St. Gonsalo Garcia St. Amandus St. Dorothy
St. Frances St. Vadast

பிப்ரவரி 6

கொன்சாலோ கார்சியா (பிப்ரவரி 06)

mary

கொன்சாலோ கார்சியா (பிப்ரவரி 06)

நிகழ்வு

இந்திய மண்ணில் பிறந்து முதல் மறைசாட்சியான தூய கொன்சாலோ கார்சியா மணிலாவில் வேதியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சமயம், மக்கள் அனைவரும் அவருடைய போதனையை கேட்பதற்காக ஆர்வத்தோடு திரண்டு வந்தார்கள். நிலக்கிழார்கள், பெரிய பெரிய பணக்காரர்கள் முதற்கொண்டு அவருடைய போதனையை கேட்பதற்காக வந்தார்கள். இச்செய்தி அங்கே இருந்த அரசியின் காதுகளை எட்டியது. எனவே, அரசி அந்த மனிதர் யார்? அவர் என்ன போதிக்கிறார்? என்பதைக் கேட்பதற்காக ஆர்வத்தோடு வந்தார். கொன்சாலோ கார்சியோ போதனையைக் கேட்ட சிறுது நேரத்திலே அவள் தொடப்பட்டார். தானும் அந்த மறையைத் தழுவதாக சம்மதம் தெரிவித்து திருமுழுக்குப் பெற்றார். அவருடைய திருமுழுக்கு பெயர் கார்சியா என்பதாகும்.

அரசியையே மனமாறச் செய்யும் அளவுக்கு தூய கொன்சாலோ கார்சியோவின் போதனை மிகவும் வல்லமை நிறைந்ததாகவும் உள்ளத்தைத் தொடுவதாகும் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புனிதரின் விழாவைத் தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கொன்சாலோ கார்சியா கி.பி. 1557 ஆம் ஆண்டு மும்பையிலுள்ள வாசையில் ஒரு போர்த்துக்கீசிய தந்தைக்கும் கொங்கண் மொழி பேசும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையில் இயேசு சபையார் நடத்தி வந்த கல்வி நிறுவனங்களில் பெற்றார். அப்போதுதான் இவருக்கு செபஸ்தியோ கான்கால்வ்ஸ் என்னும் இயேசுசபை குருவின் அறிமுகம் கிடைத்தது. அவர் எப்போதுமே ஜப்பானுக்குச் சென்று மறைபோதகப் பணியாற்றவேண்டும் என்று சொல்லி வந்தார். இதனால் கொன்சாலோ கார்சியோவுக்கும் ஜப்பானுக்குச் சென்று மறைபோதகப் பணியை ஆற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஓராண்டு காலம் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 15-ஆம் வயதில் செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார்.

ஜப்பானிய மொழியை இவர் ஏற்கனவே கற்றிருந்ததால், அம்மக்களின் நன்மதிப்பைப் எளிதாகப் பெற முடிந்தது. இவர் இயேசு சபையில் சேர்ந்து ஒரு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அது முடியாமல் போகவே அங்கிருந்து ஆல்கோ என்னும் இடத்திற்குச் சென்று சிலகாலம் வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது. பின்னர் இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்குச் சென்று அங்கே பொதுநிலை மறைபணியாளராகப் பணியாற்றினார். அங்கேதான் இவர் நிழக்கிழார்களையும் அரசியையும் மனமாறச் செய்தார். அப்போது இவர் பிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்திஸ்டி என்பவரைச் சந்தித்தார். அவரால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். அங்கே தொழு நோயாளர்களோடு பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

அதன்பிறகு இவர் 1592 ஆம் ஆண்டு, மே 26 ஆம் நாள், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஸ்பானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தபின், அப்போதைய ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் தங்கியிருந்த மியாகோ என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 1596 ஆம் ஆண்டு, டிசம்பர் 08 ஆம் நாள் அவரோடு பணிசெய்த மற்ற 25 கிறிஸ்தவர்களோடு சிறைவைக்கப்பட்டார். இதில் மூன்று இயேசு சபை துறவிகளும் அடங்கும். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 1597 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேடி தேதி கைது செய்யப்பட்ட 26 பேர்களது இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

1597 ஆம் ஆம் பிப்ரவரி 5 ஆம் நாள் அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை முதலில் கொன்சாலோ கார்சியாதான் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். அந்த சிலுவையை அடைந்ததும் முழந்தாள் படியிட்டு பணிந்து அதனைத் தழுவினார். பின்னர் அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை இறைப்புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.

1862 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள், திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் கொன்சாலோ காசியாவுக்கும் அவரோடு மறைசாட்சியாக உயிர் துறந்தவர்களுக்கும் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக கொன்சாலோ கார்சியா தன்னுடைய மரணத்தால் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கொன்சாலோ கார்சியாவின் விழாவைக் ண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுகொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 

1. சாவைத் துணிவோடு ஏற்றல்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார் (மத் 16: 24-25).

இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய கொன்சாலோ காரிசியாவும்கூட இயேசு சொன்னது போன்று சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார், அதனை கிடைத்தபோது துணிவோடு ஏற்றுக்கொண்டார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு, கிறிஸ்துவுக்காக நம்முடைய உயிரையே துறக்கும் துணிச்சல் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரேசில் நாட்டில் மறைபோதகப் பணியைச் செய்து, அங்கே தன்னுடைய இன்னுயிரைத் துறந்தவர் அருட்தந்தை ஆர்தர் டைலி (Arthur Tylee) என்பவர். அவர் அங்கே மறைபோதகப் பணியைச் செய்வதற்காக புறப்பட்டபோது, அவருடைய நெருங்கிய உறவினர் அவரைச் சந்தித்தார். “ஆர்தர்! தயவுசெய்து நீங்கள் அங்கே போகவேண்டாம். ஏனென்றால், அங்கே சென்று மறைபோதகப் பணியைச் செய்தவர்கள் திரும்பிவந்ததில்லை” என்று எச்சரித்தார். அதற்கு ஆர்தர், “நான் அங்கு சென்று நற்செய்திப் பணியை செய்வதைக் குறித்து சிறுதும் பயப்படவில்லை. காரணம், என்னுடைய உயிர் அங்கே போவதை நான் பெற்ற மிகப்பெரிய பாக்கியமாக /கொடையாகவே கருதுகிறேன்” என்றார்.

ஆம், கிறிஸ்துவுக்காக நாம் நம்முடைய உயிரையே இழப்பது மிகப்பெரிய பாக்கியமாகும். தூய கொசாலோ கார்சியோ அத்தகைய ஒரு பாக்கியத்தைதான் பெற்றார்.

2. விடாமுயற்சி

தூய கொன்சாலோ கார்சியோ விடாமுயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இவர் தொடக்கத்தில் இயேசு சபையில்தான் துறவியாக மாறவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அது முடியாமல் போகவே, அப்படியே அவர் முடங்கிப் போய்விடவில்லை, மாறாக அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து துறவியாக மாறுகிறார். ஆகவே, நம்மிடத்தில் விடாமுயற்சி இருக்கும்போது எத்தகைய காரியத்தையும் சாதிக்கமுடியும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய நேர்மையற்ற நடுவர் கைம்பெண் உவமை விடாமுயற்சியோடு எதையும் செய்யவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் விடாமுயற்சி என்ற குணம் நிறைந்து இருக்கிறதா/ என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வழிப்போக்கன் ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. ஊரை சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது. அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடிய பயணம் செல்லவேண்டி இருந்தது. அப்படியோர் வறட்சி நிலவி இருந்தது.

அப்போது ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்துகொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார் .உடனே அந்த வழிப்போக்கன் நன்றி என்று கூறிவிட்டு, ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால் உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான். உடனே அந்த விவசாயி, “ஐயா இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரை போன்று வறண்டுதான் கிடந்தது. என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும்தான் இன்று இப்படி காட்சி அளிக்கிறது” என்று பணிவாக கூறினான். மேலும் “ஐயா நான் இந்த நிலத்தை பதபடுத்தியபோது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை உடன் என் மனமும் பக்குவப்பட்டது” என்றான்.

இதுபோன்ற விடாமுயற்சியும் தன் நம்பிக்கையும் இருந்தால் நாம் ஈடுபடும் காரியத்தில் மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றிபெறலாம் என்று அந்த வழிபோக்கனுக்கு புரிந்தது.

ஆம், நம்மிடத்தில் விடாமுயற்சி இருக்கும் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்பது இந்த நிகழ்வு கற்றுத் தரும் உண்மை. ஆகவே, தூய கொன்சாலோ கார்சியாவின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் இழக்கத் துணிவோம், விடாமுயற்சியோடு வாழ்வோம், விடாமுயற்சியோடு ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image