Conversion of St Paul Bl. Manuel Domingo

ஜனவரி 25

பவுலின் மனமாற்ற விழா

mary

பவுலின் மனமாற்ற விழா (25-01-2019)

நிகழ்வு

அக்காலத்தில் சவுல் சீறியெழுந்து எழுந்து ஆண்டவருடைய சீடர்களை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். ஆண் பெண்களை கொன்றுவிட அனுமதிபெற்று தமஸ்கு நோக்கி வரும்வழியில், தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ "சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?" என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக "நீ துன்புறுத்தும் இயேசு, நானே!, உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும்" என்று கூறினார். அக்குரலை உடனிருந்தவர்களும் கேட்டனர். ஆனால் வியப்பில் ஆழ்ந்தனர். சவுல் எழுந்தபோது கண்கள் திறந்திருந்தும் எதனையும் காணும் திறனை இழந்திருந்தார். உடனிருந்தவர்கள் அவரது கைகளை பிடித்து தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள். அங்கே மூன்று நாள் பார்வையற்று இருந்தார். எதுவும் உண்ணவும் குடிக்கவுமில்லை.

அந்நகரில் அனனியா என்ற சீடர் இருந்தார். ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் அங்கே தர்சு நகர சவுல் தேடு. அவர் ஒரு காட்சியை கண்டுள்ளார். அக்காட்சியில் அனனியா என்பவர் வந்து சவுல் பார்வையடைய வேண்டுமென்று தமது கைகளை அவர் மீது வைப்பதாக காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார். அதற்கு அனனியா “அவன் கிறிஸ்துவர்களை அழிக்க கங்கனம் கட்டித்திரிபவன் ஆயிற்றே” என்று கூற, ஆண்டவர் “நீ அங்கு செல், என் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தேர்ந்து கொண்டவரே அவர்! எனது கருவியாக செயல்படுவார். பிற இனத்தாருக்கும் அரசர்களுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துரைக்கும் கருவியே! என்றார். என் பொருட்டு அவர் எத்துன்பம் அடைய வேண்டும் என்பதும் அவருக்கு காட்டுவேன்” என்றார்.
உடனே அனனியா நகருக்குச் சென்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவர் பெயரால் அவர் மீது கைகளை வைக்க தூய ஆவியின் ஒளி கீற்றுக்கள் அவரது விழிகளை திறக்கச் செய்து அதிலிருந்து செதில்கள் விழுந்தன. மீண்டும் சவுல் பார்வை பெற்றவராய் ஆண்டவரின் ஒளியை பெற்று கிறிஸ்துவின் கருவியாக மாறினார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அதனால் தூய பவுலைப் பற்றி ஒருசில உண்மைகளை அறிந்துகொள்வோம்.

தூய பவுல் கி.பி. 9 ஆம் ஆண்டளவில் யூதாவின் பன்னிரு குலங்களில் ஒன்றான பெஞ்சமின் குலத்தில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது. இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார். உலகப் பொதுமொழியாயிருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் எருசலேம் சென்று, புகழ்பெற்ற கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றார். யூதக் கோட்பாடுகளைக் கில்லேல் என்பவரது விளக்கங்களைத் தழுவிக் கடைப்பிடிக்கும் பரிசேயர் சமயப் பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்த்தீனாவில் இருந்திருக்கலாம் எனக் கூற இடம் உண்டு.

இப்படிப்பட்டவர் யூத மதத்தின்மீது இருந்த பற்றினால் கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தத் தொடங்கினார். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு இவர் உடன்பட்டிருந்தார் என்று திருத்தூதர் பணிகள் நூலிலே நாம் வாசிக்கின்றோம் (திப8:1). ஒருமுறை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில்தான் ஆண்டவராகிய இயேசு அவரைத் தடுத்து ஆட்கொள்கிறார். அவரை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவுக்கும் கருவியாக ஏற்படுத்துகிறார்.

தூய பவுல் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க மூன்று திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. முதல் நற்செய்திப் பயணத்தைக் கி.பி. 46-48 ஆண்டுகளில் மேற்கொண்டு, சைப்பிரசுக்கும் சின்ன ஆசியா நாட்டுப் பகுதிகளுக்கும் சென்று திருச்சபையை நிறுவினார் (திப 13,14; 2 திமொ 3:11). கி.பி. 49 ஆம் ஆண்டில் எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டு பிற இனத்தாரிடையே தூய ஆவி செயல்படுதலைப் பற்றி எடுத்துரைத்துத் தமது பணிக்குச் சங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டார் (திப15; கலா 2:3-9). கி.பி. 50-52க்கு உட்பட்ட காலத்தில் பவுல் தமது இரண்டாவது நற்செய்திப் பயணத்தை மேற்கொண்டு, தாம் ஏற்கனவே நிறுவிய சபைகளை வலுப்படுத்தினார். பின்னர் மாசிதொனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து, அங்கும் திருச்சபைகளை நிறுவினார் (திப 15-18). கி.பி. 53-57 வரை மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது கலாத்தியா, பிரிகியா, கொரிந்து, மாசிதோனியா, இல்லிரிக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று திருப்பணி ஆற்றினார்.

அதன்பிறகு எபேசு நகரை மையமான பணித்தளமாகக் கொண்டு பவுல் செயல்பட்டார். அங்குச் சிறைப்பட்டார். அக்காலத்தில் அவர் சில சிறைக்கூட மடல்களை எழுதியிருக்கலாம். பின் கி.பி. 58 ஆண்டு எருசலேமில் கைதானார். கி.பி. 60 வரை செசரியாவில் சிறைப்பட்டிருந்தார். உரோமைப் பேரரசர் சீசரே தமக்குத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பவுல் கேட்டுக்கொண்டதால் உரோமைக்கு அனுப்பப் பெற்றார். அங்கு போகும் வழியில் கப்பல் அழிவுற நேரிட்டதால் மால்தா தீவினருக்கு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்பு பவுல் உரோமை வந்தடைந்து இரு ஆண்டுகள் வீட்டுக் கைதியாகவே இருந்துகொண்டு நற்செய்தி அறிவித்து வந்தார். பின்பு பவுல் விடுதலை பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருப்பார் என நம்ப இடமிருக்கிறது. மீண்டும் கி.பி. 60 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் பவுல் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பவுலடியாரின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருச்சபையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், பவுலடியாரின் மனமாற்றத்திற்குப் பிறகுதான் ஆண்டவரது நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது, திருச்சபை இன்னும் அதிகமாக வலுப்பெற்றது.

மேலும் விவிலியத்தில் ஒரு நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுகிறபோது அது மிகவும் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து மூன்றுமுறை முன்னறிவிக்கின்றார். இயேசுவின் வாழ்வில், மீட்பின் வரலாற்றில் பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது. அதைப் போலவே பவுலின் மனமாற்ற நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுவதை வைத்துப் பார்க்கும்போதே (திப 9,22, 26) அது திருச்சபையின் வரலாற்றில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, இந்த வேளையில் தூய பவுலடியாரின் மனமாற்ற விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாம் ஒவ்வொருவரும் மனமாறவேண்டும்
பவுலடியார் யூத மதத்தின்மீது கொண்ட ஆழமான பற்றுறுதியினால், அம்மதத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த கிறிஸ்தவ மதத்தையும் அதனைப் பின்பற்றியவர்களையும் வேறொரு அழிக்க நினைத்தார். அதாவது தான் செய்வது தவறு என்று தெரியாமலே தவறுசெய்கிறார் தூய பவுல். அப்போதுதான் ஆண்டவர் இயேசு அவரைத் தடுத்தாட்கொண்டு அவருக்கு உண்மையை உணர்த்துகிறார், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது தன்னையே துன்புறுத்துவது என எடுத்துரைக்கிறார். உடனே அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, யாரைத் துன்புறுத்தத் துணிந்தாரோ, அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிகிறார். ஆகவே, பவுலடியாரைப் போன்று நாமும் நம்முடைய தவற்றை உணர்ந்து இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். இதுதான் நமக்கு முன்னால் உள்ள சவாலாக இருக்கின்றது.
பலநேரங்களில் நாம் ‘தவறு செய்கிறோம்’ என்று தெரியாமலே செய்கிறோம். இதுதான் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.
ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொண்டி நொண்டி நடந்தார்கள். நீண்ட நாட்களாக அவர்கள் இப்படியே நடந்து வந்ததால், நொண்டி நொண்டி நடப்பதுதான் இயல்பானது என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு புதிய ஆள் வந்தார். அவர் நன்றாக நடக்கக்கூடியவர். அவர் அங்கே இருக்கும் மக்கள் நொண்டி நொண்டி நடப்பதைப் பார்த்துவிட்டு, என்ன இந்த மக்கள் இப்படி நடக்கிறார்களே, இவர்களுக்கு எப்படி நடக்கவேண்டும் என்று கற்றுத்தரவேண்டும் என முடிவுசெய்து அவர்களிடத்தில் சென்றார். அவர் நடந்து வருவதைப் அந்த ஊரைச் சேர்ந்த ஒருசில பெரியவர்கள், அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். இவர் அம்மனிதர்களிடம், “நான் நடப்பது போன்று இப்படி நடக்கவேண்டும் என்று அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்தார்கள். ஒருசிலர், “நாங்கள் நடப்பதுதான் சரியானது, உமக்கு ஒன்றும் நடக்கத் தெரியவில்லை, எப்படிப் பேசவேண்டும் என்று கூடத்தெரியவில்லை” என்று சொல்லி அவரைப் பார்த்து சத்தமாகச் சிரித்தார்கள். இதை பார்த்த அந்த புதிய மனிதர், நமக்கெதற்கு வம்பு என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்.

கதையில் வரும் அந்த ஊர்க்கார்கள் போன்று தான் நாமும், நாம் செய்வது தவறு என்று தெரியாமலே செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே, நாம் தூய பவுலடியாரைப் போன்று, நம்முடைய தவற்றை உணர்ந்து திருந்தி நடப்பதுதான் இறைவனுக்கு உகந்த காரியமாகும்.

2. கிறிஸ்தவர்களில் கிறிஸ்து
பவுலின் மனமாற்றம் நமக்குத் தரும் இரண்டாவது செய்தி கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பதாகும். பவுலடியார் எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நோக்கிச் செல்கிறபோது, வானத்திலிருந்து தோன்றிய ஒளியானது அவரைச் சூழ்ந்துகொள்ள அவர் தான் பயணம் செய்த குதிரையிலிருந்து கீழே இடறி விழுகிறார். அப்போது அவர், “ஆண்டவரே நீர் யார்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என்கிறார் (திப 9:6). இங்கே இயேசு தன்னை கிறிஸ்தவர்களோடு, திருச்சபையோடு இணைத்துகொள்கிறார் அல்லது அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது உண்மை. நாம் நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளுக்கு ஒன்று செய்ய, அது இறைவனுக்கே செய்வதாகும் (மத் 25:40) என்ற உண்மையை இங்கே நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

எனவே, தூய பவுலடியாரின் மனமாற்ற விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் நம்முடைய தவறுகளை உணர்ந்து மனமாறி, ஆண்டவரிடம் திரும்பி வருவோம், அதே நேரத்தில் அடுத்தவரில் ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து, எல்லாரையும் அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image