St. Elizabeth Ann Seton

ஜனவரி 4

தூய எலிசபெத் ஆன் பேலி சேற்றேன்

mary

mary

தூய எலிசபெத் ஆன் பேலி சேற்றேன்


பிராடடஸ்டாண்டு குடும்பத்தில் பிறந்த ஒருவர் மிகப் பெரிய கத்தோலிக்கப் புனிதராக மாறியவர் யார்?
புனித எலிசபத் அன் பேலி சேற்றன்.

நிகழ்வு

எலிசபெத் தன்னுடைய கணவர் வில்லியம் மாகி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் அமெரிக்காவில் உள்ள நீயூயார்க் நகரில் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தார். எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், கணவர் வில்லியம் மாகி செய்துவந்த தொழிலில் பயங்கர வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை. ஆகவே, அவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலிக்குச் சென்று, அங்கு தொழில் தொடங்கலாம் என்று முடிவுசெய்தார். அதன்படி அவருடைய குடும்பம் இத்தாலிக்குக் குடிபெயர்ந்தது. இத்தாலிக்குச் சென்ற புதிதில் எலிசபெத்தின் குடும்பம் பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவருடைய இல்லத்தில் தங்கி இருந்தது. எலிசபெத்தின் குடும்பம் அடிப்படையில் ப்ராடஸ்டேன்ட் சபையை சார்ந்தது. அதுவும் அச்சபையில் பிடிப்பில்லாமல் இருந்தது. பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையையும் நற்கருணை ஆண்டவர்மீதும் மரியன்னையின் மீதும் புனிதர்கள்மீதும் அவர் கொண்டிருந்த பக்தியையும் கண்டு வியந்துபோய், சில நாட்களிலேயே அவரும் அவருடைய குடும்பமும் கத்தோலிக்க சபைக்கு வந்தது.

ஒருவரை (கத்தோலிக்க) கிறிஸ்தவ மறைக்குள் கொண்டுவர, நாம் கிறிஸ்துவைக் குறித்து மணிக்கணக்காக போதிக்கவேண்டும் என்பதில்லை, கிறிஸ்துவின் போதனைகளின் வாழ்ந்தாலே போதுமானது என்பதை மேலே உள்ள நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

எலிசபெத் ஆன் பேலி சேற்றேன் 1774 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் நீயூயார்க் நகரில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர். எலிசபெத், சிறுவயது முதலே பக்தியில் சிறந்து விளங்கினார், விவிலியம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். மட்டுமல்லாமல் ஏழை எளியவர்மீது மிகுந்த அக்கறை காட்டி வந்தார். சிறு வயதில் ஏழை எளியவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் பின்னாளில் அவரை அவர்களுக்காக ஏராளமான நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டியது.

எலிசபெத்துக்கு இருபது வயது நடக்கும்போது அதாவது, 1794 ஆம் ஆண்டு, வில்லியம் மாகி என்பவருக்கு அவர் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். வில்லியம் மாகியுடனான இல்லற வாழ்க்கை எலிசபெத்துக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாகப் போனது. இறைவன் அவருக்கு ஐந்து பிள்ளைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். எல்லாம் நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் எலிசபெத்தின் கணவர் செய்துவந்த தொழில் வீழ்ச்சியுறத் தொடங்கியது. அந்த வீழ்ச்சியிலிருந்து எழ அவர் எவ்வளவோ முயன்றபோதும் அவரால் எழ முடியவில்லை, இதனால், எலிசபெத்தின் குடும்பம் இத்தாலியில் குடிபுகுந்தது. இத்தாலில் குடியேறிய சில நாட்களிலேயே எலிசபெத்தின் கணவர் வில்லியம் மாகி இறந்து போனார். அப்போது அவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை. இருந்தாலும் தனி ஒரு மனுசியாய் குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றினார்.

எலிசபெத், இத்தாலியில் குடிபுகுந்த தொடக்கத்தில் பில்லிக்கி என்ற கத்தோலிக்கக் கிறிஸ்தவர் தன்னுடைய இல்லத்தில் தங்குவதற்கு இடமளித்தார். அவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கை எலிசபெத்தை கத்தோலிக்க திருமறையைத் தழுவுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது. எலிசபெத் கத்தோலிக்கத் திருமறையைத் திருமறையைத் தழுவியதால், அவருடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. எத்துணை எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர் தான் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்கவே இல்லை.

சிறிதுகாலம் இத்தாலியில் இருந்து பணியாற்றிய எலிசபெத், அதன்பின்னர் கனடாவில் உள்ள பால்டிமோர் பகுதிக்குச் சென்று, அங்கு பெண்களுக்கென பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். ஐரோப்பா கண்டத்திலே பெண்களுக்கென முதன்முதலாக கல்வி நிறுவனம் தொடங்கிய பெருமை எலிசபெத்தையே சாரும். கல்வி நிறுவனம் மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கென தர்ம விடுதிகளையும் அவர் அமைத்தார். அதன்மூலம் ஏராளமான குழந்தைகள் பயன்பெற்றார்கள்.

மேலு; பள்ளிக் கூடம் ஒன்றையும் ஆசிரியர்களையும் அமெரிக்கக் கலாச்சார அடிப்படையில் உருவாக்கினார். இவரது பணிகள் பல்வேறு மக்களைக் கவர்ந்தன. ஏராளமான மக்கள் மெய் மறைக்கு வந்தனர். பில டெல்பியா,நியூயார்க் நகரங்களலும்  ஏழைகளுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டன.

எலிசபெத், இறைவன் தனக்குக் கொடுத்த எழுத்துத் திறமையைக் கொண்டு நிறைய ஆன்மீகப் புத்தகங்களை எழுதினார். அது பின்னாளில் அவர் நிறுவிய ‘Sisters of Charity’ என்னும் சபையின் வேதப் புத்தகமாக அமைந்தது. எத்தகைய பணிகளுக்கு மத்தியிலும் இவர் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள தவறியதில்லை. நோயாளிகளுக்குச் செய்கின்ற சேவையை ஆண்டவர் இயேசுவுக்குச் செய்வதாகவே அவர் உணர்ந்தார். இப்படி அயராது பாடுபட்ட எலிசபெத் நோய்வாய்ப்பட்டு 1821 ஆம் ஆண்டு, ஜனவரி 4 ஆம் நாள், இறைவனடி சேர்ந்தார். இவருக்கு 1975 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

எலிசபெத் அதிசயங்களோ அற்புதங்களோ நிகழ்த்தி விடவில்லை, இயேசுவின் அன்பை எல்லா மக்களுக்கு தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துரைத்தார். அதுவே அவரை புனிதையாக உயர்த்தியது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. ஏழை எளியவர்மீது அக்கறை

எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றபோது அவர் ஏழை எளியவர் மீது எந்தளவுக்கு தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர் மீது அக்கறை கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏழைகள் மீது அக்கறைகொண்டு வாழவேண்டும் என்று சொல்லும்போது பணக்காரர்கள்தான் அப்படி இருக்கவேண்டும் என்பதில்லை, ஏழைகளும் தங்களோடு வாழக்கூடிய மற்ற ஏழைகளிடம் அக்கறை கொண்டு வாழ்வது சாலச் சிறந்த ஒன்றாகவும்.

இந்த இடத்தில் ஒருவரைப் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் வேறு யாருமல்ல அமெரிக்காவைச் சார்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா என்ற சிறுமிதான்.

1999 ஆம் ஆண்டு, நான்கு வயதான அலெக்ஸ்சாண்ட்ரா என்ற அந்த சிறுமிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட சிகிச்சைகளில், அவள் அதிக நாள்கள் உயிர் வாழமாட்டாள் என்பது தெரிந்துவிட்டது. சிறுமியோ மனம் தளராமல் ஆரம்ப சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், தன் வீட்டு வாசலில் எலுமிச்சை ஜூஸ் விற்கும் கடை திறந்தாள். அதன் முக்கிய நோக்கம், அதில் கிடைக்கும் பணத்தில், தன்னைப் போல் புற்று நோய் பாதித்த ஏழைச் சிறுவர்களுக்கு உதவி செய்வது. அந்த அக்கறையும் ஈடுபாடும் 2000 டாலரை ஒரே வருடத்தில் வசூல் செய்துதந்தது. அதனை தன்னையொத்த சிறுவர்களின் நலனுக்காக செலவிட்ட அலெக்ஸ்சாண்ட்ரா நோய் முற்றி 2004 ஆம் ஆண்டு இறந்துபோனாள். ஆனால், அவள் துவக்கிவைத்த எலுமிச்சை ஜூஸ் கடைகள் உலகமெங்கும் பரவி, இன்று ஏழைச் சிறுவர்களைப் புற்றுநோயில் இருந்து காக்க உதவும் அறிய திட்டமாக வளர்ந்திருக்கின்றன.

ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு, அவர்கள்மீது அக்கறை கொண்டு அன்புப் பணிகள் செய்வதற்கு நாம் யாராகவும் இருக்கலாம் என்பதை அலெக்ஸ்சாண்ட்ரா என்ற சிறுமியின் வாழ்வே நமக்குச் சான்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய எலிசபெத் ஆன் பேலி சேற்றேனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவர் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

இறை வார்த்தை: நீங்கள் என்னிடம் கற்றுக் கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை. என்னிடம் கேட்டறிந்தவை என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். (பிலி. 4:9)

தொகுப்பு: அருட்பணி. சந்தீஸ்டன்

image