St. Anskar St. Blaise St. Werburca

பிப்ரவரி 3

தூய பிளைஸ் – (Blaise)

mary

mary

தூய பிளைஸ் – (Blaise) ( 3 – 4ம் நூற்றாண்டு )

தொண்டை மற்றும் கால்நடை மருத்துவர்களின் பாதுகாவலர்

நிகழ்வு

கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக் காலத்தில் செபாஸ்டி என்ற இடத்தில் (தற்போதைய அர்மேனியா) ஆயராக இருந்த பிளைஸ் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தின் பொருட்டு கொல்லப்படுவதற்காக கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

அவ்வாறு அவர் இழுத்துச் செல்லப்பட்டபோது சிறுவன் ஒருவன் தொண்டையில் மீன்முள் குத்தி மிகவும் அவதிப்பட்டான். அவனைப் பார்த்து அவன்மீது இரக்கப்பட்ட பிளைஸ் அவனைத் தன்னருகே அழைத்து அவனுடைய தொண்டையில் கைவைத்து ஜெபித்தார். உடனே அந்த சிறுவனது தொண்டையில் இருந்த மீன்முள்ளானது வெளியே வர, அவன் வேதனையிலிருந்து சுகம் பெற்றான். பிளைஸ் சிறுவனது தொண்டையிலிருந்து மீன்முள்ளை நீக்கி அவனுக்கு சுகம் தந்ததால், அதன் அடையாளமாக அவருடைய விழாவின்போது யாராரெல்லாம் தொண்டை வலியால் அவதியுறுகிறார்களோ அவர்களுடைய தொண்டையில் குருக்கள் கை வைத்து ஜெபிப்பார்கள். அவர்களும் நலம் பெற்றுச் செல்வார்கள்.

வாழ்க்கை வரலாறு

தொடக்கத் திருச்சபையில் மிக முக்கியமான ஆளுமையாக – புனிதராக – அறியப்பட்டவர் தூய பிளைஸ். ஆனால் இவரைக் குறித்த செய்திகள் அவ்வளவாக இல்லை என்பதுதான் உண்மை.

தூய பிளைஸ் கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது. அப்படிருந்தாலும் ஏராளமான பேர் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய உயிரே போனாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து மட்டும் ஒருபோதும் தளரமாட்டோம் என்றளவுக்கு இருந்தார்கள். இவர்களில் தலைசிறந்தவராக அறியப்பட்டவர் பிளைஸ்.

செபாஸ்டி என்ற இடத்தில் ஆயராக இருந்த பிளைஸ் ஆட்சியாளர்களால் கிறிஸ்துவை மறுதலித்து உரோமைக் கடவுளை வழிபடப் பணிக்கப்பட்டார். ஆனால் பிளைசோ கிறிஸ்துவின் மீதுகொண்ட விசுவாசகத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சீற்றம் கொண்ட கப்பதோசியாவைச் சார்ந்த அக்ரிகோலா என்ற ஆளுநன் பிளைசை கொலைகளத்திற்கு இழுத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்யச் சொன்னான். இதனால் 316 ஆம் ஆண்டில் பல்வேறு விதமாக சித்ரவதை செய்யப்பட்டு அவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விசுவாசத்தில் உறுதி

தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவரிடமிருந்த உறுதியான விசுவாசம் – நம்பிக்கைதான். அவர் எத்துணை அச்சுறுத்தல்கள் வந்தபோதும் பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தபோதும் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மட்டும் மனம் தளரவே இல்லை. அவரிடத்தில் இருந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், “என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்... என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மனவுறுதியுடன் மனவுறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்” என்று. (மத் 10: 18, 22) ஆம், நாம் இயேசுவின் பொருட்டு பல்வேறு துன்பங்களையும் கொடுமைகளையும் சந்திக்க நேரிடலாம், அத்தகைய தருணங்களில் நாம் மனம்தளர்ந்து போய் விசுவாசத்தைக் கைவிட்டுவிடக்கூடாது, இறுதிவரை மனவுறுதியுடன் தூய பிளைசைப் போன்று சாவுக்கு அஞ்சாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் மீட்கப்படுவோம்.

இந்த இடத்தில் இன்னொரு நிகழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

எட்டாம் ஹென்றியின் ஆட்சியில் இரண்டு குருக்கள் கிறிஸ்துவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்து, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் அவர்கள் இருவரையும் தன்னிடம் அழைத்து, “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது, மீறி அறிவித்தால் தாமஸ் (Thames) நதியில் தூக்கி வீசப்பட்டு, கொலைசெய்யப்படுவீர்கள்” என்றான். அதற்கு அந்தக் குருக்கள் இருவருமே ஒருமித்த குரலில், “எங்களுடைய இலக்கு விண்ணகம் அடைவதுதான், அதனை நாங்கள் நீரில் வைத்து இறந்து பெற்றால் என்ன? நிலத்தில் இறந்து பெற்றால் என்ன?” என்றார்கள். இதைக் கேட்டு மன்னன் மிரண்டுபோய் நின்றான்.

சாவுக்குப் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்த அந்த குருக்களும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகை. தூய பிளைசும் அப்படித்தான் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.

ஆகவே, தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று கிறிஸ்துவின்மீதுகொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

image