St. Juliana Balcony St. Luke the young St. Pious the IX

பிப்ரவரி 7

தூய ஜூலியானா பால்கோனியேரி

mary

தூய ஜூலியானா பால்கோனியேரி

நிகழ்வு

கடுமையான ஒறுத்தல் முயற்சிகளாலும் தவமுயற்சிகளாலும் சகோதரி ஜூலியானாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. சரி, அவர் பெரிதும் ஆராதிக்கின்ற நற்கருணையையாவது அவருக்குக் கொடுத்துப் பார்ப்போம் என்று ஜூலியானாவின் ஆன்ம குருவானவர் அவருக்கு நற்கருணை கொடுத்தபோது, அதுவும் அவருக்குள் போகவில்லை. எனவே, ஆன்ம குருவானவர் அவருடைய நெஞ்சத்தில் நற்கருணையைப் பதித்துவிட்டுப் போய்விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஜூலியான இறந்துபோனார். இறந்த அவருடைய உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, நற்கருணை பதிக்கப்பட்ட அவருடைய மார்புப் பகுதியில் சிலுவை அடையாளம் இருந்தது. அப்போதுதான் அவரோடு இருந்தவர்கள் ‘ஜூலியானா ‘கடவுளால் சிறப்பான முறையில் ஆசிர்வதிக்கப்பட்டவள்’ என்னும் உண்மையை உணர்ந்துகொண்டார்கள்.

ஜூலியான தன் வாழ்நாள் முழுக்க, நற்கருணை ஆண்டவர்மீது உண்மையான பக்தி கொண்டு வாழ்ந்தினால் அவர் நற்கருணைப் புனிதை என்று அன்போடு அழைக்கப்படுகின்றாள்.

வாழ்க்கை வரலாறு

ஜூலியானா, இத்தாலியில் 1270 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் சியாரிசிமோ, ரிகுர்டாடா என்பவர் ஆவர். இந்தத் தம்பதியர்தான் இத்தாலியில் உள்ள மங்கள வார்த்தை ஆலயத்தைக் கட்டிக்கொடுத்த சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆவர். ஜூலியானாவின் சித்தப்பாவோ (அலெக்சிஸ்) மரியின் ஊழியர் சபையை நிறுவிய ஏழு நபர்களில் ஒருவர்.

ஜூலியான வளரும்போதே உலக காரியங்களில் பற்றுக்கொள்ளாமல் இறைவன்மீது மட்டுமே பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட நேரத்தில் அவருடைய தந்தை அவரைவிட்டுப் பிரிந்தார். தந்தையின் பிரிவுக்குப் பிறகு, தாயின் பராமரிப்பில் தான் வளர்ந்துவந்தார். அவர் ஜூலியானாவை இளம்வயதிலேயே திருமணம் முடித்துவைக்க நினைத்தார். ஆனால், ஜூலியானாவோ, தனக்கு உலக வாழ்க்கையில் நாட்டமில்லை என்று சொல்லி மறுத்துவிட்டு, விட்டிலேயே ஒரு துறவியைப் போன்று வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து அவருடைய தாயார் இறந்துவிடவே, மரியின் ஊழியர் சபையில் சேர்ந்து இறைவனுக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத்தொடங்கினார்.

ஜூலியானா, மரியின் ஊழியர் சபையில் (பெண்களுக்கான சபை) சேர்ந்த சில நாட்களில், அதனுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றார். இரக்கம் காட்டுதல், தாராளமாக உதவுதல், ஜெபவாழ்வு, நற்செய்தியை அறிவித்தல் இவற்றை முதன்மையான நோக்கங்களாகக் கொண்டு பணிசெய்து வந்தார். இவர் ஏழைகளிடத்தில் மிகுந்த அன்பு செலுத்தினார். அதே நேரத்தில் நற்கருணை ஆண்டவர் மீது தனிப்பட்ட பக்திகொண்டிருந்தார். அந்த பக்திதான் துன்ப நேரத்தில் அவருக்குப் பேருதவியாக இருந்தார். ஜூலியான மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளையெல்லாம் செய்துவந்தார். அதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. அதனால் 1341 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜூலியானா பால்கோனியேரியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்கருணை ஆண்டவர் மீது பக்தி

தூய ஜூலியானா பால்கோனியேரியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவர்மீது பக்தி கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்று நற்கருணை ஆண்டவர்மீது பக்திகொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பொனவெந்தூர் கூறுவார், “நற்கருணைதான் எத்துணை விலையேறப்பெற்றது, அது நமக்கு மீட்பினைப் பெற்றுத்தரக்கூடியது” என்று. ஆம், நற்கருணையின்மீது ஆழமான பக்தி கொண்டு வாழும்போது அது மீட்பினை, இன்னும் பிற நன்மைகளையும் நமக்குப் பெற்றுத்தரும் என்பது உறுதி.

அசிசி நகர தூய கிளாரா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு சமயம் கொள்ளையர் கூட்டம் ஒன்று தூய கிளாரா இருந்த மடத்திற்குள் ஜன்னல் வழியாகப் புகுந்து, அம்மடத்தை சூறையாட நினைத்தது. இதையறிந்த கிளாரா தன்னுடைய மடத்தில் இருந்த சகோதரிகளிடம் ஜெபிக்கச் சொல்லிவிட்டு, நற்கருணை ஆண்டவரைத் தாங்கிய கதிர்பாத்திரத்தை கொள்ளையர்கள் வந்த திசையை நோக்கிக் காட்டினார். ஆச்சரியம் என்னவென்றால், அந்த கொள்ளையர் கூட்டம் திரும்பிக் கூடப் பார்க்காமல் தலை தெறிக்க ஓடியது. இவ்வாறு தூய கிளாராவும் அவருடைய மடத்தில் இருந்த சகோதரிகளும் நற்கருணை ஆண்டவரால் காப்பாற்றப்பட்டார்கள்.

நற்கருணை ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டு வாழ்கின்றோபோது அவர் நம்முடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்வார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, தூய ஜூலியானா பால்கோனியேரியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image