image

 

ஆண்டவருடைய பாடுகளின் வாரம்

புனித வாரம் - வியாழன்

ஆண்டவருடைய இரவு விருந்து

மாலைத் திருப்பலி

1. ஆண்டவருடைய இரவு விருந்துத் திருப்பலி மாலை வேளையில் வசதியான நேரத்தில் இறைமக்கள் அனைவருடைய முழுமையான பங்கேற்புடன் கொண்டாடப்படும். அதில் அருட்பணியாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தத்தம் பணிகளை நிறைவேற்றுவார்கள்.

2. இன்று கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலியில் ஏற்கெனவே கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி இருந்தாலும் அல்லது நம்பிக்கையாளர் நலனுக்காக வேறொரு திருப்பலி கொண்டாட வேண்டியிருந்தாலும் அருள் பணியாளர்கள் அனைவரும் மீண்டும் 'கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம்.

3. அருள் பணி நலனைக் கருதி, கோவில்களிலோ சிற்றாலயங்களிலோ மாலையில் (அவசரத் தேவையானால்) மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். ஆனால் மாலைத் திருப்பலியில் பங்கேற்க இயலாத நம்பிக்கையாளருக்காக மட்டும் காலையில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி தரலாம். எனினும், இத்தகைய கொண்டாட்டங்கள் தனிப்பட்ட ஒரு சிலரின் அல்லது தனிப்பட்ட சிறிய குழுக்களின் வசதிக்காக அமையாமலும் மாலையில் நடக்கும் திருப்பலிக்கு ஊறு விளைவிக்காமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. திருப்பலியில் மட்டும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கலாம். நோயாளிகளுக்கு இந்நாளில் எந்த நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

5. இந்நாளின் இயல்புக்கு ஏற்றவாறு பீடம் மலர்களால் எளிமையாக அணிசெய்யப்படலாம். நற்கருணைப் பேழை முழுவதும் வெறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் இன்றும் மறு நாளும் அருள்பணியாளர்களுக்கும் மக்களுக்கும் போதிய அளவு அப்பங்கள் இதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட வேண்டும்.

6. வருகைப் பல்லவி

காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும்; அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு; அவர் வழியாகவே நாம் மீட்கப்பெற்றோம்; விடுதலை அடைந்தோம்.

7. "உன்னதங்களிலே" பாடப்படும்; அப்பொழுது மணிகள் ஒலிக்கும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பில் "உன்னதங்களிலே" பாடும்வரை மணிகள் ஒலிக்காது. ஆனால் தல் ஆயா, உவக்கு ஏற்ப, மாற்று விதிகளைத் தரலாம். அதே சமயத்தில் இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடலைத் தொடரத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.

8. திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. உம்மோடு.

வாசகங்கள் : as

தியானப்பாடல் பல்லவி: திரு.பா 116 12-13, 15-16, 17-18

கடவுளைப் போற்றி கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்வதே

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு
அவரது பார்வையில் மிக மதிப்புக்கு உரியது
ஆண்டவரே நான் உண்மையாகவே உம் ஊழியன்
நான் உம் பணியாள் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றி பலி செலுத்துவேன்.
ஆண்டவராகிய உம் பெயரை தொழுவேன்
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில்
ஆண்டவரே உமக்கு என் பொருட்தனைகளை நிறைவேற்றுவேன்

 

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்
புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
என்கிறார் ஆண்டவர்

 

9. நற்செய்திப் பறைசாற்றலுக்குப்பின் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்துகின்றார். இத்திருப்பலியில் நினைவுகூரப்படுகின்ற ஆற்றல்மிகு மறைநிகழ்வுகள் - அதாவது தூய நற்கருணை, அருள்பணியாளர் திருநிலை, சகோதர அன்பு பற்றிய ஆண்டவருடைய கட்டளை - பற்றி விளக்குகின்றார்.

காலடிகளைக் கழுவுதல்

10. மறையுரை முடிந்தபின், அருள்பணி நலனை முன்னிட்டுக் காலடிகளைக் கழுவும் சடங்கை நடத்தலாம்.

11. இறைமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோரை வசதியான இடத்தில் தயார் செய்யப்பட்ட இருக்கைகளுக்குப் பணியாளர்கள் அழைத்து வருகின்றார்கள். பின்னர் அருள்பணியாளர் (தேவையானால், திருப்பலி மேலுடையை அகற்றிவிட்டு) அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, பணியாளர் துணையோடு காலடிகளின் மீது தண்ணீர் ஊற்றித் துடைக்கின்றார்.

12. இதற்கிடையில் பின்வரும் பாடல்களோ வேறு பொருத்தமான பாடல்களோ பாடப்படும்.

பல்லவி 1 காண். யோவா 13:4,5,15

பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து 
பந்தியிலே அமர்ந்திருந்தார் 
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி 
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு 
கழுவியே துடைத்து விட்டார் 
பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட 
இயேசு வந்த நேரத்திலே 
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது 
உரிமையில் கடிந்து கொண்டார் 
என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா 
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது 
பின்னரே புரிந்து கொள்வாய் 
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில் 
என்னோடு பங்கில்லை 
ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல 
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும் 
முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால் 
போதுமென்று அறியாயோ ? 
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு 
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன் 
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள் 
இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி 
நாமும் வாழ்ந்திடுவோம் 
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை 
சீடரின் தகுதியென்போம் (2) - 3 

 

ஆண்டவர் பந்தியிலிருந்து எழுந்த பின்னர்
குவளை ஒன்றில் தண்ணீர் எடுத்து,
சீடர்களின் காலடிகளைக் கழுவத் தொடங்கினார்.
இந்த முன்மாதிரியைச் சீடர்களுக்கு விட்டுச் சென்றார்.

பல்லவி 2 காண். யோவா 13:12,13,15

இயேசு தம் சீடர்களோடு இரவு விருந்து அருந்தியபின்
அவர்களுடைய காலடிகளைக் கழுவி, அவர்களிடம் கூறினார்:
ஆண்டவரும் போதகருமான நான் உங்களுக்குச் செய்தது
என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன்.

பல்லவி 3 யோவா 13:6,7,8

ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?
அதற்கு இயேசு: "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

முன் மொழி: எனவே சீமோன் பேதுருவிடம் அவர் வந்தபோது
பேதுரு அவரை நோக்கிக் கூறினார்:
- "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"

முன்மொழி: "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது,பின்னரே புரிந்து கொள்வாய்."
- "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"

பல்லவி 4 காண். யோவா: 13:14

ஆண்டவரும் போதகருமான நானே உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் மற்றவருடைய காலடிகளைக் கழுவக்
கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

பல்லவி 5 யோவா: 13:35

நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.

முன்மொழி: இயேசு தம் சீடருக்குக் கூறினார்:
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.

பல்லவி 6 யோவா: 13:34

புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்:
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போலவே
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்கிறார் ஆண்டவர்.

பல்லவி 7 1 கொரி 13:13

உங்களிடம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

முன்மொழி: இப்போது நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
- உங்களிடம் நம்பிக்கை.

13. காலடிகளைக் கழுவிய பின் அருள் பணியாளர் தம் கைகளைக் கழுவித் துடைக்கின்றார். மேலுடையை மீண்டும் அணிந்துகொண்டு தமது இருக்கைக்கு வருகின்றார். அங்கிருந்து பொது மன்றாட்டை வழிநடத்துகின்றார்.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படுவதில்லை.

நற்கருணை வழிபாடு

14. நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் அப்ப, இரசத்துடன் ஏழை மக்களுக்குப் பயன்படும் காணிக்கைகளைக் கொண்டுவரும் இறைமக்களின் பவனி இடம் பெறலாம்.

பவனியின்போது, கீழுள்ள அல்லது வேறு பொருத்தமான பாடல் பாடப்படும்.

பல்லவி:
உண்மை அன்பு எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்.

சரணம்:
கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே.
அவரில் அக்களித்திடுவோம் யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே -பல்லவி:

வாழும் இறைவனுக்கு அஞ்சிடுவோம்
அவருக்கு அன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே நாம்
ஒருவரை ஒருவர் அன்புசெய்வோம் -பல்லவி:

எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனத்தில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே -பல்லவி:

தீய சச்சரவுகள் ஒழிந்திடுக.
பிணக்குகள் எல்லாம் மறைந்திடுக
நமது நடுவில் நம் இறைவன்
கிறிஸ்து ஆண்டவர் இருந்திடுக -பல்லவி:

பேறுபெற்றோரின் கூட்டத்திலே
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா, நின்
மாட்ச்சி திருமுகம் காண்போமே -பல்லவி:

முடிவில்லாமல் என்றென்றும்
ஊழிக் காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம். - ஆமென்.

 

திருப்பலி நூலில் உள்ள வார்த்தைகள்:
பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி: கிறிஸ்துவின் அன்பு நம்மை
ஒன்றாய்ச் சேர்த்ததுவே.
அகமகிழ்வோம், அவரில் அக்களிப்போம்;
அஞ்சுவோம்; வாழும் கடவுளை அன்பு செய்வோம்;
உண்மை உள்ளத்தோடு நாம் அன்பு செய்வோம்.

பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி:
எனவே, நாம் அனைவரும்
ஒன்றாய்க் கூடுவோம்;
நமது மனதில் பிளவுபடாமல் இருக்க
விழிப்பாய் இருப்போம்.
தீய சச்சரவுகள் ஒழிக; பிணக்குகள் மறைக!
இறைவன் கிறிஸ்து நம்மிடையே இருந்திடுக.

பல்லவி:
உண்மையான அன்பு எங்குள்ளதோ
அங்கே கடவுள் இருக்கின்றார்.

முன்மொழி:
நாங்களும் ஒன்றாய்ப் புனிதருடன், கிறிஸ்து இறைவா,
மாட்சிமிகு உமது முகத்தைக் காண்போம்.
அளவில்லா மாண்புடைய மகிழ்வு
என்றென்றும் நிலைத்திருப்பதாக. ஆமென்.

15. காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

16. தொடக்கவுரை: கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்.

தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை 1 (பக்.544 ).

 

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்
நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்;
மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக
முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,
தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.
எங்களுக்காகப் பலியான அவருடைய
திரு உடலை உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.
அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம்
நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

17. உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது அதற்கு உரிய "உம்முடைய புனிதர் அனைவருடனும். . .", "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய. ...", "அவர் தாம் பாடுபடுவதற்கு. .." என்னும் மூன்று மன்றாட்டுகள் சொல்லப்படும்.

18. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: கனிவுமிக்க தந்தையே, இக்கொடைகளையும் எங்கள் காணிக்கைகளையும் புனித, மாசற்ற பலிப்பொருள்களையும்
அவர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

நீர் ஏற்று

அப்பத்தின்மீதும் திருக்கிண்ணத்தின்மீதும் ஒரு முறை சிலுவை அடையாளம் வரைந்து சொல்கின்றார்:

* ஆசி வழங்கிட உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

உமது புனித கத்தோலிக்கத் திரு அவைக்காக
இவற்றை நாங்கள் முதலில் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்;
உலகெங்கும் அதற்கு அமைதியும் பாதுகாப்பும் ஒற்றுமையும் அளித்து அதனை வழிநடத்தியருளும்.
உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . க்காகவும்
எங்கள் ஆயர் (பெயர்)* . . . க்காகவும்
* உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149-இல் குறிப்பிட்டுள்ள்வது இணையுதவி ஆயர் அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்"
திருத்தூதர் வழிவரும் உண்மையான கத்தோலிக்க நம்பிக்கையைக் கடைப்பிடிப்போர் அனைவருக்காகவும்
இக்காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கின்றோம்.

19. வாழ்வோர் நினைவு

C1: ஆண்டவரே, உம் அடியார்களாகிய (பெயர்) . . . , (பெயர்) ...
ஆகியோரையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரித்துக் தொடர்கின்றார்:

மேலும் இங்கே கூடியிருக்கும் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும்.
உம்மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இறைப்பற்றையும் நீர் அறிவீர்.
இவர்களுக்காக நாங்கள் இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
இவர்களும் தமக்காகவும் தம்மவருக்காகவும்
இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
தங்களுடைய ஆன்மாக்களின் மீட்புக்காகவும்
தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் நலவாழ்வுக்காகவும் பாதுகாப்புக்காகவும்
என்றும் வாழ்பவரும் உயிருள்ளவரும் உண்மையுள்ளவருமான கடவுளாகிய உமக்கு
இவர்கள் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துகின்றார்கள்.

20. புனிதர் நினைவு:

C2. உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள்
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காகக் கையளிக்கப்பட்ட
தூய்மைமிகு நாளைக் கொண்டாடுகின்றோம்.
முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய
அதே இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவையும்
அதே கன்னியின் கணவரான புனித யோசேப்பையும்
திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமான பேதுரு, பவுல், அந்திரேயா,
(யாக்கோபு, யோவான், தோமா, யாக்கோபு, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு,
சீமோன், ததேயு: லீனஸ், கிளீட்டஸ், கிளமெண்ட், சிக்ஸ்துஸ்,
கொர்னேலியுஸ், சிப்பிரியான், லாரன்ஸ், கிரிசோகொனுஸ்,
ஜான், பால், கோஸ்மாஸ், தமியான்) ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவுகூருகின்றோம்.
இவர்களுடைய பேறு பயன்களாலும் வேண்டல்களாலும்
நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியும்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

C: ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும்
உமது குடும்பம் முழுவதும் இக்காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
தம் உடலையும் இரத்தத்தையும் தம் சீடர்களுக்குக் கையளித்து,
அவற்றின் மறைபொருளைக் கொண்டாடுமாறு பணித்த இந்த நாளில்
இக்காணிக்கையை மன நிறைவோடு ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்:
எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியைத் தந்தருளும்.

மேலும் நிலையான அழிவிலிருந்து எங்களைக் காத்து,
உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட மந்தையில் சேர்த்தருளும்.
அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

22. பலிப்பொருள்கள் மீது அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி,
உமக்கு உரிமையுடையதாகவும் தகுதியுடையதாகவும்
உமக்கு ஏற்புடையதாகவும் உகந்ததாகவும் இருக்கச் செய்தருளும்.
இவ்வாறு உம் அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய
இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் இது மாறுவதாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

23. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

அவர் எங்கள் மீட்புக்காகவும் அனைவருடைய மீட்புக்காகவும் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள், அதாவது இன்று,
அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்கு மேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:
வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் அப்பத்தை எடுத்து,
அவர் தம் கண்களை உயர்த்துகின்றார்.
வான்நோக்கிக் கண்களை உயர்த்தி,
எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி,
ஆசி வழங்கி, அப்பத்தைப் பிட்டுத் தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.


அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின்
அதைத் திரு அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

34.அதன்பின் அவர் தொடர்கின்றார்:

அவ்வண்ணமே, இரவு விருந்து அருந்தியபின்,
அவர் திருக்கிண்ணத்தை எடுத்துப் பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:
எழில்மிகு இக்கிண்ணத்தை வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் எடுத்து,
மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி,
தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்:
இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திருமேனித துகிலமீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

25. அதன் பின் அவர் சொல்கின்றார்:

C: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.
உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வரும்வரை உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உம் சிலுவையினாலும் உயிர்ப்பினாலும்
எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

26. அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC:ஆகவே ஆண்டவரே,
உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின்
புனிதமிக்க பாடுகளையும் இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தெழுந்ததையும்
அவரது மாட்சிக்கு உரிய விண்ணேற்றத்தையும் உம் ஊழியர்களும்
உம் புனித மக்களுமாகிய நாங்கள் நினைவுகூருகின்றோம்.
நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து
நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும்
முடிவில்லா மீட்பு அளிக்கும் திருக்கிண்ணத்தையும்
தூய, புனித, மாசற்ற பலிப்பொருளாக
மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.

27. இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும்.
நீதிமானாகிய உம் ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும்
எங்கள் நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமின் பலியையும்
உம்முடைய தலைமைக் குரு மெல்கிசேதேக்
உமக்கு அளித்த காணிக்கைகளையும்
நீர் உளம் கனிந்து ஏற்றுக்கொண்டது போல,
இவற்றையும் புனிதப் பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும்.

28. அவர் தம் கைகளைக் குவித்து, சிறிது குனிந்து தொடர்கின்றார்:

எல்லாம் வல்ல இறைவா,
உம்முடைய வானதூதர் தம் திருக் கைகளால் இப்பலிப்பொருள்களை
மாண்புக்கு உரிய உமது விண்ணகத் திருப்பீடத்துக்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்.
இத்திருப் பீடத்திலிருந்து உம்முடைய திருமகனின்
புனிதமிக்க உடலையும் இரத்தத்தையும் பெறுகின்ற நாங்கள் அனைவரும்,

அவர் நிமிர்ந்து நின்று, தம்மீது சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

29. இறந்தோர் நினைவு அவர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C3: ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு
எங்களுக்கு முன் சென்று அமைதியில் துயில்கொள்ளும் (பெயர்) ... , (பெயர்) ...
ஆகிய உம் அடியார்களையும் நினைவுகூர்ந்தருளும்.

அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ
அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே, இவர்களுக்கும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவருக்கும்
ஆறுதலும் ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்தை
ஈந்திட வேண்டும் என இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
(எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)

30. அவர் வலக் கையால் தம் நெஞ்சைத் தட்டிச் சொல்கின்றார்:

C4: பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும்
அவர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:
உமது பேரிரக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம்.
உம்முடைய திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமாகிய திருமுழுக்கு யோவான்,
ஸ்தேவான், மத்தியா, பர்னபா, (இஞ்ஞாசியார், அலெக்சாண்டர்,
மார்சலீனுஸ், பீட்டர், பெலிசிட்டி, பெர்பேத்துவா, ஆகத்தா,
லூசி, ஆக்னஸ், செசிலியா, அனஸ்தாசியா) ஆகியோருடனும்
உம் புனிதர் அனைவருடனும் எங்களுக்கும் பங்களித்தருளும்.

எங்கள் தகுதியை முன்னிட்டு அன்று,
மாறாக உமது மிகுதியான மன்னிப்பால்
அப்புனிதர்களோடு நாங்களும் தோழமை கொள்ள
அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

31. மேலும் அவர் தொடர்கின்றார்

C: இவர் வழியாகவே, ஆண்டவரே,
நீர் இவற்றை எல்லாம் எப்போதும் நல்லவையாக்கி,
புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசி அளித்து எங்களுக்கு வழங்குகின்றீர்.

32. அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்:
ஆமென்.

33. வீடுகளில் நற்கருணை வாங்கவிருக்கும் நோயாளிகளுக்காக, திருத்தொண்டருக்கு அல்லது பீடத்துணைவருக்கு அல்லது பிற சிறப்புரிமைத் திருப்பணியாளருக்குப் பொருத்தமான நேரத்தில் அருள் பணியாளர் திருப்பீடத்திலிருந்து நற்கருணையை ஒப்படைக்கின்றார்.

34. திருவிருந்துப் பல்லவி

1 கொரி 11:24-25 "இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்;
புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச்
செய்யுங்கள்" என்கிறார் ஆண்டவர்.

35. நற்கருணை வழங்கிய பின், மறு நாளுக்கான திரு அப்பத்தைக் கொண்ட நற்கருணைக் கலம் பீடத்தின்மீது வைக்கப்படும். அருள்பணியாளர் நின்றுகொண்டு திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார்.


36. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

தூய்மைமிகு நற்கருணை இடமாற்றம்

37. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் பீடத்துக்கு முன் நின்று தூபக் கலத்தில் சாம்பிராணியிட்டுப் புனிதப்படுத்தி, முழங்காலிட்டு, தூய்மைமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுகின்றார். பின் வெண் தோள் துகில் அணி எழுந்து, நற்கருணைக் கலத்தைக் கையில் எடுத்து, அதை அத்துகிலின் இருமுனைகள் மூடிக்கொள்கின்றார்.

38. எரியும் திரிகளுடனும் தூபத்துடனும் தூய்மைமிகு நற்கருனை கொண்டு செல்லப்படும். கோவிலின் ஒரு பகுதியில் இதற்கென்று தயார் செய்யப்பட்டுள்ள மாற்று இடத்துக்கோ, தகுதியான விதத்தில் அணிசெய்யப்பட்டுள்ள வேறொரு சிற்றாலயத்துக்கோ கோவிலின் வழியாக நற்கருணை கொண்டு செல்லப்படுகின்றது. எரியும் திரிகளோடு உள்ள மற்ற இரு பணியாளர்கள் நடுவில் திருச்சிலுவை ஏந்திய பொது நிலைப் பணியாளர் முன்னின்று வழிநடத்துகின்ற யொளர் முன்னின்று வழிநடத்துகின்றார். எரியும் திரிகளைக் கொண்டிருப்போர் பின்தொடர்வர். புகையும் தூபக் கலத்தை ஏந்தி நிற்பவர் தூய்மைமிகு நற்கருணையைக் கொண்டு செல்லும் அருள்பணியாளர் முன் செல்வார். அவ்வேளையில் "பாடுவாய் என் நாவே" ( இறுதி இரு பத்திகள் தவிர) அல்லது வேறு நற்கருணைப் பாடல் 'பாடப்படுகின்றது.

திவ்விய நற்கருணையை இடம் மாற்றம் செய்யும்போது

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் மறைபொருளை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தூய இரத்த மறைபொருளை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தூய வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இருதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே தூய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் உடலாய் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

மாண்புயர் இவ்வருள் அடையாளத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க நம்பிக்கையின் உதவி பெறுக

தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக -ஆமென்.

 

39. நற்ருணை வைக்கப்படும் இடத்தைப் பவனி அடைந்ததும் அருள்பணியாளர் - தேவையானால் திருத்தொண்டரின் உதவியுடன் - நற்கருணைப் பேழைக்குள் நற்கருணைக் கலத்தை வைக்கின்றார். அதன் கதவு திறந்திருக்கும். பின் அவர் தூபக் கலத்துக்குள் சாம்பிராணி இடுகின்றார். முழங்காலிட்டு தூய்மைமிகு நற்கருணைக்குத் தூபம் இடுகின்றார். அப்பொழுது "மாண்புயர் அல்லது வேறு நற்கருணைப் பாடல் பாடப்படும். பிறகு திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளரே நற்கருணைப் பேழையின் கதவை மூடுகின்றார்.

திவ்ய நற்கருணை ஆராதனை

நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,
எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும்
உண்டாகக் கடவது.

 

40. சிறிது நேரம் அமைதியாக வழிபட்ட பிறகு அருள்பணியாளரும் பணியாளரும் முழங்காலிட்டு வணங்கியபின், திருப்பொருள் அறைக்குச் செல்கின்றனர்.

41. பின் பொருத்தமான நேரத்தில் பீடம் வெறுமையாக்கப்பட்டு, கூடு மானால், சிலுவைகள் எல்லாம் கோவிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகளைத் திரையிட்டு மறைப்பது பொருத்தம் ஆகும்.

42. ஆண்டவருடைய இரவு விருந்துத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் மாலைத் திருப்புகழ் சொல்வதில்லை.

43. அந்தந்த இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இரவு நேரத்தில் பொருத்தமான மற அள்வு குறித்து தூய்மைமிகு நற்கருணை முன் ஆராதனையைத் தொடர நம்பிக்கையாளர் அழைக்கப்படுகின்றனர். ஆனால் நள்ளிரவுக்குப்பின் எந்தவித ஆடம்பரமும் இன்றி ஆராதனை நடைபெற வேண்டும்.

44. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்ட அதே கோவிலில் இடம்பெறவில்லை எனில் திருப்பலி வழக்கம் போல் நிறைவடைகின்றது தூயமைமிகு நற்கருணை, நற்கருணைப் பேழையில் வைக்கப்படுகின்றது.

===========================

 

 

 

image