St. Claude Colombiere St. Faustinaus & Jovita

பிப்ரவரி 15

✠தூய ஃபாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டா✠ (Saints Faustinus and Jovita)

mary

✠தூய ஃபாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டா✠ (Saints Faustinus and Jovita)


நினைவுத் திருநாள் : பெப்ரவரி 15


"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்ல்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள் (மத் 5: 11,12)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் உடன் பிறந்த சகோதரர்கள். இருவரும் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கு இத்தாலியில் உள்ள பிரசியாவில் பிறந்தவர்கள். இவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. இப்படிப்பட்ட சமயத்திலும் சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார்கள்.

ஒருசமயம் பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கும்போது உரோமை ஆளுநன் ஜூலியன் அங்கு வந்தான். அவன் எப்போதும் அரசனை மகிழ்ச்சிப்படுத்தவும் அதன்வழியாக ஆதாயம் அடைவதுமாக இருந்தான். சகோதரர்கள் இருவரும் போதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவன், இருவரையும் தெருக்களில் இழுத்துக்கொண்டு போய் அரசன் முன்பாக நிறுத்த நினைத்தான். எனவே அவன் அவர்கள் இருவரையும் படைவீரர்களிடம் பிரசியாவிலிருந்து மிலனுக்கும் பின்னர் மிலனிலிருந்து உரோமைக்கும் இழுத்துக்கொண்டு போக ஆணையிட்டான். அதன்படி படைவீரர்கள் பாஸ்டினுசையும் ஜோவிட்டாவையும் தெருக்களில் இழுத்துக்கொண்டு போகும்போது உரோமை அரசன் அட்ரியன் அங்கு வந்தான். அவன் அவர்களிடம், "நீங்கள் இருவரும் உங்களுடைய கடவுளை மறுத்தலித்துவிட்டு சூரியனை வணங்கினாலோ அல்லது இங்கே இருக்கும் சிலையை வணங்கினாலோ நான் உங்களை விடுவித்து விடுவேன" என்றான். அதற்கு ஜோவிட்டா, "நாங்கள் உண்மைக் கடவுளான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம். மேலும் இதோ இருக்கின்றதே இந்தச் சிலை கருகிப்போகிவிடும" என்றார். அவர் சொன்னதுபோன்றே சிறுது நேரத்தில் அந்தச் சிலை கருகிச் சாம்பலானது.

இதனால் சினம்கொண்ட அரசன் அவர்கள் இருவரையும் சிங்கத்திற்கு முன்பாக இரையாகப் போட்டான். ஆனால், சிங்கம் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை. இதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன அரசன் அவர்களை சிறையில் அடைத்துவைத்து கொடுமையாகச் சித்ரவதை செய்ய காவலர்களைப் பணித்தான். காவலர்கள் அவர்களை எவ்வளவோ கொடுமைப்படுத்தியபோதும் தங்கள் நம்பிக்கையில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். இதற்கிடையில் வானதூதர் சகோதரர்கள் இருவருக்கும் முன்பாகத் தோன்றி அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்தினார். இதனால் அவர்கள் இருவரும் இன்னும் நம்பிக்கையில் உறுதியானார்கள். அவர்கள் சிறைக்குள்ளே ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். இதனால் சிறையில் இருந்த நிறையப் பேர் ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர். இதைக் கண்ட சிறை அதிகாரி செய்தியை அரசனிடம் சொல்ல, அவன் சினமுற்று சகோதரர்கள் இருவரையும் தலை வெட்டிக் கொன்றான். இவ்வாறு பாஸ்டினுசும் ஜோவிட்டாவும் இரத்தம் சிந்தி ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டாவின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை ஏற்றல்

தூய பாஸ்டினுசும் தூய ஜோவிட்டாவும் ஆண்டவர் இயேசுவுக்காக பல துன்பங்களை அனுபவித்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் இருவரையும் நினைவுகூரும் நாம், ஆண்டவர் இயேசுவுக்காக, அவருடைய நற்செய்தியின் விழுமியங்களுக்காக துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "என்னைப் பின்பற்ற விரும்பும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவார் (மத் 16: 24, 25) என்று. தூய பாஸ்டினுசும் தூய ஜோவிட்டாவும் ஆண்டவர் இயேசுவுக்காக பல துன்பங்களை அனுபவித்தார்கள், ஏன் தங்களுடைய உயிரையும் தந்தார்கள். அதனால் அவர்கள் இந்த மண்ணுலகில் இல்லாவிட்டாலும் நம்முடைய மனங்களில் குடிகொண்டு இருக்கிறார்கள். நாமும் இவர்களைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்காக துன்பங்களை மனமுவந்து ஏற்றுகொள்கின்றபோது, இறைவனின் அருளைப் பெறுவது உறுதி.

ஆகவே, பாஸ்டினுஸ் மற்றும் தூய ஜோவிட்டாவைப் போன்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு துணிவுடன் அறிவிப்போம். அதனால் வரக்கூடிய துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம். இறைவழியில் எப்போதும் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்


 

image