கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு பற்றிய அறிக்கை உட்புகுமுன் சமயச் சுதந்திரம் பற்றிய விவாதக் கோப்பு 1963ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19ஆம் நாள் சங்கத் தந்தையர்முன் கொண்டு வரப்பட்டது. இத்தொகுப்பு 5 முறை திருத்தம் பெற்றது; 3 முறை பொது விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. இது இறுதி வடிவம் பெறுவதற்குமுன் ஏறத்தாழ 2000 பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் திருத்தம் பெற்றது. இறுதியில் 1965 ஆம் ஆண்டு இவவறிக்கை அதிகார பூர்வமாகப் பறைசாற்றப்பட்டது. இதன் முதல் விவாதக் கோப்பு கிறிஸ்தவ ஒன்றிப்பு ஏட்டில் 5ஆம் இயலாகச் சேர்க்கப்பட்டிருந்தது. இவ்விவாதக் கோப்பு கிறிஸ்தவர்களை மட்டும் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாலும், சமயச் சுதந்திரத்திற்கு பர்hக்கப்படாதாலும், சமயச் சுதந்திரக்திற்கு சரியான அடித்தளம் கொடுக்கப்படாததாலும் முதல் வடிவில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டாம் விவாதக் கோப்பு, தனி விதித் தொகுப்பாக, ஆனால் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஏட்டின் பிற்சேர்க்கையாக வைக்கப்பட்டது. இதில் மனிதரைப் பற்றிய தெளிவான இறையியல் விளக்கம் தரப்படவில்லை; சமயச் சுதந்திரத்தின் தேவைப்பற்றி நம்பிக்கைக் கண்ணோக்கில் ஆதாரங்கள் காட்டப்படவில்லை; எனவே இந்த விவாதக் கோப்பு வரைவும் ஏற்கப்படவில்லை. மூன்றாம் விவாதக் கோப்பு ஒரு தனி ஏடாகவே மலர்ந்தது. இது எல்லா மனிதருக்கும் பொதுவானதாக எழுதப்பட்டது; சட்டத்தை மையமாகக் கொண்ட குடியுரிமைச் சுதந்திரமே இதில் அழுத்தம் பெற்றது; தனி மனித சமயச் சுதந்திரத்திற்கு அளிக்கப்பட்ட இடம், சமூகம் அல்லது குழுக்களின் பொதுச் சுதந்திரத்திற்கு அளிக்கப்படவில்லை. ஆகவே இதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. |
நான்காம் விவாதக் கோப்பு முதல் பகுதியில் மனித சுகந்திரத்தைப் பற்றிய விரிவான இறையியல் கண்ணோக்கை விளக்கியது. இரண்டாம் பகுதி சட்ட முறையில் சமயச் சுதந்திரத்திற்கு விளக்கமளித்தது. இருப்பினும் இவ்விரு பகுதிகளும் தொடர்பற்றது போல் காணப்பட்டதால் இந்தப் படிவமும் நிறைவு அளிக்கவில்லை; எனவே இதுவும் ஏற்கப்படவில்லை.
ஐந்தாம் விவாதக் கோப்பு முந்தைய படிவங்களின் நற்கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருந்தாலும், சங்கத் தந்தையர்களின் பலருடைய எண்ணங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் அமைந்தாலும் அது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இவ்வேடு திருச்சங்கத்தில் பொது நோக்கத்திற்கேற்ப அருள்பணி சார்ந்தது மட்டுமல்ல, கோட்பாட்டு உள்ளீட்டையும் தன்னுள்ளடக்கியதாக அமைந்தது. இருப்பினும், மீட்ப வரலாற்றிலும், மனித சுதந்திரம் அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு குறையே.
இவ்வறிக்கை
1) தனி மனித, சமூகம் சார்ந்த சமயச் சுதந்திரம் பற்றிய அறநெறிக் கோட்பாடு மனித உரிமையைச் சார்ந்தது என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறது.
2) சமயம் சார்ந்தவற்றில் அரசின் செயல்பாடுகளையும் எல்லைகளையும் பற்றிய அரசியல் கோட்பாட்டை நிர்ணயிக்கிறது.
3) திருச்சபைக்கும் சமூக, அரசியல் ஒழுங்குமுறைகளுக்கும் இடையே உள்ள உறவில் திருச்சபையின் சுதந்திரம் பற்றிய இறையியல் கோட்பாட்டைத் தெளிவாக்குகிறது.
சங்கம் மனிதரின் மாண்பைப் பெரிதும் போற்றி, மதிக்கின்றது. இம்மாண்பு மனிதர் அறிவும், சுதந்திரமும் கொண்டவராக, தம்மாகப் பொறுப்புடன் செயல்படுபவராக இருப்பதில்தான் அடங்கி இருக்கிறது. இம்மாண்பின் காரணமாக, எச்சமயத்தையும் பின்பற்ற மனிதருக்குக் குடியுரிமைச் சுதந்திரம் உண்டு என்று சங்கம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
மனிதர் சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் சமயத்தைப் பரப்பவும், காக்கவும், சமய உண்மைகளைப் போதிக்கவும் குடியுரிமைக் கொண்டுள்ளனர். இதற்காகக் குழுக்களை உருவாக்கவும், வளர்க்கவும் சட்டங்களை இயற்றவும், பொருத்தமான பொருள்நலன்களைப் பெறவும், அவற்றைப் பரப்ப முழுச் சுதந்திரம் எல்லோருக்கும் தேவையாயினும் வலுக்கட்டாயமாக மனம் மாற்றுதல் கண்டனத்திற்குரியதே.
இத்தகைய தனி மனித, சமயக் குழுக்களுக்கான சமயச் சுதந்திரம் தனி மனிதரின் மாண்பையும் கிறிஸ்துவினுடைய எண்ணத்தையும், செயலையும் அடிப்படையாகக் கொண்டது.
நியாயமான சட்டங்களால் குடிமக்கள் அனைவரின் சமயச் சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டியது அரசின் கடமை. சமயக் காரணங்களுக்காக குடிமக்களிடையே வேறுபாடுகள் காட்டக் கூடாது. மேலும் அரசு வன்முறையிலும் அச்சுறுத்தலிலும் எந்த ஒரு சமயத்தை ஏற்றுக் கொள்ளும்படியோ அல்லது அதைக் கைவிடும்படியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ தம் குடிமக்களை வலியுறுத்துவது கடவுளின் திருவுளத்திற்கும், தனி மனித. சமய உரிமைகளுக்கும் எதிரானது என்று சங்கம் வலியுறுத்துகிறது.
திருச்சபை கிறிஸ்துவைப் பின்பற்றி ஆரம்பத்திலிருந்தே முறையான அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு வந்துள்ளது. கடவுளின் வார்த்தையை அறிவித்து, மக்கள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ள அமைதியான வழிகளில் தூண்டியது. ஆனால், அரசியல் அதிகாரம் கடவுளின் திருவுளத்திற்கு முரணாக இருந்தபோது திருச்சபை அதனை எதிர்த்தது; மேலும், தான் போதித்த உண்மைகளுக்குக்காக உயிரைப் பணயம் வைக்கவும் திருச்சபை தயாராக இருந்தது; தம் உறுப்பினர் அல்லாத பிற சமயத்தவரின் சுதந்திரத்தை மதிக்கத் திருச்சபை தவறியதும் உண்டு. எனினும், திருச்சபை கிறிஸ்துவால் நிறுவப்பட்டு, படைப்பனைத்திற்கும் நற்செய்தியைப் போதிக்கும் கடமை கொண்டுள்ள ஓர் அருள்வாழ்வு சார்ந்த அதிகார அமைப்பு என்ற முறையில் மனித சமுதாயத்திலும் நடைமுறையிலும் செயலாக்கம் பெறும்போதுதான் திருச்சபை தனது பணியைச் செவ்வனே ஆற்றமுடியும் என்பதையும் சங்கம் அறிக்கையிடுகிறது.
சமயச் சுதந்திரம் பலநாடுகளின் சட்ட அமைப்புகளில் ஒரு குடியுரிமையாக அறிக்கையிடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை மக்கள் தங்கள் சமயத்தைப் பின்பற்ற தடை செய்யும் அல்லது அவர்களது வாழ்வைப் பெருந்துன்பத்திற்குள்ளாக்கும் அரசுகளும் உள்ளன. இந்நிலையைச் சங்கம் கவலையோடு கண்டிக்கிறது. இச்சமயக் சுதந்திரம் மனித குடும்பத்தின் இன்றையத் தேவை என்பதை உணர அனைவருக்கும் வேண்டுகோள் விடுவிக்கப்படுகிறது. சமயச் சுதந்திரத்திற்கான பொறுப்பும், கடமையும் தனிமனிதர் ஆகியோரைச் சார்ந்தது. இவர்கள் அனைவரும் சமுதாயத்தின் பொதுநலனுக்காகத் தமக்கே உரியமுறையில் உழைக்கின்றனர் என்பதையும் சங்கம் தெளிவுபடுத்துகிறத.
சமயச் சுதந்திரத்தைப் பற்றிய இவ்வறிக்கை ''சமயச் சுதந்திரத்தையும் மனிதரின் அடிப்படை உரிமைகளையும் எல்லாக் கிறிஸ்தவச் சபைகளும் இணைந்து காக்க ஒரு பொது அடிப்படையாக அமைந்துள்ளது'' எனக் கூறுகிறார் திருச்சபைகளின் உலகப் பேரவையின் (று.ஊ.ஊ) பொதுச் செயலர் விஸ்ஸர் டி. ஹுஃப்ட் ஆகவே, எல்லா மனிதருக்கும் இவ்வேடு முக்கியத்துவம் கொண்டதாகும். இவ்வேட்டில் விளக்கப் பெற்றுள்ள சமயச் சுதந்திரத்தைச் சமுதாயத்தில் கடைப்பிடிப்பதன்வழி கடவுளின் பிள்ளைகளுக்குரிய சுதந்திரம் மாண்புறு நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.
சமயச் சுதந்திரம் பற்றிய இவ்வறிக்கை இன்றைய இந்தியாவுக்கு மிகத் தேவையான ஒன்றே. சமயச் சுதந்திரத்தைப் பலரும் தெளிவாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. சமயச் சுதந்திரம் என்ற போர்வையில் போட்டி மனப்பான்மை, வெறுப்பு. எதிர்ப்பு, கலகங்கள், மக்களிடையே போட்டி பிளவு, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு இவைகள்தான் இன்றைய எதார்த்தங்களாக உள்ளன. இந்தியச் சமயவாதிகளில் பலரும் மக்களை உண்மையை கோக்கி நடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக இல்லை; மாறாக, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களைப் பிரிக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.
சமயங்கள், சமய நிறுவனங்கள், சமய அமைப்புகள் ஆகியவை சமயச் சுதந்திரத்தின் பெயரால் பலவேளைகளில் அடிமைப் படுத்துகின்றன. எனவே, இறைவுணர்வை மக்கள் நடுவில் வளர்த்து அவர்களையும் ஒரே கடவுளின் மக்கள் என்ற உறவு ஒன்றிப்பில் வளர்க்க சமயங்கள் தவறிவிட்டன. தங்களது எண்ணிக்கையைப் பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தைச் சமயங்கள் உண்மையை நாடுவதிலும், அதை நிலைநிறுத்துவதிலும் காட்டவில்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்பது ஏட்டளவில் இருந்தாலும் நடைமுறையில் சமயத்தின் பெயரால் சிறப்பாக மதவழிச் சிறுபான்மையினர் சமத்துவமற்றவர்களாகவும், இரண்டாற்தரக் குடிமக்களாகவும் நடத்தப்படும் நிலையும் கண்கூடு. உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுவதும், மறுக்கப்படுவதும் சமயத்தின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றன.
எனவே, இந்தியாவுக்குச் சமய சுதந்திரம் இன்றியமையாத ஒன்று. எச்சமயத்தவராயினும், நிறை உண்மையான பரம்பொருளை நோக்கிச் செல்ல முழுச் சுதந்திரம் வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். இந்திய மக்களிடையே ஒற்றுமை. சகோதரத்துவம், சமத்துவம் முதலியவை வளர வேண்டும் என்றால் சமயங்கள் மனிதரைப் பிரிப்பதற்கு மாறக அவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கத் துணைநிற்க வேண்டும்.
ஆயர். பா. அந்தோனி
மதுரை துணை ஆயர்
மதுரை
15 மே, 1999
சமயச் சுதந்திரம்
பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
அறிக்கை
சமயக் காரியங்களில் தனி மனிதரும் சமூகங்களும் கொண்டுள்ள சமூக, குடிமைச் சுதந்திரத்திற்கான உரிமை
முன்னுரை
1. மனிதரின் மாண்பை இன்றைய மக்கள் நாளுக்கு நாள் அதிகமதிகமாக உணர்ந்து வருகின்றனர்.1 பொறுப்புள்ள சுதந்திரத்தைத் தூய்த்துப் பயன்படுத்தி, கட்டாயமின்றிக் கடமை உணர்வால் உந்தப்பட்டுத் தங்களுடைய சொந்தத் தீர்ப்பின்படி நடக்க மனிதரால் இயல வேண்டுமென கோரிக்கை எழுப்புவோரின் எண்ணைக்கை பெருகிவருகிறது. மேலும், மனித ஆளுடையவும் கழகங்களுடையவும் முறையான சுதந்திரம் வரம்பு மீறிக் கட்டுப்படுத்தப்படாமலிருக்க அரசின் அதிகாரிகளுக்குச் சட்டமுறையான எல்லைகள் விதிக்கப்பட வேண்டுமென்று அவர்கள் கோருகின்றனர். மனித சமுதாயம் கோரும் இச்சுதந்திரத்தில் சிறப்பாக இடம் பெறுபவை மனித உளம் சார்ந்த நலன்களே. அதிலும் குறிப்பாக, சமுதாயத்தில், சமயப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சுதந்திரமே முதலிடம் பெறுகிறது.
இவ்வத்திக்கான் சங்கம் இத்தகைய மனித உள்ளத்து நாட்டங்களை அக்கறையோடு சிந்தையில் கொள்ளுகிறது; அவை நாட்டங்களை அக்கறையோடு சிந்தையில் கொள்ளுகிறது; அவை உண்மைக்கும் நீதிக்கும் எவ்வளவு தூரம் ஒத்துள்ளன என விளக்கியுரைக்க முன்வருகிறது. இந்நோக்கத்திற்காக, இச்சங்கம் திருச்சபையின் மரபையும் போதனையையும் ஆழ்ந்து ஆய்கிறது; இவற்றிலிருந்து பழையனபோடு என்றும் பொருந்திப்போகும் புதியவற்றை வெளிக்கொணருகிறது.
முதன் முதலில், மக்கள் கடவுளுக்குப் பணிபுரிவதன் மூலம் கிறிஸ்துவில் நிறைவாழ்வு பெற்று வீடுபேற்றை அடைவதற்கான வழியைக் கடவுளே மனித குலத்திற்குக் காட்டியுள்ளார் எனத் திருச்சங்கம் அறிக்கையிடுகிறது. இந்த உண்மையான ஒரே சமயம் கத்தோலிக்க, திருத்தூதுத் திருச்சபையில் உளது என நாம் நம்புகிறோம். ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன். தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்'' (மத் 28:19-20) என்று திருத்தூதர்களுக்குக் கூறி, ஆண்டவராகிய இயேசு எல்லா மனிதரிடையேயும் பற்றிய உண்மையைத் தேடவும், கண்டடைந்த உண்மையை ஏற்கவும், அதன்படி ஒழுகவும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
அதுபோலவே இக்கடமைகள் மனிதரின் மனச்சான்றைத் தொட்டுக் கட்டுப்படுத்துகின்றன எனவும், இனிமையுடனும் அதே நேரத்தில் வலிமையுடனும் மனதில் பதியும் உண்மையானது தம் சுயவலிமையாலன்றி வேறெந்த வகையிலும் தன்னையே பிறர்மேல் திணிப்பதில்லை எனவும் இத்திருச்சங்கம் அறிக்கையிடுகிறது. கடவுளை வழிபடும் கடமையை நிறைவேற்ற மனிதருக்குச் சமயச் சுதந்திரம் தேவை. சமயம் சார்ந்த குடிமைச் சமூகத்தின் கட்டாயத் திணிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதில் சமயச் சுதந்திரம் அடங்குகிறது. எனவே, உண்மைச் சமயம் பற்றியும் கிறிஸ்துவின் ஒரே திருச்சபை பற்றியும் அறிவு பெற மக்களுக்கும் சமூகங்களுக்கும் அறக்கடமை உண்டு என கத்தோலிக்க மரபுப் போதனை இதனால் எவ்விதத்திலும் மறுக்கப்படாமலிருக்கும். மேலும், இச்சமயச் சுதந்திரம் பற்றிப் பேசும் தருணத்தில், மனிதரின் மீறக்கூடாத உரிமைகளைப் ப்றிறயும் சமுதாயத்தின் சட்டப்பூர்வமாக ஒழுங்கமைப்புப் பற்றியும், அண்மைக் காலத்துத் திருத்தந்தையர் அளித்துள்ள படிப்பினைகளையும் விரிவாக்க விரும்புகிறது இத்திருச்சங்கம்.
1. சமயச் சுதந்திர பற்றிய பொதுவான தத்துவம்
சமயச் சுதந்திரத்தின் அடிப்படை
2. தாம் விரும்பும் சமயத்தைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துப் பின்பற்ற மனிதருக்கு உரிமை உண்டு என இவ்வத்திக்கான் சங்கம் அறிக்கையிடுகிறது. சமய சுதந்திரத்தின் பொருள் இதுவே: தனிமனிதரோ, சமூகக் குழுக்களோ எத்தகைய மனித அதிகாரமோ, எந்த மனிதரையும் சமயக் காரியங்களில் கட்டாயத் திணிப்புக்கு உட்படுத்தக்கூடாது; இக்காரியங்களில் தங்கள் மனச்சான்றுக்கு எதிராகச் செயல்புரியுமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாகு; தனியாவோ, பொதுவாகவோ, தனிமையிலோ. பிறரோடு சேர்ந்தோ, தகுந்த எல்லைக்குள் நின்று செயல்படுவதிலிருந்து யாரையும் தடுக்கக்கூடாது. மேலும் கடவுள் வெளிப்படுத்தியுள்ள வார்த்தையின் வழியாகவும், மனித அறிவினாலும் தெரியவரும் மனிதரின் மாண்பிலே சமயச் சுதந்திரத்துக்குரிய உரிமையின் அடித்தளம் அமைந்துள்ளது எனவும் சங்கம் அறிக்கையிடுகிறது.2 சமயச் சுதந்திரத்துக்கு மனிதர் கொண்டுள்ள இவ்வுரிமை சமுதாயத்தை ஆண்டு நடத்தும் முறையான சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு இது குடியுரிமையாக வேண்டும்.
அறிவும் சுதந்திரமும் கொண்டவர்களாக, தாமாகப் பொறுப்புணர்வுடன் செயலாற்றத் தக்கவர்களாக இருப்பதனால் மனிதர்கள் அனைவரும் ஆள்கள் என்ற முறையில் மாண்புடையவர்கள் ஆவர். இந்த மாண்பின் காரணமாக மனிதர்கள் உண்மையை, சிறப்பாக சமயம் பற்றிய உண்மையைத் தேடுவதற்குத் தம் இயல்பினாலேயே தூண்டப்பெறுவதோடுகூட அறநெறிக் கடமையால் பணிக்கவும் பெறுகிறார்கள். மேலும், அறிந்த உண்மையைப் பற்றி நிற்கவும், தங்கள் வாழ்க்கை அனைத்தையும் உண்மையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். உளச் சுதந்திரமும் அஃதோடுகூட வெளிக்கட்டாயத் திணிப்பிலிருந்து விடுபட்ட நிலையும் மனிதர்கள் கொண்டிருந்தாலன்றி, அவர்களால் தம் மனித இயல்புக்கு இசைவான முறையில் மேற்கூறிய கடமையை நிறைவேற்ற முடியாது. எனவே, சமயச் சுதந்திரத்துக்குரிய உரிமையின் அடித்தளம் மனிதரின் சொந்த மனநிலை அல்ல, மாறாக, அவர்களுடைய மனித இயல்பே ஆகும். இதனால், உண்மையைத் தேடவும், அதைக் கைக்கொள்ளவும் வேண்டிய தங்கள் கடமையை நிறைவேற்றாதவர்களுக்கும்கூட கட்டாயத்திலிருந்து விடுபட்டிருப்பதற்குரிய உரிமை உண்டு. நியாயமான பொது ஒழுங்கை அவர்கள் கடைப்பிடிப்பின், இவ்வுரிமையைச் செயல்படுத்து வதிலிருந்தும் அவர்களைத் தடுக்க முடியாது.
சமயச் சுதந்திரமும் கடவுளோடு மனிதருக்குள்ள தொடர்பும்
3. என்றென்றும் நிலைத்திருக்கின்ற. உண்மையான, பொது, இறைச் சட்டமே மனித வாழ்வின் ஒப்புயர்வற்ற அளவீடு என்பதை நாம் கருத்தில் கொண்டால் மேற்கூறியவை இன்னும் அதிகத் தெளிவாகும். இச்சட்டத்தினாலேயே கடவுள் தம் ஞானத்திலும் அன்பிலும் உருவான திட்டத்தைக் கொண்டு உலகம் முழுவதையும் மனித சமுதாயத்தின் எல்லா வழிகளையும் ஒழுங்குபடுத்தி இயக்குவித்து ஆள்கின்றார். இந்தத் தமது சட்டத்தில் கடவுள் மனிதரைப் பங்குக் கொள்ளச் செய்கிறார்; இதனால் கடவுளின் பராமரிப்பு கனிவுடன் வழி நடத்திச் செல்ல, அவர்கள் மாறாக உண்மையை அதிகமதிகமாகக் கண்டுணர முடியும். எனவே, ஏற்று வழிகளைப் பயன்படுத்தி, மனச் சான்றின் நேர்மையான, உண்மையான தீர்ப்புகளைத் தமக்குத் தாமே நிறைவேற்றுமாறு, ஒவ்வொரு மனிதரும் சமயக் காரியங்களில் உண்மையைத் தேடக் கடமையும் உரிமையும் கொண்டுள்ளார்கள்.3
எனினும், மனிதர் தம் மாண்பிற்கும் சமூக இயல்பிற்கும் தகுந்த முறையில் உண்மையைத் தேடவேண்டும். அதாவது. உண்மையைத் தேடும் இம்முயற்சி சுதந்திரமானதாய் இருக்க வேண்டும்; கல்வி அல்லது போதனை, கருத்துப் பரிமாற்றம், உரையாடல் முதலியவற்றின் துணைகொண்டு இத்தேடல் அமைய வேண்டும்; இவற்றின் வழியாக உண்மையைத் தேடுவதில் ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு மனிதர் தாம் கண்டுபிடித்த அல்லது கண்டுபிடித்ததாகக் கருதும் உண்மையைப் பிறர்க்கு விளக்கிக் காட்டுவர். மேலும், கண்டுபிடித்த உண்மையைத் தாங்களே விரும்பி ஏற்று உறுதியாக அதனைக் கைக்கொள்ளவேண்டும்.
மனிதர் தம் மனச்சான்றின் வழியாக இறைச்சட்டத்தில் கட்டளைகளை உணர்ந்து ஏற்கிறார்கள். தமது இறுதி இலக்காகிய கடவுளை அடையும் பொருட்டு, அவர்கள் தம் எல்லாச் செயல்களிலும் மனச்சான்றின்படி நேர்மையாய் நடக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய மனச்சான்றுக்கு மாறாகச் செயலாற்றும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல். சிறப்பாகச் சமயக் காரியங்களில் அவர்களுடைய மனச்சான்றுக்கு ஒப்பச் செயலாற்றுவதிலிருந்து அவர்களைத் தடுக்கவும் கூடாது. ஏனெனில், சமயத்தின்படி வாழ்தல் அதன் இயல்பிலேயே மனிதரின் அகம் சர்ர்நத, சுய விருப்பத்திற்கிசைந்த, சுதந்திரமான செயல்களில்தான் அடங்கியுள்ளது. இச்செயல்களை வழியாகத்தான் மனிதர் நேரடியாகக் கடவுளை நாடுகிறார்கள். இத்தகைய செயல்களை வெறும் மனித அதிகாரம் கட்டளையிடவோ, தடுக்கவோ முடியாது.4 ஏனெனில், மனிதர்கள் தம்முடைய சமயத்தின் அகம் சார்ந்த செயல்களுக்கு வெளிவடிவம் கொடுக்க வேண்டுமென்றும், சமயக் காரியங்களில் பிறரோடு பங்குகொள்ள வேண்டுமென்றும், ஒரு சமூகத்திற்கு ஏற்ற முறையில் தம்முடைய சமயத்தை வெளிப்படையாக ஏற்கவேண்டுமென்றும் அவர்களுடைய சமூக இயல்பே கோருகின்றது.
எனவே, நியாயமான பொது ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் நேரத்தில், சமயத்தைச் சுதந்திரத்துடன் பினபற்றுவதற்கான உரிமை சமுதாயத்தில் மனிதருக்கு மறுக்கப்படுமானல், அது மனிதருக்கும் கடவுள் மனிதருக்கென அமைந்துள்ள ஒழுங்குக்குமே அநீதியாக அமைகிறது.
மேலும். மனிதர் தனித்தனியாகவும் பொதுவிலும் தாமே உணர்ந்து கடவுளை நாடச் செய்யும் சமயச் செயல்கள் நிலைத்திராத மண்ணக அமைப்பைத் தம் இயல்பிலேயே கடந்து நிற்கின்றன. எனவே, மக்களின் உலகுசார் பொதுநலம் பேணுதலையே குறிக்கோளாகக் கொண்ட நாட்டு அதிகாரம் உண்மையாகவே குடிமக்களின் சமயவாழ்வை ஏற்று ஆதரிக்கவேண்டும். ஆனால். இவ்வதிகாரம் சமயச் செயல்களை நிர்ணயிக்க அல்லது தடுக்கத் துணியுமானால், இது தன் எல்லையை மீறிச் சென்றுவிட்டது என்றே கூறவேண்டும்.
சமயச் சமூகங்களின் சுதந்திரம்
4. சமயக் காரியங்களில் சுதந்திரம், அதாவது கட்டாயத் திணிப்பிலிருந்து விடுதலை தனி மனிதர்க்கு உண்டு. இதே உரிமைச் சமூகமாக அவர்கள் செயலாற்றும்பொழுது இவர்களுக்கு உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், மனிதருடையவும் சமயத்தினுடையவும் சமூக இயல்பின்படிச் சமயச் சமூகங்கள் தங்களுடைய சொந்த ஒழுங்கின்படி, தங்களையே ஆளலாம்; பொதுவழிபாட்டால் பரம்பொருளைப் பெருமைப்படுத்தலாம்; சமய வாழ்வைச் செயல்படுத்துவதில் தங்கள் உறுப்பினருக்கு உதவலாம்; அவர்களைப் போதனையால் உறுதிப்படுத்தலாம்; தம் சமயத் தத்துவங்களுக்கு ஏற்ற முறையில் தம் சொந்த வாழ்வை அமைக்க உறுப்பினர்கள் ஒத்துழைக்கும் அமைப்புகளை வளர்க்கலாம். இச்செயவ்களுக்கு வேண்டிய சுதந்திரம் சட்டப்படி சமயச் சமூகங்களுக்கு உண்டு.
தம் சொந்தத் திருப்பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தல், அவர்களைப் பயிற்றுவித்தல். நியமித்தல், இடம் மாற்றுதல், பிற நாட்டுச் சமயச் சமூகங்களோடும் சமயத் தலைவர்களோடும் தொடர்பு கொள்ளுதல், சமய நோக்கங்களுக்காகக் கட்டடங்கள் எழுப்புதல், பொருத்தமான பொருள் நலன்களைப் பெறுதல், அவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றால் நாட்டு அதிகாரத்தின் சட்ட அமைப்புகளாலோ, ஆட்சித் துறைச் செயல்களாலோ தடை செய்யப்படாதிருப்பதற்கான உரிமையையும் மேற்கூறிய சமயச் சமூகங்கள் பெற்றுள்ளன.
சமயச் சமூகங்கள் தங்கள் நம்பிக்கையைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படையாய்ப் போதிப்பதிலும் அதற்குச் சான்று பகர்வதிலும் தடை செய்யப்படாதிருப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளன. எனினும் சமய நம்பிக்கையைப் பரப்புவதிலும் பழக்கவழக்கங்களைப் புகுத்துவதிலும்,? சிறப்பாக ஏழைகளோடும் கல்லாதவரோடும் தொடர்பு கொள்ளும்பொழுது, கட்டாயத் திணிப்பாக அல்லது நேர்மையற்ற அல்லது தவறான முறையில் வயப்படுத்துதலாகத் தென்படும் எச்செயலையும் எப்பொழுதும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஒருவர் செயல்பட்டால் அவர் தம் உரிமையைத் தவறாகப் பயன்படுத்துகிறார், பிறருடைய உரிமையை மீறுகிறார் என்பது தெளிவு.
மேலும், சமுதாயத்தை அமைப்பதிலும், மனிதச் செயல் அனைத்திற்கும் எழுச்சியூட்டுவதிலும், தத்தம் கோட்பாடுகள் கொண்டுள்ள தனிப்பட்ட ஆற்றலை உரிமையோடு எடுத்துக் காட்டுவதிலிருந்து சமயச் சமூகங்களைத் தடுக்கலாகாது எனவும் சமயச் சுதந்திரம் பொருள்படும் இறுதியாக, தங்களுடைய சமய உணர்வால் தூய்டப்பட்டு உரிமையுடன் கூட்டங்களை நடத்தவும், கல்வி, பண்பாட்டு, அற, சமூக இயல்பு, சமயக் கழகங்களை நிறுவவும் மனிதருக்குள்ள உரிமை அவர்களது சமூக இயல்பு, சமயப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையிலிருந்து பிறக்கிறது.
சமயச் சுதந்திரமும் குடும்பமும்
5. குடும்பம் தனக்கே உரிய, அடிப்படையான உரிமையைக்கொண்டுள்ள ஒரு சமுகம் என்பதால், பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் தன் சொந்த வீட்டுச் சமய வாழ்வைச் சுதந்திரமாக அமைத்துக் கொள்ள உரிமை பெற்றுள்ளது. மேலும்,பெற்றோர் தங்களுடைய சொந்தச் சமயம் கொள்கைகளுக்கேற்பச் தங்கள் குழைந்தைகள் பெற வேண்டிய சமயம் பயிற்சி எவ்வகையில் அமையவேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை பெற்றுள்ளார் எனவே, பள்ளிகளையும் பிறக்கல்வித் துறைகளையும் உண்மையான சுதந்திரத்தோடு தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் கொண்டுள்ள உரிமையைச் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்: தேற்ந்தெடுப்பதற்கான இவ்வுரிமையைக் காரணம் காட்டி, பெற்றோரின்மேல் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ முறையற்ற பளுவைச் சுமத்தலாகாது. பெற்றோரின் சமையக் கொள்கைகளுக்கு ஒவ்வாத பள்ளிப் பாடங்களைப் பயிலவேண்டுமெனக் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டால் அல்லது சமயம் பயிற்சியே முற்றிலும் தவிர்க்கப் பட்ட ஒரே கல்விமுறை திணிக்கப்பட்டால் அது பெற்றோரின் உரிமைக்கு ஊறு விளைவிப்பதாகும்.
சமயக் சுதந்திரத்திற்கான பொறுப்பு
6. மனிதர் தம் நிறையை முழுமையாகவும் எளிதாகவும் அடைய உதவும் சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் முழுமையே சமுதாயத்தின் பொதுநலம் எனப்படும். இப்பொதுநலம்மனிதரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் கடைமைகளை நிறைவேற்றுவதிலுமே சிறப்பாக அடங்கியிறுக்கிறது.5 எனவே, தமக்கே உரிய வகையில் பொதுநலத்தைப் பேண யாவறுக்கும் கடமை உண்டு. இவ்வாறு சமயச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு குடிமக்களையும் சமூகக் குழுக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு குடிமக்களையும் சமூகமக் குழுக்களையும் நாட்டு அதிகாரிகளையும் திருச்சபையையும் மற்ற சமயக் சமூகங்களையும் சார்ந்துள்ளது.
மீறக்கூடாத மனித உரிமைகளைக் காத்துப் பேணுவது நாட்டு அதிகாரிகளின் இன்றியமையாக் கடைமையாகும்6 எனவே. நியாயமான சட்டங்களாலும் பிற தகுந்த வழிகளாலும் தம் குடிகள்அனைவரின் சமையச் சுதந்திரத்தைப் பயனளிக்கும் முறையில் பாதுகாப்பதைத் தம் கடைமையாக அவர்கள் ஏற்க வேண்டும். மேலும், மக்கள் சமய உரிமைகளை உண்மையாகவே செயல்படுத்தவும்,சமயக் கடமைகளை நிறைவேற்றவும், கடவுள் மட்டிலும் அவரது திருவுளத்தின் மட்டிலும் மனிதர் கொண்டுள்ள பற்றிலிருந்து எழும் நீதி, அமைதி இவற்றின் நலன்களைச் சமுதாயமே பெற்று மகிழவும் சமய வாழ்வைப் பேணுவதற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்க அவ்வதிகாரிகள் துணை புhழய வேண்டும்.7
மக்களிடையே உள்ள தனிப்பட்ட சூழ்நிலையின் காரணமாக ஒரு சமயச் சமூகம் சிறப்பான முறையில் நாட்டு அதிகாரிகளால் அரசியல் சட்ட அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே நேரத்தில் எல்லாக் குடிமக்களும் சமயச் சமூகங்களும் சமயக் காரியங்களில் கொண்டுள்ள சுதந்திரத்தையும் ஏற்று காப்பது அவசியம்.
சட்டத்திற்குமுன் குடிமக்கள் யாவரும் சமமானவர்கள். இச்சமநிலை பொதுநலத்தின் ஓர் அம்சமாகவோ உள்ளது. சமயக் காரணங்களுக்காக வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஒருக்காலும் இச்சமநிலை மீறப்படாதவாறு நாட்டு அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். இக்காரணங்களுக்காகக் குடிமக்களிடையே வேறுபாடுகளும் காட்டப்படக் கூடாது.
எனவே, நாட்டு அதிகாரிகள் வன்முறைச் செயலாலோ, அச்சுறுத்தலாலோ, பிற வழி வகைகளாலோ, எந்தச் சமயத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி அல்லது கைவிட்டுவிடும்படி தம் குடிமக்களை வலியுறுத்துவதும், ஒரு சமயச் சமூகத்தில் அல்லது ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சமயத்தை அழிக்கவோ, அடக்கிடவோ எவ்வகையிலும் பன்முறைச் செயலில் இறங்குவது கடவுளின் திருவுளத்திற்கும் தனி மனிதர் மற்றும் சமூகத்தின் மீறவியலா உரிமைகளுக்கும் எதிரான செயலாகிறது.
சமணச் சுதந்திரத்தின் வரம்புகள்
7. சமயச் சுதந்திரத்திற்குரிய உரிமை மனிதச் சமுதாயத்தில் செயலாக்கப்படுவதால் அச்செயலாக்கம் ஒருசில ஒழுங்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்டதேயாகும்.
எந்தச் சுதந்திரத்தையும் செயல்படுத்தும்போது ஆளுக்குரிய, மற்றும் சமூகம் மட்டிலான பொறுப்புணர்வு சார்ந்த அறநெறித் தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும்; தனிமனிதரும் சமூகக் குழுக்களும் தங்கள் உரிமைகளைச் செயல்படுத்தும்போது, பிறருடைய உரிமைகளையும் பிறருக்குத் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் அனைவரின் பொதுநலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய கடமையை அறநெறிச் சட்டம் அவர்களுக்குத் தருகிறது. மனிதர் நீதியோடும் மனிதத் தன்மையோடும் யாவருடனும் நடந்துகொள்ளவேண்டும்.
மேலும், சமயச் சுதந்திரம் என்னும் பெயரில் நிகழக் கூடுமான தவறான செயல்களிலிருந்து தன்னையே காத்துக்கொள்ள குடிமக்கள் சமூகத்துக்கு உரிமையுண்டு. இப்பாதுகாப்பை அளிக்கச் சிறப்பாகக் கடமை கொண்டவர்கள் நாட்டு அதிகாரிகளே. அவர்கள் இவ்வாறு பாதுகாப்பு அளிக்கையில் மனம்போன போக்கில் அல்லது அநீதியாக, ஒருதலைச் சார்பான முறையில் செயல்படலாகாது; மாறாக, அறநெறி ஒழுங்குக்கு ஏற்ப அமைந்துள்ள சட்டமுறையான விதிகளின்படியே செயல்பட வேண்டும். குடிமக்கள் அனைவரின் உரிமைகளைத் தக்க முறையில் பாதுகாக்கவும், அனைவரும் அமைதியாய் இணைந்து வாழவும் இவ்விதிகள் தேவை; மேலும், உண்மை நீதியில் மனிதர் ஒழுங்குடன் ஒன்றுபட்டு நடத்தும் வாழ்க்கையே நேர்மையான பொது அமைதி என்பதால், இவ்வமைதியைத் தகுந்த அளவு பாதுகாக்கவும், பொது ஒழுக்கத்தை முறையாகக் காக்கவும் மேற்கூறிய விதிகள் தேவை.. இவண் குறிக்கப்பட்டவை யாவும் பொதுநலத்தின் அடிப்படைக் கூறுகள் ஆகும்; இவை பொது ஒழுங்கமைப்பு என்ற பெயராலும் அறியப்படும். தவிர, சமுதாயத்தில் முழுச் சுதந்திரம் செயலாக்கப்படுமாறு வழிவகுக்கப்பட வேண்டும். அதன்படி, மனிதருடைய சுதந்திரத்தைக் கூடுமானவரை போற்றி மதிக்க வேண்டும்; தேவைப்பட்ட நேரத்தில், தேவையான அளவுக்கு மட்டுNமு, அதைக் கட்டுப்படுத்தலாம்.
சுதந்திரத்தைச் சரியாய்ப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி
8. இன்றைய மனிதர் பற்பல சூழ்நிலைகளால் நசுக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களது சுதந்திர சிந்தனையே பறிபோகும் ஆபத்து உளது. மறுபுறமோ, சுதந்திரம் எனக் கூறிக்கொண்டு பலர் அதிகாரம் எதற்கும் அடங்க மறுப்பதையும், தங்கள் கீழ்ப்படிதல் கடமையை பொருட்படுத்தாதிருப்பதையும் பார்க்கிறோம்.
எனவே, இவ்வத்திக்கான் சங்கம் அனைவருக்கும், சிறப்பாகப் பிறருக்குக் கல்வி புகட்டும் பணியை ஏற்றுள்ளவர்களுக்கு அறிவுறுத்துவதாவது: இவர்கள் மனிதர்களை எத்தகைய அக்கறையோடு உருவாக்க வேண்டுமென்றால், அம்மனிதர்கள் அறநெறி ஒழுங்குக்குப் பணிபவர்களாக, முறையான அதிகாரத்துக்குக் கீழ்ப்படிபவர்களாக, உண்மைச் சுதந்திரத்தின் அன்பர்களாக மாறவேண்டும்; உண்மையின் ஒளியில் தாங்களே சிந்தித்து முடிவெடுப்பவர்களாக, பொறுப்புணர்வுடன் தங்கள் செயல்களை ஆற்றுபவர்களாக, சமுதாயத்தின் பொதுநலம் எனப்படும் பிறருடன் மகிழ்வோடு ஒத்துழைத்து உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத் துணிபவர்களாக உருப்பெறவேண்டும்.
எனவே, சமூக வாழ்வில் மனிதர் தம் கடமைகளை நிறைவேற்றுவதில் இன்னும் அதிகப் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதற்கும் சமயச் சுதந்திரம் துணைபுரியவேண்டும்; அதனையே அது நோக்காகக் கொள்ளவும் வேண்டும்.
2. இறை வெளிப்பாட்டு ஒளியில் சமயச் சுதந்திரம்
சமயச் சுதந்திரம் இறை வெளிப்பாட்டின் அடிப்படையிலிருந்து எழுகிறது
9. சமயச் சுதந்திரத்திற்கான மனித உரிமைபற்றி இவ்வத்திக்கான் சங்கம் அறிக்கையிடுவன மனிதரின் மாண்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இம்மாண்பின் அடிப்படையில் எழும் கோரிக்கைகளைப் பன்னூற்றாண்டுக் கால அனுபவத்தின் வாயிலாக மனித அறிவு அதிக நிறைவாய்த் தெரிந்துள்ளது. அதற்கும் மேலாக, சுதந்திரத்தைப் பற்றிய இக்கோட்பாடு இறைவெளிப்பாட்டிலே வேரூன்றியுள்ளது. எனவே, கிறிஸ்தவர்கள் அதிக அக்கறையுடன் இக்கோட்பாட்டைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். சமயக் காரியங்களில் வெளிக்கட்டாயத் திணிப்பிலிருந்து விடுபட்டிருப்பதற்கு மனிதர் கொண்டுள்ள உரிமை பற்றி இறைவெளிப்பாடு வெளிப்படையாக வலியுறுத்தவில்லை என்றாலும்கூட, மனிதரின் மாண்பை முழுமையாக அது வெளிப்படுத்துகிறது. கடவுளின் வர்hத்தையை நம்பி ஏற்க மனிதர் கொண்டுள்ள கடமையை நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சுதந்திரத்தைக் கிறிஸ்து மதிக்கிறார் என இறைவெளிப்பாடு எண்பிக்கிறது. இத்தகைய தலைவராகிய கிறிஸ்துவின் சீடர்கள் எல்லாக் காரியங்களிலும் ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டிய மனப்பான்மையை இறைவெளிப்பாடு நமக்குப் படிப்பிக்கிறது. மேற்கூறிய அனைத்தும் சமயச் சுதந்திரம் பற்றிய இவ்வறிக்கையின் போதனைக்கு அடிப்படையாக அமையும் பொதுத் தத்துவங்களுக்கு விளக்கமாக அமைகின்றது. சிறப்பாகச் சமுதாயத்தில் நிலவ வேண்டிய சமயச் சுதந்திரம் கிறிஸ்தவ நம்பிக்கைச் சுதந்திரத்தோடு முற்றிலும் இசைந்துள்ளது.
நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளச் சுதந்திரம்
10. நம்பிக்கையுடன் கடவுளுக்கு மனிதர் அளிக்கும் பதில் மனமுவந்ததாய் இருக்க வேண்டும் என்பது கடவுளின் வார்த்தையில் அடங்கியுள்ளதும், திருச்சபைத் தந்தையரால் இடைவிடாது போதிக்கப்பட்டுள்ளதுமான8 ஒரு முக்கிய கத்தோலிக்கக் கோட்பாடு. எனவே, விரும்பாத எவரையும் நம்பிக்கையை கைக்கொள்ளக் கட்டாயப்படுத்தக் கூடாது.9 நம்பி ஏற்கும் செயல் தம் இயல்பிலேயே சுதந்திரமாகச் செய்யப்படுதலாகும். ஏனெனில், மனிதர் மீட்பர் கிறிஸ்துவால் ஈடேற்றப்பட்டுள்ளார்கள்; இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக அழைக்கப் பெற்றுள்ளனர்.10 இம்மனிதர், தந்தை ஈர்க்கும்பொழுது11 அறிவுக்கொத்த முறையிலும் சுதந்திரத்தோடும் நம்பிக்கையுடனம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் ஒழிய, தம்மையே வெளிப்படுத்தும் கடவுளைப் பற்றியிருக்கமுடியாது. எனவே, சமயக் காரியங்களில் மனிதரிடமிருந்து வரும்ட எவ்வகைக் கட்டாயத் திணிப்பும் முழுமையாகப் பொருந்தி போகும் ஒன்று. இவ்வாறாக, மனிதர் எளிதாகக் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அழைக்கப்படவும் அதைத் தாமாகவே விரும்பித் தழுவவும் தம் வாழ்க்கை முழுவதிலும் செயல்முறையில் அதை வெளிப்படுத்தவும் உதவக்கூடிய ஒரு மூழ்நிலையை உருவாக்கச் சமயச் சுதந்திரம் பெரிதும் துணைபுரிகிறது.
கிறிஸ்துவும் திருத்தூதரும் செயல்பட்ட முறை
11. கடவுள் ஆவியிலும் உண்மையிலும் தமக்குப் பணிபுரிய மனிதரை அழைக்கின்றார். எனவே, அவர்களது மனச்சான்று இதை ஒரு கடைமையாக உணர்த்துகின்றதேயன்றி, அவர்களை கட்டாயத் திணிப்பிற்கு உட்படுத்துவதில்லை. தாம் சொந்தமாக எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டு, சுதந்திரமாகச் செயல்பட வேண்டியவர் மனிதர். இம்மனிதரைப் படைத்த கடவுள் தாமே அவர்களது மாண்பை மதிக்கிறார். இந்த உண்மை, கடவுள் தம்மையும் தம் வழிகளையும் மனிதருக்கு நிறைவாக வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவில்தான் உச்சநிலையில் காணப்பட்டது. நம் ஆண்டவரும் ஆசிரியருமான கிறிஸ்து12 கனிவும் மனத் தாழ்மையும்13 உள்ளவராய்த் தம் சீடர்களை ஈர்ப்பதிலும் அழைப்பதிலும் பொறுமையைக் கையாண்டார்.14 அவர் தம்முடைய போதனையைப் புதுமைகளால் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினார் என்பதில் ஐயமில்லை. அவர் இவ்வாறு செய்தது தம் போதனையைக் கேட்போரின் நம்பிக்கையைத் தூண்டவம், அதில் அவர்களை உறுதிப்படுத்தவுமே தவிர, அவர்களைக் கட்டாயப்படுத்தும் நோக்கத்தோடன்று.15 கிறிஸ்து தம் போதனையைக் கேட்பவர்களின் நம்பிக்கையின்மையைக் கண்டித்திருக்கிறார் என்பது உறுதி. ஆனால், தண்டனையை அவர் கடவுளின் நீதித் தீர்ப்பு நாளுக்கு விட்டுவிட்டார்.16 தம் திருத்தூதர்களை உலகிற்கு அனுப்பியபொழுது, ''நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தீர்ப்பு பெறுவர்'' (மாற் 16:16) என்று அவர்களிடம் கூறினார். ஆனால், அவரே கோதுமையிடையே களைகள் விதைக்கப்பட்டிருப்பதைக் கண்டும், உலகின் முடிவில் வரவிருக்கும் அறுவடை நாள்வரை இரண்டும் வளரும்படி விட்டுவிடக் கட்டளையிட்டார்.17 அதிகாரத்தால் ஆட்சிசெய்யும் ஓர் அரசியல் மெசியாவாக இருக்க அவர் விரும்பவில்லை.18 மாறாக, ''தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த'' (மாற் 10:45) மானிட மகன் எனத் தம்மையே அழைத்துக்கொள்ள விரும்பினார். ''நெரிந்த நாணலை முறியாதவரும் புகையும் திரியை அணையார்'' (மத் 12:20) கடவுளின் நல்ல பணியாளராகத் தம்மையே அவர் கையளித்தார்.19
சீசருக்கு வரி செலுத்தவேண்டுமென்று கட்டளையிட்டு அரசின் அதிகாரத்தையும் அதன் உரிமைகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், ''சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' (மத் 22:21) என்று கூறி கடவுளின் மேலான உரிமைகளை மதிக்கவேண்டுமெனத் தெளிவாக எச்சரித்தார். இறுதியாக, மீட்பையும் உண்மைச் சுதந்திரத்தையும் மனிதரக்குப் பெற்றுத் தருவதாக மீட்பின் பணியைச் சிலுவையில் நிறைவேற்றித் தம்மையே முழுமையாக வெளிப்படுத்தினார். உண்மைக்குச் சான்று பகர்ந்தார்.20 எனினும உண்மைக்கு முரணாகப் பேசியவர்கள் மேல் அவர் கட்டாயமாக அதைத் திணிக்க விரும்பவில்லை. அவருடைய ஆட்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள படைபலத்தை நாடுவதில்லை;21 மாறாக, நிலையாக உண்மைக்குச் சான்று பகர்வதாலம் அதற்குச் செவிமடுப்பதாலும் அவ்வாட்சி உருவாகின்றது; அன்பால் வளர்ச்சியடைகிறது; இவ்வன்பால்தான் சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து தம்மிடம் எல்லா மனிதரiயும் ஈர்க்கிறார்.22
கிறிஸ்துவின் சொல்லாலும் முன்மாதரியாலும் கற்பிக்கப்பட்ட திருத்தூதர்களும் மேற்கூறிய வழியையே பின்பற்றினர். ஆண்டவர் கிறிஸ்துவை அறிக்கையிடுவதற்காக, மனிதரை மனந்திருப்பக் கிறிஸ்துவின் சீடர்கள் திருச்சபையின் தொடக்கக் கால்திலிருந்தே உழைத்து வந்திருக்கின்றன். எனினும், கட்டாயத் திணிப்பையோ நற்செய்திக்கு ஒவ்வாத வழிமுறைகளையோ பயன்படுத்தி அல்ல. மாறாக, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளின் வார்த்தையின் வல்லமையாலேயே23 அவர்கள் செயல்பட்டனர்; ''எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவுத் வேண்டும்'' (1 திமொ 2:4) என்று விரும்புகின்ற நம் மீட்பரான கடவுளின் திட்டத்தை யாவருக்கும் உறுதியுடன் அறிவித்தனர்; அதே நேரத்தில் வலிமையற்றவர்கள் தவற்றில் உழன்றாலும் அவர்களை மதித்தனர். இங்ஙனம், ''நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்'' (உரோ 14:12)24 என்றும், இதன் காரணமாகத் தம் மனச்சான்றுக்குக் கீழ்படிய கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும் காட்டினர். கிறிஸ்துவைப் போலவே திருத்தூதர்களும் கடவுளின் உண்மைக்குச் சான்று பகர்வதில் என்றும் கருத்தாய் இருந்தனர். மேலும். மக்கள் முன்னும் ஆள்வோர் முன்னும் ''கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துச் சொல்வதில்'' (திப 4:31) பெரிதும் முனைந்து நின்றனர்.25 ஏனெனில், நம்பிக்கைக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் இருப்பது நற்செய்தியே என்பதை உறுதியான நம்பிக்கையோடு கைக்கொண்டிருந்தனர்.26 எனவே, அவர்கள் ''உலகைச் சார்ந்த படைக்கலன்களை''27 எல்லாம் உதறித் தள்ளினர்; கிறிஸ்துவின் கனிவினுடையவும் பணிவினுடையவும் மாதிரியைப் பின்பற்றினர்; கடவுளுக்கு எதிராக எழும் சக்திகளை அழிக்கவும்,28 கிறிஸ்துவை நம்பி ஏற்க, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க மனிதரைத் தூண்டவும் வல்ல கடவுளின் வார்த்தையின் ஒப்புக்கொண்டனர். ஏனெனில், ''கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை'' என்று திருத்தூதர் கற்பித்து, அதன்பின் ''ஆளும்அதிகாரம் எள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்.... அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர்'' (உரோ 13:1-2) எனக் கட்டளையிடுகிறார்.30 எனினும் அதே நேரத்தில் கடவுளின் திருவுளத்திற்கு முரணாக நின்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் பேசத் தயங்கவில்லை: ''மனிதர்களுக்குக் கீழ்படிவதைவிட கடவுளுக்கல்லவா கீழ்படிய வேண்டும்?'' (திப 5:29).31 இதே வழியை எண்ணற்ற மறைசாட்சிகளும் நம்பிக்கை கொண்டோரும் உலகெங்கும் என்றும் பின்பற்றி வந்துள்ளனர்.
திருச்சபை கிறறுஸ்துவையும் திருத்தூதரையும் பின்பற்றுகிறது
12. எனவே, திருச்சபை மனிதருடைய மாண்பிற்கும் இறைவெளிபாட்டிற்கும் சமயச் சுதந்திரம் இசைந்ததே என்று ஏற்றுக்கொண்டு அச்சுதந்திரத்தை பேணும்பொழுது, நற்செய்தியின் உண்மையில் உறுதியாயிருக்கிறது; கிறிஸ்துவினுடையவும் திருத்தூதர் களுடையவும் வழியைப் பின்பற்றுகிறது திருச்சபை. தன் தலைவர்களிடமிருந்தும் திருத்தூதர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்ட கோட்பாட்டைக் காலப்போக்கிலே பேணிக் காத்து லழிலழியாகக் கொடுத்து வந்துள்ளது. மனித வரலாற்றின் திருப்பங்கள் வழியாகப் பயணம் செய்து வருகின்ற கடவுளின் மக்களின் வாழ்வில் சிலவேளைகளில் நற்செய்தி மனப்பாங்கிற்கு முரணான செயல்முறைகள் கூட இருந்தன என்பது உண்மைதான்; எனினும், நம்பிக்கையை எவர் மேலும் கட்டாயமாகத் திணிக்க கூடாது என்பது எப்பொழுதும் திருச்சபையின் கோட்பாடாக இருந்து வந்திருக்கிறது.
எனவே, நற்செய்தி என்னும் புளிப்பு மாவு மனிதரின் மனதில் நெடுங்காலமாகச் செயல்பட்டு வந்துள்ளது; அதிகப் பலனையும் ஈந்துள்ளது. ஏனெனில், மனிதர்கள் காலப்போக்கில் தங்கள் மனித ஆளுமையின் மாண்பை அதிகமதிகமாக ஏற்றுக் கொள்கிறார்கள்; Nலும், சமய காரியங்களில் இம்மாண்பு மனிதர்கள் ஏற்படுத்தும் எவ்வகைக் கட்டாயத் திணிப்பிலிருந்தும் சமூகத்தில் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வளர்ச்சி பெற்றுள்ளது.
திருச்சபையின் சுதந்திரம்
13. திருச்சபையுடைய நலத்தை மடடுமல்லாது இவ்வுலக சமுதாயத்துடைய நலத்தையுமே சார்ந்த காரியங்கள் பல உள. எங்கும் இவை எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்; அநீதமான அனைத்தினின்றும் காக்கப் பெறவேண்டும். இத்தகை காரியங்களுள் தலைசிறந்த ஒன்று யாதெனில்; மனிதருடைய மீட்பிற்கு வழிவகுக்கும் பணியில் எந்த அளவு சுதந்திரம் தேவைப்படுகிறதோ அந்த அளவு பணியில் சுதந்திரத்தைத் திருச்சபை கொண்டிருக்க வேண்டும்.32 இச்சுதந்திரம் தூயதான ஒன்று. கடவுளின் ஒரே பேறான மகன் தம் இரத்தத்தால் பெற்றுள்ள திருச்சபையை இச்சுதந்திரத்தால் வளப்படுத்தியிருக்கிறார். உண்மையில், இச்சுதந்திரம் எவ்வளவுக்குத் திருச்சபையின் உரிமையாய் இருக்கின்றதென்றால் இதற்கு முரணாகச் செயலாற்றுவது கடவுளின் திருவுளத்திற்கு மாறாக நடப்பதாகும். திருச்சபைக்கும் நாட்டு அரசுகளுக்கும் குடிமை அமைப்பு முழுவதற்கும் இடையேயுள்ள உறவைப் பொறுத்தவற்றில் அடிப்படைத்தத்துவமாய் விளங்குவது திருச்சபையின் சுதந்திரமே.
திருச்சபை ஆண்டவர் கிறிஸ்துவால் நிறுவப்பட்டு, கடவுளின் ஆணையால் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைச்சாற்றக் கடமை கொண்டுள்ள அருள்வாழ்வு சார்ந்த அமைப்பாகும்.33 எனவே, அது மனித சகூதாயத்திலும் அரசுகளின் முன்னும் தனக்குச் சுதந்திரம் உண்டைன உரிமை கொண்டாடுகிறது. மேலும், கிறிஸ்துவ நம்பிக்கையின் ஒழுங்குகளுக்கொப்பக் குடிமைச் சமுதாயத்தில் வாழ உரிமை பெற்றுள்ள ஒரு மனித சமுதாயம் என்ற முறையிலும் தனக்குச் சுதந்திரம் உண்டெனத் திருச்சபை உரிமை பாராட்டுகிறது.34
உண்மையில், சமயச் சுதந்திரம் சொற்களில் வெளிப்படுத்தப் படுவதோடு, அல்லது சட்டத்தில் இடம்பெறுவதோடு மட்டும் நின்றுவிடாது, நேர்மையுடனும் நடைமுறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் திருச்சபை கடவுளால் தனக்களிக்கப் பட்ட பணியை நிறைவேற்றத் தேவையான தன்னுரிமையைச் சட்டபடியும் நடைமுறையிலும் செயலாக்குவதற்குத் தேவையான ஒரு நிலைமையை அடையும்; சமூகத்தில் இத்தன்னுரிமை தங்களுக்கு உரியது என்று திருச்சபை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் உரிமை பாராட்டி இருக்கின்றனர்.35 அதே நேரத்தில், பிற மனிதரைப் போல் கிறிஸ்தவர்களும் தடையேதுமின்றித் தங்கள் மனச்சான்றின்படி வாழ்வு நடத்தக் குடியுரிமை பெற்றுள்ளனர். எனவே, திருச்சபையின் சுதந்திரத்திற்கும், எல்லா மனிதருடைய மற்றும் சமூகங்களுடைய உரிமையாக ஏற்கப்பட்டுச் சட்டத்தில் இடம்பெறவேண்டிய சமயச் சுதந்திரத்திற்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
திருச்சபையின் பணி
14. ''எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்'' (மத் 28:19-20) என்ற இறைக் கட்டளைக்கு உண்மையாயிருக்கும் பொருட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை ''ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற'' (2 தெச 3:1) பெருங்கவனத்தோடு உழைக்க வேண்டும். எனவே, ''அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே... இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்'' (1 திமொ 2:1-4)
கிறிஸ்தவர்கள் தங்கள் மனச்சான்றை உருவாக்கும்போது திருச்சபையின் திண்ணமான, தூய கோட்பாடுகளைக் கருத்தோடு கவனிக்கவேண்டும்.36 ஏனெனில், கிறிஸ்துவின் திருவுளப்படி கத்தோலிக்கத் திருச்சபை உண்மையின் ஆசிரியையாகும். கிறிஸ்துவாகிய உண்மையை அறிவிப்பதும் அதிகாரத்தோடு கற்பிப்பதும் அதன் கடமையாகும்; அதே நேரத்தில் மனித இயல்பிலிருந்து பிறக்கும் அறநெறித் தத்துவங்களைத் தன் அதிகாரத்தால் பறைசாற்றி உறுதிப்படுத்துவதும் அதன் கடமையே. மேலும், ''தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; உண்மையையே பேசி'' (2 கொரி 6:6-7) கிறிஸ்தவர் திருச்சபைக்கு வெளியே இருப்போர்முன் ஞானமுடன் நடப்பார்களாக் முழு நம்பிக்கையோடம்37 திருத்தூதுத் துணிவோடும் தங்கள் இரத்தத்தையும் சிந்தும் அளவுக்கு வாழ்வின் ஒளிமைப் பரப்ப முனைவார்களாக.
கிறிஸ்துவிடமிருந்து பெற்றுள்ள உண்மையை நாளுக்குநாள் அதிகமதிகமாக அறிந்துகொள்வதும், நேர்மையாய்ப் பறைசாற்றுவதும், திடமாகக் காப்பதும், சீடர் தம் தலைவரான கிறிஸ்துவுக்கு ஆற்றும்பொழுது நற்செய்தியின் மனப்பாங்கிற்கு ஒவ்வாத வழிகளை அவர்கள் கையாளக் கூடாது. அதேநேரத்தில், நம்பிக்கையை அறியாதவரோடும் தவறான கொள்கையை உடையவரோடும் பழகும்பொழுது அன்போடும் முன்மதியோடும் பொறுமையோடும் நடந்துகொள்ளக் கிறிஸ்துவின் அன்பு அவர்களைத் தூண்டுகிறது.38 ஆகவே மேற்சொல்லப்பட்ட கடமையை ஆற்றும்பொழுது, பறைசாற்றப்பட வேண்டிய வாழிவளிக்கும் வார்த்தையான கிறிஸ்துவுக்கு ஆற்றவேண்டிய கடமைகள். மனித ஆளுக்கு உரித்தான உரிமைகள், நம்பிக்கையை விருப்புடன் ஏற்று வெளிப்படுத்த அழைக்கப்படும் மனிதருக்குக் கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அழைக்கப்படும் மனிதருக்குக் கிறிஸ்துவின் கடவுள் அளிக்கும் அருளின் அளவு ஆகிய இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
முடிவுரை
15. இன்றைய மனிதர் தனித்தும் பொதுவிலும் தங்களுடைய சமயத்தைச் சுதந்திரமாக அறிக்கையிட இயலவேண்டுமென விரும்புகின்றனர் என்பது தெளிவு. ஏன், சமயச் சுதந்திரம் பெரும்பாலான சட்ட அமைப்புகளில் ஒரு குடியுரிமையாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது; அனைத்து நாட்டு ஏடுகளில் சிறப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.39 அதே நேரத்தில் சமய வழிபாட்டுச் சுதந்திரம் தம் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சமயத்தைப் பின்பற்றுவதிலிருந்து குடிமக்களைத் தடுத்து, சமயச் சமூகங்களின் வாழ்வைப் பெருந்துன்பத்திற்கும் பாதுகாப்பற்ற நிலைக்கும் உள்ளாக்க முயற்சி செய்யும் அட்சி முறைகள் இன்றும் இல்லாமல் இல்லை.
முன்பு கூறப்பட்ட இன்றைய காலத்தின் நற்குறிகளைத் திருச்சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. பின்பு கூறப்பட்ட வருந்தத்தக்க நிகழ்ச்சிகளைக் கவலையோடு கண்டிக்கிறது. சமயச் சுதந்திரம் மிகச் சிறப்பாக மனிதக் குடும்பத்தின் இன்றைய நிலையில் எத்துணை பெரிய ஒரு தேவை என்பதைக் கருத்தூன்றி உணரம்படி இச்சங்கம் கத்தோலிக்கருக்கு அற்pவுறுத்துகிறது; இவ்வாறு செய்ய எல்லா மனிதருக்கும் அது வேண்டுகோள் விடுக்கிறது.
எல்லா இனத்தாரும் நாளுக்கு நாள் ஒன்றுபட்டு வருகின்றனர்; வேறுபட்ட பண்பாடுகளையும் சமயங்களையும் சார்ந்திருந்தாலும் மனிதர்கள் நெருங்கிய உறவால் தங்களுக்குள் பிணைக்கப் படுகின்றனர்; ஒவ்வொருவரும் தமக்குரிய பொறுப்பை நாளுக்கு நாள் அதிகமதிகமாக உணர்ந்து வருகின்றனர். இவை யாவும் தெளிவு. ஆகவே, மனித குலத்தின் அமைதியான உறவுகளும் ஒற்றுமையும் ஏற்படுத்தப்பட்டு உறுதிபெற, சமயச் சுதந்திரத்தைச் சட்டத்தின் மூலம் செயல்முறையில் உலகெங்கும் பாதுகாக்க வேண்டும்; சமுதாயத்தில் சமய வாழ்வைச் சுதந்திரமாக நடத்த மனிதருக்குரிய தலையாய கடமைகளையும் உரிமைகளையும் யாவரும் மதிக்க வேண்டும்.
மனிதக் குடும்பம் சமயச் சுதந்திரத்தை சமுதாயத்தில் கடைப்பிடிப்பதன் வழியாக எல்லாருடைய கடவளும் தந்தையுமானவர் அதனைச் சாலச் சிறந்ததும், முடிவுற்றதுமான ''கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையின் விடுதலைக்கு'' (உரோ 8;21) கிறிஸ்துவின் அருளாலும், தூய ஆவியின் ஆற்றலாலும் கொண்டு வருவாராக.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிங்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக் கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் கடவுளின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
| தூய பேதுரு பேராலயம் | பவுல். |
| உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
| டிசம்பர் 7, 1965. |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
