Ss. Methodius & Cyril St. Valentine

பிப்ரவரி 14

தூய சிரில், தூய மெதோடிசியுஸ் (815 - 884)

mary

mary

தூய சிரில், தூய மெதோடிசியுஸ்

 
 

நிகழ்வு

1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் நாள் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் ஸ்லாவிக்கிற்குச் சென்றபோது ஸ்லாவிக்கின் திருதூதர்கள் என்று அழைக்கப்படுகின்ற தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுசைக் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் ஆகிய இருவரும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் மிகச் சிறந்த முன்னோடிகள்.

திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் முற்றிலும் உண்மை. நற்செய்தி அறிவிப்பிற்கும் கிறிஸ்தவ மறையைத் தாயகமாக்குவதற்கும் தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் மேற்கொண்ட தியாகங்கள் அதிகம். அவர்கள் எத்தகைய தியாகங்களையும் இடர்பாடுகளையும் மேற்கொண்டு நற்செய்திப் பணியைச் செய்தார்கள், அவர்களுடைய வாழ்வு நமக்கு எந்தளவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்க்கை வரலாறு

சிரிலும் மெதோடிசியுசியுசும் உடன் பிறந்த சகோதரர்கள். முதலாமவர் 827 ஆம் ஆண்டும் இரண்டாமவர் 815 ஆம் ஆண்டும் பிறந்தார்கள். இரண்டு பேரும் தெசலோனிக்காவில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்கள். சிரில் அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்தார், அதனால் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றி வந்தார். மெதோடிசியுசோ மிகச் சிறந்த ஓவியரை விளங்கி வந்தார் அதோடு கூட, ஆளுநராகப் பணியாற்றி வந்தார். 860 ஆம் ஆண்டு இரண்டு பேரும் தாங்கள் ஆற்றி வந்த பணிகளைத் துறந்துவிட்டு துறவிகளாக மாறி இறைப்பணி செய்யத் தொடங்கினார்கள்.

இச்சமயம் மொராவியா இளவரசன், சகோதரர்கள் இருவரையும் குறித்துக் கேள்விப்பட்டு ஸ்லாவிக் மொழி பேசும் மக்களுக்கு மத்தியில் நற்செய்திப் பணியாற்ற அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் அங்கு சென்று நற்செய்திப் பணியாற்றத் தொடங்கினார்கள். ஏற்கனவே ஸ்லாவிக் மொழி அவர்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்ததால், அவர்கள் மக்களுக்கு மத்தியில் மிக எளிதாகப் பணி செய்ய முடிந்தது. இதற்கிடையில் சகோதரர் இருவரும் ஆற்றி வந்த பணிகளை பிடிக்காது ஸ்லாவிக் பகுதியில் இருந்த ஏனைய குருக்கள் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதனால் அவர்கள் அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஹட்ரின்ஸ் என்பவரைச் சந்தித்து, தங்களுடைய நிலையை எடுத்துச் சொன்னார்கள். அவர் அவர்கள் சொன்னதைக் கேட்டபின்பு, அவர்கள் தங்களுடைய நற்செய்திப் பணியை செய்ய முழு ஆதரவும் அளித்தார், மட்டுமல்லாமல் அவர்களை இரு நகர்களுக்கு ஆயராக நியமித்தார்.

திருத்தந்தையிடமிருது அனுமதி பெற்றுக்கொண்டு சிரிலும் மெதோடிசியசும் உரோமையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். இடையிலேயே சிரில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனார். இதனால் மெதோடிசியஸ் மட்டும் முன்பிருந்த இடத்திற்குச் சென்று நற்செய்திப் பணி செய்யத் தொடங்கினார். தன் சகோதரரின் இறப்புக்குப் பிறகு, மெதோடிசியுஸ் இன்னும் உத்வேகத்தோடு பணிசெய்யத் தொடங்கினார். விவிலியத்தை வெறும் எட்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஸ்லாவிக் மொழியில் மொழிபெயர்த்துத் தந்து, மக்கள் தங்களுடைய சொந்த மொழியில் இறைவார்த்தையை வாசிக்கவும் சிந்தித்தவும் செய்தார். இதனால் நிறையப் பேர் கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள்; ஒருசிலர் மெதோடிசியுசை தங்களுடைய ஆர்மார்த்தமான குருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடந்தார்கள். இப்படிப்பட்டவர் உடல் நலம் குன்றி 885 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தியை அறிவிப்பதில் ஆர்வம்

தூய சிரிலும் தூய மெதோடிசியுசும் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆர்வத்தோடு செய்து வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருசமயம் சகோதரர்கள் இருவரும் பவேரிக்காவிற்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு மன்னன் வித்தியாசமான ஓர் ஓவியம் வரைந்து தன்னுடைய அரண்மனையில் வைக்க ஆசைப்படுகிறான் என்று கேள்விப்பட்டு தூய மெதோடிசியுஸ் அவனுடைய அரண்மனைக்குச் சென்றார். அங்கு சென்றததும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியத்தை வரைந்து தந்தார். அது என்ன ஓவியம், பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் அச்சம் தருவதாகும் இருக்கின்றதே என்று கேட்டார். அதற்கு மெதோடிசியுஸ் அவரிடம், இது இறுதித் தீர்ப்பு பற்றிய ஓவியம். உலக முடிவின்போது இப்படித்தான் இருக்கும் சொன்னதும், அந்நாட்டு அரசன் அவருடைய வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மறையைத் தழுவினான். அவனோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். இப்படி கிறிஸ்தவ மறையைத் தழுவிய மக்களுக்கு மெதோடிசியுசும் சிரிலும் ஆர்வத்தோடு பணி செய்தார்கள்.

இவர்கள் இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றோமா? அதனை ஆர்வத்தோடு அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில், “நற்செய்தி அறிவிப்பது என்மேல் சுமத்தப் பட்ட கடமை” என்பார். ஆம், நற்செய்தி அறிவிக்கின்ற பணி நம் ஒவ்வொருவருக்கும் உரித்தான பணி, அதனை நம்முடைய கடமையாக உணர்ந்து செய்யவேண்டும்.

ஆகவே, தூய சிரில் மற்றும் தூய மெதோடிசியுஸ் விழாவைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று நற்செய்தி அறிவிக்கின்ற பணியை ஆர்வத்தோடு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image