St. Basil St. Gregory Elder St. Gregory

ஜனவரி 2

தூய பெரிய பசில்

mary

mary

தூய பசிலியார் (ஜனவரி 02)

(ஆயர், மறைவல்லுநர் 329 - 379)


திருச்சபைக்கு அதிக புனிதர்களைக் கொடுத்தக் குடும்பத்தில் பிறந்தவர், ஜனவரி மாதம் 2ஆம் நாள் நினைவு கூறப்படும் புனிதர், கீழைத்திருச்சபையில் துறவு வாழ்க்கைக்கு வித்திட்டவர், நிசா நகரத்து புனித கிரகரியின் சகோதரர், கீழைத் திருச்சபையின் மறை வல்லுநர், பெரிய  என்ற அடைமொழியைத் தன் பெயருக்குப் பின்னால் கொண்ட  ஆயர், கப்படோசியாவின் 3 ஆன்மீகச் செம்மல்களில் ஒருவர்.

நிகழ்வு

பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பசிலியார், ஏதென்ஸ் நகரில் தத்துவம் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய எண்ணமெல்லாம் எல்லாவற்றையும் கற்றுத் தெரிந்து, மிகச்சிறந்த அறிவாளியாகவும், பேச்சாளராக வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அத்தகைய தருணத்தில் அவருடைய சகோதரி மக்ரினா அவரிடம், “உலக ஞானத்தை அறிந்துகொள்வதைவிடவும் கடவுளுக்குப் பணிசெய்து மேலானது” என்று எடுத்துக்கூறினார். இதனால் மனமாற்றம் அடைந்த பசிலியார் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இறைப்பணி செய்யத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

தூய பசிலியார் கி.பி. 329 ஆம் ஆண்டு செசாரியாவில் பிறந்தவர், இவருடைய குடும்பமே தூயவர்களின் குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் இவருடைய தாத்தா, இவருடைய தந்தை பெரிய பசிலியார், இவருடைய தாய் எமிலியா, இவருடைய சகோதரி மக்ரீனா, இவருடைய சகோதர் நசியான்ஸ் என அனைவருமே புனிதர்கள்தான். இவர் தன்னுடைய கல்வியை செசாரியா ஏதென்ஸ் போன்ற இடங்களில் பெற்றுக்கொண்டார். அப்போதெல்லாம் இவருக்கு மிகப்பெரிய பேச்சாளராக மாறவேண்டும் என்பதுதான் எண்ணமாக இருந்தது. ஆனால் இவருடைய சகோதரி மக்ரினாதான் இவரைத் தடுத்தாட்கொண்டு இறைப்பணி செய்வதற்குத் தூண்டினார். அதன்பின்னர்தான் இவர் தன்னுடைய உடமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இறைபணி செய்யத் தொடங்கினார்.

இறைப்பணி செய்ய முடிவெடுத்த பின்னர், இவர் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று, அங்கே இருந்த துறவிகளிடம் ஐந்தாண்டு காலம் பயற்சியைப் பெற்றார். அதன்பின் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்து, ஆசியா மைனரில் முதல்முறையாக ஒரு துறவுமடத்தை நிறுவினார். அதில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து பயிற்சியையும் பெற்று, துறவுவாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இத்தகைய தருணத்தில்தான் செசாரியாவில் ஆயராக இருந்த யூசிபுஸ் என்பவர் இவரைக் குருவாகத் திருநிலைப்படுத்தினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயரின் இறப்புக்குப் பிறகு இவர் செசாயாவின் ஆயராக உயர்ந்தார். இவர் ஆயராக உயர்ந்த பிறகு ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் ஏழை எளியவர், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள்மீது அதிகமான அன்புகொண்டிருந்தார். அதனால் இவர் அவர்களுடைய மறுவாழ்விற்காக பல்வேறு உதவிகளைச் செய்தார். கட்டங்களை கட்டி, அவர்களை அங்கே தங்கவைத்து, அவர்களுக்கு பெரும்சேவை செய்தார். இவருடைய காலத்தில் ‘கிறிஸ்துவின் கடவுள்தன்மை மறுக்கும் ஆரியபதம் (Arianism) திருச்சபையை மிகவும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. எனவே இவர் இக்கொள்கையை பரப்பிய, வாலன்ஸ் என்ற மன்னனை கடுமையாகச் சாடினார். அதற்காக இவர் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். 379 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபில் என்ற இடத்தில் நடந்த பொதுச் சங்கத்தில் ஆரியபதம் என்ற தப்பறைக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாறு பசிலியார் ஒரு சிறந்த மறைப்போதகராக இறைபணியை சிறப்பாக செய்தார். அப்படிப்பட்டவர் 379 ஆண்டு இறையடி சேர்ந்தார்.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
பசிலியாரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. ஏழைகள்மீது இரக்கம்

தூய பசிலியார் ஏழைகள்மீது அதிக இரக்கமும் அன்பும் கொண்டுவாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் ஏழைகளுக்காக தன்னுடைய உடமைகள் அனைத்தையும் கொடுத்தார். ஆயராக உயர்ந்தபிறகு ஏழைகள் வாழ்வு சிறக்க பல நலத்திட்டங்களை இயற்றினார்; அவர்களுடைய வாழ்வு மேம்பட உழைத்தார். இவ்வாறு அவர் ஏழைகளின் தோழனானர்.

தூய பசிலியார் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம் : உன் வீட்டில் உனது தேவைக்கு மேல் எஞ்சியிருக்கும் உணவுப்பொருட்கள் ஏழைகளுக்கு உரியவை. உனது இல்லத்தில் அடுக்கடுக்காக வைத்திருக்கும் ஆடைகள் உனது தேவைக்கு மிஞ்சினால் மூடிக்கொள்ள எதுவுமின்றித் தவிக்கும் ஏழைகளுக்கே உரியவை. உனது தேவைக்கு மேலான காலணிகள் வெறுங்காலோடு செல்லும் ஏழைகளுக்கே உரியவை. உன் இரும்புப் பெட்டியில் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் ஏழைகளுக்கு உரியது. இரக்கச் செயல்களை நீ செய்யாது விட்டுவிடும்போது அத்தனை முறையும் அறம் தவறுகிறாய்”.

பசிலியாரிடத்தில் ஏழைகள், அனாதைகள்மீது கொண்டிருந்த அன்பும், இரக்கமும் போன்று நம்மிடத்திலும் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் ஏழைகள், அனாதைகளை வெறுத்து ஒதுக்குகின்றோம். அவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கின்றோம். ஆனால் ஆண்டவர் இயேசுவின் அன்பு ஏழைகள்மீதுதான் அதிகமாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும், ஏழை எளியவருக்குச் செய்கின்ற உதவி, சேவை இறைவனுக்கே செய்கின்ற உதவியாகும் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது (மத் 25: 40). ஆகவே, நாம் ஏழை எளியவருக்கு உதவி செய்யும் நல்ல மனப்பான்மையைக் கற்றுக்கொள்வோம்.

1928 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் பிறந்தவர் பிரான்சிஸ் லாபோர்த் (Francis Laborde) என்பவர். இவருக்கு சிறு வயது முதலே ஏழை எளியவர்மீது தனிப்பட்ட அன்பும் கரிசனையும் இருந்தது. வளர வளர அது மேலும் அதிகரித்தது. ஒருகட்டத்தில் இவர் குருவாக மாறி ஏழை மக்கள் அதிகமாக வாழும் இந்தியாவில் சென்று பணிசெய்யலாம் எனத் தீர்மானித்தார். அதன்படியே இவர் கல்கத்தாவிற்கு அருகே இருக்கும் பில்கானா (Pilkhaana) என்ற சேரிப்பகுதிக்குச் சென்று அங்கே இருந்த ஏழை எளிய மக்கள் மத்தியில் பணிசெய்தார். குறிப்பாக இவர் அம்மக்களுடைய சமூகப் பொருளாதார வாழ்வு மேம்பட உழைத்தார். கல்வி நிறுவனங்களைத் தொடங்கி அவர்களுக்கு கல்வியறிவு புகட்டினார். எல்லா மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடக்கக்கூடிய சூழலை உருவாக்கித் தந்தார். இவ்வாறு பிரான்சிஸ் லாபோர்த் என்ற அந்த பிரான்சு நாட்டுக் குருவானவர் பில்கானா மக்களின் ஒளிவிளக்காக விளங்கினார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றை டோமினிக் லாபிரே என்பவர் City of Joy என்று புத்தகமாகப் படைத்தார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் ஏழை எளியவருக்கு உதவிகள் செய்யவேண்டும், அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதைத்தான் பிரான்சிஸ் லாபோர்த் என்பவருடைய வாழ்வும், இன்று நாம் விழாக் கொண்டாடும் பசிலியாரின் வாழ்வும் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

2. தப்பறைக்கொள்கைகளுக்கு சம்மட்டி

தூய பசிலியாரை தப்பறைக் கொள்கைகளுக்கு சம்மட்டியானவர் என்று சொன்னால் அது மிகையாது. இவர் வாழ்ந்த காலத்தில் ‘இயேசு மனிதர்தானே ஒழிய, கடவுள் அல்ல என்ற தப்பறைக் கொள்கையானது அதிகமாகப் பரவிக்கொண்டிருந்தது. இவர் அதை மிகவும் துணிச்சலாக எதிர்த்தார். இக்கொள்கையை பரப்பிக்கொண்டிருந்த வாலன்ஸ் என்ற மன்னனை கடுமையாகச் சாடினார். இறுதியாக கி.பி. 379 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபில் என்ற இடத்தில் நடந்த பொதுச்சங்கத்தில் இக்கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆகவே, தூய பசிலியார் ஆயராக இருந்த ஏழை எளியவருக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், திருச்சபையின் காவலராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
தூய பசிலியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் திருச்சபையை, கிறிஸ்துவின் போதனை கட்டிக்காப்பது நமது கடமையாகும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் திருச்சபைக்கு எதிராக ஏராளமான வன்முறைகள், பொய் குற்றச்சாட்டுகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக நம்முடைய திருச்சபையை காப்பது நமது கடமையாகும். திருச்சபை கிறிஸ்துவின் உடல் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, தூய பசிலியாரின் விழாவில் அவரைப் போன்று ஏழை எளியவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டுவாழவும், இயேசு கட்டியெழுப்பிய திருச்சபையை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கட்டிகாத்திட சபதம் எடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

இறை வார்த்தை : ஏழைகளுக்கு தாராளாமாய் கொடு: இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும் (சீ.ஞா. 7:32)

வாசிக்க:மத்தேயு 25:31-46

St. Basil St. Gregory Elder St. Gregory
image