Bl. Laszlo St. Laura St. Vincent St. Vincent Pallotti

தூய வின்சென்ட் பல்லோட்டி
(ஜனவரி 22)

mary

mary

தூய வின்சென்ட் பல்லோட்டி (ஜனவரி 22)

இரசம் தயாரிப்போர் மற்றும் விற்பவர்களின் பாதுகாவலர்

நிகழ்வு

1816 ஆண்டில் ஒருநாள் தூய வின்சென்ட் பல்லோட்டி ரோம் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரைவிட இரண்டு அல்லது மூன்று வயது மூத்த ஜியமரியா என்னும் மனிதரைச் சந்தித்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பணக்கார மனிதரைப் போன்று தோன்றினாலும், மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டார்.

உடனே பல்லோட்டி அவரிடம், “உங்களைப் பார்ப்பதற்கு பணக்காரர் போன்று தெரிகிறீர்கள், ஆனால் மிகவும் சோகமாக இருக்கிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு அவர், “நான் சுவிஸ் இராணுவத்தில் இராணுவ வீரராகச் சேர்ந்து, திருத்தந்தை அவர்களை பாதுகாக்கும் பணியைப் பெறலாம் என நினைத்தேன். ஆனால் எனது கண்பார்வை சிறுது மங்களாய் போனதால் அது இயலாமல் போய்விட்டது” என்று மிகவும் வருத்தத்தோடு கூறினார். அதற்கு பல்லோட்டி, “சகோதரரே வருத்தப்படாதீர். ஒருநாள் வரும். அப்போது நீர் திருந்தந்தையைப் பாதுகாத்துக் கொண்டிருக்கமாட்டீர். மாறாக திருத்தந்தையாக நீர் இருப்பீர், அப்போது சுவிஸ் இராணுவ வீரர்கள் உம்மைப் பாதுகாத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு பல்லோட்டி அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1846 ஆம் ஆண்டு, ஜியமரியா என்ற அந்த மனிதர் ஒன்பதாம் பத்திநாதர் என்னும் பெயரில் திருத்தந்தையாக உயர்ந்தார். ஆம், நம் புனிதர் வின்சென்ட் பல்லோட்டி முன்பு சொன்ன வாக்கு பொன் வாக்கானது.

வாழ்க்கை வரலாறு

தூய வின்சென்ட் பல்லோட்டி 1795 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள், ரோம் நகரில் உள்ள ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். பல்லோட்டி சிறுவயது முதற்கொண்டே ஏழை எளியவர்மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தன்னுடைய தத்துவவியல் மற்றும் இறையியல் படிப்பை சப்ரேன்சாஸ் (Saprenzas) என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று தன்னுடைய இருபத்தி ஐந்தாம் வயதில் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இவர் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பிறகு Roman Semninary, English College என்ற இரண்டு இடங்களில் இறையியலைப் போதித்து வந்தார். அதன்பிறகு இவர், தன்னுடைய பணி இதுவல்ல என உணர்ந்து ஒரு பங்குத் தந்தையாக இருந்து பங்குப் பணியை செய்யத் தொடங்கினார்.

இவர் பங்குத்தந்தையாக மாறிய பிறகு நிறைய நேரத்தை பாவ சங்கீர்த்தனம் கேட்பதற்கும் நோயாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் சிறைவாசிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்கும் பயன்படுத்தினார். மேலும் இவர் பகல்வேளையில் ரோம் நகரின் வீதிகளில் நடந்து செல்கிறபோது யாவரது பிச்சைக்காரர்கள், கைவிடப்பட்டவர்கள் என்று யாரையாவது கண்டால், அவர்களிடம் இவர் தன்னிடம் இருக்கின்ற சட்டை, காலணி என்று எதையாவது கொடுத்துவிட்டு வருவார். அந்தளவுக்கு இவர் இரக்க உள்ளம் கொண்டவராக இருந்தார்.

இவர் பங்குப்பணியை ஆற்றியதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், தச்சுத்தொழில் செய்வோருக்கும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். மேலும் பொதுநிலையினர் சிறப்பானதொரு பயிற்சியை பெறுவதற்காக அவர்களுக்காக பயிற்சி நிலையங்களைத் தொடங்கி அவர்களை சிறப்பான முறையிலே வழி நடத்தினார். தூய வின்சென்ட் பல்லோட்டி செய்த மிகப்பெரிய காரியம் அருட்தந்தையர்களுக்கு என்று Pallottin Fathers, அருட்சாகோதரிகளுக்கு என்று Sisters Of Palloottin என்ற இரண்டு சபைகளை நிறுவியதுதான். இன்றைக்கு இந்த இரண்டு சபையாரும் பல்லோட்டி அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஆற்றிய பணிகளைப் பார்த்த திருத்தந்தைகள் பதிமூன்றாம் லியோ மற்றும் ஒன்பதாம் பத்திநாதர் இவரை ‘ கிறிஸ்தவ நற்செயல்களின் முன்னோடி’ என்று அழைத்தனர்.

இப்படி இறைப்பணியும், மக்கள் பணியும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று பாவித்து வாழ்ந்த வின்சென்ட் பல்லோட்டி 1850 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள், தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். 1963 ஆண்டு ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வின்சென்ட் பல்லோட்டி அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. உதவும் நல்ல உள்ளம்
தூய வின்சென்ட் பல்லோட்டி எல்லாருக்கும் குறிப்பாக ஏழை எளியவருக்கு உதவக் கூடிய நல்ல மனதினைக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருமுறை இவர், செருப்பில்லாமல் சுடும் வெயிலில் நடந்துசென்ற ஒரு பிச்சைக்காரைப் பாத்ததும் மனமிரங்கி, தன்னுடைய இரண்டு காலணிகளையும் கழற்றித் தந்துவிட்டு வெறுங்காலோடு தன்னுடைய இல்லத்திற்கு வந்தார். அந்தளவுக்கு இவர் ஏழை எளியவருக்கு உதவும் நல்ல மனத்தினைக் கொண்டு வாழ்ந்துவந்தார். அதனால்தான் இவரை எல்லாரும் ‘இரண்டாம் பிலிப்புநேரி’ என்று அன்போடு அழைப்பார்கள். இவரது விழாவைக் கொண்டாடும் நமக்கு, தேவையில் இருக்கும் ஒருவருக்கு தாமாகவே தேடிச் சென்று உதவும் நல்ல உள்ளம் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு கற்பனைக் கதைதான். ஒருநாள் வடஇந்தியாவில் ஓடக்கூடிய பிரம்மபுத்திரா ஆறு கடவுளிடத்தில் இவ்வாறு முறையிட்டது. “நானும் மக்களுக்கு பலவிதங்களில் உதவுகிறேன். கங்கை ஆறும் மக்களுக்கு உதவுகிறது. ஆனால் மக்கள் என்னைப் புகழாமால், கங்கை நதியை மட்டும் அதிகமாகப் புகழ்கிறார்களே, அதைப் புனித நதி என்று பாராட்டுகிறார்களே, இது எல்லாம் ஓர வஞ்சனையாகத் தெரிகிறதே” என்றது. அதற்குக் கடவுள் மிகவும் பொறுமையாக, “நீயும் சரி, கங்கை நதியும் சரி மக்களுக்குப் பலவிதங்களில் பயன்கிறீர்கள். ஆனால் மக்கள் உன்னைத் தேடிவருகிறார்கள். கங்கை நதியோ மக்களைத் தேடிச்சென்று உதவுகிறது. அதனால்தான் மக்கள் கங்கை நதியை அதிகமாகப் பாராட்டுகிறார்கள்” என்றார்.

ஆம், உண்மையான உதவி என்பது, மக்களை நம்மைத் தேடி வரச் செய்வதல்ல, மாறாக நாமே மக்களைத் தேடிச் சென்று உதவு. அதனை இன்றைய நாளின் விழா நாயகர் சிறப்பான விதத்திலே செய்தார். அதனால்தான் மக்கள் இன்றைக்கும் அவரை நினைவுகூறுகிறார்கள்.

2. ஜெப வாழ்வு

தூய வின்சென்ட் பல்லோட்டி மக்களுக்கு சேவை செய்வதற்கு எவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதைபோன்று அவர் இறைவனிடத்தில் ஜெபிப்பதற்கும் அதிகமான நேரத்தை ஒதுக்கினார். பகல் முழுவதும் ரோமை நகர வீதிகளில் அலைந்து திரிந்து ஏழை எளியவருக்கு பல்வேறு கைகளில் உதவியவர், இரவு நேரங்களில் நீண்ட நேரம் இறைவனிடத்தில் ஜெபித்தார். மக்களுக்கு பாவ சங்கீர்த்தனம் வழங்கி, அவர்களின் புனித வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார்.

தூய வின்சென்ட் பல்லோட்டியைப் போன்று நாமும் ஜெபத்திற்கு அதிக நேரம் ஒதுக்குகிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஜெபம் ஜெயத்தைத் தரும் என்பார்கள். நாமும் இறைவனிடத்தில் தொடர்ந்து ஜெபிக்கின்றபோது அதற்கான அருளைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

ஆகவே, தூய பல்லோட்டியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் போன்று ஏழை எளியவருக்கு இரங்கும் நல்ல உள்ளத்தையும், ஜெபிக்கின்ற மனநிலையையும் பெற்று வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“தூய்மை என்பது இறைவிருப்பத்தை எல்லா வேளையிலும், எல்லா இடங்களிலும் செய்வது” – தூய வின்சென்ட் பல்லோட்டி.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image