகள் திருவழிபாட்டுப் பணிக்குழு ஒன்றை அமைத்து, திருவழிபாட்டில் புலமை பெற்றவர்களும், இசை, திருக்கலை, அருள்பணி ஆகிய துறைகளில் தேர்ச்சி உடையவர்களும் அக்குழுவுக்குத் துணைபுரிய வழிசெய்வது விரும்பத்தக்கது. இயன்றவரை அருள்பணித் திருவழிபாட்டு நிறுவனம் திருவழிபாட்டு துறையிலே சிறந்த புலமையுடைய பொது நிலையினரையும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உறுப்பினர்களாகக் கொண்டிருக்கலாம். மேற்குறிப்பிட்ட அந்தந்தப் பகுதிகளின் திருச்சபை அதிகாரிகளின்கீழ் செயலாற்ற வேண்டிய இப்பணிக்குழு தன் பொறுப்புக்குட்பட்ட அருள்பணி சார்ந்த திருவழிபாட்டுச் செயலை ஒழுங்குபடுத்தும்; திருத்தூது ஆட்சிப் பீடத்திற்கு எடுத்துரைக்கப்படவெண்டிய மாற்றங்கள் இருக்கும்போதெல்லாம் அவற்றிற்கான ஆய்வுகளையும் அவசியமாக முன்சோதனைகளையும் ஊக்குவிக்கும்.
மறைமாவட்டத் திருவழிபாட்டுப் பணிக்குழு
45. இவ்வாறே திருவழிபாட்டுச் செயலை ஊக்குவிக்க ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயரது கண்காணிப்பின் கீழ் திருவழிபாட்டுப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
சில வேளைகளில் பல மறைமாவட்டங்கள் இணைந்து ஒரெ பணிக்குழுவை அமைத்தல் ஏற்புடைத்தது. இவை ஒன்றுசேர்ந்து ஆராய்வதன் வாயிலாகத் திருவழிபாட்டை முன்னெடுத்துச் செல்லலாம்.
திருஇசை மற்றும் திருக்கலைக்கான பணிக்குழுக்கள்
46. திருவழிபாட்டுப் பணிக்குழுவைத் தவிர இயன்றவரை ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் திருஇசை மற்றும் திருக்கலை ஆகியவற்றிற்கெனப் பணிக்குழுக்கள் அமைத்தல் வேண்டும். இம்மூன்று பணிக்குழுக்களும் தம் ஆற்றல்களை ஒன்று திரட்டி ஒத்துழைக்க வேண்டும். ஏன், இம்மூன்றும் ஒரே பணிக்குழுவாக வடிவெடுத்தால் ஒருவேளை இன்னும் அதிக நலமாயிருக்கும்.
இயல் 2
நற்கருணை என்னும் தூய்மைமிகு மறைநிகழ்வு
திருப்பலியும் பாஸ்கா மறைநிகழ்ச்சியும்
47. நம் மீட்பா தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே தமது இறுதி இராவுணவுப் பந்தியில் தம் உடல், இரத்தம் ஆகியவற்றாலான நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார். தாம் மீண்டும் வருமளவும் எல்லாக் காலங்களிலும் தமது சிலுவைப் பலியை நின்று நிலவச் செய்தார். தம் அன்: மணமகளாம் திருச்சபையிடம் தமது இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லவும் இப்பலியை ஏற்படுத்தினார். இஃது இரக்கத்தின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு,36 பாஸ்கா விருந்து இவ்விருந்திலே ''கிறிஸ்து உண்ணப்படுகிறார்; அகம் அருளால் நிரம்பப்படுகிறது; வரவிருக்கும் மாட்சிமையின் உறுதிமொழி நமக்கு அளிக்கப்படுகிறது.''37
நம்பிக்கை கொண்டோர் திருப்பலியில் செயல்முறையில் பங்கேற்றல்
48. எனவே கீழ்வருவனவற்றின்மேல் மிகுந்த அக்கறை கொள்கின்றது திருச்சபை: நம்பிக்கையின் இந்த மறைபொருள் நிறைதுவேற்றப்படும்பொழுது நம்பிக்கை கொண்டோர் அதனுடன் தொடர்பு அற்றவர்கள்போல் அல்லது அமைதி காக்கும் பார்வையாளர்கள் போல் இராமல், சடங்குகள், இறைவேண்டல் ஆகியவற்றின் வாயிலாக அதனை நன்றாகப் புரிந்துகொண்டு, அத்தூய செயலை உணர்ந்து அதில் பக்தியுடனும் செயல் முறையிலும் பங்குபெற வேண்டும்; கடவுளின் வார்;த்தையால் அவர்கள் அறிவு பெற வேண்டும்; ஆண்டவரின் உடல் வழங்கப்படும் விருந்தில் பங்கேற்று அவர்கள் ஊட்டம் பெறவேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்ல வெண்டும்; களங்கமற்ற பலிப்பொருளை திருப்பணியாளர் கைகள் வழியாக மட்டுமன்றி, திருப்பணியாளரோடு சேர்ந்தும் ஒப்புக்கொடுத்துத் தங்களையே கையளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; இவ்வாறு இறுதியாக, கடவுளே எல்லாருக்கும் எல்லாமாயிருக்க, கடவுளோடும் தங்களுக்குள்ளும் கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டு38 ஒருமைப்பாட்டில் அவர்கள் நாளுக்கு நாள் நிறைவுபெற வேண்டும்.
49. ஆகவே, திருப்பலி, அதன் சடங்குகளின் அமைப்பால் கூட, அருள்பணியில் முழுப் பலனை விளைவிக்க, மக்களோடு கொண்டாடப்படும் திருப்பலிகளையும், சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் நிறைவேற்றப்பெறும் திருப்பலிகளையும் மனதிற்கொண்டு கீழ்வருவனவற்றைத் திருச்சங்கம் தீர்மானிக்கின்றது.
திருப்பலி முறையைச் சீர்திருத்தி அமைத்தல்
50. திருப்பலியின் பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தனி இயல்பும் அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பும் இன்னும் டிதளிவாகத் தோன்றும்முறையிலும, நம்பிக்கை கொண்டோர் திருப்பலியில் பக்தியுடனும் செயல்முறையிலும் இன்னும் எளிதாகப் பங்குகொள்ளத் தகுந்த முறையிலும் திருப்பலிமுறை சீரமைக்கப்பட வேண்டும்.
எனவே, சடங்குகளின் மையப்பொருளைப் பாதிக்காத முறையில் அவற்றை எளியனவாக்க வேண்டும். காலப்போக்கில் இரட்டிப்பாக்கப்பட்ட சடங்குகளையும் பயன் அதிகமின்றிச் சேர்க்கப்பட்டவைகளையும் நீக்க வேண்டும். போதிய காணமின்றிக் காலத்தால் அழிந்துபட்ட சடங்குகள் சில தகுந்தவை மற்றும் தேவையானவை எனக் கண்டால் திருத்தந்தையரின் பண்டைய விதியைப் பின்பற்றி, அவற்றை மீண்டும் புகுத்த வேண்டும்.
விவிலியச் செல்வங்களை நிறைவாக வழங்கல்
51. நம்பிக்கை கொண்டோருக்கு இறைவார்த்தைப் பந்தியில் இன்னும் மிக நிறைவாக உணவு வழங்கப்படவேண்ம். இதற்காக விவிலியத்தின் கருவூலங்களை இன்னும் தாராளமாகத் திறந்திடவும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாக விவிலியத்தின் முதன்மையான பகுதிகளை மக்களுக்கு வாசித்திடவும் வேண்டும்.
மறையுரை
52. மறையுரையைத் திருவழிபாட்டின் ஒரு பகுதியாக மிகவும் போற்ற வேண்டும். இம்மறையுரை திருவழிபாட்டு ஆண்டு முழுவதிலும் விவிலயத்திலிருந்து நம்பிக்கையின் மறை பொருளையும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிகளையும் விளக்குகிறது. அன்றியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் கனமான காணரம் இல்லையெனில் மறையுரையை விட்டுவிடக்கூடாது.
நம்பிக்கை கொண்டோரின் மன்றாட்டு
53. ''பொது மன்றாட்டு'' அல்லது ''நம்பிக்கை கொண்டோரின் மன்றாட்டு'' சிறப்பாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் நற்செய்தி வாசகத்திற்கும் மறையுரைக்கும்பின்னர் மீண்டும் வழக்கத்தில் வரவேண்டும். இவ்வாறு இம்மான்றாட்டில் மக்கள் பங்குகொண்டு தூய திருச்சபைக்காகவும், நாட்டு அதிகாரிகளுக்காகவும், பற்பல தேவைகளால் நலிவுறுவோருக்காகவும், மக்கள் அனைவருக்காகவும், உலக முழுவதின் நிறைவாழ்வுக்காகவும்39 கடவுளை வேண்ட முடியும்.
திருப்பலியில் பயன்படுத்தும் மொழி
54. மக்களுடன் இணைந்து நிறைவேற்றப்பெறும் திருப்பலிகளிலே சிறப்பாக வாசங்களிலும் ''பொதுமன்றாட்டிலும்'' சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி இக்கொள்கை விளக்கம் எண் 36இல் கண்டுள்ள விதிக்கு ஏற்ற முறையில் மக்களுக்கான பகுதிகளில் அந்தந்த இடத்து மொழிக்குச் சிறப்பிடம் அளிக்க வேண்டும்.
எனினும், திருப்பலியில் தங்களுக்கானப் பொதுப் பகுதிகளை இலத்தீன் மொழியில் சேர்ந்து சொல்லவோ, பாடவோ, மக்களால் இயலுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இடத்து மொழியை இன்னும் அதிகமாகத் திருப்பலியில் கையாளுதல் பொருத்தமானதாகத் தோன்றும் இடங்களில் இக் கொள்கை விளக்கம் எண் 40 இல் கண்டுள்ள ஒழுங்கு கடைப்பிடிக்கப்படட்டும்.
அப்ப இரச வடிவில் நற்கருணை வழங்கல்
55. திருப்பணியாளர் நற்கருணை உட்கொண்டபின் மக்களும் அதே பந்தியிலிருந்து ஆண்டவரின் திருஉடலை உண்டு திருப்பலியில் முழுமையாகப் பங்குகொள்வது பெரிதும் விரும்பத்தக்கது.
இரு வடிவங்களில் நற்கருணை அருந்துவதைப் பொறுத்த மட்டில் திரிதெந்துப் பொதுச் சங்கம் நிலைநாட்டிய கொள்கைத் தத்துவங்கள் உறுதியாக நிற்கவே40 திருத்தூது ஆட்சிப் பீடத்தால் வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் அந்தந்த இடத்து ஆயரின் தீர்ப்புக்கு ஏற்ப அப்ப வடிவிலும் இரச வடிவிலும் நற்கருணையைத் திருப்பணியாளருக்கும் துறவிகளுக்கும் மட்டுமன்றிப் பொது நிலையினருக்கும் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, திருப்பணியாளருக்கு அவர்கள் திருநிலைப்படுத்தப்படும் திருப்பலியிலும், நேர்ச்சைப் பாடுகள் கொடுக்கிறவர்களுக்கு நேர்ச்சைப்பாட்டுத் திருப்பலியிலும், புதுக்கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் திருமுழுக்கைத் தொடர்ந்து நிறைவேற்றப்பெறும் திலுப்பலியிலும் அப்ப இரச வடிவில் நற்கருணை வழங்கப் பெறலாம்.
திருப்பலியின் பிளவுபடாத் தன்மை
56. வாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய இரு பகுதிகளைத் திருப்பலி கொண்டுள்ளது எனலாம். இவை இரண்டும் ஒரே ஒரு வழிபாட்டுச் செயலின் கூறுகளாகத் தம்முள் நெருங்கி இணைந்துள்ளன. ஆகவே, மக்கள் முழுத்திருப்பலியிலும், சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடமைத் திருநாள்களிலும் நிறைவெற்றப்பெறும் திருப்பலியில், பங்குகொள்ள அருள்பணியாளர்கள் மறைக்கல்வி வழியாக அவர்களுக்குக் கருத்துடன் கற்பிக்க வேண்டும் என இச்சங்கம் தீவிரமாகத் தூண்டுகிறது.
கூட்டுப் பலி
57.1. திருப்பணியாளர் நிலையில் ஒற்றுமையைப் பொருத்தமாக வெளிப்படுத்தி நிற்கும் கூட்டுப்பலி கீழைச்சபையிலும், மேலைச் சபையிலும், இன்றுவரை திருச்சபை வழக்கில் இருந்து வந்துள்ளது. எனவே கீழ்வரும் தருணங்களில் கூட்டுப்பலி நிறைவேற்றுவதற்கான அனுமதியைத் திருச்சங்கம் மகிழ்ச்சியுடன் வழங்குகிறது.
(i) அ.ஆண்டவரின் இறுதி இராஉணவை நினைவுகூரும் பெரிய வியாழனன்று, திருஎண்ணெயை மந்திரிக்கும் திருப்பலி, மற்றும் அதே நாள் மாலையில் நிறைவேற்றப்பெறும் திருப்பலி;
ஆ. பொதுச் சங்கங்கள், ஆயர்களின் கூட்டங்கள், மன்றங்கள் ஆகியவற்றின்போது நிறைவேற்றப்பெறும் திருப்பலிகள்;
இ. ஆதினத் தலைவருக்கு ஆசி வழங்கும் திருப்பலி.
(ii) அன்றியும், கூட்டுப்பலி; நிறைவெற்றுவது தகுந்தது என முடிவு செய்யும் உரிமை பெற்ற திருச்சபைத் தலைவர் இசைவுடன் கீழ்வரும் தருணங்களில் கூட்டுப்பலி நிறைவேற்றப்பெறலாம்.
அ. மறைமாவட்டத் திருப்பணியாளர்களோ, துறவறத் திருப்பணியாளர்களோ கூடும் எந்த கூட்டங்களிலும் நிறைவெற்றப் பெறும் திருப்பலிகள்.
2. i மறைமாவட்டத்தில் கூட்டுப்பலி பற்றிய ஒழுங்குகளைக் கண்காணிப்பது ஆயரின் கடமை.ஷ
ii. ஆயினும் தனியாகத் திருப்பலி நிறைவெற்ற எந்தத் திருப்பணியாளருக்கும் எப்பொதும் உரிமை உண்டு. எனினும் ஒரே நேரத்திலும் அதே கோவிலிலும் மற்றும் ஆண்டவரின் இறுதி இராவுணவை நினைவுகூரும் பெரிய வியார்னன்றும் தனித்தனித் திருப்பலிக்கு இடமில்லை.
58. கூட்டுப்பலிக்கெனப் புதியதொரு சடங்குமுறை தொகுக்கப்பட்டு ஆயர் சடங்கு நூலிலும் புகுத்தப்பட வேண்டும்.
இயல் 3
பிற அருளடையாளங்களும் அருள்வேண்டல் குறிகளும்
அருளடையாளங்களின் தன்மை
59. அருளடையாளங்கள் கொண்டுள்ள குறிக்கோள்கள் கீழ்வருவன: மக்களைத் தூய்மையாக்கல்; கிறிஸ்துவின் உடலை உருவாக்கி வளர்த்தல்; இறுதியாக கடவுளுக்கு வழிபாடு நல்குதல். மெலும் அடையாளங்கள் என்ற முறையில் அவை அறிவுரை வழங்கும் அலுவலலையும் கொண்டுள்ளன. அருளடையாளக் கொண்டாட்டங்களுக்கு நம்பிக்கை முன்னதாகவே தேவை என்பது மட்டுமல்ல, அக்கொண்டாட்டங்கள் சொற்களாலும் சடங்குகளாலும் நம்பிக்கையைப் பேணி வளர்க்கின்றன் உறுதிப் படுத்துகின்றன் வெளிப்படுத்துகின்றன. எனவே இவை நம்பிக்கையின் அருளடையாங்கள் என அழைக்கப்படுகின்றன. உண்மையாகவே இவை அருளை வழங்குகிள்ன. மேலும் இதே அருளை நம்பிக்கை கொண்டோர் பயனுடன் பெறவும் கடவுளை முறையாக வழிபடவும் அன்பைச் செயல்படுத்தவும் சிறந்த வகையில் அவர்களை அருளடையாளக் கொண்டாட்டங்கள் தயாரிக்கின்றன.
ஆகவே, அருளடையாளங்களை நம்பிக்கை கொண்டோர் எளிதில் புரிந்துகொண்டு, கிறிஸ்துவ வாழ்வை வளர்ப்பதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள இவற்றை மிக்க ஆவலுடன் அடிக்கடி பெறுவது மிகவும் வேண்டற்பாலது.
அருள்வேண்டல் குறிகள்
60. இவற்றைத் தவிர, தூய அன்னையாம் திருச்சபை அருள் வேண்டல் குறிகளையும் ஏற்படுத்தியுள்ளது. அருளடையாளங்களை ஒருவாறு ஒத்திருக்கும் திருச்சின்னங்களாகிய இவை முக்கியமாக அருள் நெறி விளைவுகளைக் குறித்துக் காட்டித் திருச்சபையின் வேண்டுதலால் அவற்றைப் பெற்றுத் தருகின்றன. அருளடையாளங்களின் சிறந்த பயனைப் பெற இவை மக்களைத் தயாரிக்கின்றன. அவர்களது வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளையும் தூய்மையாக்குகின்றன.
அருளடையாளங்கள், மற்றும் அருள்வேண்டல் குறிகளின் அருள்பணி சார்ந்த மதிப்பு
61. இவ்வண்ணம், அருளடையாளங்களையும் அருள்வேண்டல் குறிகளையும் நிறைவேற்றும் திருவழிபாடு நன்முறையில் ஆயத்தமாயிருக்கும் நம்பிக்கை கொண்டோரின் வாழ்வோடு இணைந்த, ஏறக்குறைய, ஒவ்வொரு நிகழ்வையும் கிறிஸ்துவின் துன்பங்கள், இறப்பு, உயிர்த்தெழுதல் என்னும் பாஸ்கா மறைநிகழ்விலிருந்து வழியஸம் இறையருளால் தூய்மை அடையச் செய்கின்றது. இப்பாஸ்கா மறைநிகழ்விலிருந்தே அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் அனைத்தும் தம் ஆற்றலைப் பெறுகின்றன. எனவே, நேர்மையாகப் பயன்படுத்தப்படும் உலகப் பொருள்களில் எதுவும் மனிதரைத் தூய்மையாக்கவும் கடவுளைப் புகழவும் பயன்படாமல் இருக்க இயலாது.
அருளடையாளச் சடங்குகளைத் தழுவியமைத்தல்
62. காலப்போக்கிலே அருளடையாளங்கள், அருள் வேண்டல் குறிகள் ஆகியவற்றின் சடங்குகளில், அவற்றின் இயல்பும் நோக்கமும் இக்காலத்தில் தெளிவாகத் துலங்காவண்ணம் செய்கின்ற ஒருசில கூறுகள் புகுந்துவிட்டன என்பதாலும், இதன் விளைவாகத் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப அருளடையாளங்கள் மற்றும் அருள்வேண்டல் குறிகளைப் பொறுத்தமட்டில் ஒருசில வுறுகளைத் தழுவியமைக்க வேண்டும் என்பதாலும், திருச்சங்கம் கீழ்வருவனவற்றைத் தீர்மானிக்கிறது.
இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் மொழி
63. அருளடையாளங்களையும் அருள்வேண்டல் குறிகளையும் நிறைவேற்றுவதிலே அந்தந்த இடத்து மொழியைக் கையாளுவது பெரும்பாலும் மக்களுக்கு அதிகப் பயன் தரக்கூடும் என்பதால், பின் வரும் விதிகளுக்கு ஏற்ப, அம்மொழியை அதிகமாகக் கையாள வேண்டும்.
(அ) எண் 36இல் கூறப்பட்டுள்ளபடி அருளடையாளங்களையும் அருள்வேண்டல் குறிகளையும் வழங்குவதில் அந்தந்த இடத்து மொழியைக் கையாளளலாம்
(ஆ) உரோமைத் திருச்சடங்கு நூலின் புதிய பதிப்பைப் பின்பற்றித் தனிப்பட்ட திருச்சடங்கு நூல்களை எண் 22 பிரிவு 2இல் கண்டுள்ளபடி அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகள் கூடிய விரைவில் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத் தேவைகளுக்கும் மொழிக்கும் ஏற்ப இவற்றைத் தழுவி அமைக்க வேண்டும். திருத்தூது ஆடசிப் பீடத்தின் ஒப்புதல் பெற்று அந்தந்த மண்டலங்களில் இவை பயன்படுத்தப்பெறட்டும். இந்தத் திருச்சடங்கு நூல்களையும் சடங்குகளின் தனிப்பட்ட தொகுப்புகளையும் உருவாக்கும்போது, உரோமைத் திருச்சடங்கு நூலில் ஒவ்வொரு சடங்கின் தொடக்கத்திலும் காணும் அருள்பணி மற்றும் சடங்கு சார்ந்த விதிகளின் விளக்கங்களையோ சமூக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விளக்கங்களையோ விட்டுவிடக் கூடாது.
திருமுழுக்குப் புகுநிலை
64. வயது வந்தவர்களுக்கென உள்ள பல்வேறு நிலைகளைக் கொண்ட திருமுழுக்குப் புகுநிலையைத் திரும்பவும் நிறுவி அந்தந்தத் தலத் திருச்சபைத் தலைவரின் முடிவுப்படி செயல்படுத்த வேண்டும். இதனால், போதிய பயிற்சி பெறுவதற்கென ஏற்படுத்தப்பெற்ற திருமுழுக்குப் புகுநிலைக்காலம் ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்ட காலத்தினுள் நிறைவேற்றப்பட வேண்டிய சடங்குகளால் தூய்மையுற இயலும்.
திருமுழுக்குச் சடங்கைத் திருத்தி அமைத்தல்
65. ஒவ்வொரு நாட்டு மக்களிடையேயும் வழக்கில் இருக்கும் சமயம் தழுவும் தொடக்கச் சடங்கின் கூறுகள் இக்கொள்கை விளக்கம் 37-40 எண்களில் கண்டுள்ள விதிகளுக்கு ஏற்பக் கிறிஸ்தவச் சடங்கொடு இயைந்து செல்லுவனவாயின், கிறிஸ்தவ மரபில் காணப்படும் சமயம் தழுவும் தொடக்கச் சடங்கின் கூறுகளுடன், அவற்றையும் நற்செய்தி அறிவிக்கப்படுகிற நாடுகளில் ஏற்றுக்கொள்ளலாம்.
66. வயது வந்தவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கும் சாதாரணச் சடங்கு, ஆடம்பரச் சடங்கு ஆகிய இரண்டையும் திருத்தி அமைக்க வேண்டும். இவ்வாறு திருத்தி அமைக்கும்போது திரும்பவும் நிறுவப்பெற்றுள்ள திருமுழுக்குப் புகுநிலையை மனத்தில் கொள்ள வேண்டும். அன்றியும், உரோமைத் திருப்பலி நூலில் 'திருமுழுக்கு வழங்குவதற்கான திருப்பலி' ஒன்றையும் இணைக்க வேண்டும்.
67. குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் கடங்கைச் சீரமைத்து, மழலைகளின் உண்மை நிலைக்குப் பொருத்தமான விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும். இச்சடங்கில் பெற்றோருக்கும் ஞானப் பெற்றோருக்கும் உரிய பகுதிகளும் பணிகளும் அதிகத் டிதளிவாகத் துலங்கட்டும்.
68. திருமுழுக்குப் பெறுவோரின் எண்ணிக்கை மிகுதியாக இருக்குமிடத்து, அந்தந்தத் தலத்திருச்சபைத் தலைவரின் முடிவுப்படி திருமுழுக்குச் சடங்கில் தேவையான மாற்றங்களைப் புகுத்தல் நலம். அன்றியும், முக்கியமாக நற்செய்தி அறிவிக்கப்படுகிற நாடுகளில் வேதியரும் பொருவாக மரண ஆபத்து வேளையில், திருப்பணியாளரோ, திருத்தொண்டரோ இல்லாத நேரத்தில், நம்பிக்கை கொண்டோரும் கையாளத்தக்க சுருக்கமான திருமுழுக்குச் சடங்கு முறை ஒன்றினையும் உருவாக்க வேண்டும்.
69. ''குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும்போது விடப்படடனவற்றை நிறைவு செய்யும் ஒழுங்கு'' எனப்படும் சடங்குக்குப் பதிலாக, சுருக்கமான சடங்கால் திருமுழுக்குப் பெற்ற குழந்தை ஏற்கெனவே திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப் பெற்றுள்ளது என்பதை அதிகத் தெளிவாகவும் பொருத்தமான முறையிலும் குறிப்பிடும் புதியதொரு சடங்கை உருவாக்க வேண்டும்.
அன்றியும், சட்டப்படி செல்லத்தக்க வகையில் முன்னமே திருமுழுக்குப் பெற்று, பிறகு கத்தோலிக்கத் திருச்சபையைத் தழுவுபவர்களுக்கு எனப் புதியதொரு சடங்கை உருவாக்க வேண்டும்; திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்னும் உண்மை அதில் வெளிப்பட வேண்டும்.
70. பாஸ்கா காலம் நீங்கலாக மற்ற காலங்களில், ஒப்புதல் பெற்ற ஒரு சிறிய வாய்ப்பாட்டால் திருமுழுக்கு நீரைத் திருமுழுக்குச் சடங்கின்போதே மந்திரிக்கலாம்.
உறுதிப்பூசுதல் சடங்கை திருத்தி அமைத்தல்
71. கிறிஸ்தவ சமயம் தழுவும் தொடக்கச் சடங்கு முழுவதுடன் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளம் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு அதிகத் தெளிவாக வெளிப்படும் வகையில் இதன் சடங்கைத் திருத்தி அமைக்க வேண்டும். ஆகவே இந்த அருளடையாளத்தைப் பெறுமுன் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
வசதியிருப்பின், உறுதிப்பூசுதலைத் திருப்பலியின்போது நிறைவேற்றலாம். திருப்பலிக்கு வெளியெ நிறைவேற்றப்படும் உறுதிப் பூசுதலின் சடங்குக்கு முன்னுரை போன்று கையாளப்பட வேண்டிய வாய்ப்பாடு ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
ஒப்புரவுச் சடங்கைத் திருத்தி அமைத்தல்
73. ''அவஸ்தைப் பூசுதலை'' இன்னும் அதிகப் பொருத்தமாக ''நோயில் பூசுதல்'' எனவும் அழைக்கலாம். இஃது இறக்கும் தறுவாயில் உள்ளவர்களுக்கு மட்டும் உரிய அருளடையாளம் அன்று. எனவே, நம்பிக்கை கொண்டோர் ஒருவர் நோயாலோ, முதுமையாலோ மரண ஆபத்தில் இருக்கத் தொடங்கும்போதே அத்தருணம் இந்த அருளடையாளத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம்.
74. நோயாளியைப் பூசுதல், இறுதிவழியுணவு வழங்கல் என்னும் தனித்தனிச் சடங்குகளோடு, தொடர்ச்சியான சடங்கு ஒன்றையும் உருவாக்க வேண்டும். இச்சடங்கில் ஒப்புரவு அருளடையாளத்திற்குப்பின், இறுதி வழியுணவு வழங்குவதற்கு முன் நோயாளியைப் பூச வேண்டும்.
75. நோயாளியை எத்தனை இடங்களில் பூச வேண்டும் என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தீர்மானிக்கப்படலாம். நோயில் பூசுதல் சடங்குக்குரிய இறைவேண்டல்களை இந்த அருளடையாளத்தைப் பெறும் நோயாளிகளின் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்பத் திருத்தி அமைக்க வேண்டும்.
திருநிலைப்பாட்டுச் சடங்கைத் திருத்தி அமைத்தல்
76. திருநிலைப்பாட்டுச் சடங்குகளையும் அவற்றின் பாடங்களையும் திருத்தி அமைக்க வேண்டும். ஒவ்வொரு திருநிலைப்பாட்டுக்கும் அல்லது ஆயர் திருநிலைப்பாட்டுக்கும் முன்னர் ஆயர் நிகழ்த்தும் உரைகள் அந்தந்த இடத்து மொழியில் அமையலாம்.
ஆயர் திருநிலைப்பாட்டின் போது தலைமீது கைகளை வைக்கும் சடங்கு அங்கிருக்கும் ஆயர்கள் அனைவராலும் நிறைவேற்றப்பெறலாம்.
திருமணச் சடங்கைத் திருத்தி அமைத்தல்
77. உரோமைச் சடங்கு நூலில் காணப்படும் திருமணச் சடங்கைத் திருத்தி அமைத்து இன்னும் அதிக வளமுடையதாக்க வேண்டும்; இவ்வாறு இந்த அருளடையாளத்தின் அருள் அதிகத் தெளிவாகக் குறிக்கப்படுவதோடு மணமக்களின் கடமைகளும் அவ்வாறே உணர்த்தப்பெறவும் இயலும்.
திருமணம் என்னும் அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் ''எந்த நிலப்பகுதியாவது போற்றுதற்குரிய வேறு பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் கையாண்டு வந்தால் அவை அனைத்தையும் மாற்றாது காக்க வேண்டுமெனத் திருச்சங்கம் பெரிதும் விழைகின்றது.''41
மேலும் இந்தக் கொள்கை விளக்கம் எண் 22 பிரிவு 2இல் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகள் எண் 63இல் கூறப்பட்டுள்ள விதிக்கேற்ப அந்தந்த இடங்களிலும் மக்களிடமும் காணப்படும் பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தும்படியான தனிப்பட்டதொரு திருமணச் சடங்கை உருவாக்க அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். எனினும் திருமணத்தை நிகழ்த்தும் திருப்பணியாளர் மணமக்களின் இசைவைக் கெட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் சட்டம் மாறாது காக்கப்பட வேண்டும்.
78. வழக்கமாகத் திருப்பலியிலே அதாவது நற்செய்தி வாசகம், மறையுரை ஆகியவற்றிற்குப் பிறகு, ''நம்பிக்கை கொண்டோரின் மன்றாட்டுக்கு'' முன் திருமணம் நிறைவேற்றப்பெறவெண்டும். மணமக்கள் மீது சொல்லப்படும் இறைவேண்டல் மணமக்கள் இருவரின் சரியொத்த கடமைகளையும் அவர்கள் தம்முள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்க வேண்டிய நிலையான பற்றுதலையும் உணர்த்தும் வகையில் பொருத்தமாகத் திருத்தப்பெற வேண்டும். இந்த இறைவேண்டலை இடத்து மொழியில் சொல்லலாம்.
திருமணம் என்னும் அருளடையாளம் திருப்பலிக்கு வெளியே நிறைவேற்றப் பெறுமாயின் சடங்கின் தொடக்கத்தில் திருமணத் திருப்பலியின் திருமுகமும் நற்செய்தியும் வாசிக்கப்பட வேண்டும். மணமக்களுக்கு ஆசியுரை எப்பொழுதும் வழங்கப்பட வேண்டும்.
அருள்வேண்டல் குறிகளையும் ஆசியுரைகளையும் திருத்தி அமைத்தல்
79. நம்பிக்கை கொண்டோர் உணர்ந்தும் செயல்முறையிலும் எளிதாகவும் பங்குகொள்ள வேண்டும் என்னும் முதன்மையான விதியையும் இன்றைய தேவைகளையும் கருத்தில்கொண்டு அருள் வேண்டல் குறிகளைத் திருத்தி அமைக்க வேண்டும். எண் 63இல் கண்டுள்ள விதிப்படி திருத்தி அமைக்கப்பெறும் திருச்சடங்கு நூல்களில் தேவைப்படுமாயின் புதிய அருள்வேண்டல் குறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு சிலரே வழங்கலாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆசியுரைகள் மிகக் குறைந்தனவாகவும், ஆயர்களுக்கும் திருச்சபைத் தலைவர்களுக்குமே உரியனவாகவும் இருக்கட்டும்.
தனிப்பட்ட சூழ்நிலைகளிலாவது, ஆயரின் முடிவுப்படி தகுதி வாய்ந்த பொதுநிலையினர் சில அருள்வேண்டல் குறிகளை வழங்க இயலுமாறு வழிசெய்ய வேண்டும்.
கன்னியர்களைத் திருநிலைப்படுத்தும் சடங்கு
80. ஆயர் சடங்கு நூலில் தரப்பட்டுள்ள கன்னியர்களைத் திருநிலைப்படுத்தும் சடங்கைத் திருத்தி அமைக்க வேண்டும்.
அன்றியும், துறவற நேர்ச்சைப்பாடு கொடுத்தல், நேர்ச்சைப் பாட்டைப் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான சடங்கு அதிக ஒருங்கிணைப்பும் எளிமையும் மாண்பும் கொண்டு இலங்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். தனிப்பட்ட விதிவிலக்குகள் நீங்கலாகத் திருப்பலியின்போது நேர்ச்சைப்பாடு கொடுப்போரும் நேர்ச்சைப் பாடுகளைப் புதுப்பிப்போரும் இச்சடங்கையே பயன்படுத்த வேண்டும்.
துறவற நேர்ச்சைப்பாட்டைத் திருப்பலியின்போது கொடுத்தல் போற்றத்தக்கது.
அடக்கச் சடங்கைத் திருத்தி அமைத்தல்
81. இறந்தோரை அடக்கம் செய்யும் சடங்கு கிறிஸ்தவ இறப்பின் பாஸ்காப் பண்பை அதிகத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். இச்சடங்கு ஒவ்வொரு மண்டலத்தின் நிலைமைகளுக்கும் மரபிற்கும் இயைந்ததாகவும் திருவழிபாட்டு உடைகளின் நிறத்தைப் பொறுத்த அளவிலும்கூட மிகப் பொருத்தமானதாகவும் அமைய வேண்டும்.
82. சிறுவர்களை அடக்கம் செய்வதற்கான சடங்கைத் திருத்தி அமைத்து அதற்குரிய திருப்பலி ஒன்றை அதில் சேர்க்க வேண்டும்.
இயல் 4
திருப்புகழ்மாலை
திருப்புகழ்மாலை கிறிஸ்துவும் திருச்சபையும் ஆற்றல் செயலாகும்.
83. புதிய நிலையான உடன்படிக்கையின் தலைமைத் திருப்பணியாளராம் இயேசு கிறிஸ்து மனித இயல்பை ஏற்றதன் வழியாக, விண்ணக வீட்டிலே என்றென்றும் இசைக்கப்படும் பாடலை அயல் நாடாகிய இம்மண்ணகத்திலும் புகுத்தியுள்ளார். மக்கட்குலம் அனைத்தையும் தம்மோடு ஒன்றித்து, கடவுளின் புகழ்ச்சிப் பாடலை இசைப்பதிலும் அதைத் தமது உடன் பங்காளியாக்குகின்றார்.
இத்திருப்பணியாளர் நிலை சார்ந்த அலுவலைக் கிறிஸ்து தமது திருச்சபை வழியாகத் தொடர்ந்து நடத்துகின்றார். இதனால் திருச்சபை நற்கருணைப் பலியை நிறைவேற்றுவதோடு நில்லாமல், பிற வழிகளிலும் சிறப்பாகத் திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்வதாலும் ஆண்டவரை இடையறாது புகழ்ந்து, உலகம் முழுவதன் நிறைவாழ்வுக்காகப் பரிந்து பேசுகிறது.
84. கிறிஸ்துவ சமயத்தின் தொன்மையான மரபின்படி கடவுளின் புகழை இசைப்பதன் வாயிலாக இரவும் பகலுமாகிய நாள்முழுவதையும் தூய்மைப்படுத்தத் திருப்புகழ்மாலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணியாளர்களும் இதற்கென்று திருச்சபையால் நியமிக்கப்பட்டுள்ள பிறரும்ஈ அல்லது திருப்பணியாளரோடு சேர்ந்து ஒப்புதல்பெற்ற முறையில் இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்களும் வியத்தகு இப்புகழ்ச்சிப் பாடலை முறையாக வேண்டுதல் செய்யும்போது அது உண்மையாகவே மணமகனுடன் உரையாடும் மணமகளின் குரலாக அமைகிறது. ஏன், தந்தையை நோக்கித் தம் உடலோடு ஒன்றித்து கிறிஸ்துவே எழுப்புகின்ற இறைவேண்டலாகவும் திகழ்கின்றது.
85. எனவே, திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யும் அனைவரும் திருச்சபையின் கடமையை நிறைவேற்றுவதோடு மட்டுமன்றி, கிறிஸ்துவின் மணமகளது மிக உயரிய பெருமையிலும் பங்குகொள்ளுகின்றனர். ஏனெனில், கடவுளுக்குப் ;புகழ்பாடும்போது இவர்கள் அனையாம் திருச்சபையின் பெயரில் கடவுளின் அரியணைமுன் நிற்கின்றனர்.
திருப்புகழ்மாலையின் அருள்பணி வளமை
86. அருள்பணியில் ஈடுபட்டுள்ள திருப்பணியாளர்கள் ''இடை விடாது இறைவனிடம் வேண்டுங்கள்'' (1 தெச 5:17) என்னும் பவுலின் அறிவுரையைத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென எத்துணை ஆழ்ந்து உணர்கின்றார்களோ, அத்துணை மேலான ஆர்வத்துடன் திருப்புகழ்மாலைய வேண்டுவர். ஏனெனில் ''என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது'' (யோவா 15:5) என்று மொழிந்த ஆண்டவர் ஒருவரே இவர்களின் உழைப்புக்குப் பலனும் வளமும் அளிக்க வல்லவர். இதனால்தான் திருத்தூதர்கள் திருத்தொண்டர்களை ஏற்படுத்தியபோது ''நாங்களொ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்'' (திப 6:4) என்று கூறியுள்ளனர்.
87. திருப்பணியாளர்களோ திருச்சபையின் மற்ற உறுப்பினரோ இன்றைய சூழ்நிலைகளில் இன்னும் அதிகமாக நல்லமுறையிலும் நிறைவாகவும்திருப்புகழ்மாலைய வேண்ட இயலும் வண்ணம், திருத்தூது ஆட்சிப்பீடம் ஏற்கெனவே நன்கு தொடங்கியுள்ள சீரமைப்பைப் பின்பற்றித் திருச்சங்கம் உரோமை வழிபாட்டு முறையின் திருப்புகழ்மாலை பற்றிக் கீழ்வருவனவற்றைத் தீர்மானிக்க விழைந்துள்ளது.
திருப்புகழ்மாலையின் மரபுவழி அமைப்பைத் திருத்தி அமைத்தல்
88. நாள் முழுவதையும் தூய்மைப்படுது;துவதே திருப்புகழ் மாலையின் குறிக்கோள். ஆதலால் மரபு வழிவரும் திருமணி அமைப்பைப் பின்வருமாறு சீரமைக்க வேண்டும்: திருமணபி புகழ்மாலைகள் இயன்ற வரையில் அவை வேண்டுதல் செய்யப்படுகின்ற நேரத்திற்குத் தகுந்தனவாய் இருக்க வேண்டும்; மேலும், முக்கியமாக திருத்தூதுப் பணிகளிலே ஈடுபட்டு இருப்பவர்களின் இன்றைய வாழ்க்கை நிலைகளுக்கும் அவை ஏற்றனவாய் அமைக வேண்டும்.
திருப்புகழ்மாலையைத் திருத்தி அமைப்பதற்கான விதிமுறைகள்
89. எனவே, திருப்புகழ்மாலையைச் சீரமைக்கும் போது கீழ்க்காணும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்:
(அ) அனைத்துத் திருச்சபையின் மதிப்புமிக்க மரபின்படி, காலை இறைவேண்டலாக விளங்கும் காலைத் திருப்புகழும், மாலை இறைவேண்டலாகத் திகழும் மாலைத் திருப்புகழும் அன்றாடத் திருப்புகழ்மாலையின் அச்சாணிகளாக அமைகின்றன. இவற்றை முதன்மை வாய்ந்த திருமணிகளாகக் கொண்டு வேண்டுதல் செய்தல் தேவை.
(ஆ) இரவுத் திருப்புகழ் நாளின் இறுதியில் சொல்லத்தகுந்த இறைவேண்டலாகச் சிரமைக்கப்பெற வேண்டும்.
(இ) வைகறைத் திருப்புகழ்மாலை எனப்படும் திருமணியைக் குழுவாக வேண்டுதல் செய்யும்போது, இரவுத் திருப்புகழுக்குரிய பண்பைக் கொண்டிருந்தாலும் இப்புகழ்மாலை நாளின் எந்நேரத்திலும் வேண்டுதல் செய்யப் பொருத்தமானதாய் அமைந்திருக்க வேண்டும். இது குறைந்த அளவு திருப்பாக்களையும், நீண்ட வாசகங்களையும் பெற்றிருக்க வேண்டும்.
(ஈ) முதல்மணி இறைவேண்டல் எனப்படும் திருப்புகழ் விடுபடட்டும்.
(உ) குழுவாக இறைவேண்டல் செய்வோரிடையே முற்பகல் மணி, நண்பகல் மணி, பிற்பகல்மணி எனப்படும் திருமணிகள் முன்போல் தொடர்ந்திடட்டும், மற்றவர்கள் இம்மூன்று திருமணிக்குள் இறை வேண்டல் நேரத்திற்கு மிகப் பொருத்தமாக ஒன்றை மட்டும் தேர்ந்து கொள்ளலாம்.
திருப்புகழ்மாலை பக்திக்கு ஊற்று
90. திருப்புகழ்மாலை திருச்சபையின் பொது இறைவேண்டல் என்னும் அளவில் பக்திக்கு ஊற்றும் தனி இறைவேண்டலுக்கு உணவுமாக விளங்குகிறது. ஆகவே திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யும் பொழுது திருப்பணியாளர்களும் திருப்புகழ்மாலையில் பங்கு கொள்ளும் மற்ற அனைவரும் தம் சொல்லோடு உள்ளமும் இயைந்து செல்லக் கவனம் செலுத்தவேண்டுமென ஆண்டவர் பெயரால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நோக்கம் நிறைவேறும் பொருட்டு இவர்கள் திருவழிபாடு, விவிலியம் ஆகியவை பற்றியும் சிறப்பாகத் திருப்பாடல்கள் பற்றியும்ஆழ்ந்த அறிவு பெற்றிட வேண்டும்.
சீரமைப்புப் பணியைச் செய்யும்போது உரோமைத்திருப்புகழ்மாலைய வெண்டுதல்செய்யக் கடமைப்பட்டுள்ளோர் அனைவரும் அது n காண்டிருக்கும் மதிப்பு மிக்கதும் தொன்மை வாய்ந்ததுமான செல்வத்தை இன்னும் அதிகமாகவும் எளிதாகவும் சுவைக்க இயலும் வகையில் அதில் மாற்றங்கள் கொணர வேண்டும்.
திருப்புகழ்மாலையின் திருப்பாடல்கள்
91. எண் 89இல் கண்டுள்ளபடி திருமணிகளின் அமைப்பு உண்மையாகவே செயலாக்கம் பெறவேண்டும் என்றால், இனி திருப்பாடல்களை ஒரு வாரத்திற்கு எனப் பிரிக்காமல் நீண்டகால அளவிற்கு எனப் பிரித்து அமைக்க வேண்டும்.
திருப்பாடல் நூலைத் திருத்தியமைக்குமாறு ஏற்கெனவே நன்கு தொடங்கப்பட்டுள்ள பணியைக் கூடிய விரைவில் முடிக்க வேண்டும். இப்பணியை ஆற்றும்போது கிறிஸ்தவ இலத்தீன் நடை, திருவழிபாட்டில் திருப்பாடல்களைப் பாடலாகவும் பயன்படுத்துதல், இலத்தீன் சபையின் முழு மரபு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருப்புகழ்மாலையின் வாசகங்களின் அமைப்பு
92. வாசகங்களைப் பொறுத்த அளவில் கீழ்க்காண்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்:
(அ) கடவுளது வாக்கின் செல்வங்களை நிறைந்த அளவிலும், எளிதாகவும் அடைய இயலும் வகையில் விவிலிய வாசக அமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும்.
(ஆ) திருச்சபைத் தந்தையர்கள், திருச்சபை அறிஞர்கள், திருச்சபை எழுத்தாளர்கள் ஆகியோரின் நூல்களிலிருந்து எடுக்கப்படும் வாசகங்களைச் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(இ) தூயவர்களின் துன்பங்களை அல்லது வாழ்வுப் பற்றிய குறிப்புகளை வரலாற்று உண்மையோடு இயைந்தனவாக அமைக்க வேண்டும்.
புகழ்ப்பாக்களைத் திருத்தி அமைத்தல்
93. புகழ்ப்பாக்கள் இயன்ற அளவுக்குத் தம் தொடக்கக் கால உருவை மீண்டும் பெறக்கூடிய நிலையில் சீரமைக்கப் பெறவெண்டும். புராணக் கதை அம்சங்கள் மற்றும் கிறிஸ்தவ பக்தியோட இயைந்து செல்லாதவை இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும்; அல்லது மாற்றப்பட வெண்டும். புகழ்ப்பாக்களின் தொகுப்பில் இடம்பெறும் மற்ற பாடல்களையும் தேவைக்கேற்றாற்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யும் நேரம்
94. நாள் முழுவதையும் நன்கு தூய்மைப்படுத்தவும், திரும்மணிப் புகழ்மாலையை அருள் பயனுடன் வேண்டுதல் செய்யவும் திருமணிப் புகழ்மாயை ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட சரியான நேரத்தை இயன்ற அளவுக்குக் கடைப்பிடித்தல் நல்லது.
திருப்புகழ்மாலையை வேண்டல் செய்யும் கடமை
95. குழுவாகத் திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யும் கடமை கொண்ட சமூகங்கள், தம் பொதுப் பலியை ஒப்புக்கொடுக்க மட்டுமன்றி, நாளும் திருப்புகழ்மாலையைக் குழுவாக வேண்டுதல் செய்யவும் கடமைப்பட்டுள்ளர்கள். குறிப்பாக:
(அ) மறைமாவட்டக் கோவில் திருப்பணியாளர்கள், ஆதீன ஆண் துறவிகள், ஆதீனப பெண் துறவிகள் ஆகியோரின் திருக்கழுக்களும் சட்ட உரிமையாலோ தங்கள் சபை ஏற்பாடுகளாலோ குழுவாகத் திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யக் கடமைப்பட்டுள்ள மற்ற துறவிகளும் திருப்புகழ்மாலை முழுவதையும் குழுவாகச் சேர்ந்து வேண்டுதல் செய்ய வேண்டும்.
(ஆ) தலைமைக் கோவில் திருப்பணியாளர்களும் குழு சார்ந்த திருப்பணியாளர்களும் பொதுச் சட்டத்தாலோ, தனிச் சட்டத்தாலோ கடமைப்பட்டுள்ள திருப்புகழ்மாலையின் பகுதிகளைக் குழுவாகச் சேர்ந்து வேண்டுதல் செய்ய வேண்டும்.
(இ) இந்தச் சமூகங்களின் உறுப்பினர் அனைவருள்ளும் உயர்திருப்பணிநிலை பெற்றவரும் துணைச்சகோதரர்கள் நீங்கலாக ஆடம்பர நேர்ச்சைப்பாடு கொடுத்தோரும் குழுவாகச் சேர்ந்து வேண்டுதல் செய்யாத திருமணிப் புகழ்மாலைகளைத்தனிமையில் வேண்டுதல் செய்ய வேண்டும்.
96. குழுவாகத் திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யக் கடமைப்பட்டிராதத் திருப்பணியாளர்கள் உயர்திருப்பணி நிலை பெற்றிருப்பின் எண் 89இல் காணும் விதிப்படி நாள்தோறும் பிறருடன் சேர்ந்தோ தனியாகவோ திருப்புகழ்மாலை முழுவதையும் வேண்டுதல் செய்ய வேண்டும்.
97. எப்பொழுது பிறிதொரு திருவழிபாட்டுச் செயலால் திருப்புகழ்மாயை வேண்டுதல் செய்யும் கடமை நிறைவு பெறக்கூடும் என்பது பற்றிய திருச்சடங்கு விதிகள் வரையறுக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட சூழ்நிலையில் பொருத்தமான காரணங்கள் இருப்பின் திருப்புகழ் மாலைய வேண்டதல் செய்யும் கடமை முழுவதையுமோ அதில் ஒரு பகுதியையோ பொறுத்தமட்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்டோருக்கு விலக்கு அளிக்கவும் அல்லது அதற்குப் பதிலாக வேறொளன்றைச் செய்யச் சொல்லவும் தலத் திருச்சபைத் தலைவர் உரிமை கொண்டுள்ளர்.
98. தூய வாழ்வின் நிறைவை அடைவதற்கென அமைக்கப்பெற்ற சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் சபை ஏற்பாடுகளின்படி திருப்புகழ்மாலையின் பகுதிகள் ஒருசிலவற்றை வேண்டுதல் செய்யும்போது திருச்சபையின் பொது இறைவேண்டல் செய்பவராகின்றனர்.
திருப்புகழ்மாலையை மாதிரியாகக் கொண்டு சிறியதொரு திருப்புகழ்மாலை ஆக்கப்பெற்று முறையே ஒப்புதல் பெற்றிருப்பின், இதைத் தம் சபை ஏற்பாடுகளின்படி வேண்டுதல் செய்யும்போது, சபையினர் திருச்சபையின் பொதுவேண்டல் செய்பராகின்றனர்.
திருப்புகழ்மாலையைக் குழுவாக வேண்டுதல் செய்தல்
99. திருப்புகழ்மாலை திருச்சபையின், அதாவது கடவுளை வெளிப்படையாகப் புகழும் மறையுடல் முழுவதன் குரல். எனவே, குழுவாகச் சேர்ந்த வேண்டல் செய்யக் கடமை பூண்டிராத் திருப்பணியாளர்களையும், சிறப்பாகக் கூடிவாழும் திருப்பணியாளர்களையும் ஒன்றுகூடி வந்திருக்கும் திருப்பணியாளர்களையும் திருப்புகழ்மாலையின் ஏதாவதொரு பகுதியையாகிலும் ஒன்று சேர்ந்து வேண்டல் செய்யுமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.
திருப்புகழ்மாலையைக் குழுவாக வேண்டுதல் செய்வொரும் பிறரோடு சேர்ந்து வேண்டுதல் செய்வோருமாகிய அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இப்பணியை உள்ளார்ந்த இறைப்பற்றைப் பொறுத்தமட்டிலும் வெளிச் செயல்முறையைப் பொறுத்த மட்டிலும் இயன்ற அளவு மிக நிறைவாக ஆற்ற வெண்டும்.
அன்றியும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு திருப்புகழ் மாலையைக் குழுவாகவும் பிறருடன் சேர்ந்தும் பாடுவது நன்று.
திருப்புகழ்மாலையை வேண்டுதலில் நம்பிக்கைக் கொண்டோரின் பங்கேற்பு
100. முக்கியமான திருமணிப் புகழ்மாலைகளை, சிறப்பாக மாலைத் திருப்புகழை ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிக ஆடம்பரமான விழாக்களிலும் கோவிலில் சமூகமாக வேண்டுதல் செய்யுமாறு அருள் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். பொதுநிலையினரும் திருப்பணியாளர்களோடு சேர்ந்தோ, தாமாகக் கூடிவந்தோ, தனித்தனியாகவோ, திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்வது போற்றத்தக்கது.
திருப்புகழ்மாலையில் பயன்படுத்தப்படும் மொழி
101. 1. இலத்தீன் வழிபாட்டு முறையின் தொன்மையான மரபுப்படி திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்வதற்குகத் திருப்பணியாளர்கள் இலத்தீன் மொழியைக் கையாளுவர். எனினும், இலத்தீன் மொழியைக் கையாளுவர். எனினும், இலத்தீன் மொழியைக் கையாளுவது திருப்புகழ்மாலையை ஏற்றுவகையில் வேண்டுதல் செய்யச் சில திருப்பணியாளர்களுக்குப் பெரும் தடையாக அமையலாம். இவர்களுக்கு எண் 36இல் கண்டுள்ள விதிப்படி அக்கப்பெற்ற திருப்புகழ்மாலையின் மொழிபெயர்ப்பைக் கையாளத் தனித்தனியாக அனுமதி நல்கத் தலத்திருச்சபைத் தலைவர் உரிமை கொண்டுள்ளார்.
2. ஆதீனப் பெண் துறவியரும் தூய வாழ்வின் நிறைவை அடைவதற்கென ஆக்கப்பெற்ற நிறுவனங்களிலுள்ள திருப்பணி செய்ய வேண்டிய திருப்புகழ்மாலையிலும் கூட அந்தந்த இடத்து மொழியைக் கையாளுவதற்கு, பொறுப்பான தலைவர் அனுமதி அளிக்கலாம். ஆனால் திருப்புகழ்மாலையின் இடத்து மொழி பெயர்ப்பு ஒப்புதல் பெற்றதாய் இருக்க வேண்டும்.
3. திருப்புகழ்மாலையை வேண்டுதல் செய்யக் கடமைப்பட்டுள்ள திருப்பணியாளர்களில் யாரும் நம்பிக்கை கொண்டோர் கூட்டத்தோடு ஒன்றுசேர்ந்தோ, பிரிவு 2 இல் சொல்லப்பட்டவர்களோடு சேர்ந்தோ திருப்புகழ்மாலையை இடத்து மொழியில் வேண்டுதல் செய்தால், தம் கடமையை நிறைவேற்றியவர் ஆகின்றார். ஆனால், திருப்புகழ்மாலையின் இடத்து மொழி பெயர்ப்பு ஒப்புதல் பெற்றதாய் இருக்க வேண்டும்.
இயல் 5
திருவழிபாட்டு ஆண்டு
திருவழிபாட்டு ஆண்டின் பொருள்
102. தூய அன்னையாம் திருச்சபை தன் இறை மணமகனின் மீட்பு அலுவலை ஆண்டின் குறிப்பிட்ட நாள்களில் தூய்மையாய் நினைவில் கொணர்ந்து அதைக் கொண்டாட வேண்டுமென உணர்ந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ''ஆண்டவரின் நாள்'' என்று தான் அழைத்துள்ள நாளாகிய ஞாயிறன்று திருச்சபை ஆண்டவரின் உயிர்த்தெழுதலை நினைவில் கொணர்கின்றது; இவ்வுயிர்த் தெழுதலை ஆண்டுக்கு ஒருமுறை அவரது தூய துன்பங்களுடன் இணைத்து, விழாக்களுள் தலை சிறந்ததாகிய பாஸ்காப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றது.
கிறிஸ்து மனிதரான நிகழ்ச்சி, அவரது பிறப்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கி அவர்தம் விண்ணேற்றம், பெந்தக்கோஸ்து நாள், ஆண்டவரின் வருகைக்காய்க் காத்திருக்கும் தூய எதிர்நோக்கு ஆகியவை முடிய ஓர் ஆண்டுக்கால வட்டத்துக்குள் கிறிஸ்துவின் மறைநிகழ்வு முழுவதையும் படிப்படியாக வெளிப்படுத்துகிறது திருச்சபை.
நிறைவாழ்வின் மறைநிகழ்ச்சிகளை இவ்வாறு நினைவுகூர்ந்து, திருச்சபை தன் ஆண்டவரின் மீட்புச் செயல்கள் மற்றும் பேறுபலன்களினுடைய செல்வங்களை நம்பிக்கை கொண்டோர் பெற்றிட வழிவகுக்கின்றது. இதனால், இந்த மறைநிகழ்ச்சிகள் ஒருவகையில் எக்காலங்களுக்கும்உடனிருக்கின்றன. நம்பிக்கை கொண்டோர் இவற்றுடன் தொடர்பு கொண்டு நிறைவாழ்வு அருளாள் நிரப்பப்படுகின்றனர்.
103. கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை ஓர் ஆண்டுக்கால வட்டத்துக்குள் கொண்டாடும்போது தூய திருச்சபை கடவுளின் அன்னையாம் தூய மரியாவுக்குத் தனி அன்பு காட்டி வணங்குகின்றது. ஏனெனில், அவர் தம் மகனின் நிறைவாழ்வுப் பணியிலே பிரிக்க முடியாத முறையில் இணைந்துள்ளார். அவரிடத்தில் நிறைவாழ்வின் சிறப்புமிகு கனியைக் கண்டு திருச்சபை வியந்து போற்றுகின்றது. தான் எந்த நிலையில் முபுமையாக இருக்க விரும்பி எதிர்பார்க்கின்றதோ, அந்த நிலையையே பழுதற்ற ஒருமாதிரி போன்று மரியாவிடம் கண்டு திருச்சபை மகிழ்வுடன் தியானிக்கின்றது.
104. அன்றியும் மறைச்சாட்சிகளுடையவும் மற்ற தூயவர்களுடையவும் நினைவு நாள்களையும் திருச்சபை திருவழிபாட்டு ஆண்டுக்கால வட்டத்துக்குள் ஏற்றுள்ளது. இவர்கள் கடவுளின் பல்வகை அருள்கொடைகளால் தூய வாழ்வின் நிறைவுக்கு உயர்த்தப்பெற்று, ஏற்கெனவே நிறைவாழ்வை அடைந்து விண்ணகத்திலே கடவுளின் நிறைவான புகழைப் பாடுகின்றார்கள்; நமக்காகப் பரிந்து பேசுகின்றார்கள். கிறிஸ்துவோடு துன்புற்று மகிமைப்படுத்தப்பட்ட தூயவர்களிடம் நிறைவேறிய பாஸ்கா மறை நிகழ்ச்சியை அவர்கள் விண்ணில் பிறந்த நாள்களில் திருச்சபை பறைசாற்றுகின்றது. கிறிஸ்துவின் வழியாக அனைவரையும் தந்தைபால் ஈர்க்கும் அவர்களின் எடுத்துக்காட்டுகளை நம்பிக்கை கொண்டோருக்கு எடுத்தோதுகின்றது. இவர்களின் பேறுபலன்களின் வழியாகக் கடவுளின் கொடைகளுக்காக மன்றாடுகின்றது.
105. இறுதியாக, ஆண்டின் பல்வேறு காலங்களில் திருச்சபை தனது மரபு வழிவரும் ஒழுங்கு முறைகளின்படி உள்ளம், மற்றும்உடல் சார்ந்த பக்திமுயற்சிகள், அறிவுரை, இறைவேண்டல், மனமாற்றச் செயல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக நம்பிக்கை கொண்டோருக்கு அளிக்கும் உருவாக்கத்தை நிறைவு செய்கிறது.
ஆகவே, கீழ்க்காண்பவற்றைத் திருச்சங்கம் தீர்மானிக்க முன்வருகிறது.
ஞாயிறு ஆண்டவரின் நாள்
106. கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளிலிருந்தே உருவான திருத்தூதர்களின் மரபுப்படி, திருச்சபை பாஸ்கா மறைநிகழ்ச்சியை ஒவ்வோர் எட்டாம் நாளாகிய ஞாயிறன்று கொண்டாடுகின்றது; எனவே, இந்நாள் ஆண்வருக்குரிய நாள் அல்லது ஆண்டவரின் நாள் என அழைக்கப்படுவது முறையே. ஏனெனில், கடவுளின் வார்த்தையைக் கேட்டும், நற்கருணை விருந்தில் பங்கு கொண்டும், ஆண்டவர் இயேசுவின் துன்பங்கள், உயிர்த்தெழுதல், மாட்சிமை ஆகியவற்றை நினைவிற்குக் கொணர்ந்து ''இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்து... குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ'' (1 பேது 1:3) வழிசெய்த கடவுளுக்கு நன்றி கூறுவதற்கு இந்நாளில் கிறிஸ்தவ மக்கள் ஒன்றுகூட வேண்டும். ஆகவே, ஆண்டவரின் நாளாகிய ஞாயிறு தொடக்கத்திலிருந்தே வந்துள்ள பெருநாள். மேலும் இந்நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாகவும், உழைப்பினின்று ஓய்வு பெறும் நாளாகவும் திகழும்பொருட்டு இதை நம்பிக்கை கொண்டோருக்கு எடுத்துக்கூறி அவர்களைப் பயிற்றுவித்து அவர்கள் இறைப்பற்றை வளரச் செய்ய வேண்டும். உண்மையிலேயெ மிகமுக்கியமானவையாய் இருந்தாலன்றி வேறு எந்த வழிபாடுகளுக்கும் இந்த நாளில் முதன்மை வழங்கப்படக்கூடாது. ஏனெனில், இந்நாளே திருவழிபாட்டு ஆண்டு முழுவதன் அடிப்படையாகவும் மையக் கருவாகவும் துலங்குகின்றது.
திருவழிபாட்டு ஆண்டைத் திருத்தி அமைத்தல்
107. திருவழிபாட்டு ஆண்டு எவ்வாறு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றால்: தூய காலங்கள் குறித்து மரபுவழி வரும் பழக்க வழக்கங்களையும் ஒழுங்கு முறைகளையும் இன்றைய நிலைமைகளுக்கு ஏற்பத் தக்கவைக்கவோ, சீர்ப்படுத்தவோ வேண்டும்; கிறிஸ்தவ நிறைவாழ்வின் மறைநிகழ்ச்சிகளை, மிகச் சிறப்பாகப் பாஸ்கா மறைநிகழ்ச்சியைக், கொண்டாடுவதில் நம்பிக்கை கொண்டோரின் இறை;பபற்றைத் தகுந்த வகையில் வளர்க்கும் பொருட்டு, தூய காலங்களின் தோற்றநிலைப் பண்புகளைக் காத்துக்கொள்ள வேண்டும். இடங்களின் நிலைமைகளுக்குத் தகுந்த தழுவல்கள் தேவையென்றால் அவை எண்கள் 39,40 இல் கண்டுள்ள விதிகளின்படி நிகழ வேண்டும்.
108. நம்பிக்கை கொண்டோரின் வாழ்வில் முதலிடம் வகிக்க வேண்டியவை ஆண்டவரின் திருவிழாக்களே; இவற்றில்தான் நிறைவாழ்வு மறைநிகழ்ச்சிகள் ஆண்டுக் காலத்தின் ஊடே கொண்டாடப்படுகின்றன. எனவே, நிறைவாழ்வின் மறைநிகழ்ச்சிகள் அடங்கிய ஓர் ஆண்டுக்கால வட்டம் முழுவதையும் தகுந்த முறையில் கொண்டாடும் வண்ணம் தூயவர்களின் திருவிழாக்களைவிடக் காலத்துக்குரிய பகுதி அதற்குரிய பொருத்தமான இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தவக்காலம்
109. தவக்காலம் இரு பண்புகளைக் கொண்டுள்ளது. திருமுழுக்கை நினைவிற்குக் கொணர்தல் அல்லது இதற்கென ஆயத்தப்படுத்தல், ஒப்புரவாதல் ஆகியவையே இப்பண்புகள், இவற்றின் வாயிலாக இறைவார்த்தையை ஊன்றிக் கேட்டும், இறைவேண்டலில் பங்கு கொண்டும் நம்பிக்கை கொண்டோர் பாஸ்கா மறைபொருளைக் கொண்டாடத் தவக்காலம் அவர்களை ஆயத்தப்படுத்துகின்றது. இவ்விரு பண்புகளையும் திருவழிபாடு:, மற்றும் திருவழிபாட்டை மையமாகக் கொண்ட மறைக்கல்வி ஆகியவற்றில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும். எனவே,
(அ) தவக்காலகத் திருவழிபாட்டுக்குரிய திருமுழுக்கின் பண்புக் கூறுகளைப் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். கடந்தகால மரபை ஒட்டியிருப்பவற்றுள் சிலவற்றைத் தேவையிருந்தால் மீண்டும் வழக்குக்குக் கொண்டுவர வேண்டும்.
(ஆ) மேற்கூறப்பட்டது ஒப்புரவுப் பண்புக் கூறுகளுக்கும் பொருந்தும். மறைக்கல்வியைப் பொறுத்த அளவில், பாவத்தின் சமூக விளைவுகளோடு பாவம் கடவுளுக்கு எதிரான குற்றம் என்னும் முறையில் அதை வெறுத்துத்தள்ளும் ஒப்புரவாதலின் தனி இயல்பையும் நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களிலே பதியச் செய்ய வேண்டும். ஒப்புரவாதலில் திருச்சபை ஏற்கும் பங்கை ஒதுக்கி விடலாகாது. பாவிகளுக்காகக் கடவுளை வேண்டுதலையும் வலியுறுத்த வேண்டும்.
110. தவக்கால ஒப்புரவு முயற்சிகள் அகம் சார்ந்தவையாகவும் தனிமனிதர் சார்ந்தவையாகவும் மட்டுமிராமல், புறம் சார்;ந்தவையாகவும் சமூகப் பண்புடையவையாகவும் இருக்க வேண்டும். நாம் வாபும் காலத்திற்கும் வேறுபட்ட மண்டலங்களுக்கும், நம்பிக்கை கொண்டோரின் நிலைமைகளுக்கும் ஏற்ற ஒப்புரவு முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். இதற்கு எண் 22இல் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஊக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் ஆண்டவர் துன்பப்பட்டு, இறந்த தூய வெள்ளியன்று பாஸ்கா நோன்பைத் தூய்மையாய் எங்கும் கடைப்பிடிக்க வேண்டும். இயலுடிமன்றால் தூய சனியன்றும் தொடர்ந்து நோன்பிருக்கலாம். இவ்வாறு எழுச்சி கொண்ட திறந்த உள்ளத்துடன் ஆண்டவரின் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியைச் சென்றடையலாம்.
தூயவர்களின் திருவிழாக்கள்
111. மரபின்படி தூயவர்களுக்குத் திருச்சபையில் வணக்கம் செலுத்தப்படுகிறது; இவர்களின் உண்மையான திருப்பொருள்களுக்கும், உருவங்களுக்கும் மதிப்பு அளிக்கப்படுகிறது. கிறிஸ்து தம் ஊழியர்களிடத்தில் ஆற்றிய வியத்தகு செயல்களைத் தூயவர்களின் திருவிழாக்கள் பறைசாற்றுகின்றன் பின்பற்றுதற்கெனத் தகுந்த எடுத்துக் காட்டுகளை நம்பிக்கை கொண்டோருக்கு அளிக்கின்றன.
நிறைவாழ்வின் மறைபொருளை நினைவுக்குக் கொணரும் திருவிழாக்களைவிட தூயவர்களின் திருவிழாக்கள் முதன்மை பெறாதிருக்கும் பொருட்டு, அவற்றுள் பலவற்றைத்தனிப்பட்ட சபையின் நாட்டின், துறவற இல்லத்தின் கொண்டாட்டங்களுக்கு விட்டுவிட வேண்டும். உண்மையிலேயே பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்த தூயவர்களை நினைவுகூரும் திருவிழாக்களை மட்டும் திருச்சபை முழுவதிலும் கொண்டாட வேண்டும்.
இயல் 6
திருஇசை
திருஇசையின் மாண்பு
112. அனைத்துலகத் திருச்சபையின் இசை மரபு மதிப்புமிக்க ஒரு கருவூலம். இது பிற கலை வகைகளைவிடச் சிறந்தது. காரணம், சொல்லோடு இயைந்த இசை ஆடம்பர திருவழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அத்திருவழிபாட்டின் முழுமைக்கு உரிய ஒரு பகுதியாக விளங்குகின்றது.
விவிலியம் மட்டுமின்றி, திருச்சபைத் தந்தையர்களும் தூயப்பாடல்களை உண்மையாகவே போற்றியுள்ளார்கள்.42 அண்மைக்காலத்தில் தூய பத்தாம் பீயுவைப் பின்பற்றி உரோமை ஆயர்களும் ஆண்டவரின் வழிபாட்டில் திருஇசை புரியவேண்டிய பணியை மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
ஆகவே திருஇசை இறைவேண்டலை இனிமை சிறக்க எடுத்துரைத்தும், உள ஒன்றிப்பை வளர்த்தும், திருச்சடங்குகளுக்கு ஆடம்பரம் அளித்தும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களோடு எத்துணை நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதோ அத்துணை தூயதாக விளங்கும். உண்மையான கலையின் வடிவங்கள் எல்லாம் தேவையான பண்புகளைப் பெற்றிருப்பின் அவற்றிற்குத் திருச்சபை ஒப்புதல் அளித்துத் திருவழிபாட்டில் அவற்றை ஏற்றுக்கொள்கிறது.
எனவே திருச்சபை மரபினுடையவும் ஒழுங்கு முறையினுடையவும் விதிகளையும் சட்டங்களையும் பின்பற்றி, கடவுளுக்கு மாட்சிமை நல்குவதையும் மனிதரைத் தூய்மைப்படுத்துவதையுமே தன் நோக்காகக் கொண்ட திருஇசையின் குறிக்கோள்களைக் கருத்தில் இருத்தித் திருச்சங்கம் கீழ்வருவனவற்றை வகுத்துத் தருகிறது.
திருவழிபாட்டு நிகழ்ச்சியை ஆடம்பரமாகக் கொண்டாடுதல்
113. திருப்பணியாளர்கள் உடனிருக்க மக்கள் செயல் முறையில் பாடி ஆடம்பரமாகக் ;கொண்டாடும்போது திருவழிபாட்டு நிகழ்ச்சி ஒரு தனி மேன்மை பெறுகிறது.
இதில் பயன்படுத்தும் மொழியைப் பொறுத்த அளவில் எண் 36இல் கூறப்பட்டுள்ள விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் திருப்பலியை பொறுத்த அளவில் எண் 54இல் அருள் அடையாளங்களைப் பொறுத்த அளவில் எண் 63இல் காஞம் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பாடகர் குழுக்களை ஊக்குவித்தல்
114. திருஇசைக் கருவூலத்தைப் பெருங்கவனத்துடன் காத்து வளர்க்க வேண்டும். பாடகர் குழுக்களை முக்கியமாக மறைமாவட்டப் பேராலயங்களில் ஊக்குவித்து வளர்க்க வேண்டும். எனினும், பாட்டோடு நிறைவேற்றப்பெற வேண்டிய எந்தத் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் நம்பிக்கை கொண்டோரின் கூட்டம் முழுவதும் எண்கள் 28, 30 இல் காஞம் விதிகளின்படி தமக்கே உரித்தான விதத்தில் செயல்முறையில் பங்குகொள்ள இயலும் வண்ணம் ஆயர்களும் மற்ற அருள்பணியாளர்களும் ஆர்வமுடன் கவனித்துக்கொள்ள வேண்டும்.
இசைப்பயிற்சி
115. திருப்பணிப் பயிற்சியகங்களிலும், ஆண், பெண் இருபாலாரின் துறவற, துறவுப் புகுமுக இல்லங்களிலும், இவர்களின் கல்விக் கூடங்களிலும் மற்றக் கத்தோலிக்க நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றிலும் இசைக் கல்விக்கும் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இத்தகைய கல்வி அளிப்பதற்குத் திருஇசை பயிற்றுவிக்க அமர்த்தப்படும் ஆசிரியர்களைக் கவனமுடன் உருவாக்க வேண்டும்.
மேலும், வாய்ப்பு இருந்தால் திருஇசைக்கென உயர்நிலை நிறுவனங்கள் அமைப்பது போற்றத்தக்கது.
இசை அமைப்பாளர்களுக்கும் பாடகர்களுக்கும், சிறப்பாகச் சிறுவர்களுக்கும் உண்மையான திருவழிபாட்டுக் கல்வி ஊட்ட வேண்டும்.
கிரகோரி இசையும் பல்லிசையும்
116. உரோமை வழிபாட்டு முறைக்கு உரிய இசையாகத் திருச்சபை கிரகோரி இசையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே பிற சூழ்நிலைகள் சமமாக இருக்குமிடத்து இந்த இசைக்கு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் முதலிடம் வழங்க வேண்டும்.
திருஇசையின் ஏனைய வகைகள், சிறப்பாகப் பல்லிசை, எண் 20இல் காஞம் விதியின்படி திருவழிபாட்டு நிகழ்ச்சியின் உள்ளுணர்;வுக்கு இயைந்தவையாக இருப்பின், அவற்றிற்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இடம் அளிக்கப்படும்.
117. கிரகோரி இசை அடங்கிய நூல்களில் மாதிரிப் பதிப்பு நிறைவு செய்யப்பட வேண்டும். அன்றியும் தூய பத்தாம் பீயு அறிமுகப்படுத்திய சீரமைப்பிற்குப்பின் ஏற்கனவே பதிக்கப் பெற்ற நூல்களின்மீது அதிகத் திறனாய்வு செய்யப்பட்ட பதிப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
சிறிய கோவில்களில் பயன்படுத்துவதற்கென அதிக எளிமை வாய்ந்த பண்களைக் கொண்ட பதிப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
சமயம் சார்ந்த மக்கள் பாடல்கள்
118. தூய பக்தி முயற்சிகளிலும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் திருச்சடங்கு விதிகளின் ஒழுங்குகள், கட்டளைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப நம்பிக்கை கொண்டோரின் குரல் எதிரொலிக்குமாறு மக்களிடையே வழங்கும் பாடல்களை ஊக்கத்துடன் ஆதரிக்க வேண்டும்.
நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளில் திருஇசை
119. சில மண்டலங்களில் சிறப்பாக நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளிலுள்ள மண்டலங்களில் தமக்குச் சொந்தமான இசை மரபைக் கொண்ட மக்கள் உள்ளனர். இது இவர்களின் சமய வாழ்விலும் சமூக வாழ்விலும் மிக முக்கியத்துவம்பெற்று விளங்குகிறது. எனவே, 39, 40 எண்களில் கூறப்பட்டுள்ளபடி இம்மக்களின் சமய உணர்வை வளர்க்கும் முறையிலும் இவர்களின் தனிப்பண்புக்கு ஏற்ப வழிபாட்டைத் தழுவியமைக்கும் வகையிலும், இவர்களின் இசைக்கு உரிய மதிப்பு அளித்துத் தகுந்ததோர் இடம் தரவேண்டும்.
ஆகவே, நற்செய்தி அறிவிப்போருக்கு இசைக்கல்வி ஊட்டும் போது அவர்கள் இயன்ற வரையிலும் இந்த மக்களின் மரபு இசையைப் பாட்டுக் குபுக்களிலும் திருச்செயல்களிலும் பேணி வளர்க்கும் அளவுக்குத் தகுதிபெறும் பொருட்டுத் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
குழலிசைப் பெட்டியும் இசைக்கருவிகளும்
120. இலத்தீன் சபையில், குழலிசைப் பெட்டிக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். ஏனெனில், இது இந்தச் சபையின் மரபு வழி வந்துள்ள இசைக்கருவி; இசைக்கருவியின் ஓசை திருச்சபை ஆற்றும் சடங்குகளுக்கு வியத்தகு மெருகூட்டி உள்ளங்களைக் கடவுளை நோக்கியும் உயர்ந்தவற்றை நோக்கியும் எழுப்பவல்லது.
வேறு இசைக்கருவிகளையும் 22 பிரிவு 2, 37, 40 ஆகிய எண்களில் காஞம் விதிகளின்படி அந்தந்த பகுதிகளுக்குப் பொறுப்பான திருச்சபை அதிகாரிகளின் கருத்தையும் இசைவையும் பெற்று, திருவழிபாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். இக்கருவிகள் தூய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தத் தகுதி கொண்டனவாக அல்லது தகுதி கொண்டனவாக அல்லது தகுதி பெறக்கூடியனவாக இருக்க வேண்டும்; கொவிலின் பெருமையோடு பொருந்திச் செல்லுவனவாகவும் நம்பிக்கை கொண்டோரின் வளர்ச்சிக்குத் துணைபுரிவனவாகவும் விளக்க வேண்டும்.
இசை அமைப்பாளர்களின் பணி
121. இசை அமைப்பாளர்கள் கிறிஸ்தவ உணர்வால் நிரம்பியிருக்க வேண்டும். திருஇசையைப் பேணி அதன் கருவூலத்தைப் பெருக்கத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இவர்கள் அமைக்கும் பண்கள் திருஇசைக்கே உரித்தான பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். பெரிய பாட்டுக் குழுக்கலால் மட்டும் பாடக்கூடியனவாய் இல்லாமல் சிறிய பாட்டுக் குழுக்களும் பாட ஏற்றனவாகத் திகழ வேண்டும்; நம்பிக்கை கொண்டோர் குழு அனைத்தும் செயல்முறையில் பங்குகொள்ளப் பொருத்தமானவையாகவும் விளங்க வேண்டும்.
திருஇசைக்கென அமைக்கப் பெறும் பாடல்கள் கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு ஒத்திருத்தல் இன்றியமையாதது. இவற்றை, முக்கியமாக விவிலியத்திலிருந்தும் திருவழிபாட்டின் மூலநூல்களிலிருந்தும் எடுத்தல் சிறப்பு.
இயல் 7
திருக்கலையும் திருவழிபாட்டுப் பொருள்களும்
திருக்கலையின் மாண்பு
122. மனிதரின் கூரறிவு தோற்றிவித்தவைகளில் மிக மேன்மையானவையாக எண்ணப்படத் தகுந்தவை கவின் கலைகள் எனத் துணிந்து கூறலாம். சமயக் கலையும், இந்தச் சமயக் கலையின் சிகரமாகிய திருக்கலையுமே இவற்றுள் சிறப்புமிக்கன. இயல்பாகவே இவை கடவுளின் எல்லையற்ற எழிலோடு தொடர்புடையன. இவ்வெழில் மனிதப் படைப்புச் செயல்களில் ஒருவகையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். இவை தம் படைப்புகளால் மக்களின் இதயங்களைப் பக்தியுடன் கடவுள்பால் திருப்பவதேயன்றி வேறு எந்தக் குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை. ஆதலால், கடவுளுக்கும் அவரது புகழ்ச்சியையும்மாட்சியையும் வளர்ப்பதற்கும் அவை மிகவும் பொருத்தமானவை.
ஆகவே, அன்புத் தாயாம் திருச்சபை கவின்கலைகளை என்றும் ஆதரித்து வந்துள்ளது. சிறப்பாகத் தூய வழிபாட்டைச் சார்ந்த பொருள்கள் உண்மையிலேயே தகுதியும் தகைமையும் வனப்பும் கொண்டிருக்க வேண்டும்; அவை விண்ணகப் பொருள்களின் குறிகளாகவும் அடையாளங்களாகவும் விளங்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் திருச்சபை கவின்கலைகளின் மேன்மைமிக்க பணியை என்றும் நாடியுள்ளது; கலைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது. கலைகளைக் குறித்து முடிவெடுக்கும் உரிமை தனக்கு உண்டு எனத் திருச்சபை என்றும் கருதி வந்துள்ளது முறையே. எனவே, கலைஞர்களின் படைப்புகளிலே நம்பிக்கை, இறைப்பற்று, சமய உணர்வுடன் மரபு வழிவந்த விதிகள் ஆகியவற்றிற்கு ஏற்ப அமைந்துத் திருவழிபாட்டில் பயன்படத் தகுதி வாய்ந்தனவற்றைத் திருச்சபை தேர்ந்துகொண்டுள்ளது.
திருவழிபாட்டின் சிறப்புக்கு அதில் பயன்படும் திருப்பொருள்கள் தகுதியுடனும் எழிலுடனும் உறுதுணைபுரிய, திருச்சபை தனி அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்துள்ளது. இப்பொருள்களின் செய்பொருளிலோ, உருவிலோ, அர்கொப்பனையிலோ தொழில் நுட்பக் கலையின் வளர்ச்சி காலப்போக்கிலே புகுத்தியுள்ள மாற்றங்களைத் திருச்சபை ஏற்றுக்கொள்கிறது.
எனவே, இப்பொருள்களைப்பற்றிப் பின்வருவனவற்றைத் தீர்மானிக்க சங்கத்தந்தையர் விழைகின்றனர்.
கலைப்பாணிகளுக்கு உகந்த சுதந்திரம் உண்டு
123. கலையின் குறிப்பிட்ட எந்த ஒரு பாணியையும் தனக்கே உரியது எனத் திருச்சபை உரிமை பாராட்டுவதில்லை. மாறாக, மக்களின் தனிப் பண்புகளுக்கும் நிலைமைகளுக்கும்பற்பல வழிபாட்டு முறைகளின் தேவைகளுக்கும் ஏற்ப ஒவ்வொரு காலத்தின் கலை வகைகளையும் ஏற்ப வந்துள்ளது; இவ்விதம் நூற்றாண்டுகளின் காலப்போக்கில் மிக விழிப்புடன் காப்பாற்றப்பட வேண்டிய கலைக் கருவூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இன்றைய கலையும், ஒவ்வொரு மக்களினத்தினுடைய மற்றும் மண்டலத்தினுடைய கலையும் திருக்கட்டங்களுக்கும் திருச்சடங்குகளுக்கும் தகுந்த மதிப்பும் பெருமையும் சேர்ப்பவனவாக இருந்தால், திருச்சபையில் அவற்றைத் தடைiயின்றிப் பயன்படுத்தலாம். இவ்வாறு கடந்த நூற்றாண்டுகளிலேயே கத்தோலிக்க நம்பிக்கையின் பெருமைகளைப் பாடி நின்ற பெரியோர்களின் வியத்தகு மாட்சிகொண்ட கூட்டிசையோடு இக்கலைகள் தம் குரலையும் இணைக்க முடியும்.
சமய உணர்வுக்கு ஏற்பக் கலைப்பாணிகள் அமைய வேண்டும்
124. உண்மையான திருக்கலையைத் திருச்சபைத் தலைவர்கள் ஆதரித்து வளர்க்கும்போது வெறும் ஆடம்பரத்தைவிட அழகின் உயர்வையே கருத்தில் கொள்ள வேண்டும். திரு உடைகள், அழகொப்பனைகள் ஆகியவற்றைப் பொறுத்த அளவிலும் இவ்விதியைப் பின்பற்ற வேண்டும்.
நம்பிக்கைக்கும், அறநெறிக்கும் கிறிஸ்தவப் பக்திக்கும்முரணான கலைப் படைப்புகளைக் கடவுளின் இல்லத்திலிருந்தும் மற்ற தூய இடங்களிலிருந்தும் ஆயர்கள் விழிப்புடன் அகற்றிவிட வேண்டும்; வெளித்தோற்றத்தில் கீழ்த்தரமாகவோ, கலையைப் பொறுத்தமட்டில் தரக்குறைவு, மட்டரகம், பகட்டு போன்ற காரணங்களால் உண்மையான சமய உணர்வைப் புண்படுத்துகின்ற கலைப் படைப்புகளையும் அகற்றிவிட வேண்டும்.
கோவில்களைக் கட்டும்போது அவை திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நிறைவேற்றுவதற்கும் பொதுமக்கள் செயல்முறையில் பங்குகொள்வதற்கும் ஏற்றவகையாக அமையுமாறு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
125. நம்பிக்கை கொண்டோரின் வணக்கத்திற்காகக் கோவில்களில் திரு உருவங்களை வைக்கும் பழக்கம் நிலைத்து நிற்கட்டும். எனினும் கிறிஸ்தவ மக்களிடையே வியப்பைத் தூண்டி எழுப்பாமலும் பொருத்தக் குறைவான பக்தியில் அவர்கள் ஈடுபடாமலும் இருக்குமாறு இத்திரு உருவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அவற்றை வைப்பதில் பொருத்தமான ஒழுங்கையும் பின்பற்ற வேண்டும்.
126. கலைப்படைப்புகள்; குறித்துத் தீர்ப்பு வழங்கும்போது தலத் திருச்சபைத் தலைவர்கள் திருக்கலைபற்றிய மறைமாவட்டப் பணிக்குழுவினுடையவும், தேவையென்றால் திருக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறருடையவும், எண்கள் 44, 45, 46 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள பணிக் குழுக்களுடையவும் கருத்தைக் கேட்க வேண்டும்.
திருவழிபாட்டுப் பொருள்களும் விலை உயர்ந்த படைப்புகளும் கடவுளின் இல்லத்தை அணி செய்வதால் அவை அகற்றி விடப்படாமலும் சிதைவடைந்துவிடாமலும் இருக்குமாறு திருச்சபைத் தலைவர்கள் மிக விழிப்பாக இருத்தல் வேண்டும்.
கலைஞர்களை உருவாக்கல்
127. திருக்கலை உணர்விலும் திருவழிபாட்டு உணர்விலும் கலைஞர்கள் உருவாகிட, ஆயர்கள் தாமாகவோ கலையில் தேர்ச்சியும் ஆர்வமும் படைத்த தகுதி வாய்ந்த திருப்பணியாளர்களைக் கொண்டோ அவர்களை ஆதரித்துப் பேண வேண்டும்.
அன்றியும் கலைஞர்களை உருவாக்குவதற்கு, பொருத்தமாகத் தோன்றும் மண்டலங்களில் திருக்கலைப் பள்ளிகளையோ கலைக் கூடங்களையோ அமைப்பது போற்றத்தக்கது.
தங்களது தனித்திறமையால் உந்தப்பட்டுத் தூய திருச்சபையில் கடவுளின் ;மாட்சிக்காகப் பணியாற்ற விரும்பும் கலைஞர்கள் அனைவரும் கலைப் படைப்புகளை உருவாக்குவதில், படைத்தவரான கடவுளைத் தூய்மையாய் ஒருவகையில் பின்பற்றுகிறார்கள் என்பதையும், அவர்கள் கத்தோலிக்க வழிபாட்டுக்கும் நம்பிக்கை கொண்டோரின் நன்மாதிரி, பக்தி, சமயப் பயிற்சிக்குமென இக்கலைப் படைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும் எப்பொபுதும் நினைவில் கொண்டிருக்கட்டும்.
திருக்கலை பற்றிய விதிகளைத் திருத்தி அமைத்தல்
128. எண் 25இல் குறிப்பிட்டுள்ள விதியின்படி திருவழிபாட்டு நூல்களைத் திருத்தும் அதே வேளையில், திருவழிபாட்டோடு நூல்களைத் திருத்தும் அதே வேளையில், திருவழிபாட்டோடு தொடர்புடைய வெளிப்படையான பொருள்களின் அமைப்பு முறையைச் சார்ந்த திருச்சபைச் சட்டங்களையும் விதிகளையும் திருத்தி அமைக்க வேண்டும். இவற்றுள் சிறப்பாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: திருக்கட்டடங்களைத் தகுதியாகவும் பொருத்தமாகவும் நற்கருணைப் பேழையின் மேன்மை, அமைப்பிடம், பாதுகாப்பு; திருமுழுக்குத் தொட்டியின் வசதி, மாண்பு; ;திருவுருவங்கள், ஒப்பனை, அணிகலன்கள் ஆகியவற்றின் பொருத்தமான அமைப்பு முறை. சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டுடன் இயைந்து செல்லாத விதிகளைத் திருத்தி அமைக்க வேண்டும், அல்லது நீக்க வேண்டும். அதற்குத் துணைபுரிவனவற்றை வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது புதிதாகச் சேர்க்க வேண்டும்.
வழிபாட்டிற்கு உதவும் பொருள்கள், திருஉடைகள் ஆகியவற்றின் மூலப்பொருள் மற்றும் வடிவம் என்பனவற்றைப் பொறுத்த அளவில், இக்கொள்கை விளக்கம் எண் 22 இல் கண்ட விதியின்படி அந்தந்த இடங்களின் தேவைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள மண்டல ஆயர்கள் பேரவைகளுக்கு அதிகாரம் உண்டு.
திருப்பணியாளர்களுக்குத் திருக்கலைப் பயிற்சி
129. திருப்பணிநிலையினர் மெய்யியல், இறையியல் படிப்புகளில் ஈடுபட்டிருக்கும்போதெ திருக்கலையின் வரலாறு, வளர்ச்சி ஆகியவை பற்றியும் திருக்கலைப் படைப்புகள் எத்தகைய நலமான அடிப்படை விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். இதன் விளைவாக அவர்கள் திருச்சபையின் மதிப்பிற்குரிய கலைச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாப்பார்கள்; கலைப்பொருள்களைப் படைப்பதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்குத் தகுந்த அறிவுரை கூறும் நிலையில் இருப்பார்கள்.
ஆயருக்கே உரிய அணிகள், சின்னங்கள்
130. ஆயருக்கே உரிய அணிகள், சின்னங்கள் ஆகியவற்றை ஆயர் பதவியேற்ற, அல்லது தனிப்பட்ட ஆட்சி அதிகாரம் பெற்ற திருச்சபை அதிகாரிகள் பயன்படுத்துவதற்கென்று ஒதுக்கிவைப்பது ஏற்புடையது.
பிற்சேர்க்கை
ஆண்டுக்குறிப்பேட்டைத் திருத்துவது பற்றி இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் வெளியிடும் அறிக்கை
உயிர்ப்புத் திருவிழாவை ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைக்கு உரித்தாக்குவது பற்றியும், மாறாத்தன்மை படைத்த ஆண்டுக் குறிப்பேடு ஒன்றை ஏற்படுத்துவது பற்றியும் பலர் பரிந்துரைகள் அளித்துள்ளனர். இவர்கள்தம் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதியதோர் ஆண்டுக் குறிப்பேட்டை அறிமுகப்படுத்துவதுவதனால் அடையும் விளைவுகளை நன்கு சீர்த்தூக்கிப் பார்த்து, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கீழ்வருவனவற்றை அறிக்கையிடுகின்றது:
1. உயிர்ப்புத் திருவிழாவைக் கிரகோரி ஆண்டுக் குறிப்பேட்டின்படி குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு உரித்தாக்குவதற்கு, இதில் அக்கறை கொண்டவர்கள், முக்கியமாகத் திருத்தூதுப் பீட ஒன்றிப்பிலிருந்து பிரிந்து சகோதரர்கள் இணங்கினால், திருச்சங்கம் எதிராக நிற்காது.
2. இவ்வாறே குடிமைச் சமூகத்தின் நிலையான ஆண்டுக் குறிப்பேடு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்படுமு; முயற்சிகளுக்கு தான் தடையாக இருப்பதில்லை எனத் திருச்சங்கம் அறிக்கையிடுகின்றது.
ஆனால், நிலையான ஆண்டுக் குறிப்பேட்டை உருவாக்கி அதைக் குடிமைச் சமூகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்துப் பற்பல அமைப்பு முறைகள் ஆய்வில் உள்ளதால் இவற்றுள் ஞாயிற்றுக்கிழமையோடு ஏழு நாட்களான வார அளவை பாதுகாத்துப் பேணும் அமைப்பு முறைகளுக்கு மட்டும்தான் திருச்சபை தடையாக இருப்பதில்லை. எந்த ஒரு நாளையும் வாரத்திற்கு வெளியெ தள்ளாமல் வாரத்தின் தொடர்ச்சியைப் பழுதின்றிக் காக்க வேண்டும். மிகவும் கனமான காரணங்களின் பொருட்டு இது இயலாமற்போயின் இவை பற்றித் திருத்தூதுப் பீடம் தீர்ப்பளிக்கும்.
இக்கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும், கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூதர் ஆணையுரிமையால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து தூய ஆவியில் அவைகளை ஏற்றுக் கொள்கிறோம், தீர்;மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்க நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர், |
| டிசம்பர் 4, 1963 |
கீழே தந்தையாரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.,
