St. Mesrop St. Theodore Tiro 7 Founders of Servites

பிப்ரவரி 17

மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர்

mary

மரியின் ஊழியர் சபையை நிறுவிய எழுவர் (பிப்ரவரி 17)

இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

வாழ்க்கை வரலாறு :

பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில் மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம்போன போக்கில், உலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்ட எழுவர் இருந்தனர். அவர்கள் எழுவரும் மரியன்னையின் மீது மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். 1233 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், அதாவது மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா அன்று, மரியா இவர்களுக்குக் காட்சி கொடுத்து இறைப்பணி செய்ய அழைத்தார். இந்த ஏழுபேரும் இறைப்பணி செய்வதற்கு ஆர்வமாய் இருந்தார்கள். ஆனால், இவர்களில் நான்கு பேர் திருமணம் முடித்திருந்தார்கள். மற்ற மூன்று பேர் மணமுடிக்காமல் இருந்தார்கள். எனவே, இந்த நான்கு பேரும் குடும்பத்தை ஓரளவு கரையேற்றி வைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு இவர்கள் எழுவரும் பிளாரென்ஸ் நகருக்கு வெளியே இருந்த லா கார்மார்சியா என்னும் இடத்தில் வந்து தங்கி, அங்கே ஜெபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தார்கள். இதற்கிடையில் இவர்கள் இருக்கின்ற இடத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் இவர்களை வந்து சந்திப்பதும் போவதுமாய் இருந்தார்கள். இது இவர்களுடைய ஜெப வாழ்விற்கு பெரிய இடையூறாக இருக்க, இவர்கள் மொந்தே செனாரியோ என்னும் பாலைவனப் பகுதிக்குச் சென்று, அங்கே ஓர் ஆலயம் எழுப்பி, அங்கே ஜெபித்து வந்தார்கள். ஆனால், செய்தி அறிந்து மக்கள் அங்கேயும் சென்று, அவர்களுக்கு இடையூறாக இருந்தார்கள். இதனால் அவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள். வந்தவர்களில் ஒருசிலர் தாங்களும் அவர்களோடு இணைந்து துறவு வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றோம் என்று சொன்னபோது, அவர்கள் அதுவெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் ஆயர்களான அற்றிங்கோ, கஸ்டிக்லியோன் எழுவரையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார்கள்.

இது நடந்து ஒருசில நாட்கள் கழித்து, மரியன்னை மீண்டுமாக அவர்களுக்கு காட்சி தந்தார். அவருடைய கையில் கருப்பு நிற ஆடை இருந்தது. அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் சுருளேடு ஒன்று இருந்தது அதில் ஏழு பேருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அப்போது மரியன்னை அவர்களிடம், “நான் உங்களை என்னுடைய ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தூய அகுஸ்தினாரின் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழுங்கள்” என்று சொல்லி மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் எழுவரும் மரியின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

நாட்கள் செல்லச் செல்லச் அவர்கள் ஏழுபேரும் ஜெபத்திலும் தவத்திலும் மேலும் மேலும் உறுதியானார்கள். அதே நேரத்தில் அவர்களுடைய சபை மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது. அந்த ஏழுபேரும் ஒருவர் பின் ஒருவராக சபைத் தலைவராகிய, சபையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் சென்றார்கள். அந்த எழுவரின் பெயர்கள் முறையே, போன்பிலியுஸ், அலெக்சிஸ், அமதேயுஸ், ஹக், சொஸ்தேனஸ், மநேதுஸ் மற்றும் போனகுந்தா. இவ்வாறு சபை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வளர்ந்துவர, 1304 ஆம் ஆண்டு, அப்போது திருத்தந்தையாக இருந்த 11 ஆம் ஆசிர்வாதப்பர் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியின் ஊழியர் சபையை நிறுவிய இந்த எழுவரின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று, அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனுக்கு ஊழியம் செய்தல்

மக்களெல்லாம் உலகப் போக்கிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, இந்த எழுவரும் இறைவனுக்கு ஊழியம் செய்யத் தயாரானார்கள். இவர்களைப் போன்று நாம் இறைவனுக்கு ஊழியம் செய்யத் தயாராக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு சமயம் ஜென் குரு ஒருவர் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே ஒரு நாய் வந்து அமர்ந்தது. அப்போது அங்கு வந்த இளைஞன் அவரிடம், “உங்கள் இருவரில் யார் உயர்ந்தவர்?” என்று சற்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஜென் குரு அவரிடம், “கடவுள் தொண்டனாக நற்செயல்களைச் செய்தால் நான் உயர்ந்தவன். உலகியல் சுகங்களில் ஈடுபட்டு உன்னைப்போன்று நான் வாழ்ந்தால் என்னைவிட இந்த நாய் உயர்ந்தது” என்றார். ஆம், யாரெல்லாம் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, அவருடைய பணியை செய்கின்றார்களோ அவர்கள் உயர்ந்தவர்களே.

ஆகவே, இந்த எழுவரின் விழாவைக் கொண்டாடும் நாமும், நம்மை இறைவனுக்கு முழுமையாய் அர்ப்பணித்து அவருடைய பணியைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

image