யோவான் 11:19-27

பொதுக்காலம் 17 வாரம் புதன்

19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.

20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

21 மார்த்தா இயேசவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.

22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார்.

23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.

24 மார்த்தா அவரிடம் , "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.

25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். '

27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

 

------------------------

அன்பு என்றும் வாழும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று புனித மார்த்தாவின் திருநாள். லாசர், மரியா இவர்களின் சகோதரியான மார்த்தா இயேசுமீது சிறப்பான அன்பு கொண்டிருந்தார். இயேசுவும் அவர்களைத் தம் நண்பர்கள் என்று அழைத்தார். என்ன ஒரு சிறப்பு! இயேசுவை நண்பராகக் கொண்டிருப்பது. அவரை இல்லத்துக்கு அழைத்து, விருந்திட்டு உபசரிப்பது. அந்தப் பேறு மார்த்தாவுக்குப் பலமுறை கிடைத்தது.

லாசர் இறந்தபின்னும்கூட மார்த்தா இயேசுவின் வல்லமைமீது கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறிய மார்த்தா, அடுத்த வார்த்தைகளில் தன் நம்பிக்கையின் முழுமையையும் வெளிப்படுத்துகிறார். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம்  அவர் உமக்குக் கொடுப்பார் என எனக்குத் தெரியும். ஆம், மார்த்தாவின் நம்பிக்கை அவரது அன்பின் அடிநாதமாக இருந்தது.

எனவே, இயேசு அங்கே ஒரு புதுமையை நிகழ்த்துகிறார். லாசரை உயிரோடு எழுப்புகிறார்.

அன்பு இறவாது. அன்பு என்றும் வாழும். அன்பு நம்பிக்கை கொள்ளும். இவை அனைத்துக்கும்  எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மார்த்தாவுக்காக இன்று இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

மன்றாடுவோம்; நல்ல நண்பராகத் திகழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். மார்த்தா, மரியா, லாசர் இவர்களை உமது நண்பர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு உமது மாட்சியையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. ஆண்டவரே, மார்த்தா உம்மீது கொண்டிருந்த அணை கடந்த, தடைகளைத் தகர்த்தெறிந்த, இறப்பையும் கடந்த அன்பையும், விசுவாசத்தையும் எனக்கும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு மார்த்தாவிடம், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்றார்'' (யோவான் 11:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் இயேசு புரிந்த புதுமைகள் ''அரும் அடையாளங்கள்'' என அழைக்கப்படுகின்றன. அதாவது இயேசு மக்களின் நலனுக்காகச் செய்த அதிசயமான செயல்கள் எல்லாம் ஆழ்ந்த ஒரு பொருளின் வெளி ''அடையாளமாக'' இருந்தன. அந்த ஆழ்ந்த பொருளை மக்களுக்கு விளக்கி உரைக்கவே யோவான் நற்செய்தி நூலை எழுதினார். இலாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளாகிய மரியா, மார்த்தா என்பவர்களும் இயேசுவின் நண்பர்கள் (யோவா 11:5). இலாசர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த இயேசு உடனடியாகச் சென்று தம் நண்பரைக் குணப்படுத்தவில்லை. மாறாக, இலாசர் இறந்த பிறகு இயேசு அவருக்கு அதிசயமான விதத்தில் புதுவாழ்வு வழங்கினார். இதை இயேசு புரிந்த ஓர் அதிசய செயலாக மட்டுமே நாம் பார்க்கக் கூடாது. இந்தப் புதுமையை ஓர் ''அரும் அடையாளமாக''க் கொண்டு, அந்த அடையாளம் உணர்த்துகின்ற ''ஆழ்ந்த உண்மையை'' நாம் கண்டுகொள்ள அழைக்கப்படுகிறோம்.

-- இவ்வுலகில் பிறக்கின்ற மனிதர் ஒருநாள் இறப்பர் என்பது இயற்கை நியதி. ஆனால் இயேசு நமக்கு ஒரு நாளும் அழியாத வாழ்வை வாக்களிக்கிறார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டால் நாம் ஒருநாளும் அழிந்தொழிய மாட்டோம்; மாறாக, இறைவனோடு ஒன்றித்து எந்நாளும் நிலைத்துநிற்கின்ற வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். இதையே இயேசு இலாசரின் சகோதரியாகிய மார்த்தாவுக்கு உணர்த்தினார். இயேசு மார்த்தாவிடம், ''உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே'' என்று கூறியதோடு அந்த உயிர்த்தெழுதலிலும் வாழ்விலும் நாம் பங்கேற்கும் வழி யாதெனவும் கூறினார். அதாவது ''என்னில் (இயேசுவில்) நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர்'' என இயேசு நமக்கு வாக்களிக்கிறார். இயேசுவே சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார்; புது வாழ்வில் புகுந்தார். அவருடைய உயிர்த்தெழுதலில் நமக்கும் பங்கு உண்டு என அவர் நமக்கு வாக்களிக்கிறார். மேலும், இவ்வுலக வாழ்வையும் இறைவனோடு இணைந்த மறுவுலக வாழ்வையும் நாம் கூறுபோட்டுப் பிரித்துப் பார்ப்பது தவறு. இயேசுவை நாம் இவ்வுலகில் ஏற்பதைப் பொறுத்தே நம் மறுவுலக நிலை அமையும். இயேசுவை நம்புவோர் ஏற்கெனவே நிலைவாழ்வைச் சுவைத்துவிட்டார்கள். அந்த வாழ்வின் நிறைவு மறுவுலகில்தான் நமக்கு உரித்தாகும். என்றாலும் இவ்வுலகை நாம் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதைப் பொறுத்துத்தான் நம் மறுவுலக வாழ்வு அமையும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தந்துள்ளார்.

மன்றாட்டு
இறைவா, நீரே எங்களுக்கு நிலைவாழ்வை வழங்குபவர் என நாங்கள் நம்பி, ஏற்று, அதற்கேற்ப வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்