image

திருப்பலியின் அமைப்பு முறை

இறைமக்கள் பகுதி

அணியமாக்கல்: தமிழ்நாடு திருவழிபாட்டுப் பணிக்குழு
முப்பணி (விவிலியம், மறைக்கல்வி, வழிபாடு) மையம். திண்டிவனம்

as

தொடக்கச் சடங்குகள்:

அருட் பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

எல்லோரும்: ஆமென்.

அருட் பணியாளர்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்லோரும்:உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

(அல்லது)

அருட் பணியாளர்: நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தவிடமிருந்தும் அருளும், அமைதியும் உங்களோடு இருப்பதாக.

எல்லோரும்:உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

(அல்லது)

அருட் பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பராக.

எல்லோரும்:உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

(அருள்பணியாளர் மக்களை வரவேற்று சில சிந்தனைகளைக் கூறுவார். பின்னர் மன்னிப்பு வழிபாடு தொடரும்.)

மன்னிப்பு வழிபாடு:

(கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவூட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்பணியாளர் தண்ணீரை மந்திரித்துத் தெளிக்கிறார்.)

அருட் பணியாளர்: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நம் திருமுழுக்கின் நினைவாக நம்மீது தெளிக்கப்படும் தமது படைப்பாகிய இத்தண்ணீரைப் புனிதப்படுத்தி அருளுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோமாக. அவரே நமக்கு உதவி அளித்து நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவிக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க அருள்வாராக.

(சற்று நேர மௌனத்துக்குப் பின்)

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, வாழ்வின் ஊற்றும், தூய்மையின் தொடக்கமுமான தண்ணீரின் வழியாக மக்கள் புனிதம் அடைந்து நிலைவாழ்வின் கொடையைப் பெறவேண்டுமென்று திருவுளமானீர்; இத்தண்ணீரைப் X புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: ஆண்டவரே, உமது நாளாகிய இன்று உமது அருள்காவலைப் பெற விரும்புகின்றோம். வாழ்வு அளிக்கும் உமது அருளின் ஊற்றினை எம்மில் புதுப்பித்தருளும். இத்தண்ணீரினால் எங்கள் உள்ளத்தையும் உடலையும் தீமை அனைத்திலிருந்தும் காத்தருள்வீராக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்துடன் உம்மை அணுகிவரவும் உமது மீட்பைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அல்லது

ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உடல், ஆன்ம வாழ்வு அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமும் நீரே. இத்தண்ணீரைப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எல்லா நோய்களையும் மாற்றானின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து உமது அருளின் பாதுகாப்பை அடையவும் நாங்கள் இத்தண்ணீரை நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றோம். ஆண்டவரே, உமது இரக்கத்தின் உதவியால் உயிருள்ள தண்ணீர் எங்களில் பொங்கி எழுந்து மீட்பு அளிப்பதாக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்தோடு உம்மை அணுகிவந்து எங்கள் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வரும் இடர்கள் அனைத்தையும் விலக்குவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அல்லது, பாஸ்கா காலத்தில்:

ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களின் வேண்டல்களைக் கனிவாய்க் கேட்டருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் என்றும் அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் என்றும் நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர்மீது உமது X ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும். ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும் எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்; உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்; எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்; பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர். அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்; இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப் பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப் புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர். ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக. பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு நாங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்லோரும்: ஆமென்.

(தீருநீரில் உப்பைக் கலக்க விரும்பினால்)

எல்லாம் வல்ல இறைவா, தண்ணீர் வளம் பெற அதில் உப்பிட வேண்டுமென்று இறைவாக்கினர் எலிசா வழியாகக் கற்பித்தீர். உமது படைப்புப் பொருளாகிய இந்த உப்பைப் பரிவிரக்கத்துடன் X புனிதப்படுத்தியருள உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: ஆண்டவரே, உப்புக் கலந்த தண்ணீர் தெளிக்கப்படும் இடம் எல்லாம் தீயோனின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்வீராக. உம் தூய ஆவியார் உடனிருந்து எங்களை இடையறாது காத்தருள்வார எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

(அருள்பணியாளர் திருநீரைத் தெளிக்கும்போது கீழ்கண்ட பாடலைப் பாடுவோம்.)

(பாஸ்கா ஞாயிற்றுக் கிழமைகளில்)

கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயா;
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
தந்தையும் மகனும் தூயஆவியாரும் மாட்சியும் புகழும் ஒன்றாய் பெறுக
தொடக்கத்தில் இருந்ததுபோல் இன்றும் என்றும் என்றென்றும் - ஆமென்

கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயா; 
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ 
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.

((மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில்)

ஆண்டவரே, ஈசோப் புல்லினால்
என்மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன்.
நீரே என்னைக் கழுவ
நானும் உறைபனிதனிலும் வெண்மையாவேன்.

இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப
என்மேல் இரக்கம் கொள்வீர்.
தந்தையும் மகனும் தூய ஆவியாரும்
மாட்சியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
தொடக்கத்தில் இருந்தது போல
இன்றும் என்றும் என்றென்றும் – ஆமென்.

சாதாரண நாள்களில்:

அருட் பணியாளர்: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அனைவரும் சேர்ந்து பொதுப் பாவ அறிக்கையினைச் சொல்கின்றனர்:

எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.

மார்பில் தட்டிக்கொண்டு அவர்கள் சொல்கின்றனர்:

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.

மீண்டும் தொடர்ந்து சொல்கின்றனர்:

ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

அருட் பணியாளர்: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

எல்லோரும்: ஆமென்.

 

அருட் பணியாளர்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அருட் பணியாளர்:: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

அருட் பணியாளர்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

(அல்லது)

அருட் பணியாளர்: சகோதரரே,திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
(சிறிது மெனத்திற்கு பிறகு)

அருட் பணியாளர்: உள்ளம் நொறுங்கி வருந்துவோரைக் குணமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அருட் பணியாளர்: பாவிகளைத் தேடி மீட்க வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

அருட் பணியாளர்: தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.

எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:


உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக!
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக!
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா! வானுலக அரசரே!
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா! ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே!
இயேசு கிறிஸ்துவே! ஆண்டவராகிய இறைவா!
இறைவனின் செம்மறியே! தந்தையின் திருமகனே!
உலகின் பாவங்களைப் போக்குபவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உலகின் பாவங்களைப் போக்குபவரே! எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்!
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே! எங்கள் மேல் இரக்கமாயிரும்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே! நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.
ஆமென்!

(பாடல் திருப்பலியில்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!
தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.
ஆமென்.

திருக்குழும மன்றாட்டு:

அருட் பணியாளர்: மன்றாடுவோமாக.
(அருள்பணியாளர் அந்த நாளுக்குத் தகுந்தவாறு ஒரு செபத்தைச் சொல்லுவார்) 

இறைவா, நன்மையானவை அனைத்தும் உம்மிடமிருந்தே வருகின்றன; இவ்வாறு உமது ஏவுதலினால் நாங்கள் சரியானவற்றை உணரவும் உமது வழிநடத்துதலால் அவற்றையே நாங்கள் நிறைவேற்றவும் உம்மை வேண்டுவோருக்குக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்லோரும்: ஆமென்.

இறை வார்த்தை அறிவிப்பு:

முதல் வாசகம்:

(அனைவரும் அமைதியோடு அமர்ந்து பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினைக் கேட்போம். அதன் முடிவில்…)

முதல்வர்: ஆண்டவரின் அருள்வாக்கு!

எல்லோரும்: இறைவனுக்கு நன்றி!

பதிலுரைப் பாடல்:

(திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்படும் பகுதியை பாடகரும் மக்களுமாக மாறி மாறிப் பாடவும்.)

இரண்டாம் வாசகம்:

(அனைவரும் அமைதியோடு அமர்ந்து புதிய ஏற்பாட்டின் இறைவாக்கினைக் கேட்போம். அதன் முடிவில்…)

முதல்வர்: ஆண்டவரின் அருள்வாக்கு!

எல்லோரும்: இறைவனுக்கு நன்றி!

நற்செய்தி வாழ்தொலி:

அல்லேலூயா அல்லது ஒழுங்குமுறைக்கு ஏற்றவாறு வேறொரு இறை வார்த்தை பாடலாக பாடப்படுகின்றது.

நற்செய்தி அறிவிப்பு

திருத்தொண்டர் : தந்தையே ஆசி வழங்கும்:

அருட் பணியாளர்:தமது நற்செய்தியைத் தகுதியுடனும் முறையாகவும் நீர் அறிவிக்குமாறு, ஆண்டவர் உம் இதயத்திலும் உதடுகளிலும் இருப்பாராக. தந்தை மகன் தூயய ஆவியாரின் பெயராலே.

திருத்தொண்டர் : ஆமென்

திருத்தொண்டர் இல்லாவிடில், அருள்பணியாளர் பீடத்தின் முன் தலை வணங்கி, அமைந்த குரலில் சொல்கிறார்:

அருட் பணியாளர்: எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியைத் தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும்.

அருட் பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அருட் பணியாளர்: மத்தேயு / மாற்கு / லூக்கா / யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.

எல்லோரும்: ஆண்டவரே, மாட்சி உமக்கே.

(அந்த நாளுக்குத் தகுந்தபடி நற்செய்தி வாசிக்கப்படும். அதன் முடிவில்…)

அருட் பணியாளர்: ஆண்டவரின் அருள்வாக்கு

எல்லோரும்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்!

 

மறையுரை:

(வாசிக்கப்பட்ட இறை வார்த்தைகளுக்கு ஏற்ப அருள்பணியாளர் மறையுரை ஆற்றுவார். மறையுரை முடிந்ததும், மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)

நம்பிக்கை அறிக்கை: ( நீசே - கான்ஸ்டான்டிநோபிள்)

(ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும்):
ஒரே கடவுளை நம்புகிறேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை,
யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார்.
(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.

மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.
ஆமென்.

(பாடல் திருப்பலியில்):
விண்ணையும் மண்ணையும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
தந்தை, மகன், தூய ஆவியராய் ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன்.
தூய ஆவியின் வல்லமையால் இறை மகன் நமக்காய் மனிதரானார்.
கன்னி மரியிடம் பிறந்தவராம் இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார். சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்.
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.
விண்ணகம் வாழும் தந்தையிடம் அரியணைக் கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
தூய ஆவியாரை நம்புகிறேன். பாரினில் அவர் துணை வேண்டுகிறேன்.
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.
திரு அவை உரைப்பதை நம்புகிறேன். புனிதர்கள் உறவை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை உறுதியுடனே நம்புகிறேன்.
ஆமென்.

நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு:

(அருள்பணியாளர் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறு செபம் மூலமாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கிறார். பின்னர் இறைமக்கள் சிலரோ அல்லது இறைமக்கள் சார்பாக ஒருவர் சில விண்ணப்பங்களை வாசிக்க இறை மக்கள் அனைவரும் பதிலுரையாக “எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.” என்று சொல்லவும்.)

முதல் மன்றாட்டு நமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார் ஆகிய அனைவருக்காகவும்,
இரண்டாம் மன்றாட்டு நமது நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவருக்காகவும்,
மூன்றாம் மன்றாட்டு பங்கு மக்களுக்காகவும், குடும்பங்களுக்காகவும், பெற்றோர்கள், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவருக்காகவும்,
நான்காம் மன்றாட்டு குறிப்பிட்ட சில கருத்துகளுக்காகவும்,
ஐந்தாம் மன்றாட்டு மற்ற கருத்துகளுக்காகவும் மன்றாடுவோமாக.


(பின்னர் அருள்பணியாளர் நமது விண்ணப்பங்களை கடவுளிடம் சமர்ப்பித்து செபம் சொல்லுவார்)


2. நற்கருணை வழிபாடு:

காணிக்கைப் பாடல்/பவனி:

(மக்கள் காணிக்கைப் பொருட்களைச் சேகரிக்கும் போதும், பீடத்துக்கு எடுத்துச் செல்லும் போதும் காணிக்கைப் பாடலை பாடுகின்றனர்.)

((அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)

அருட் பணியாளர்: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.

எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(அருட் பணியாளர்: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்குகொள்ளத் திருவுளமானார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக..)

((இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)

அருட் பணியாளர்:ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.

எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(அருள்பணியாளர் தலைகுனிந்து: ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறைவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.
(அருள்பணியாளர் கைகளைக் கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)

அருட் பணியாளர்: சகோதர சகோதரிகளே! என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.

எல்லோரும்: : ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மீது மன்றாட்டு:

(அந்த நாளுக்குத் தகுந்தபடி அருள்பணியாளர் ஒரு செபத்தைச் சொல்லுவார்.)

அருட் பணியாளர்: ஆண்டவரே, இரக்கத்துடன் எங்கள் பணியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாகி எங்கள் அன்பை வளர்ப்பதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்லோரும்: ஆமென்.

பொது தொடக்கவுரை
கிறிஸ்து வழியாக மீட்பு

அருட் பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அருட் பணியாளர்: இதயங்களை மேலே எழுப்புங்கள்.

எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

அருட் பணியாளர்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்துவில் அனைத்தையும் புதுப்பிக்கவும்
அவருடைய நிறைவில் நாங்கள் அனைவரும்
பங்குபெறவும் நீர் திருவுளமானீர்; 
ஏனெனில் கடவுள் வடிவில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி,
சிலுவையில் சிந்திய தமது இரத்தத்தால்
யாவும் அமைதி பெறச் செய்தார்.
எனவே அவர் அனைத்துக்கும் மேலாக உயர்த்தப்பட்டு,
தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் நிலையான மீட்பின் காரணரானார்.

ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும்
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும்
வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து 
நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
(அந்த நாளுக்குத் தகுந்தபடி அருள்பணியாளர் ஒரு புகழுரையைச் சொல்லுவார். அதன் முடிவில்…)

(மக்கள் அனைவரும்:
தூயவர் தூயவர் தூயவர்! வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசன்னா! உன்னதங்களிலே ஓசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே.
உன்னதங்களிலே ஓசன்னா! உன்னதங்களிலே ஓசன்னா!

நற்கருணை மன்றாட்டு : 2

அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று.

அவர் தம் கைகளைக் குவித்து, பின் பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்து, அப்பத்தின் மீதும் திருக்கிண்ணத்தின்மீதும் ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
உடலும் * இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்தபோது

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;

ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின் அதைத் திரு
அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார். அதன்பின் அவர் தொடர்கின்றார்:

CC: அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;

ஏனெனில் இது புதிய, நிலையான

உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.

இது பாவ மன்னிப்புக்கென்று

உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.

இதை என் நினைவாகச் செய்யுங்கள்.


அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திருமேனிக் துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.
அதன்பின் அவர் சொல்கின்றார்:

அருட் பணியாளர்: நம்பிக்கையின் மறைபொருள்!

பதிலுரை 1;
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும்
உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்,
உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அல்லது பதிலுரை 2;
எல்லோரும்: ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது பதிலுரை 3;
எல்லோரும்: ஆண்டவரே, உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே!

அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே,
நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து,
வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; 
எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத்
தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என 
உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.

C1: ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும்
உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும்.
எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . , எங்கள் ஆயர் (பெயர்)* ...
எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும்
உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.

இறந்தோருக்கான திருப்பலியில் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர் (இன்று) இவ்வுலகிலிருந்து 
உம்மிடம் அழைத்துக்கொண்ட (பெயர்) ... என்னும்
உம் அடியாரை நினைவுகூர்ந்தருளும்.
உம் திருமகனோடு அவரது இறப்பில் இணைக்கப்பட்டிருந்த இவர்
உயிர்ப்பிலும் அவரைப் போல இருக்கச் செய்தருளும்.

C2: மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும்
எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து,
உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும்.
எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும்.
கடவுளின் கன்னித் தாயான புனித மரியா,
அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள்,
இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய
புனிதர் அனைவருடனும்
நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று,

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக
உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

(அல்லது) ===========================

நற்கருணை மன்றாட்டு 3

அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்,
உம்முடைய படைப்புகள் எல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே.
ஏனெனில் உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக 
தூய ஆவியாரின் செயலாற்றலால்
அனைத்தையும் உய்வித்துத் தூய்மைப்படுத்துகின்றீர்.
கதிரவன் தோன்றி மறையும்வரை 
உமது பெயருக்குத் தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு
உமக்கென மக்களை இடையறாது ஒன்றுசேர்த்து வருகின்றீர்.

109. அவர் தம் கைகளைக் குவித்து, பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

CC: எனவே ஆண்டவரே, உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை அதே ஆவியால் தூய்மைப்படுத்த உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்து, அப்பத்தின்மீதும் திருக்கிண்ணத்தின் மீதும் ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

இவ்வாறு உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் * இரத்தமாகவும் இவை மாறுவனவாக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

அவர் பணித்தவாறே இம்மறைநிகழ்வுகளைக் கொண்டாடுகின்றோம்.

110. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

CC: ஏனெனில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;

ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின் அதைத் திரு அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார். அதன்பின் அவர் தொடர்கின்றார்:

அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டு தொடர்கின்றார்:

கிண்ணத்தையும் எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைத் தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;

ஏனெனில் இது புதிய, நிலையான

உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.

இது பாவ மன்னிப்புக்கென்று

உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.

இதை என் நினைவாகச் செய்யுங்கள்.


அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திருமேனிக் துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.
அதன்பின் அவர் சொல்கின்றார்:

C: அருட் பணியாளர்: நம்பிக்கையின் மறைபொருள்!நம்பிக்கையின் மறைபொருள்.

மக்கள் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:

பதிலுரை 1;
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும்
உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்,
உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அல்லது பதிலுரை 2;
எல்லோரும்: ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம்
நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது பதிலுரை 3;
எல்லோரும்: ஆண்டவரே, உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே!

அதன்பின், அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: ஆகவே ஆண்டவரே,
உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும்
வியப்புக்கு உரிய உயிர்ப்பையும் விண்ணேற்றத்தையும்
நாங்கள் நினைவுகூருகின்றோம்.
இவர் மீண்டும் வருவார் என எதிர்பார்த்திருக்கும் நாங்கள்
இப்புனிதமான உயிருள்ள பலியை நன்றி செலுத்தி உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திரு அவையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள
உம்மை மன்றாடுகின்றோம்;
இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர்;
இவ்வாறு உம்முடைய திருமகனின் திரு உடல்,
திரு இரத்தத்தால் ஊட்டம் பெறும் நாங்கள்,
அவருடைய தாய ஆவியால் நிரப்பப்பெற்று,
கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும்
உடையவராக விளங்கச் செய்வீராக.

C1: இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக.
இவ்வாறு உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களோடு,
முதன்முதலாக, புனிதமிக்க கன்னியும் கடவுளின் தாயுமான மரியா,
அவருடைய கணவரான புனித யோசேப்பு,
புனித திருத்தூதர்கள், மாட்சிமிகு மறைச்சாட்சியர்,
(இன்று நாங்கள் கொண்டாடும் புனித (பெயர்) . . . /அல்லது
எங்கள் பாதுகாவலராகிய புனித (பெயர்) ...)
மற்ற புனிதர்கள் அனைவரோடும்
நாங்கள் உரிமைப் பேற்றுக்குத் தகுதியுடையோர் ஆவோமாக.
இவர்களின் வேண்டுதலால் நாங்கள் என்றும்
உமது உதவியைப் பெறுவோம் என உறுதியோடு இருக்கின்றோம்.

C2: ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி 
உலகுக்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்.
இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை,
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ,
எங்கள் ஆயர் (பெயர்)* . . . , ஏனைய ஆயர்கள், திருநிலையினர்,
உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரையும்
நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக.

நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற
இக்குடும்பத்தின் வேண்டல்களுக்குக் கனிவுடன் செவிசாய்த்தருளும்.
கனிவுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக்
கனிவுடன் உம்மோடு சேர்த்துக்கொள்ளும்.

C3: இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து
இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது ஆட்சியில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் அங்கு வந்து சேர்ந்து,
அவர்களோடு உமது மாட்சியால் என்றும் மன நிறைவு அடைவோம் என

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எதிர்நோக்கியிருக்கின்றோம்.
இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

===================

அவர் திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

அருட் பணியாளர்: இவர் வழியாக, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

எல்லோரும்: ஆர்ப்பரிக்கின்றார்கள்: ஆமென். ஆமென் ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

அருட் பணியாளர்: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அருட் பணியாளர்: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து,
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

எல்லோரும்: ஏனெனில், ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் தெளிவான குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்.
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று
உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே;
எங்கள் பாவங்களைப் பாராமல்,
உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி,
உமது திருவுளத்துக்கு ஏற்ப
அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.

என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்லோரும்: ஆமென்.

அருட் பணியாளர்: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

அருட் பணியாளர்: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.

((அருள்பணியாளர் அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எம் மேல் இரக்கம் வையும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எம் மேல் இரக்கம் வையும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எமக்கு அமைதி அருளும்.

பின்பு அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து அமைந்த குரலில் சொல்கின்றார்.

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, உயிருள்ள இறைவனின் திருமகனே, தந்தையின் திருவுளப்படி, தூய ஆவியாரின் ஒத்துழைப்பால் உமது இறப்பின் வழியாக உலகுக்கு வாழ்வு அளித்தீர். இந்தப் புனிதமிக்க உம் உடலாலும் இரத்தத்தாலும் என்னுடைய எல்லாக் குற்றங்களிலிருந்தும் தீமை அனைத்திலிருந்தும் என்னை விடுவித்து, நான் என்றும் உம்முடைய கட்டளைகளில் கருத்தூன்றி நிற்கச் செய்தருளும். நான் ஒருபோதும் உம்மை விட்டுப் பிரிய விடாதேயும்.

அல்லது

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் உம் திரு உடலும் திரு இரத்தமும் என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல், உமது பரிவிரக்கத்தால் என் மனதுக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பனவாக.

அருட் பணியாளர்: இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்!

எல்லோரும்: ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா நலம் அடையும்.

அருள்பணியாளர் பலிப்பீடப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக. (அவர் கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் உட்கொள்கின்றார்.)

பின்பு, அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக. (அவர் கிறிஸ்துவின் திரு இரத்தத்தை வணக்கத்துடன் உட்கொள்கின்றார்.)

1பின்பு அருள்பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டை அல்லது நற்கருணைக் கலத்தை எடுத்துக்கொண்டு நற்கருணை உட்கொள்வோரை நோக்கிச் சென்று, ஒவ்வொருவருக்கும் திரு அப்பத்தைச் சற்று உயர்த்திக்காட்டிச் சொல்கின்றார்:

அருட் பணியாளர்: கிறிஸ்துவின் திரு உடல்.

நன்மை வாங்குபவர்: ஆமென்.

திருவிருந்து பாடல்:

(அருள்பணியாளர் அனைவருக்கும் நற்கருணை வழங்கிக்கொண்டிருக்கும்போது பொருத்தமான பாடலைப் பாடலாம். பின்னர் சிறிது நேரம் மௌனம் காத்து, நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக. அதன் முடிவில்…)


கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே என்னை எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.

கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.

தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். ஆமென்.

 

திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு:

அருட் பணியாளர்: மன்றாடுவோமாக:
(அருள்பணியாளர் அந்த நாளுக்குத் தகுந்தவாறு ஒரு நன்றி செபத்தைச் சொல்லுவார்)

ஆண்டவரே, நலம் அளிக்கும் உமது செயல் எங்களைத் தீய நாட்டங்களிலிருந்து விடுவிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்களை நேரிய வழியில் நடத்திச் செல்லக் கனிவுடன் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்லோரும்: ஆமென்.

வாழ்த்தும் ஆசீரும்.:

அருட் பணியாளர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அருட் பணியாளர்: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!

எல்லோரும்: ஆமென்.

அருட் பணியாளர்: சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.

எல்லோரும்: இறைவனுக்கு நன்றி!

ஆயர் திருப்பலியில்

ஆயர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக

ஆயர் : ஆண்டவருடைய பெயர் போற்றப்படுவதாக

எல்.: இன்றும் என்றும் போற்றப்படுவதாக

ஆயர் : ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு

எல்.: அவரே விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர்

ஆயர் : எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக

எல்.: ஆமென்

அ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று

எல்.: இறைவனுக்கு நன்றி

இறுதிப் பாடல்:

(அருள்பணியாளர் திருப்பீட வணக்கம் செய்து தம் பரிசாரகருடன் திரும்பிச் செல்கிறார். பொருத்தமான இறுதிப் பாடலைப் பாடலாம். பின்னர் நாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய நம் இல்லம் செல்வோம்.)

=============================

மூவேளை மன்றாட்டு
முதல்வர்: ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார்
அனைவரும்: மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்
முதல்வர்: அருள் நிறைந்த மரியே.. அனைவரும்: புனித மரியே....

முதல்வர்: இதோ ஆண்டவரின் அடிமை.
அனைவரும்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். - அருள் நிறைந்த மரியே..
முதல்வர்: அருள் நிறைந்த மரியே.. அனைவரும்: புனித மரியே....

முதல்வர்: வாக்கு மனிதர் ஆனார்.
அனைவரும்: நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறைந்த மரியே..
முதல்வர்: அருள் நிறைந்த மரியே.. அனைவரும்: புனித மரியே....

முதல்வர்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
அனைவரும்: இறைவனின் புனித அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதல்வர்: மன்றாடுவோமாக
அனைவரும்: இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழி
யாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் /
நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்

பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு
முதல். : விண்ணக அரசியே மனம் களிகூறும். அனை. : அல்லேலூயா.
முதல். : ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். அனை. : அல்லேலூயா.
முதல். : தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அனை. : அல்லேலூயா.
முதல். : எங்களுககாக இறைவனை மன்றாடும். அனை. : அல்லேலூயா.
முதல். : கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அனை. : அல்லேலூயா.
முதல். : ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அனை. : அல்லேலூயா.

முதல். : மன்றாடுவோமாக
அனை. : இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! /அவருடைய
அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு
மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்

=====================

செபமாலை சொல்ல உதவும் இறைவேண்டல்கள்:

திருச்சிலுவை அடையாளத்தினாலே, தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். எங்கள் இறைவா,
தந்தை, மகன், தூய ஆவியார் பெயராலே - ஆமென்.

தூய ஆவியார் செபம்:
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத ஆறுதல் ஆனவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மைத் தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை. நல்லது அவனில் எதுவும் இல்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும், உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே.
எல். : ஆமென்.

செபமாலையின் தொடக்க செபம்:
முதல்.: எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனிதரும், நன்றி இல்லாதப் பாவிகளுமாய் இருக்கிற எங்கள் மீது, அளவில்லாத மாட்சி கொண்டிருக்கின்ற உம்முடைய திருச்சந்நிதியிலே இருந்து செபம் செய்யத் தகுதி அற்றவர்களாய் இருந்தாலும், அளவில்லாத இரக்கத்தை நம்பிக் கொண்டு, உமது மாட்சிக்காகவும், அன்னை மரியாவின் புகழ்ச்சிக்காகவும் ஐம்பத்து மூன்று மணி செபமாலை தொடுக்க ஆவலாய் இருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடு செய்து, எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் முடிக்க உம்முடைய அருளை எங்களுக்குத் தந்தருளும்.
எல். : ஆமென்

முதல்.: எல்லாவற்றுக்கும் மேலாக நமது நம்பிக்கை மட்டுமே நமக்கு அடித்தளமாக இருப்பதால், நாம் நமது நம்பிக்கையை அறிக்கை செய்வோம்.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை:
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
சிலுவையில் அறையப்பட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள்
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையாகிய
கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும்
தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகிறேன்.
புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென்.

இயேசு கற்றுக்கொடுத்த செபம்:
முதல்: உண்மையான இறைவனும் உண்மையான மனிதனுமாய் இருக்கிற இயேசு கிறிஸ்து கற்றுத் தந்த செபத்தை அனைவரும் சேர்ந்து சொல்லுவோம்.

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.

மங்கள வார்த்தை செபம் :
முதல். : தூய கன்னியாய் இருக்கிற நம் இறை அன்னையின் முக்கியமான மகிமையைக் குறித்து மூன்று முக்கியமான பேறுபலன்களைப் பெற அவரிடம் மன்றாடுவோம்.

அருள் நிறைந்த மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.

புனித மரியே இறைவனின் தாயே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக் கொள்ளும் - ஆமென்

முதல். : திருமகனாம் இறைவனுக்குத் தாயாக இருக்கும் தூய கன்னி மரியாவே, எங்களிடம் நம்பிக்கை வளர்ந்து பலன் அளிக்கும்படி உம் திருமகனிடம் எங்களுக்காக மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க...

முதல். : தூய ஆவியாராம் இறைவனுக்கு மிகவும் பிரியமுள்ளவராக இருக்கும் தூய கன்னி மரியாவே, எங்களிடம் பக்தி வளர்ந்து பலன் அளிக்கும்படி உம் திருமகனிடம் எங்களுக்காக மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க...

மூவொறு இறைவனுக்குப் புகழ்:
முதல். : தந்தைக்கும், மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக
எல். : தொடக்கத்தில் இருந்தது போல
இப்போதும், எப்போழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்

ஒவ்வொறு மறைஉண்மை முடிவிலும் பாத்திமா அன்னையின் செபம்:
எல். : ஓ, என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும்
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்,
உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ,
அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

நான்கு மறை உண்மைகள்

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்: (திங்கள், சனி)
1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக!
2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!
4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக!

துயர் மறை உண்மைகள்: ( செவ்வாய், வெள்ளி)
1. இயேசு பூங்காவனத்தில் இரத்தம் வியர்த்ததைத் தியானித்து துன்பங்களை ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்கள், தாழ்ச்சி இவற்றை திடமனத்துடன் ஏற்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!
4. இயேசு சிலுவை சுமந்ததை தியானித்து வாழ்வின் சிலுவைகளை இயேசுவோடு சேர்ந்து சுமக்கும்வரத்தைக் கேட்டு செபிப்போம்.
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டதை தியானித்து தீமை செய்தவர்களை மன்னிக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போம்!

மகிமை நிறை மறை உண்மைகள்: ( புதன், ஞாயிறு )
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக!
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக!

ஒளி நிறை மறை உண்மைகள்: (வியாழக் கிழமை)
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக!
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக!
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக!
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக!
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக!

வாழ்க அரசியே (கிருபை தயாபத்து) செபம்:
எல்: வாழ்க அரசியே! தயை மிகுந்த அன்னையே, எங்கள் வாழ்வே, இனிமையே, அடைக்கலமே வாழ்க! தாயகம் இழந்த ஏவையின் மக்கள் நாங்கள், தாயே என்று உம்மைக் கூவி அழைக்கிறோம். கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருந்து உம்மை நோக்கிக் கதறி அழுது, பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தாயே, அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரும். உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவை, எங்கள் இம்மை வாழ்வின் இறுதியில் காணச் செய்யும். கருணையின் உருவே! தாய்மையின் கனிவே! இனியக் கன்னித் தாயே!

முதல். : இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக…
எல். : இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல். : மன்றாடுவோமாக:
முதல். : எல்லாம் வல்ல இறைவா! உமதருளால் விண்ணேற்றமடைந்த கன்னித் தாயாகிய மரியாவின் உடலும் ஆன்மாவும் தூய ஆவியாரின் வல்லமையால் உம்முடைய திருமகனைச் சுமக்கத் தகுந்தப் பீடமாக இருக்க ஏற்கனவே தேர்ந்தெடுத்தீரே. அவரை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவருடைய இரக்கமுள்ள பரிந்துரையாலே இந்த உலகத்தின் எல்லா ஆபத்துக்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், இறப்பிலிருந்தும் எங்களை மீட்க இரக்கம் காட்டியருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

இறுதி செபம்:
எல். : அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் – ஆமென்

 

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
எல். : மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே!
இதோ.. உம்மிடம் அடைக்கலம் நாடிவந்து, சரணடைந்து
உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக
உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும்
கன்னியர்களுக்கு அரசியான கன்னிகையே தயையுள்ள தாயே!
நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கையால் தூண்டபெற்று
அடியேன் உம் திருப்பாதம் நாடி வருகிறேன்.
பாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு
உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன்.
மனுவுருவான திருமகனின் தாயே!
என் மன்றாட்டைப் புறக்கணியாமல்
எனக்காக தயவாய் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே
பாவிகளுக்கு அடைக்கலமே
இதோ உமது அடைக்கலம் நாடி ஓடிவந்தோம்.
எங்கள் பேரில் இரக்கம் கொண்டு
எங்களுக்காக உம்முடைய திரு மகனிடிம் வேண்டிக்கொள்ளும். - அருள் நிறைந்த மரியே... (.3-முறை)

முதல். : திருத்தந்தையின் கருத்துக்களுக்காக வேண்டிக் கொள்வோம்.
(இயேசு கற்றுத் தந்த செபம், மங்கள வார்த்தை செபம் & மூவொரு இறைவன் புகழ்)

நற்கருணை நாதரை ஆராதிக்க:
நிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,
எல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும்
உண்டாகக் கடவது.

 

image