St. Agatho St. Gregory of Nyssa St. Francoise St. William of Bourges

ஜனவரி 10

நிசா நகரத்து புனித கிரகரி

mary

நிசா நகரத்து புனித கிரகரி

மறைசாட்சியின் மகளான எமிலியாவின் புதல்வனாக கப்பதோக்கியாவின் தலைநகரான செசரியாவில் ஏறக்குறைய 334ஆம் ஆண்டு பிறந்தவர் கிரகோரி. மூன்று கப்பதோக்கிய நகர தந்தையர்களுள் இவரும் ஒருவர். மற்றவர்கள், புனித பெரிய பாசில் மற்றும் கிரகோரி நசியான்சன் ஆவர். 10 குழந்தைகளுக்கு பெற்றோரான இவரின் தந்தை பாசில், தாய் எமிலியா இருவரும் புனிதர்கள். இவரின் பாட்டி மாக்ரீனா, சகோதரர்கள் பெரிய பாசில் மற்றும் செபஸ்தே பீட்டர் மற்றும் சகோதரி மேக்ரின் அனைவருமே ‘முன்மதியுடைய கன்னியராக’ வாழ்ந்து புனித நிலையில் இருக்கிறார்கள்.

தமது அண்ணன் மீது தம் உயிரையே வைத்திருந்த கிரகோரி, “எமது தந்தையும் ஆசிரியனும்” என்று அண்ணனைப் புகழ்ந்தார். புனித பாசில் தமது தம்பிகள் இருவரும் கல்வி அறிவு பெற்று வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற் கொண்டார். அண்ணனின் எண்ணப்படி நன்கு படித்தாலும் சுறுசுறுப்பு இல்லாதவராகவே கிரகோரி இருந்தார்.

ஒரு நாள், உரோமையின் 12ஆம் படையணியைச் சேர்ந்த 40 புனிதர்களின் (மார்ச் 10) திருப்பண்டங்கள் கிரகோரியின் வீட்டிற்கு அருகில் இருந்த கோவிலில் நிறுவப்பட்டது. இது, இவருடைய மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தார். இறைவனின் அழைப்பை உணர்ந்தாலும், தான் குருத்துவ வாழ்வுக்குத் தகுதியற்றவர் என்று முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டார். தம்பியிடம் வெளிப்படும் இறைவனின் அன்புருவைக் கண்டுகொண்ட புனித பாசில் மற்றும் கிரகோரி நசியான்சன் இருவரும் தொடர்ந்து கிரகோரியிடம் ஆன்ம உரையாடல் நடத்தி வந்தார்கள். இறைவனின் குரலுக்கு கிரகோரி செவிமடுத்தார். ஏறக்குறைய 362ஆம் ஆண்டில் குருத்துவத் திருப்பொழிவு பெற்றார்.

371இல் புனித பாசில் இவரை ஆயராக உயர்த்தினார். அதற்குக் காரணம் இருந்தது. “இறைத்தந்தையும், இயேசு கிறிஸ்துவும் ஒரே இறையியல்பு கொண்டவர்கள் இல்லை. மாறாக ஒத்த இறையியல்பு கொண்டவர்கள்” என்ற ஆரியுசின் தப்பறைக் கொள்கையை பேரரசர் வாலன்ஸ் பின்பற்றி வந்தார். இவரை எதிர்த்து வாதிடவும், வெற்றி கொள்ளவும் அத்தனாசியன் ஆயர்களின் ஆதரவும், வாக்குகளும் ஆயராக இருந்த பாசிலுக்குத் தேவைப்பட்டது. சசிமா மறைமாவட்டத்தில் ஏற்கனவே கிரகோரி நசியான்சன் இருந்தார். எனவே நிஸ்ஸா மறை மாவட்டத்திற்கு தம் தம்பி கிரகோரியை பாசில் நியமித்தார். தமக்குத்தான் ஆயர் பதவி கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. போந்துசின் ஆளுநர் டெமோஸதேனஸ் கூட்டிய கிழக்கத்திய ஆயர்களின் கூட்டத்தில் நிஸ்ஸா நகர் கிரகோரிக்கு எதிராக வாதங்களை எடுத்து வைத்தார்கள். ஆலய சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என்று பழி சுமத்தினார்கள். கிரகோரியைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆளுநரும் கைது செய்ய ஆளனுப்பினார். இக்கைதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கிரகோரி வந்தவர்களுடன் முகமலர்ச்சியுடனே சென்றார்.

ஆளுநரின் அவையில் கிரகோரி மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். எனவே மனம் வெறுத்துப் போனவராகத் தப்பிக்க வழி தேடினார். கிடைத்தபோது, தப்பித்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் மறைந்து கொண்டார். 376இல் கூட்டப்பட்ட நிஸ்ஸா நகர பெருமன்றத்தின் முடிவின்படி கிரகோரி ஆயர் பொறுப்பிலிருந்தும் அகற்றப்பட்டார். இரண்டு ஆண்டுகள், பேரரசன் வாலன்ஸ் மறையும்வரை நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக தலைமறைவாக ஓடிக்கொண்டே இருந்த. வாலன்சின் மறைவிற்குப் பிறகு (378) புதிய பேரரசர் கிராசியன் கிரகோரியை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஆயர் பொறுப்பை வழங்கினார்.

சில மாதங்களிலே, 379ஜனவரியில் இவரின் அண்ணன் பாசில் இறந்தார். அதன் பிறகு கிரகோரி முழுவீச்சில் பணியாற்ற ஆரம்பித்தார். இறையியல், மெய்யியல் சார்ந்த கட்டுரைகளும், மறையுரைகளும் எழுதினார். ஆன்ம வாழ்வு குறித்து எழுதினார். மூவொரு இறைவன் பற்றியும் கிறிஸ்துவின் இறைமனித இயல்பு பற்றியும் யாராலும் ஈடுகொடுக்க முடியாதபடிக்குப் பேசினார். “இறைவனை, தனி செபம் மற்றும் தியானத்தில் மட்டுமல்ல குழு வழிபாட்டிலும், திருச்சபையின் தூய வாழ்விலும் கண்டு கொள்ளலாம்” என்றார். அவர் மேல் குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டபோது வேதனை இவரை ஆட்கொண்ட போது இறுதி வரை தம் அழைத்தலில் நிலைத்திருந்தார்.

பணியாளர் ஓய்வுக்கு உரிமையுடையவரே என்பதற்கு ஏற்ப 395, மார்ச் ஒன்பதாம் நாள் நித்திய ஓய்வுக்குச் சென்றார். பழிபோடுகிறவர்களை நினைத்து பதற்றப்படாமல் பக்குவமாகச் சிந்தித்தோம் என்றால் வாழ்வின் பொருளைக் கண்டுகொள்ள முடியும்.

இறை வார்த்தை: கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31)

St. Agatho St. Gregory of Nyssa St. Francoise St. William of Bourges
image