St. Scholastica

பிப்ரவரி 10

தூய ஸ்கொலாஸ்டிகா (பிப்ரவரி 10)

mary

mary

தூய ஸ்கொலாஸ்டிகா (பிப்ரவரி 10)

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” - இயேசு

வாழ்க்கை வரலாறு

ஸ்கொலாஸ்டிகா, கி.பி. 480 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். இவருடைய உடன்பிறந்த சகோதார் தூய பெனடிக் (ஆசிர்வாதப்பர்) என்பவர் ஆவார். ஸ்கொலாஸ்டிகாவும் ஆசிர்வாதப்பரும் இரட்டைக் குழந்தைகள் என்பது இன்னொரு முக்கியமான விஷயம். ஸ்கொலாஸ்டிகாவின் குடும்பம் மிக வசதியான குடும்பம். பெற்றோரின் இறப்புக்குப் பிறகு, எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, மொன்டே காசினோ என்ற இடத்தில் இருந்த ஒரு துறவற மடத்தில் துறவியாக சேர்ந்தார். இவருடைய சகோதரர் ஆசிர்வாதப்பரோ உரோமை நகருக்குச் சென்று மேற்படிப்பைக் கற்றுக்கொண்டு சுபியாக்கோவு என்னும் இடத்தில் துறவற சபையை நிறுவினார். இது ஸ்கொலாஸ்டிகா இருந்த துறவற மடத்திற்கு வெகு அருகில் இருந்தது.

ஸ்கொலாஸ்டிகாவும் ஆசிர்வாதிப்பரும் ஒருவர் மற்றவர் மீதான சகோதர பாசத்தில் மிகச் சிறப்பாக வளர்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்திற்கு முன்பாக ஒரு நாள் கூடி, அன்றைய நாள் முழுவதும் ஆன்மீகக் காரியங்களைக் குறித்தும் சபையின் செயல்பாடுகள் குறித்தும் மணிக்கணக்காகப் பேசிவிட்டு, அதன்பிறகு தங்களுடைய துறவற மடத்திற்குப் போய்விடுவார்கள்.

இப்படித்தான் ஒரு முறை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது மாலை நேரம், அதாவது அவர்கள் இருவரும் பிரிந்துபோகவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஸ்கொலாஸ்டிகாவுக்கு தன்னுடைய சகோதரனை விட்டுப் பிரிய மனமில்லை. ஏனென்றால், அவருடைய இறப்பு நெருங்கிய வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் தன்னுடைய சகோதரனோடு இன்னும் சிறுதுநேரம் பேசவேண்டும் என்று நினைத்தார். ஆனால், அவரோ நேரம் கடந்து பேசுவது சபை ஒழுக்கத்திற்கு எதிரானது என்று சொன்னார். ஸ்கொலாஸ்டிகாவோ தன்னுடைய சகோதரோடு எப்படியாவது இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதனால், அவர் இறைவனிடம், “என்னுடைய சகோதரன் இந்த நாள் முழுவதும் என்னோடு இருக்கவேண்டும். அதற்கு நீர்தான் வழிவகை செய்யவேண்டும்” என்று ஜெபித்தார்.

அவர் இவ்வாறு ஜெபித்த சில நிமிடங்களில் இறைவன் இடியுடன் கூடிய மழை பெய்யச் செய்தார். அதைக் கண்ட ஆசிர்வாதப்பர் அவரிடம், “என்ன காரியம் செய்தாய்?, எதற்காக இப்போது மழைக்காக ஜெபித்தாய்?. நாம் இருவரும் இப்படி நேரம் கடந்து இங்கே இருப்பது நம்முடைய சபை ஒழுக்கத்திற்கு எதிரானது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். அதற்கு ஸ்கொலாஸ்டிகா அவரிடம், “என்னுடைய இறப்பு நெருங்கி வருவதை நான் உணர்ந்தேன். அதனால் நீ என்னோடு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதை நான் உன்னிடத்தில் சொன்னபோது, நீ அதற்குச் செவிமடுக்கவில்லை, ஆனால், இறைவன் என்னுடைய குரலுக்கு செவி மடுத்தார்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டபின்பு ஆசிர்வாதப்பரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அதன்பிறகு அந்த நாள் இரவு முழுவதும் ஆன்மீகக் காரியங்களைக் குறித்துப் பேசினார்கள். பொழுது விடிந்ததும் இருவரும் தங்களுடைய துறவற மடத்திற்குச் திரும்பிச் சென்றார்கள்.

இதற்குப் பின் ஒருசில நாட்கள் கழித்து ஆசிர்வாதப்பர் தன்னுடைய துறவற மடத்தில் இருந்த ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஸ்கொலாஸ்டிகாவின் ஆன்மா புறா வடிவில் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதை உணர்ந்தார். எனவே, அவர் தன்னுடைய சகோதரி இறந்துவிட்டார் என்பதை உணர்ந்து, அவர் இருந்த துறவற மடத்திற்குச் சென்று, அவரை நல்லடக்கம் செய்தார். ஸ்கொலாஸ்டிகா இறந்த ஆண்டு 543 ஆகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஸ்கொலாஸ்டிகாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு

தூய ஸ்கொலாஸ்டிகாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், நம்முடைய சகோதார சகோதரிகளிடத்தில் நாம் கொள்ளவேண்டிய அன்புதான். அவர் தன்னுடைய சகோதரரை அளவு கடந்த விதத்தில் அன்பு செய்தார். அவரைப் போன்று நம்முடைய சகோதர சகோதரிகளை அன்பு செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அந்த கிராமத்திற்கு அருகில் இருந்த மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் இருந்தது. அந்த கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் வந்துபோவார்கள். ஒருநாள் அந்தக் கோவிலுக்கு ஒரு பணக்காரர் வந்தார். அவர் மலையடிவாரத்திலிருந்து உச்சிக்கு ஏறினார். அவரால் கொஞ்ச தூரம் ஏறுவதற்கே மூச்சு வாங்கியது. அப்போது அவருக்கு ஒரு சிறுமி தன்னுடைய முதுகில் கால் ஊனமுற்ற தன்னுடைய தம்பியைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக ஏறினாள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன பணக்காரர் அந்த சிறுமியை நிறுத்தி, “உன்னால் மட்டும் எப்படி முதுகில் ஒரு சுமையை (தம்பி) வைத்துக்கொண்டு இந்த மலையில் இவ்வளவு சீக்கிரமாக ஏற முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, “என் தம்பி இவனை நான் மிகவும் நேசிக்கின்றேன். அதனால் இவன் எனக்கு சுமையைத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக மலை ஏறினாள். ஆம், அன்பிருந்தால் யாரும், எதுவும் நமக்குச் சுமையாய் தெரியாதுதானே.

ஆகவே, தூய ஸ்கொலாஸ்டிகாவின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்முடைய சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பு கொண்டு வாழ்வோம். நம்மிடம் இருக்கும் பிணக்குகளை வேரறுத்து ஒற்றுமையாய் வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image