கத்தோலிக்கத் திருமறையிலிருந்து மாதா பக்தியை பிரிக்க முடியாது. மாதாவுக்குச் செலுத்துகிற வணக்கம் கடவுளுக்குச் செலுத்துகிற ஆராதனை அல்ல. கடவுள் ஒருவரையே ஆராதிக்க வேண்டும் (மத். 4:10). கடவுள் நம்மைப் படைத்தவர்; பராமரிக்கின்றவர்; கடைசிக் கதி என்று அங்கீகரித்து அவருக்கென்று நம்மை அடிமைப் படுத்துவதே ஆராதனை ஆகும். உதாரணமாக "இதோஆண்டவருடைய அடிமை" என்று மரியாள் உரைத்தது ஆராதனைதச் செயல் (லூக்.1:38)

கடவுளுக்கு ஆராதனையும், புனிதர்களுக்கு வணக்கமும், மாதாவுக்கு மேலா வணக்கமும் செலுத்தவேண்டுமென்பதே திருச்சபையின் போதனை.

மரியாள் இயேசுவைப் பெற்றதினால் மாத்திரமல்ல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு பணிந்து அதை இயேசுவின் தலைசிறந்த சீடராகவும் அத்துடன் தாயாகவும் இருக்கிறாள். "இதோ உன் தாய்" (யோவான் 19:27). அதோடு அன்னை கன்னிமரியாள், மீட்பரின் தாயாகத் தேர்ந்துகொள்ளப்பட்டதாலும், எந்த நபரும் பெற இயலாத மகிமையைக் கடவுளிடமிருந்தே பெற்றிருப்பதாலும், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட எந்த இறைவாக்கினரும், புனிதரும் கடவுளோடு, கடவுளின் மகனோடு இத்துணை ஐக்கியம் பெற்றதில்லை என்பதாலும் நாம் மரியாளுக்குச் சிறப்பு வணக்கம் செலுத்துகிறோம் (லூக். 1:48)

மரியா ஒரு சாதார்ண பெண். அவருக்கு இவ்வளவு வணக்கம் தேவையா? என்ற கேள்வி எழலாம்.

திருவிவிலியத்தில் அன்னை கன்னிமரியாள்:
தொடக்கநூல் 3:15 "உனக்கும்(பாம்பு) பெண்ணுக்கும்(கன்னி மரியாள்), உன் வித்துக்கும்(பாம்பு) அவள்(கன்னிமரியாள்) வித்துக்கும்(இயேசு) பகையை உண்டாக்குவேன். அவள் வித்து(இயேசு) உன்(பாம்பு) தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார். இவ்வாறு கடவுள் உலகத்தைப் படைக்கும்போதே அன்னை கன்னிமரியாளை உலக மாந்தரின் மீட்பரை தாங்க கன்னி மரியாளை மனத்தில் கொண்டிருந்தார்

எசாயா 7:14 "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்." என்னும் இறைவாக்கின் வழியாக அன்னை கன்னிமரியாளை இறைவாக்கினர் எசாயா சுட்டிக் காட்டுகிறார்.

ஆபிராகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என்று பெயர் சொல்லி அழைக்கும் இறைவன், அதிதூதர் கபிரியேல் வழியாக அன்னையை "அருள் நிறைந்தவளே வாழ்க" (புதிய மொழிபெயற்பு: "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க") (லூக் 1:28) என்று அவரை வாழ்துவது அன்னைக்குக் கடவுள் சிறப்பிடம் கொடுக்கவில்லையா?

கன்னிமரியாள் இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் "இதோ எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே" (லூக். 1:48) என்று இறைவாக்காக அன்று கன்னிமரியாள் உரைத்திருக்கின்றார் அல்லவா!

"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று எலிசபெத்தம்மாள் அன்னையை வாழ்த்துவது சிறப்பான ஒன்று.

"என் ஆண்டவரின் தாய்" என்னிடம் வர நான் யார்? (லூக். 1:43) என்று எலிசபெத்தம்மாள் உரைத்து அன்னைக்குச் சிறப்பு வணக்கம் செய்கிறார்

"இதோ உன் தாய்" (யோவான் 19:17) என்று இயேசு யோவானைப் பார்த்து கூறியது யோவானின் பெற்ற தாய் இருக்கையில் ஆன்மீக வாழ்வில் கன்னிமரியாளைத் தாயாக இயேசு யோவானுக்குத் தந்தார். அந்தத் தாய் இயேசுவின் தாயாக இருந்தது போல் கிறிஸ்துவின் உறுப்புகளாகிய நமக்கும் இயல்பாகவே தாயாக இருக்கின்றார்கள். ஒரு சாதார்ண மனிதன் தன் தாய்க்கு காட்டும் மரியாதையை இயேசுவின் தாய்க்கு பலமடங்காக நாம் காட்டுவது மிகச் சிறந்தது.

ஒருசிலர் தேவ அன்னை மீது கொண்ட உணர்ச்சிப் பூர்வமான பாசத்தினாலோ, ஆராதனையின் நடுநாயகமான இயேசுவை நினையாத சூழ்நிலை ஏற்பட்டால், அது போதிய தெளிவு இல்லாத நிலை. அது தவிர்க்கப்பட வேண்டும்.

இன்றைய நடைமுறை பக்தி:

மாதா பக்தி முயற்சிகள் சரியான பாதையில் செல்கின்றனவா? இறையன்பிலும் பிறர் அன்பிலும் வளர உதவுகின்றனவா? மனிதர் மனிதராக வாழ மாதா பக்தி வழிகாட்டுகிறதா? இவையெல்லாம் சிந்திக்கப்படவேண்டியவை. இன்று நாம் மரியன்னையை விண்ணிலிருந்து வரங்களை அள்ளி வீசும் வள்ளளாகக் காண்கின்றோம். அவருடைய திருஉருவங்களுக்கு அலங்கார சேலைகள் கட்டிப்பார்க்க வேண்டிய அதிசயப் பெண்ணாக, விண்ணக தேவதையாகக் காண்கிறோம். கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிராக எந்தத் தவறுகள் செய்தாலும், அநீதி, பொய்மை, லஞ்சம், ஊழல் இவற்றில் ஊறியிருந்தாலும் அன்னையின் திருத்தலம் சென்று காணிக்கை செலுத்தி வந்தால் போதும், எதுவும் செய்யலாம் என்ற மனதுடன் வாழ்வது சரியல்ல. இவையெல்லாம் மரியாள் மீது கொண்டுள்ள உண்மை பக்தி அல்ல.

அன்னை கன்னி மரியாவை வானத்தில் உயத்தி வைத்து வாழ்த்தி வணங்குவதுடன் நின்றுவிடாது வாழ்வுப் பயணத்தில் நம்பிக்கையின் உயர் மாதிரியாக நம்முடன் பயணிக்கும் அவரது கையைப் பற்றி, இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழவும் செயல்படவும் முயற்சி செய்வோம்.

இந்த பகுதியில் அன்னை கன்னி மரியாளை பற்றிய சிந்தனைகளை தரும் அருட்பணி. பென்சிகர்
லூஷன்
(தூத்துக்குடி மறைமாவட்டம்) அவர்களுக்கு நன்றி.

- அருள்பணி. மரியதாஸ் லிப்டன்