image

உரோமைத் திருப்பலி நூல் பற்றிய
தமிழக ஆயர் பேரவையின் சுற்றுமடல்

as


இறை இயேசுவில் அன்பு நிறை அருள்பணியாளர்களே, துறவியரே, இறைமக்களே!
உங்கள் அனைவருக்கும் தமிழக ஆயர்களின் நல்வாழ்த்துக்கள்!


இரண்டாம் வத்திக்கான் சங்கம் “திருவழிபாடு” பற்றிய கொள்கைத் திரட்டில் “திருவழிபாடு திரு அவையின் செயல் முழுவதுமே நாடி நிற்கும் சிகரமாக அமைந்துள்ளது. அத்துடன் திரு அவையின் ஆற்றல் அனைத்திற்கும் அது ஓர் ஊற்றாகவும் உள்ளது” (திவ10) என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். திருவழிபாட்டில் கிறிஸ்தவ வாழ்வின் மையமாக விளங்கும் நற்கருணைக் கொண்டாட்டத்தை ஒவ்வொரு நாட்டின் மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், சடங்குமுறைகள் ஆகியவற்றிற்கு ஏற்பத் தழுவி அமைக்கவும், சில மாற்றங்களைப் புகுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (திவ 4, 37-40, 77).

புதிய உரோமைத் திருப்பலி நூல்:
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 10-04-2000 அன்று உரோமைத் திருப்பலி நூலின் திருத்தப்பட்ட மாதிரிப ; படிவத்தை வெளியிட்டு, 2002ல் அவரவர் தாய்மொழியில் அது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அதன்மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் இறைமக்கள் அனைவரும் திருவழிபாட்டின் உட்பொருளை நன்கு உணர்ந்து, அவரவர் வாழும் சூழலில் மொழி, பண்பாடு, ஆகியவற்றிற்கு ஏற்ப முழு ஈடுபாட்டோடு பங்குபெற்று, மீட்பைப் பெறத் திருப்பலி நூலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இவ்வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2008ம் ஆண்டு வெளியிட்ட உரோமைத் திருப்பலி நூலின் திருத்தப்பட்ட 3ம் மாதிரிப் படிவத்தைத் தமிழாக்கம் செய்ய, தமிழக ஆயர் பேரவை முடிவு செய்தது. இதன்படி இத்தமிழாக்கம் இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின் ஒப்புதலோடு உரோமைத் திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்கு முறைப் பேராயத்தின் அனுமதியை மே 16, 2017ல் பெற்றது.


புதிய உரோமைத் திருப்பலி நூலின் சிறப்பியல்புகளும் தனித்தன்மையும்:

1. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருவழிபாட்டுக் கொள்கைத் திரட்டை நடைமுறைப் படுத்தவும், தாய்மொழிகளின் பயன்பாடு பற்றியும் புனித 2ம் ஜான் பால் அவர்களால் கொடுக்கப்பட்ட 5வது விதிமுறையான, Liturgiam Authenticam - இல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் இம்மொழிபெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ளன.

2. இந்திய மண்ணின் புனிதர்கள் உள்படப் பல அருளாளர்களுக்கான மன்றாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

3. சில சிறப்பான புனிதர்களுக்கான தொடக்கவுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

4. அன்னை மரியாவுக்கென்று எட்டு நேர்ச்சித் திருப்பலிகள் இடம் பெற்றுள்ளன.

5. இந்தியப் பண்பாட்டுமயமாக்கலுக்கான பன்னிரெண்டு அம்சங்களும் இத்திருப்பலி நூலில் இடம் பெற்றுள்ளன.

6. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மொழிநடை, கருத்தாழம், பொருள்வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மூல மொழியாகிய இலத்தீனிலிருந்து இப்புதிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

7. திரு அவையின் ஒருமைப்பாட்டையும் ஒன்றிப்பையும் உணர்த்தும் விதமாகவும், மூல மொழிக்கு ஒத்திருக்கும் வகையிலும் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளதால், இதுவரை நாம் பயன்படுத்திய பல வார்த்தைகள், பதிலுரைகள் மற்றும் வாக்கியங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

8. திரு அவையில் திருவழிபாட்டில் விவிலியப் பகுதிகள் பயன்படுத்தப்படும்போது அவை திருவிவிலியத்தின் புதிய உல்காத்தா மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டு இப்புதிய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உள்ளன்போடு ஏற்றுச் செயல்
படுவோம்.

9. நாள்தோறும் பயன்படுத்தும் அடிப்படைச் செபங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவழிபாட்டில் இறைமக்கள் முழமையாகப் பொருளுள்ள விதத்தில் பங்கேற்க, திருவழிபாடு பற்றிய விளக்கத்தை மக்களுக்கு வழங்க இப்புதிய நூல் ஒரு வாய்ப்பாக அமைகிறது. எனவே, அருள்பணியாளர்களும், துறவியரும் திருப்பலி நூல் பற்றிய விளக்கத்தை இறைமக்களுக்கு வழங்கி, திருப்பலியில் அவர்கள் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்று, கிறிஸ்துவின் மனநிலை கொண்டு சான்று வாழ்வு வாழ உங்களைக் அழைக்கின்றோம்.


புதிய உரோமைத் திருப்பலி நூல் 24 ஜனவரி 2018ல் செங்கல்பட்டு மறைமாவட்டம் புனித தோமையார் மலையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவையின் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 2018ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி திருநீற்றுப் புதனிலிருந்து தமிழகமெங்கும் நடைமுறைக்கு வருகிறது என்பதைத் தமிழக ஆயர் பேரவையின் சார்பாக அறிவிக்கின்றோம். இதுவரை பயன்பாட்டில் இருந்துவரும் பழைய திருப்பலி புத்தகத்தை, இனிமேல் பயன்படுத்தக்கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் பிப்ரவரி 14, 2018 முதல் இப்புதிய உரோமைத் திருப்பலி நூலை மட்டுமே அனைவரும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கிறோம்.


இறைஆசியும், அன்னை மரியின் பரிந்துரையும் என்றும் உங்களோடு இருப்பனவாக!

கிறிஸ்துவில் என்றும் அன்புடன்,
மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி
தலைவர், தமிழக ஆயர் பேரவை

இடம் : சென்னை
நாள் : 27.01.2018


குறிப்பு: வரும் பிப்ரவரி 4, (அல்லது 11) 2018 ஞாயிறு திருப்பலியின்போது அருள்பணியாளர்கள் இச்சுற்றுமடலை வாசித்து தகுந்த விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி.







image