St. Eustathius St. Peter Damian St. Robert Southwell

பிப்ரவரி 21

✠ புனிதர் பீட்டர் டமியான் ✠ (St. Peter Damian)

mary

mary

✠ புனிதர் பீட்டர் டமியான் ✠ (St. Peter Damian)

*கர்தினால்-ஆயர், மறைவல்லுநர் :
(Cardinal, Doctor of the Church)

*பிறப்பு : கி.பி. 1007
ரவேன்னா, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியம்
(Ravenna, Emilia-Romagna region of Northern Italy)

*இறப்பு : ஃபெப்ரவரி 22, 1072
ஃபயேன்சா, ரவேன்னா, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியம்
(Faenza, Province of Ravenna, Emilia-Romagna region of Northern Italy)

நிகழ்வு

1035 ஆம் ஆண்டு, தூய பீட்டர் தமியான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த தருணம். ஒருநாள் பெனடிக்ட் துறவுமடத்தைச் சார்ந்த துறவிகள் சிலர் அவரைச் சந்தித்து, ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் துறவற வாழ்வு குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் தான் செய்துகொண்டிருந்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு தூய பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார், ஆண்டவர் இயேசு ஒருவரே உண்மையான சொத்து என அவரைப் பற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார்.

வாழ்க்கை வரலாறு

பீட்டர் தமியான் 1007 ஆம் ஆண்டு இத்தாலியில் இருக்கும் ரவென்னா என்ற இடத்தில் வாழ்ந்த ஓர் ஏழைத் தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பீட்டர் என்பதுதான். பின்னாளில் தன்னுடைய மூத்த சகோதரரும் குருவாகவும் இருந்த தமியான் என்பவர் மீது கொண்டிருந்த மதிப்பினால் பெற்றோர் இட்ட பீட்டர் என்ற பெயரோடு தமியான் என்ற பெயரையும் சேர்த்துகொண்டு தன்னுடைய பெயரை பீட்டர் தமியான் என மாற்றிக்கொண்டார்.

பீட்டர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய இளைய சகோதரரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இந்த சகோதரர் மிகவும் கண்டிப்பானவர், அதே நேரத்தில் பீட்டரை சரியாகக் கவனிப்பதும் கிடையாது. தான் வைத்திருந்த பன்றிகளை மேய்ப்பதற்குத்தான் இவர் பீட்டரை அனுப்பி வைத்தார். இந்த நேரத்தில் பீட்டர் மிகவும் கஷ்டப்பட்டார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட பீட்டரின் மூத்த சகோதரரான தமியான், அவரை பன்றி மேய்க்கும் பொறுப்பிலிருந்து விடுவித்து, பள்ளிக்கூடத்திற்குச் சென்று, கல்வி கற்க கேட்டுக்கொண்டார். அதற்கான செலவீனங்கள் அனைத்தையும் தான் ஏற்பதாக உறுதிதந்தார். இவர் ஒரு குருவானவர். பின்னாளில் பீட்டர் நன்றாகப் படித்து ஒரு பேராசிரியராக உயரும்வரைக்கும் இவர் பீட்டருக்கு பேருதவியாக இருந்தார். அதனால்தான் (ஏற்கனவே சொன்னது போல) இவர் தன்னுடைய சகோதரரின் பெயரையும் தன்னுடைய பெயரோடு சேர்த்துக்கொண்டு பீட்டர் தமியான் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

பீட்டர் தமியான் பேராசிரியராக மாறிய பிறகு தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு மிகச்சிறப்பான கல்வியை வழங்கினார். இயல்பிலேயே ஞானமும், அறிவும் கொண்டவரான பீட்டர் தமியானின் வகுப்புகளுக்காக மாணவர்கள் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு இவர் சிறப்பாக பாடங்களை நடத்தி வந்தார். இத்தகைய தருணத்தில்தான் தூய ஆசிர்வாதப்பர் சபையைச் சேர்ந்த துறவிகள் இவரை வந்து சந்தித்து, இவருக்கு கிறிஸ்துவை பற்றியும் துறவு வாழ்க்கை குறித்தும் எடுத்துரைத்தார். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் எல்லாவற்றையும் துறந்து தூய ஆசிர்வாதப்பர் சபையில் துறவியாக மாறினார்.

புனிதர் பீட்டர் டமியான், ஒரு சீர்திருத்த டொமினிக்கன் துறவியும், திருத்தந்தை ஒன்பதாம் லியோ (Pope Leo IX) காலத்தில் ரோமின் புறநகரின் "ஓஸ்தி" (Ostia) மறைமாவட்ட கர்தினால்-ஆயருமாவார். "டான்டே" (Dante) எனும் பிரபல இத்தாலிய கவிஞர், இவரை "புனிதர் அசிசியின் பிரான்சிஸுக்கு" (Saint Francis of Assisi) முன்னோடியாகக் கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார். இவர், 1823ம் ஆண்டு, திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார்.

கி.பி. சுமார் 1007ம் ஆண்டு, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமாக்னா பிராந்தியத்திலுள்ள ரவென்னா நகரிலுள்ள பிரபல ஆனால் ஏழைக் குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த இவர், சிறுவயதிலேயே அனாதரவானார். ஆரம்பத்தில் இவரை தத்தெடுத்த சகோதரர்களில் ஒருவரால் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டார்.

சொந்த சகோதரர் புறக்கணித்ததால், ஏழ்மையிலிருந்து தப்பி, ரவென்னா (Archpriest of Ravenna) மறைமாவட்டத்தின் குருவாக இருந்த தமது இன்னொரு சகோதரரான "டமியானஸ்" (Damianus) என்பவரிடம் அடைக்கலம் புகுந்தார். அவர் பீட்டர் டமியானை நல்ல கல்விக் கூடங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்தார். அதன் காரணமாக, பீட்டர் ஒரு பேராசிரியராக உயர்ந்தார். அவர் மிகவும் ஒழுக்க சீலராக இருந்தார். கடுமையான உழைப்புடன், ஜெபிப்பதற்கென்று பல மணிநேரம் செலவிட்டார்.

விரைவிலேயே அவர் பேராசிரியர் பணியை விட முடிவு செய்ததுடன், அவேல்லானா'விலுள்ள ஃபோன்டே எனும் இடத்திலுள்ள புனித ரோமுவால்டின் வின் ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையில் (Benedictines of the reform of St. Romuald at Fonte Avellana) சேர்ந்து முழுநேர ஜெப வாழ்வில் இணைய முடிவு செய்தார். அங்கே இரண்டு துறவியர் இருந்தனர். பீட்டர் உறக்கத்தை குறைத்துக் கொண்டு, அதிக நேரம் ஜெபிப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். அதன் காரணமாக, அவர் தூக்கமின்மை (Insomnia) நோயால் பாதிக்கப்பட்டார். அவர், தமது ஆரோக்கியத்திற்காக, ஜெபிக்காத வேளைகளில் திருவிவிலியம் படிப்பதில் செலவிட்டார்.

ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையின் மடாதிபதி தமது மரணத்தின்போது, பீட்டரை தமது மடத்துக்கு தலைவராக நியமித்தார். பீட்டர், மேலும் ஐந்து துறவியரை அங்கு சேர்த்தார். அவர், தமது சகோதரர்களையும் தனிமை மற்றும் ஜெப வாழ்வுக்கு ஊக்கப்படுத்தினார்.

ரோமிலுள்ள இரண்டு ஆசிரமங்களுக்கும் அரசு அலுவகங்களுக்குமிடையே இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.

அவர் கடுமையாக உழைத்து, "தன் சுய நலனுக்காக கிறிஸ்தவ ஆலயங்களின் புனிதப் பொருள்களைப் பயன்படுத்தும்" (Simony) முறையை ஒழித்தார். தமது கத்தோலிக்க குருக்கள் கடின பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க ஊக்குவித்தார். மறைமாவட்ட குருமார்கள் ஒன்றாக வசிக்கவும், ஜெபம் மற்றும் மத காரியங்களில் ஈடுபடவும் வற்புறுத்தினார். பழமையான ஒழுக்கத்தை மீட்டார். வறுமை மீறல், தேவையற்ற பயணங்கள், மற்றும் சொகுசு வாழ்க்கை முறையைக் கண்டித்தார்.

அவர், பெசான்கான் ஆயருக்கு (Bishop of Besancon) எழுதிய ஒரு கடிதத்தில், அங்குள்ள தேவாலய அலுவலகத்தில் இறை பாடல் பாடுபவர்கள், பாடல் பாடுகையில் அமர்ந்திருந்ததாக குறை கூறினார்.

அவர், பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் சுமார் 170 கடிதங்கள் நடப்பிலுள்ளன. நம்மிடையே இன்றும் அவர் எழுதிய சுமார் 53 மத சொற்பொழிவுகள், ஏழு உயிர்ப்புகள் மற்றும் சுயசரிதங்கள் உள்ளன.

அவர் தமது எழுத்துக்களில் கோட்பாடுகளைவிட, கதைகள் மற்றும் மேற்கோள்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அவர் எழுதிய வழிப்பாட்டு அலுவலக சந்தங்கள் லத்தீன் மொழியில் அவரது திறமைக்கு சான்றாகும்.

டான்டே அலிகியேரி, இவரை புனித அசிசியின் ஃபிரான்சிசுக்கு முன்னோடியாகக் கருதி, தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.

அவர், தம்மை ஒஸ்டியா மாகான கர்தினால்-ஆயர் (Cardinal-Bishop of Ostia) பதவிலிருந்து விடுவிக்குமாறு அடிக்கடி கேட்டுகொண்டார். இறுதியாக, இரண்டாம் அலெக்சாண்டர் (Alexander II) அவரை விடுவித்தார். பீட்டர் தமியான் மீண்டும் ஒரு துறவியாகியதில் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அவர் திருத்தந்தையின் தூதராக பணிபுரிய இப்போதும் அழைக்கப்பட்டார்.

ஒருமுறை, தனக்களிக்கப்பட்ட ஒரு பணியை முடித்துவிட்டு ரவேன்னாவிலிருந்து (Ravenna) திரும்புகையில் ஜூரத்தால் பாதிக்கப்பட்டார். துறவிகள் சூழ்ந்திருக்க, ஃபெப்ரவரி 22, 1072 அன்று அவர் உயிர் துறந்தார்.

புனிதர் பட்டம் :
இவரை கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ (Pope Leo XII) 1823ம் ஆண்டில் அறிவித்தார். இவரின் நினைவுத் திருவிழா நாள் ஃபெப்ரவரி மாதம், 21ம் நாளாகும்.

இவருக்கு முறைப்படி புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது ஃபயேன்ஸா (Cathedral of Faenza) மறைமாவட்ட முதன்மைப் பேராலயத்தில் உள்ளது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பீட்டர் தமியானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவரிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஏழைகளுக்கு உணவிடல்

பீட்டர் தமியான் சிறுவயதில் வறுமையிலும் ஏழ்மையிலும் மிகவும் கஷ்டப்பட்டதால், அவர் துறவியாக உயர்ந்தபிறகு தன்னுடைய மேசையில் இரண்டு அல்லது மூன்று ஏழைகளுக்கு எப்போதும் உணவிருக்குமாறு பார்த்துக்கொள்வார். வெளியே போகும் வழியில் பசியாய் இருக்கும் யாரையாவது கண்டால், அவர்களுக்கு உணவு வாங்கித் தருவார். அந்தளவுக்கு இவர் ஏழைகள்மீது தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்களைச் சுட்டிக்காட்டி சீடர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்பார் (மத் 14: 16). அதாவது பசியாய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உணவு கொடுப்பது நம்முடைய கடமை என்பதைத் தான் இயேசு கிறிஸ்து அங்கே வலியுறுத்திக் கூறுகின்றார். அதேபோன்று இறுதித் தீர்ப்பின்போது, நேர்மையாளர்களை பார்த்து, “நான் பசியாய் இருந்தேன் நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள் ...., ஆதலால் உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பார் (மத் 25: 35). எனவே, ஏழைக்கு உணவளிப்பது இறைவனுக்கே உணவளிப்பது என்றும், அத்தகைய இரக்கச் செயல் நம்மை இறையரசில் சேர்க்க வல்லது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கையில் ஏழைகளுக்கு, பசியால் வாடுவோருக்கு உணவிடும் நற்பண்பை கடைப்பிடித்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில், ஒருவர் நீண்ட கூட்டத்திற்கு பிறகு, இரவு உணவிற்காக ஒரு சிறிய உணவகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கையில், குப்பை அள்ளும் இரு குழந்தைகள் உணவகத்திற்கு வெளியே கண்ணாடி வழியாக பசியோடு பார்த்துக்கொண்டு நின்றனர். இதைக்கண்ட அந்த மனிதர், அக்குழந்தைகளை உள்ளே அழைத்து அவர்களுக்கு வேண்டிய உணவை வாங்கித்தந்தார்.

இரு குழந்தைகளும் வயிறார உண்டனர். அவர்கள் பசியாற உண்டதைக் கண்ட அந்த மனிதருக்கு பசி பறந்துபோனது. இறுதியில் பில் வந்தது, அதில் எழுதிய வார்த்தைகளைக் கண்டதும் அவர் கண்களில் நீர் பெருகியது. பில்லில் எழுதிய வார்த்தைகள் இதோ: மனித நேயத்திற்கு விலை எழுதும் எந்திரம் இன்னும் வரவில்லை. தங்களுக்கு நல்லதே நடக்கும்!. ஆம் பசியாய் இருக்கும் மனிதர்களுக்கு நாம் உணவிடம்போது, இறைவன் நமக்கு தக்க கைமாறு தருவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மனிதரைப் போன்று, இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய பீட்டர் தமியானைப் போன்று ஏழைகளுக்கு உணவிடும் நல்ல பண்பைக் கற்றுக்கொள்வோம்.

2. சமாதானத்தின் தூதுவர்

தூய பீட்டர் தமியான் தான் வாழ்ந்த காலத்தில் சமாதானத்தின் தூதுவராக, அமைதியின் கருவியாக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எந்தளவுக்கு என்றால் அவர் திருத்தந்தையின் திருத்தூதராக பணியாற்றியபோது நிறைய வழக்குகளை, பிரசனைகளை சமாதானப் பேச்சு வார்த்தையால் முடிவுக்குக் கொண்டுவந்தார். அந்தளவுக்கு அவர் ஓர் அமைதியின் தூதுவராக விளங்கினார்.

நாம் வாழும் சமூகத்தில், குடும்பச் சூழ்நிலையில் அமைதியை ஏற்படுத்தக்கூடியவர்களாகச் செயல்படுகிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத்: 5:9). நாம் வாழும் சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தும்போது, நாம் கடவுளின் பிள்ளைகள் ஆகின்றோம் என்பது உறுதி.

நன்றாக இருந்த ஒரு நாட்டில் திடிரென இனக்கலவரம் வெடித்தது. மக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொண்டு இறந்தார்கள். இதனால் அந்த நாட்டு அரசனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் எத்தனையோ பேரிடம் ஆலோசனை கேட்டும் அவனால் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அவன் குழம்பிபோய் நின்றான். இந்த வேளையில் அரண்மனைக்கு ஒரு ஜென் துறவி வந்தார். அவர் அரசனிடம் சென்று, “இப்பிரச்சனைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆளுயரக் கண்ணாடி மட்டும் போதும் என்றான். “ஓர் ஆளுயரக் கண்ணாடியால் எப்படி கலவரத்தை நிறுத்தமுடியும்?” என்று அரசன் யோசித்தான். இருந்தாலும் துறவி கேட்டதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஓர் ஆளுயரக் கண்ணாடிக் கொண்டுவந்து அவரிடத்தில் கொடுத்தான். துறவி அந்தக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு போய், மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய சந்தைவெளியில் வைத்தார்.

அப்போது கண்ணாடியைப் பார்த்ததும் அதை உடைப்பதற்காக வேகமாக ஓடிவந்த இளைஞன் ஒருவன், அதில் தன்னுடைய முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான். தன்னுடைய முகம் இவ்வளவு விகாரமாக இருக்கிறதே என உணர்ந்த அந்த இளைஞன் தன்னுடைய கையில் இருந்த வாளைக் கீழே போட்டான். அவனுக்குப் பின்னால் வந்த இளைஞனுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. அவன் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்ததும், வெட்கித் தலைகுனிந்து கையிலிருந்த ஆயுதத்தைக் கீழேபோட்டான். இப்படியாக கண்ணாடியைப் பார்த்த எல்லோருமே தங்களுடைய கையில் இருந்த ஆயுதத்தைக் கீழே போட்டு, அமைதி வழியில் செல்லச் தொடங்கினர். இவ்வாறு அந்த நாட்டில் அமைதி உண்டானது.

இப்படிப்பட்ட ஓர் அமைதியான சூழலுக்குக் காரணமான அந்த ஜென் துறவிக்கு அரசன் தக்க சன்மானம் கொடுத்து, வழி அனுப்பி வைத்தான்.

நாமும் அமைதியின் கருவியாக வாழும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உண்மை. எனவே, தூய பீட்டர் தமியானின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு இரங்குவோம், அமைதியின் கருவியாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image