St. Hilary St. Kentigern St. Remigius

ஜனவரி 13

புனித ஹிலாரி

mary

mary

புனித ஹிலாரி

நிகழ்வு

ஹிலாரி, தன்னுடைய இளமைப் பருவத்தில் பல்வேறு நூல்களைக் கற்றறிந்து அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். அப்போதெல்லாம் அவருக்கு வாழ்க்கையின் உண்மையான இரகசியத்தை அறிந்துகொள்வதுதான் முதன்மையான நோக்கமாக இருந்தது. அவர் எத்தனையோ மனிதர்களிடம் கேட்டபோதும் எத்தனையோ நூல்களைக் கற்றறிந்தபோதும் வாழ்க்கையின் உண்மையான இரகசியத்தை அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு விவிலியம் வாசிக்கக் கிடைத்தது. அவர் விவிலியத்தை வாசிக்க வாசிக்க, இத்தனைநாளும் அவரைத் தூங்கவிடாமல் செய்த வாழ்வின் இரகசியத்திற்கான பதில் கிடைத்தது. அப்போதே அவர் இயேசுதான் உண்மையான இறைவன் என்பதை உணர்ந்து கிறிஸ்துவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

ஹிலாரி, பிரான்சு நாட்டில் 315 ஆம் ஆண்டு, ஒரு கிறிஸ்தவரல்லாத பெற்றோருக்குப் பிறந்தார். இவருடைய பெற்றோர் வசதி படைத்தவர்களாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் ஹிலாரிக்கு மிகச் சிறப்பான கல்வியை வழங்கினார்கள். தான் பெற்றுக்கொண்ட கல்வி அனைத்தின் வழியாகவும் ஹிலாரி அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார். அப்போதெல்லாம் இவருக்கு வாழ்க்கையின் உண்மையான இரகசியம் என்ன என்பது பற்றிய தேடல் அதிகமாக இருந்தது. அத்தேடல் அவர் விவிலியத்தை படித்தறிந்தபோது நிறைவடைந்தது.

ஹிலாரியிடம் இருந்த அறிவுத்திறனை கண்டு, அவரை பாய்ஸ்டியர் நகர ஆயராக உயர்த்தினார்கள். ஆயராக உயர்ந்த பிறகு ஹிலாரி மிகச் சிறப்பான பணிகளை ஆற்றி வந்தார். அந்த காலத்தில் ஆரிய பதம் என்னும் தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. அத்தப்பறை இயேசுவின் இறையியல்பை மறுத்துவந்தது. இதை அறிந்த ஆயர் ஹிலாரி அதனைக் கடுமையான எதிர்த்தார். இதனால், ஆரியசும் அவரோடு சேர்ந்த ஒருசில ஆட்களுக்கும் மன்னர் கொன்ஸ்டாண்டினோடு சேர்ந்துகொண்டு ஆயர் ஹிலாரியை பிரிஜியா என்னும் தீவிற்கு நாடு கடத்தினார்கள். அங்கே இவர் அடைந்த வேதனைகளுக்கு அளவே இல்லை, இருந்தாலும் அந்த வேதனை காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திகொண்டு ‘தவத்திருத்துவம்’ குறித்த நூல் ஒன்றை எழுதினர். இது இன்று வரைக்கும் திருச்சபைக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்து வருகின்றது.

பிரிஜியா தீவிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயர் ஹிலாரி, மீண்டுமாக பணித்தளத்திற்கு வந்து பல்வேறு பணிகளைச் செய்யத் தொடங்கினார். குறிப்பாக திருவழிப்பாட்டுப் பாடல்களை ஒருங்கிணைப்பதும் திருவழிபாட்டை ஒருங்கிணைப்பதுமாக இருந்தார். இதற்கிடையில் 359 ஆம் ஆண்டு செலுக்கியா திருச்சங்கம் கூடியது. அச்சங்கத்தில் ஆயர் ஹிலாரி இயேசுவின் இறைத்தந்தையைக் குறித்து மிக ஆணித்தரமாக எடுத்துரைத்து, ஆரிய பதத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார். இவ்வாறு திருச்சபையை எதிரிகளிலிருந்து கட்டிக் காப்பாற்றியும் திருச்சபை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய ஆயர் ஹிலாரி 367 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1851 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதரால் திருச்சபையின் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது..

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஹிலாரியின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. விவிலியத்தின் மீது உண்மை தாகம்

தூய ஹிலாரியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றபோது அவர் விவிலியத்தின் மீது எந்தளவுக்கு தாகம் கொண்டிருந்தார் என்பதையும், விவிலியத்திலிருந்தே அவர் வாழ்விற்கான அர்த்தத்தையும் கண்டுகொண்டார் என்னும் உண்மையையும் உணர்ந்துகொள்ளலாம். அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், விவிலியத்திற்கு நம்முடைய வாழ்வில் உரிய முக்கியத்துவம் கொடுக்கின்றமோ? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன்’ என்பார் தூய எரோனிமுஸ். நாம் விவிலியத்தை கற்றறியாமல் கிறிஸ்துவை எப்படி அறிந்துகொள்ள முடியும்? என்று தெரியவில்லை. விவிலியம் வாழ்வு தரும் வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றது, இந்த உண்மையை நாம் உணர்ந்து விவிலியத்திற்கு நமது அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது நம்முடைய கடமையாகும்.

இந்த இடத்தில் ஒரு உண்மை நிகழ்வைச் சுட்டிக்காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பாக எத்தியோப்பியாவை மெனெலிக் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவனுக்கு தீராத நோய் வந்தது. அப்போது யாரோ ஒருவர் விவிலியத்தின் பக்கங்களை உண்டால் நோய் குணமாகும் என்று சொல்ல, அதன்படியே அவன் விவிலியத்தின் ஒவ்வொரு தாளாகக் கிழித்து உட்கொள்ளத் தொடங்கினான். அதிசயம் என்னவென்றால், அவனுடைய நோய் விரைவிலேயே குணமடைந்தது. அதன்பிறகு அவனுக்கு எப்போதெல்லாம் நோய் வந்ததோ, அப்போதெல்லாம் அவன் விவிலியத்தின் பக்கங்களைக் கிழித்து உட்கொண்டு, நோய் நீங்கப் பெற்றான்.

விவிலியம் – இறைவார்த்தை – வாழ்வுதரக்கூடியது என்பதை இதன்வழியாக அறிந்துகொள்ளலாம். நாம் வாழ்வுபெற விவிலியத்தைக் கிழித்து உண்ணவேண்டும் என்பதில்லை, விவிலியத்தை ஆழமாக, நம்பிக்கையோடு வாசித்தாலே போதுமானது.

ஆகவே, தூய ஹிலாரிவின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சியில் நம்மைக் கரைத்துக்கொள்வோம், விவிலியத்தின் மீது தாகம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

St. Hilary St. Kentigern St. Remigius
image