St. Thomas Aquinas

ஜனவரி 28

தாமஸ் அக்குயினாஸ்

mary

mary

தாமஸ் அக்குயினாஸ் (ஜனவரி 28)

நிகழ்வு

“இறையியலாளர்களின் இளவரசர்”, “மறைவல்லுநர்” என அழைக்கப்படும் தாமஸ் அக்குயினாஸ் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. ஒருமுறை அவர் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “தாமஸ்! நீ என்னைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறாய். அதனால், இப்போது நீ என்னிடம் என்ன கேட்டாலும் அதை உனக்குத் தர நான் தயாராக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்?” என்று கேட்டார். அதற்கு தாமஸ் அக்குயினாஸ், “ஆண்டவரே! எனக்கு உண்மையன்றி வேறெதுவும் வேண்டாம். நீ மட்டும் போதும்” என்றார்.

தாமஸ் அக்குயினாஸ் ஆண்டவர் ஒருவர் மட்டுமே போதும் என அவரைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தார். அதனால்தான் கடவுள் அவரை எல்லாவிதங்களிலும் ஆசிர்வதித்தார்.

வாழ்க்கை வரலாறு

தாமஸ் அக்குயினாஸ் 1225 ஆம் ஆண்டு லாண்டோல்ப், தியோடரா என்ற தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். அரச வம்சத்தோடு எப்போதும் நெருக்கமாக இருந்த குடும்பம். சிறுவதிலேயே இவர் அறிவும் ஞானமும் நிறைந்தவராய் விளங்கினார். இவர் தன்னுடைய பத்தாவது வயதில் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுப்பிவைக்கப்பட்டார். அங்கே இவர் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவரை இரண்டு ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைத்துவைத்து, இவரை பலவாறாக சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதேல்லாம் இவர் மனவுறுதியோடு எல்லாச் சோதனைகளையும் வெற்றிகொண்டார்.
ஒருசமயம் இவருடைய இரண்டு சகோதரர்கள் இவர் தங்கியிருந்த அறையில் ஒரு விலைமகளை அனுப்பி வைத்து சோதிக்கப் பார்த்தனர். அப்போது இவர் சுவற்றில் சிலுவை அடையாளம் வரைந்து, அதற்கு முன்பாக ஜெபித்தார், “ஆண்டவரே இந்த சோதனையிலிருந்து நான் வெளியேறுவதற்கு எனக்கு ஆற்றலைத் தா” என்று. இவர் ஜெபிப்பதைப் பார்த்த விலைமகள் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினாள். இவ்வாறு தாமஸ் அக்குவினாஸ் தனக்கு வந்த எல்லாவிதமான சோதனைகளையும் வெற்றிகொண்டு, குருவாகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இருந்தார். தாமஸ் அக்குவினாஸ் வீட்டுச் சிறையில் இருந்த தருணங்களில், இவருடைய சகோதரிதான் இவருக்கு விவிலியத்தையும் தத்துவவியல், இறையியல் சம்பந்தப்பட்ட நூல்களைக் கொடுத்து, இவரை அறிவிலும் ஞானத்திலும் வளர்த்தார். இப்படி வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்த தாமஸ் அக்குயினாசை, அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் ஒரு கூடையில் வைத்து, வெளியே தூக்கி வந்தனர். அதன்பிறகு இவர் தொமினிக்கன் சபையில் சேர்ந்து 1245 ஆம் ஆண்டு, தன்னுடைய இருபதாவது வயதில் குருவாக மாறினார்.

குருவாக மாறிய பிறகு தாமஸ் அக்குயினாஸ், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது இவருடைய வகுப்புகளில் பங்குபெறுவதற்கு மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வந்தார்கள். அந்தளவுக்கு இவருடைய வகுப்புகள் மாணவர்களைக் கவர்ந்திழுப்பதாக இருந்தன. இவருடைய காலத்தில் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவற்றையெல்லாம் இவர் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார்.

தாமஸ் அக்குயினாஸ் நற்கருணை நாதரிடம் அதிகமான பக்தியும், ஜெபத்தில் ஆழமான ஈடுபாடும் கொண்டு வாழ்ந்தார். அவர் நற்கருணை நாதர்மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடாக விளைந்ததுதான் ‘மாண்புயர் இவ்வருள்சாதனத்தை” என்ற பாடல். இவர் குறைந்த வயதிலே அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை : Summa Contra Gentiles, Summa Theologiae என்ற இரண்டு படைப்புகள் ஆகும். முன்னது கிறிஸ்தவ மதத்தைத் சாராதவர்கள் கிறிஸ்துவின் மீது நம்பிக்கைகொள்வதற்காக எழுதப்பட்டது. பின்னது கிறிஸ்தவ மறைபோதனைகளுக்கும் மெய்யியலுக்கும் உள்ள நெருக்கமான உறவை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. இப்படைப்பு முழுமை பெறாத ஒன்று என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாகும்.

இதனை ஒட்டி சொல்லப்படும் ஒரு செய்தி. 1772 ஆம் ஆண்டு தாமஸ் அக்குயினஸ் நேப்பிள்ஸ் என்ற இடத்தில் இருந்த ஒரு சிற்றாலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது இவர் ஒரு காட்சியைக் கண்டார். அந்த காட்சியைக் கண்டபிறகு இவர் தான் இதுவரை எழுதியது அனைத்தும் ஒன்றுமில்லை என உணர்ந்தார். அதனாலே அவர் Summa Theologiae என்ற அந்த புத்தகத்தை எழுதுவதைப் பாதியிலே விட்டுவிட்டார். தாமஸ் அக்குயினாஸ் விவிலியத்தில் வரும் ஏதாவது மறை உண்மையைப் புரிந்துகொள்வதற்காக நீண்ட நேரம் ஒதுக்கி ஜெபித்தார். சில நேரங்களில் இவர் தன்னை மறந்து ஜெபித்ததனால், உணவு உண்ணக் கூட மறந்துபோனார். இதனால் இவருக்கென்று ஒரு உதவியாளர் நியம்பிக்கப்பட்டார். அவர் தாமஸ் அக்குயினாசை உடனிருந்து கவனித்துக்கொண்டார். 1274 ஆம் ஆண்டு, லயன்சில் நடைபெற்ற நான்காவது பொதுசங்கத்தில் கலந்துகொள்வதற்காக தாமஸ் அக்குயினாஸ் சென்றபோது, போகும் வழியிலே உயிர் பிரிந்தார். 1323 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறையியலாளர்களின் இளவரசர் எனப்படும் தூய தாமஸ் அக்குயினாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்

1. நற்கருணை ஆண்டவர்மீது பக்தி

தாமஸ் அக்குயினாசின் வாழ்க்கையை ஆழ்ந்து படிக்கும்போது அவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவர்மீது பக்திகொண்டு வாழ்ந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். திருத்தந்தையின் கட்டளையின் பேரில் இறை உந்துதலால் அவர் எழுதிய “Tantum Ergo, Salutaris Hostia” என்ற பாடல் நற்கருணை ஆண்டவர்மீது இவர் கொண்ட பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.

கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் நாம், “நம்முடைய வாழ்வின் ஊற்றும் உச்சமாகிய நற்கருணையின் மகிமையை உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நற்கருணை ஆண்டவரின் வல்லமையையும், நற்கருணை ஆண்டவர் குடிகொண்டிருக்கும் மனிதர்களின் அருமையையும் உணராமலும், அவர்களுக்கு போதிய மதிப்பளிக்காமலும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

பிரான்சு நாட்டில் ஜனவரி மாதங்களில் எல்லாம் பனிபொழிவு அதிகமாக இருக்கும். மக்கள் சாலைகளில் அவ்வளவு எளிதாக நடவர முடியாது. ஏனென்றால், எதிர்வரும் மனிதர் யாரெனத் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும். அப்படிப்பட்ட தருணத்தில், ஒருநாள் இரவு பாதசாரிகள் கூட்டம் பக்கத்து நகருக்கு நடந்துசென்றுகொண்டிருந்தது. அன்றைக்கு பனிப்பொழிவு மற்ற நாட்களை விட சற்று அதிகமாக இருந்ததால், அவர்கள் இரவு நேரத்தில் எங்காவது ஓரிடத்தில் தங்கிவிட்டு காலையில் பயணத்தைத் தொடரலாம் என முடிவுசெய்தார்கள்.

அதன்படி அவர்கள் தங்குவதற்கு ஓர் இடம் தேடியபோது அருகே ஒரு துறவுமடம் இருந்தது. எனவே, அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என நினைத்து, துறவுமடத்தின் கதவைத் தட்டினார்கள் அப்போது கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் மாடாதிபதி பிரே (Piere) என்பவர். அவரிடத்தில் அந்த பாதசாரிகள் நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். சிறிது நேரம் யோசித்தவர், துறவுமடத்தில் எல்லா அறைகளும் நிரம்பி இருக்கின்றன. ஒரே ஒரு அறைமட்டும்தான் காலியாக இருக்கின்றது. ஆனால் அந்த அறையில்கூட இந்த பனிக்காலத்தில் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லையே... ஒன்றுசெய்யுங்கள். நீங்கள் போய் மடத்தில் உள்ள சிற்றாலயத்தில் படுத்துக்கொள்ளுங்கள், அது இந்த பனிக்காலத்தில் தங்குவதற்கு ஏதுவாக இருக்கும். நான் அங்கே இருக்கும் நற்கருணை ஆண்டவரை இந்த அறையில் எடுத்து வைத்துக்கொள்கிறேன்” என்றார். அதன்படி அவர்கள் சிற்றாலத்தில் போய் தங்கிக்கொண்டார்கள்.

அடுத்தநாள் காலையில் துறவுமடத்தில் இருந்த துறவிகள் அனைவரும் ஜெபிப்பதற்காக சிற்றாலயத்திற்கு வந்தபோது, அங்கே வேற்று மனிதர்கள் தூக்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து மடாதிபதியிடம், “இதெல்லாம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் நடந்தது அனைத்தையும் சொன்னார். அப்போது ஒரு துறவி அவரிடம், “இம்மனிதர்களை காளியறையில் தூங்க வைத்துவிட்டு, நற்கருணை ஆண்டவரை இங்கேயே வைத்திருக்கலாமே” என்று சொன்னார். அதற்கு மடாதிபதி, “நற்கருணை ஆண்டவரால் பனிப்பொழிவையும் குளிரையும் தாங்கிக்கொள்ள முடியும், இவர்களால் அப்படி முடியாதே” என்றார். அவர் எதுவும் பேசாமல் அமைதியானார்.

நற்கருணை ஆண்டவருக்கு முக்கியத்துவம் தரவேண்டும், அதேநேரத்தில் நற்கருணை ஆண்டவர் குடியிருக்கும் மானிடர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தாமஸ் அக்குயினாஸ் நற்கருணை ஆண்டவர்மீது பக்திகொண்டிருந்தார். அந்த பக்தியை அயலார்மீது கொண்ட அன்பின் வழியாக வெளிப்படுத்தினார். நாமும் நம்மிடம் இருக்கும் நற்கருணை பக்தியை வெறுமனே வழிபாட்டோடு நிறுத்திக் கொள்ளாமல், அதனை வாழ்வில் வெளிப்படச் செய்வோம்.

ஆகவே, தூய தாமஸ் அக்குயினாஸ் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். நற்கருணை ஆண்டவர் மீது ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அந்த பக்தியை செயலில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image