மத்தேயு நற்செய்தி

ஆசிரியர்:

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்துhதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நுhல் ஒரு மொழிபெயர்ப்பு நுhலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததுhதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நுhலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ,குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.

சூழல்:

எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நுhல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நுhல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.

 

உள்ளடக்கம்:

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக்கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நுhல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நுhல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நுhல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள. இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநுhலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத் 28:20) இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நுhலில் கிறிஸ்தியல், திருச்சபையி;ல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.

அமைப்பு

திருச்சட்ட நுhலில் ஐந்து நுhல்கள் அமைந்திருப்பதுபோல் இந்நுhலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.

முன்னுரை:

இயேசுவின பிறப்பும் குழந்தைப் பருவமும் 1 - 2

பகுதி 1. விண்ணரசு பறைசாற்றப்படல் 3 - 7

1. நிகழ்ச்சி (3,4)
2. அறிவுரை (5-7) (மலைப்பொழிவு)

பகுதி 2. விணணரசுப் பணி 8 - 10

1. நிகழ்ச்சி (8,9)
2.அறிவுரை (10)  (திருத்துhதர் பொழிவு)

பகுதி 3. விண்ணரசின் தன்மை 11:1 - 13:52

1. நிகழ்ச்சி (11,12)
2.அறிவுரை (13:1-52) (உவமைப் பொழிவு)

பகுதி 4 விண்ணரசின் அமைப்பு 13:53 - 18:52

1. நிகழ்ச்சி (13:53 -17)
2.அறிவுரை (18) (திருச்சபைப் பொழிவு)

பகுதி 5. விண்ணரசின் வருகை 19 - 25

1. நிகழ்ச்சி (19-23)
2. அறிவுரை (24,25) (நிறைவுகாலப் பொழிவு)

முடிவுரை:

இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்தெழுதலும் 26 - 28

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அதிகாரம் 1

இயேசுவின் மூதாதையர் பட்டியல் (லூக் 3:23-28)

1-2 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன்.

5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூயஅp;த்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபெதின் மகன் ஈசாய்.

6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா.

8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.

9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமொன்; ஆமொனின் மகன் யோசியா.

11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.

13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர்.

14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது.

15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.

இயேசுவின் பிறப்பு (லூக்காஸ் 2:1-7)

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார்.

22-23 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.

24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

அதிகாரம் 2

ஞானிகள் வருகை

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2 யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.

3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.

4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

5 அவர்கள் அவனிடம் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.

6 ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள்.

7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

8 மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்.

14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

குழந்தைகள் படுகொலை

16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

17 அப்பொழுது" ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்;

18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள்; ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

எகிப்திலிருந்து திரும்பி வருதல்

19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,

20 நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் என்றார்.

21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார். இவ்வாறு, 'நசரேயன்' என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

அதிகாரம் 3

1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,

2 மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று பறைசாற்றி வந்தார்.

3 இவரைக் குறித்தே, "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்"; என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.

4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

5 எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.

6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?

8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.

9 ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார்.

13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

14 யோவான், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறித் தடுத்தார்.

15 இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.

17 அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

 

அதிகாரம் 4

1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.

2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.

3 சோதிக்கிறவன் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றான்.

4 அவர் மறுமொழியாக; "'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.

5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,

6 ";நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது.

7 இயேசு அதனிடம்: "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார்.

8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,

9 அவரிடம், "நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது.

10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.

14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது;

15 "செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!

16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது."

17 அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.

19 இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார்.

20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.

22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

24 அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.

25 ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்

அதிகாரம் 5

1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை;

3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

13 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.

15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 "விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

21 "கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.

22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே" என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே" என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

27 " 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

31 "தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

33 மேலும், "பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.

35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.

36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.

37 ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

38 'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.

41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

43 உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

45 "இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

அதிகாரம் 6

1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

5 நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்;" விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!

10 உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!

11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.

12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.

13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")

14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.

18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

19 மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

22 "கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.

23 அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்!

24 எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

25 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?

26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?

28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.

29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?

31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.

32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும.; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்

அதிகாரம் 7

1 பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?

4 அல்லது அவரிடம், "உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!

5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?

10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

13 இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.

14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.

15 போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.

16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?

17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.

18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.

20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

21 என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.

23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.

24 ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.

27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."

28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்

அதிகாரம் 8

1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்.

3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.

4 இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை;ச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார்.

5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.

6 "ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" என்றார்.

7 இயேசு அவரிடம், "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.

9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம்" வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து" இதைச் செய்க" என்றால் அவர் செய்கிறார்" என்றார்.

10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

12 அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

13 பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

14 இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.

15 இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

16 பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினர்.

17 இவ்வாறு, "அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

20 இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார்.

22 இயேசு அவரைப் பார்த்து, "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

23 பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள்.

24 திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.

25 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

26 இயேசு அவர்களை நோக்கி, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.

27 மக்களெல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர்.

28 இயேசு அக்கரை சேர்ந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.

29 அவர்கள், "இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்.

30 அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.

31 பேய்கள் அவரிடம் , "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.

32 அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.

33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள்.

34 உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

அதிகாரம் 9

1 இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.

2 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

3 அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், "இவன் கடவுளைப் பழிக்கிறான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.

4 அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?

5 "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா, "எழுந்து நட" என்பதா, எது எளிது?

6 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.

7 அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

8 இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

10 பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேட்டனர்.

12 இயேசு இதைக் கேட்டவுடன், "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.

13 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

14 பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.

15 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

16 மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.

17 அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா" என்றார்.

18 அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்" என்றார்.

19 இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

20 அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.

21 ஏனெனில் அப்பெண், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்" எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.

22 இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, "மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.

23 இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.

24 அவர், "விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

25 அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.

26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

27 இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.

28 அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றார்கள்.

29 பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்" என்றார்.

30 உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. "யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.

31 ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

32 அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.

33 பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, "இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை" என்றனர்.

34 ஆனால் பரிசேயர், "இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

35 இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

36 திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.

37 அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

38 ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார்.

அதிகாரம் 10

1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு; முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான்,

3 பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோப்பு, ததேயு,

4 தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.

5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது; ";பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.

6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.

7 அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றுங்கள்.

8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.

9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.

12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.

13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.

15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

16 "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

17 எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.

18 என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.

19 இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, "என்ன பேசுவது, எப்படிப் பேசுவது" என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

20 ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.

21 சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.

22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.

23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.

25 சீடர் தம் குரவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?

26 "எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

32 "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.

33 மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

34 ";நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

35 தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.

36 ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

37 என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

38 தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

39 தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

40 "உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.

41 இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அதிகாரம் 11

1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.

3 அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார்.

4 அதற்கு இயேசு மறுமொழியாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.

5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்;" நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?

8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.

9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

10 ";இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்" என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.

11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.

13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.

14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.

15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.

16 "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, "நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.

17 நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீ;ங்கள் மாரடித்துப் புலம்பவில்லை" என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.

19 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."

20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.

21 "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.

22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

23 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!

24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."

25 அவ்வேளையில் இயேசு, "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.

28 மேலும் அவர், "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்

அதிகாரம் 12

1 அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

2 பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்" என்றார்கள்.

3 அவரோ அவர்களிடமும், "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா?

4 இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

5 மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?

6 ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

7 "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.

8 ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

9 இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.

10 அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர்.

11 அவர் அவர்களிடம், "உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா?

12 ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார்.

13 பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, "உமது கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.

14 பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

15 இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.

16 தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.

17 இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின;

18 "இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.

19 இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்; கூக்குரலிடமாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,

20 நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்.

21 எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."

22 பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.

23 திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டனர்.

24 ஆனால் இதைக் கேட்ட பரிசேயர், "பேய்களின் தலைவனாகிய பெயல் செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது;" தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.

26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

27 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்றுத் தவறு என்பதற்குச் சாட்சிகள்.

28 நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?

29 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்? அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

30 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.

31 எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.

32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

33 "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.

34 விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

35 நல்லவர் நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவ+லத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.

36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்

37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்."

38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, "போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்" என்றனர்.

39 அதற்கு அவர் கூறியது; "இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

43 "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,

44 "நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.

45 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."

46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

47 ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார்.

48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார்.

49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.

50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.

அதிகாரம் 13

1 அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.

2 மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.

3 அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்;" விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

4 அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

5 வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;

6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.

7 மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.

8 ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.

9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார்.

10 சீடர்கள் அவரருகே வந்து, "ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?" என்று கேட்டார்கள்.

11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது; "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.

12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

13 அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.

14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது; "நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.

15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்."

16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.

17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

18 "எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்;

19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.

20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.

21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.

22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.

23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்."

24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை; "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.

25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்

26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.

27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, "ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.

28 அதற்கு அவர், "இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், "நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? "என்று கேட்டார்கள்.

29 அவர், "வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.

30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், "முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார் ."

31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை; "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.

32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.

33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை; "பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்."

34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.

35 ";நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, "வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்" என்றனர்.

37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்; "நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;

38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;

39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;

42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

44 "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

45 "வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.

46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

47 ";விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.

48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.

49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;

50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."

51 "இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றார்கள்.

52 பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவ+லத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்" என்று அவர்களிடம் கூறினார்.

53 இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?

55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.

57 இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார்.

58 அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

அதிகாரம் 14

1 அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.

2 அவன் தன் ஊழியரிடம், "இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்" என்று கூறினான்.

3 ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

4 ஏனெனில் யோவான் அவனிடம், "நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல" என்று சொல்லிவந்தார்.

5 ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

6 ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள்.

7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.

8 அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்" என்று கேட்டாள்.

9 இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்;

10 ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்.

11 அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

12 யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.

16 இயேசு அவர்களிடம், "அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.

17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்கள்.

18 அவர், "அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்றார்.

19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.

23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.

24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.

25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, "ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறினர்.

27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.

28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, "ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்" என்றார்.

29 அவர், "வா" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார்.

31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.

32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.

33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர்.

34 அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள்.

35 இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர்.

36 அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.

அதிகாரம் 15

1 அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,

2 ";உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே" என்றனர்.

3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?

4 கடவுள், "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்றும், "தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்" என்றும் உரைத்திருக்கிறார்.

5 ஆனால் நீங்கள், "எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, "உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று" என்றால்,

6 அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.

7 வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.

8 அவர், "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.

9 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்" என்கிறார்" என்றார்.

10 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, "நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.

11 வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்.

12 பின்பு சீடர் அவரை அணுகி, "பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?" என்றனர்.

13 இயேசு மறுமொழியாக, "என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்" என்றார்.

15 அதற்குப் பேதுரு அவரை நோக்கி, "நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்" என்று கேட்டார்.

16 இயேசு அவரிடம், "உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?

17 வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா?

18 வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.

19 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.

20 இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது" என்றார்.

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார்.

23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர்.

24 அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.

25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.

26 அவர் மறுமொழியாக , "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.

27 உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.

28 இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.

30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.

31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

32 இயேசு தம் சீடரை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" என்று கூறினார்.

33 அதற்குச் சீடர்கள் அவரிடம், "இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?" என்று கேட்டார்கள்.

34 இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள், "ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன" என்றார்கள்.

35 தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.

36 பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

37 அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

38 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.

39 பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப் படகேறி மகத நாட்டு எல்லைக்குள் சென்றார்.

அதிகாரம் 16

1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர்.

2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, (" மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால்" வானிலை நன்றாக இருக்கிறது" என நீங்கள் சொல்வீர்கள்.

3 காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், "இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்" என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா? ")

4 "இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது" என்றார். பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.

5 சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.

6 இயேசு அவர்களிடம்" பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்" என்றார்.

7 "நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்" எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

8 இதை அறிந்த இயேசு, "நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?

9 உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?

10 அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா? அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்?

11 நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி? பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்" என்றார்.

12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை; மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.

14 அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள்.

15 "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.

16 சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.

17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.

19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.

20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார்.

23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார்.

24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.

26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்" என்றார்.

அதிகாரம் 17

1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.

3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.

5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.

6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.

7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார்.

8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.

9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், "எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?" என்று கேட்டார்கள்.

11 அவர் மறுமொழியாக, "எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.

12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்.

13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.

14 அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,

15 "ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.

16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றார்.

17 அதற்கு இயேசு, "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.

18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனைவிட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.

19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டார்கள்.

20 இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் "

21 ("இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது") என்றார்.

22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.

23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.

24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.

25 அவர், "ஆம், செலுத்துகிறார்" என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, "சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?" என்று கேட்டார்.

26 "மற்றவரிடமிருந்துதான்" என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், "அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.

27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து" என்றார்.

அதிகாரம் 18

1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று கேட்டார்கள்.

2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,

3 பின்வருமாறு கூறினார்;" நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

6 "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.

7 ஐயோ! பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு! பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு!

8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக் கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

10 "இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 (ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார், ")

12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

15 "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

16 இல்லையென்றால்" இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்" என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.

17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.

20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.

22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது; "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.

24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.

25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான்.

27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.

29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.

34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

அதிகாரம் 19

1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

2 பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.

3 பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டனர்.

4 அவர் மறுமொழியாக, "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்" ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்" என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?" என்று கேட்டார்.

5 மேலும் அவர், "இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

6 இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார்.

7 அவர்கள் அவரைப் பார்த்து, "அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?" என்றார்கள்.

8 அதற்கு அவர்" உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.

9 பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"என்றார்.

10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, "கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது" என்றார்கள்.

11 அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார்.

13 சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

14 ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்றார்.

15 அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.

16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

17 இயேசு அவரிடம், "நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" என்றார்.

18 அவர், "எவற்றை?" என்று கேட்டார். இயேசு, "கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;

19 தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறினார்.

20 அந்த இளைஞர் அவரிடம், "இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?" என்று கேட்டார்.

21 அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.

22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

23 இயேசு தம் சீடரிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.

24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

25 சீடர்கள் இதைக் கேட்டு, "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.

26 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டார்.

28 அதற்கு இயேசு, "புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

29 மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

30 ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" என்று அவர்களிடம் கூறினார்.

அதிகாரம் 20

1 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

4 அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார்.

5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

7 அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.

8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்" என்றார்.

9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

12 "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள்.

13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, "தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்றார்.

16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார்.

17 இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து,

18 "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.

19 அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" என்று அவர்களிடம் கூறினார்.

20 பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார்.

21 "உமக்கு என்ன வேண்டும்?" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார்.

22 அதற்கு இயேசு, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள்.

23 அவர் அவர்களை நோக்கி, "ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்" என்றார்.

24 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங் கொண்டனர்.

25 இயேசு அவர்களை வரவழைத்து, "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.

26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்கு விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

27 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

28 இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

29 அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

30 அப்பொழுது வழியோரத்தில் உட்கார்ந்திருந்த பார்வையற்றோர் இருவர் இயேசு அவ்வழியே கடந்து செல்கிறார் என்று கேள்விப்பட்டு, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று கத்தினர்.

31 மக்கள் கூட்டத்தினர் அவர்களைப் பேசாதிருக்குமாறு அதட்டினர். ஆனால் அவர்கள், "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்று உரக்கக் கத்தினார்கள்.

32 இயேசு நின்று, அவர்களைக் கூப்பிட்டு, "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.

33 அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார்கள்.

34 இயேசு பரிவு கொண்டு அவர்களுடைய விழிகளைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றினார்கள்.

அதிகாரம் 21

1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,

2 "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், "இவை ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்.

4 "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்;

5 கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.

6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.

7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.

8 பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.

9 அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

10 அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது.

11 அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.

12 பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.

13 "என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்" என்று அவர்களிடம் சொன்னார்.

14 பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.

15 அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் "தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர்.

16 அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்வது கேட்கிறதா?" என, இயேசு அவர்களிடம், "ஆம்! "பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?" என்று கேட்டார்.

17 பின்பு அவர் அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்குத் தங்கினார்.

18 காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.

19 வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், "இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்" என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.

20 இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, "இந்த அத்தி மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?" என்று கேட்டார்கள்,

21 இயேசு அவர்களிடம் மறுமொழியாக, "நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

22 நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்" என்று கூறினார்.

23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள்.

24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.

25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?" என்று அவர் கேட்டார். அவர்கள் ";விண்ணகத்திலிருந்து வந்தது" என்போமானால், "பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை" எனக் கேட்பார்.

26 "மனிதரிடமிருந்து" என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம் "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

28 மேலும் இயேசு, "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்றார்.

29 அவர் மறுமொழியாக, "நான் போக விரும்பவில்லை" என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, "நான் போகிறேன் ஐயா!" என்றார்; ஆனால் போகவில்லை.

31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்டார். அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை" என்றார்.

33 "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?" என இயேசு கேட்டார்.

41 அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோடடத்தைக் குத்தகைக்கு விடுவார்" என்றார்கள்.

42 இயேசு அவர்களிடம், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!" என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?

43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

44 "இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார் " என்றார்.

45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.

46 அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

அதிகாரம் 22

1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது;

2 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.

3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், "நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.

6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.

7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

8 பின்னர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.

9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.

11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

12 அரசர் அவனைப் பார்த்து, "தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.

13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், "அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்."

15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.

16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.

17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்" என்று அவர்கள் கேட்டார்கள்.

18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?

19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்" என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.

20 இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார்.

21 அவர்கள், "சீசருடையவை" என்றார்கள். அதற்கு அவர், "ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,

24 "போதகரே, ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவருடைய மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே உரைத்திருக்கிறார்.

25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் திருமணம் செய்து மகப்பேறின்றிக் காலமானதால் அவருடைய மனைவியை அவர் சகோதரர் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.

26 அப்படியே இரண்டாம் மூன்றாம் ஏழாம் சகோதரர் வரை அனைவருக்கும் நடந்தது.

27 அவர்கள் அனைவருக்கும் பின்பு அப்பெண்னும் இறந்தார்.

28 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாய் இருப்பார்? அவர்கள் யாவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே" என்று கேட்டனர்.

29 இயேசு மறுமொழியாக, "உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவேதான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

30 ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.

31 இறந்தோர் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் உங்களுக்கு உரைத்துள்ளதை நீங்கள் வாசித்ததில்லையா?

32 "ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்" என்று கூறினார்.

33 அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.

35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,

36 "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?" என்று கேட்டார்.

37 அவர், "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து."

38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

39 "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன" என்று பதிலளித்தார்.

41 பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.

42 அவர், "மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?" என்று கேட்டார். அவர்கள், "தாவீதின் மகன்" என்று பதிலளித்தார்கள்.

43 இயேசு அவர்களிடம், "அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி?

44 "ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்!" என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா!

45 எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?" என்று கேட்டார்.

46 அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.

அதிகாரம் 23

1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது;

2 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.

3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.

5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.

6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;

7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

8 ஆனால் நீங்கள் "ரபி" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

11 உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.

13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

14 மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;

15 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

16 "குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

17 குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?

18 யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

19 குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?

20 எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்.

21 திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார்.

22 வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.

23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.

24 குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

25 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.

26 குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.

28 அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

29 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;

30 "எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்" என்கிறீர்கள்.

31 இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.

32 உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.

33 பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?

34 எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்; சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் தொழுகைக் கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.

35 இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும்.

36 இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

37 "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!

38 இதோ! உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும்.

39 எனவே இதுமுதல், "ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்!" என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அதிகாரம் 24

1 இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.

2 அவர் அவர்களைப் பார்த்து, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

3 ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, "நீர் கூறியவை எப்போது நிகழும்? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டார்கள்.

4 அதற்கு இயேசு கூறியது; "உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5 ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, "நானே மெசியா" என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.

6 போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.

7 நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.

8 இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.

9 பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.

10 அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.

11 பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்.

12 நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.

13 ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.

14 உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.

15 "இறைவாக்கினர் தானியேல் உரைத்த, "நடுங்கவைக்கும் தீட்டு" திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். -அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.

16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.

17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.

18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.

19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!

20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.

21 ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.

22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.

23 அப்பொழுது யாராவது உங்களிடம், "இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்" எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.

24 ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.

25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.

26 ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, "அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்" என்றால் அங்கே போகாதீர்கள்; "இதோ, உள்ளறையில் இருக்கிறார்" என்றால் நம்பாதீர்கள்.

27 ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்.

28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.

29 "துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.

30 பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்.

31 அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.

32 "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.

33 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

34 இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.

36 "அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.

37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.

38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.

39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.

40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.

41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.

43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

45 "தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்?

46 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.

47 அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

48 அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு,

49 தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான்.

50 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார்.

51 அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

அதிகாரம் 25

1 "அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.

3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.

5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

6 நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்" என்ற உரத்த குரல் ஒலித்தது.

7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்" என்றார்கள்.

9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது" என்றார்கள்.

10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்" என்றார்கள்.

12 "அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது "என்றார்.

13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.

14 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.

15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.

17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.

18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ";ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்" என்றார்.

21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார்.

22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, "ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்" என்றாhர்.

23 அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார்.

24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, "ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.

25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார்.

26 அதற்கு அவருடைய தலைவர், "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?

27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார்.

28 ";எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.

29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.

30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்று அவர் கூறினார்.

31 "வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.

32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;

36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார்.

37 அதற்கு நேர்மையாளர்கள் "ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?

38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?

39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள்.

40 அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.

42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.

43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.

44 அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள்.

45 அப்பொழுது அவர், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார்.

46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

அதிகாரம் 26

1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,

2 "பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார்" என்றார்.

3 அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள்.

4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்.

5 ";ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

6 இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார்.

7 அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார்.

8 இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?

9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றார்கள்.

10 இதை அறிந்த இயேசு, "ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.

11 ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை.

12 இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்.

13 உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,

15 ";;இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.

16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.

18 இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், "எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்; "என்றார்.

19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.

21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

23 அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.

24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார்.

25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் "ரபி, நானோ?" என அவரிடம் கேட்க இயேசு, "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார்.

27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;

28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் "ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.

32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்" என்றார்.

33 அதற்குப் பேதுரு அவரிடம், "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்" என்றார்.

34 இயேசு அவரிடம், "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.

35 பேதுரு அவரிடம், "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

36 பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" என்று அவர்களிடம் கூறி,

37 பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.

38 அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

39 பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் "என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

40 அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?

41 உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.

42 மீண்டும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்" என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

43 அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.

44 அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

45 பிறகு சீடர்களிடம் வந்து, "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார்.

46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்" என்று கூறினார்.

47 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது.

48 அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49 அவன் நேராக இயேசுவிடம் சென்று, "ரபி வாழ்க" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.

50 இயேசு அவனிடம், "தோழா, எதற்காக வந்தாய்?" என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.

51 உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குரவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.

52 அப்பொழுது இயேசு அவரிடம், "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.

53 நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே.

54 அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" என்றார்.

55 அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;

56 இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன" என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.

58 பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார்.

59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.

60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.

61 அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள்.

62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?" என்று கேட்டார்.

63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார்.

64 அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

65 உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே.

66 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள்.

67 பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,

68 "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்" என்று கேட்டனர்.

69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்றார்.

70 அவரோ, "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார்.

71 அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு, "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்" என்று அங்கிருந்தோரிடம் சொன்னார்.

72 ஆனால் பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.

73 சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" என்று கூறினார்கள்.

74 அப்பொழுது அவர், "இந்த மனிதனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று.

75 அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

அதிகாரம் 27

1 பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.

2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,

4 "பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அதற்கு அவர்கள், "அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்" என்றார்கள்.

5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.

6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, "இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல" என்று சொல்லி,

7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.

8 இதனால்தான் அந்நிலம் "இரத்த நிலம்" என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

9 "இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து

10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

11 இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறினார்.

12 மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.

13 பின்பு பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்றான்.

14 அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

15 மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம்.

16 அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.

17 மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?" என்று கேட்டான்.

18 ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

19 பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினார்.

20 ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள்.

21 ஆளுநன் அவர்களைப் பார்த்து, "இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?" எனக் கேட்டான். அதற்கு அவர்கள் "பரபாவை" என்றார்கள்.

22 பிலாத்து அவர்களிடம், "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அனைவரும், "சிலுவையில் அறையும்" என்று பதிலளித்தனர்.

23 அதற்கு அவன், "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ, "சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

24 பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.

25 அதற்கு மக்கள் அனைவரும், "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்" என்று பதில் கூறினர்.

26 அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

27 ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்;

28 அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.

29 அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர்;

30 அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;

31 அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

32 அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.

33 "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா "வுக்கு வந்தார்கள்;

34 இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.

35 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;

36 பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்;

37 அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் "இவன் யூதரின் அரசனாகிய இயேசு" என்று எழுதப்பட்டிருந்தது.

38 அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.

39 அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, "கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.

40 நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.

41 அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.

42 அவர்கள், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம்.

43 கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். "நான் இறைமகன்" என்றானே!" என்று கூறினார்கள்.

44 அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.

46 மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார்.

47 அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்" என்றனர்.

48 உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.

49 மற்றவர்களோ, "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்" என்றார்கள்.

50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.

52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.

53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.

54 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, "இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள்.

55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

56 அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

57 மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.

58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.

59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,

60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

61 அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

62 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.

63 அவர்கள், "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது "மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.

64 ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்" என்றனர்.

65 அதற்குப் பிலாத்து அவர்களிடம், "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்" என்றார்.

66 அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

அதிகாரம் 28

1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.

2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.

3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.

4 அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

5 அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.

6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

7 நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார்.

8 அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

9 திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.

10 அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.

11 அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.

12 அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,

13 "நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்" எனச் சொல்லுங்கள்.

14 ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம்" என்று அவர்களிடம் கூறினார்கள்.

15 அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18 இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.