St. Felician St. Francis de Sales Bl. Vincent

ஜனவரி 24

தூய பிரான்சிஸ் சலேசியார் (ஜனவரி 24)

mary

mary

தூய பிரான்சிஸ் சலேசியார் (ஜனவரி 24)

இதழியலார் மற்றும் எழுத்தாளர்களின் பாதுகாவலர்

நிகழ்வு

“தூய பிரான்சிஸ் சலேசியார் என்னுடைய வாழ்வின் முன்மாதிரி; அவருடைய வாழ்க்கை வரலாற்றை நான் பலமுறை படித்திருக்கிறேன். அவருடைய அறிவுரைகள் என் வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! அவரது முன்மாதிரிகையால், தாழ்ச்சி, சாந்தகுணம், அமைதி இவைகளின் மீது என் உள்ளம் தணியாத வேட்கை கொண்டுள்ளது. நாள்தோறும் நான் சாதாரண அலுவல்களையும் மிக மேலான நோக்கத்துடன் செய்தாலே போதும் என்று இப்போது புரிந்துகொண்டேன். பிரான்சிஸ் சலேசியார் அமைதிப் பண்பு உள்ளவராகவே மக்கள் அனைவரிடத்திலும் நடந்துகொண்டார் என்பதை அவரைத் தேடி வந்த யாவரும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது”

இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான். அவர் தூய பிரான்சிஸ் சலேசியாரை முன்மாதிரிகையாகக் கொண்டு, தன்னுடைய வாழ்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கை வரலாறு

தூய பிரான்சிஸ் சலேசியார் 1567 ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள், பிரான்சில் உள்ள சாவாய் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். இவருடைய தந்தை, இவரை சட்டம் படிக்க பதுவாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பிரான்சிஸ் சலேசியாரோ சட்ட மேதையாக மாறுவதற்குப் பதிலாக குருவாக மாறி வந்தார். இது இவருடைய தந்தைக்குப் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் இவர், இறைவன் தன்னை ஒரு குருவாகப் பணிசெய்யவே அழைத்திருக்கிறார் என்று தன்னுடைய தந்தையிடம் எடுத்துச் சொல்லி குருத்துவப் பணியை தொடர்ந்து ஆற்றினார்.
குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவுடன் இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா என்ற இடத்தில் பணிசெய்ய நியமிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் கால்வின் பதிதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. எனவே, இவர் கால்வின் பதிதத்தை மிகவும் முழுமூச்சோடு எதிர்த்து, கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மறைக்குள் கொண்டு வந்தார். 1603 ஆம் ஆண்டு ஜெனிவாவில் இருந்த ஆயர் இறந்துவிட, இவர் ஆயர் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு இவர் இன்னும் தீவிரமாக கால்வின் பதிதத்தை எதிர்த்து, ஏறக்குறைய எழுபதாயிரம் கிறிஸ்தவர்களை கத்தோலிக்க மறைக்குள் கொண்டுவந்து சேர்த்தார்.

பிரான்சிஸ் சலேசியார் மிகப்பெரிய மறைபோதகராக விளங்கினார். இவருடைய போதனைகள் எல்லா மக்களையும் ஈர்ப்பதாக இருந்தது. அதனால் இவர் நிறைய மக்களை மனமாறச் செய்தார். கடவுள் இவருக்கு நன்றாக எழுதும் திறமையையும் கொடுத்திருந்தார். அதன் வழியாக இவர் Introduction to Devout Life, Treastise on the Love of God and Spiritual Conferences என்ற இரண்டு புத்தகங்களைப் படைத்திருக்கிறார். இவை இரண்டுமே ஆன்மீக வாழ்விற்கு பேருதவியாக இன்றுவரை இருக்கின்றன. இவர் ஒரு சபையையும் ஏற்படுத்தினார். அந்தச் சபையின் பெயர் “Orders Of the Sisters of Visitation”. இயல்பிலே இவர் மிகவும் தாழ்ச்சியும் சாந்தகுணம் உள்ளவராக இருந்தார். அதனால் நிறைய மக்கள் இவரை எளிதாக அணுகமுடிந்தது.

இப்படி திருச்சபையின் வளர்ச்சிக்குப் பேருதவியாகவும், மக்களின் ஆன்மீக வாழ்விற்கு உற்றத் துணையாகவும் இருந்த பிரான்சிஸ் சலேசியார் 1622 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பிரான்சில் உள்ள லியோன் என்ற இடத்தில் இறைவனடி சேர்ந்தார். 1665 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்சிஸ் சலேசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. தாழ்ச்சி

தூய பிரான்சிஸ் சலேசியார் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாது. தன்னுடைய உள்ளத்தில் தாழ்ச்சி, செயலிலும் தாழ்ச்சியோடு விளங்கினார். அதனால்தான் நிறைய மனிதர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார். நீதிமொழிகள் புத்தகம் 18:12 ல் வாசிக்கின்றோம், “மேன்மையடைய தாழ்சியே வழி” என்று. நாம் தாழ்ச்சியோடு இருக்கின்றபோது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் (மத் 11:29). நாம் ஆண்டவர் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் இதுவாகத்தான் இருக்கின்றது. எனவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை கடைப்பிடித்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஓர் ஊரில் மக்களை அதிகமாக அன்பு செய்த, மிகவும் தாழ்ச்சியான மகான் ஒருவர் இருந்தார். மக்களும் பதிலுக்கு அவரை அதிகமாக அன்புசெய்தார்கள். ஒருநாள் அவருக்கு முன்பாக வானதூதர் ஒருவர் தோன்றி, “கடவுள் நீங்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பார்த்துவிட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். ஆதலால், அவர் என்னை உங்களிடத்தில் அனுப்பி, உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டுவரச் சொன்னார்” என்றார். அதற்கு அவர், “எனக்கு ஒரு வரமும் வேண்டும், கடவுள் என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறாரே அதுவே போதும்” என்றார். உடனே வானதூதர், “அப்படியில்லை கடவுள் உங்களுக்கு ஏதாவது வரத்தைத் தந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆகையால் உங்களுக்கு ஏதாவது ஒரு வரத்தை கட்டாயம் தரவேண்டும். நோயாளிகளைக் குணப்படுத்தும் வரத்தைத் தரவா? என்றார். மகானோ, “நோயாளிகளைக் குணப்படுத்துவது கடவுளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சக்தி. தயவுசெய்து அந்த வரத்தை எனக்குக் கொடுத்து என்னைக் கடவுளுக்கு இணையாக்கி விடாதீர்” என்றார்.

“அப்படியானால், உங்களுக்கு பாவிகளை மனந்திரும்பச் செய்யும் வரத்தைத் தரட்டுமா?” என்றார் வானதூதர். “பாவிகளை மனந்திருப்பும் பணி வானதூதர்களுக்குச் சொந்தமானது, எனக்கு அந்த வரம்வேண்டாம்” என்றார் மகான். “எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். பின்பு என்ன வரத்தைத்தான் உங்களுக்குத் தருவது?” என்று கெஞ்சிக் கேட்டார் வானதூதர். சற்று நிதானமாக யோசித்த மகான், “நான் செய்யும் நல்ல செயல் எதுவும் யாருக்குமே தெரியாமல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வரத்தை எனக்குத் தாரும். ஏனென்றால் என்னால் ஒரு நல்ல செயல் நடைபெறுகிறது என்று எனக்குத் தெரிந்தால், அது எனக்குள் ஆணவத்தை உண்டு பண்ணும். ஆகையால் நான் செய்யும் நல்ல செயல் யாருக்குமே தெரியாமல் நடக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு வரத்தைத் தாரும்” என்றார்.

உடனே வானதூதர் அவருக்கு, அவர் சூரிய ஒளியைப் பார்த்து நடக்கின்றபோது, அவருடைய நிழல்படும் மக்களைக் குணப்படுத்தும் வரத்தைத் தந்தார். அந்த மகான் சூரிய ஒளியை நோக்கி நடந்தபோது, அவருடைய நிழல் அவருக்குப் பின்னால் விழுந்தது. இதனால் அவருக்கு, அவருடைய நிழல் யார்மீது விழுகிறது என்றோ, அதனால் யார் குணமடைகிறார் என்றோ தெரியவில்லை. அவருக்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்தார்கள்.

இப்படி, தான் செய்யும் நற்செயல் யாருக்குமே தெரியக்கூடாது என்று மிகவும் தாழ்ச்சியோடு வாழ்ந்த மகானால் ஏராளமான பேர் நன்மைகளை அடைந்தார்கள். அவரும் கடவுளுடைய பார்வையில் மேன்மைமிக்கவராக விளங்கினார்.

“தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்படுவார்” என்பார் இயேசு. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் மகானும் சரி, நம் புனிதர் பிரான்சிஸ் சலேசியாரும் சரி தாழ்ச்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். ஆகவே, நாமும் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழும்போது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தபடுவோம் என்பது உறுதி.

2. இயற்கையில் இறைவனைக் காணுதல்

தூய பிரான்சிஸ் சலேசியார், தான் படித்தபோதும் சரி, குருவாக மாறியபிறகும் சரி இயற்கையில் இறைவனைக் காண முயன்றார். இதனை நாம் அவர் எழுதிய Introduction to Devout Life, Treastise on the Love of God and Spiritual Conferences என்ற இரண்டு புத்தங்களிலும் காணலாம்.

இப்புனிதரின் விழாவைக் கொண்டாடும் நாம் இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என உணர்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இளைஞன் ஒருவன் கடவுளைக் காண்பதே தன்னுடைய இலட்சியம் என்று முடிவு செய்தான். அதனால் அவன் ஒரு வனத்துக்குள் போய் அமர்ந்தான். “கடவுளே! உன் குரலைக் கேட்க வேண்டும்” என்று கத்தினான். குயிலோசை மட்டும் கேட்டது. அவன் கவனிக்கவில்லை. “கடவுளே! என்னிடம் பேச மாட்டாயா” என்று அழுது புரண்டான். இடி ஓசை எழுந்தது. அவனுக்குப் புரியவில்லை. “கடவுளே உன்னைப் பார்க்கவேண்டும்” என்று அலறினான். ஒரு நட்சத்திரம் ‘பளீர்’ என்று ஒளி வீசியது. அவன் பார்க்கவில்லை. ‘கடவுளே என்னை வந்து தீண்ட மாட்டாயா? என்று கெஞ்சினான். ஒரு வண்ணத்துப்பூச்சி பறந்து வந்து தோளில் வந்து அமர்ந்தது. அவனோ அதனைத் தட்டிவிட்டு “கடவுள் இல்லை என்பதுதான் நிஜம் போலிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினான்.

பிரபஞ்சத்தின் மொழி புதியாத அந்த இளைஞனால் கடவுளின் மொழியை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்றுதான் தெரியவில்லை. கதையில் வரும் இளைஞனைப் போன்றுதான் நாமும் இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என்பதை உணராமல், இயற்கையை அழிக்கின்றோம், அதனை மாசுபடுத்துகின்றோம். ஆகவே, இத்தகைய ஒரு நிலையை மாற்றி இறைவன் இயற்கையில் உறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, இயற்கையை காக்க முயற்சிப்போம்.

எனவே, தூய பிரான்சிஸ் சலேசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம், இயற்கையில் இறைவனைக் காண முயற்சிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image