St. Polycarp St. Serenus St. Stefan Wincenty Frelichowski St. Willigis

பிப்ரவரி 23

✠ புனிதர் பொலிகார்ப் ✠ (St. Polycarp)

mary

mary

✠ புனிதர் பொலிகார்ப் ✠ (St. Polycarp)

காதுவலி உள்ளவர்களின் பாதுகாவலர்

*மறைசாட்சி, திருச்சபை தந்தையர், ஆயர் : (Martyr, Church Father and Bishop)

*பிறப்பு : கி.பி. 69

*இறப்பு : கி.பி. 156
ஸ்மைரனா, ஆசியா, ரோமப் பேரரசு (Smyrna, Asia, Roman Empire)

*சித்தரிக்கப்படும் வகை :
பாலியம் அணிந்தவாறு, ஒரு நூலினை ஏந்தியவாறு

*பாதுகாவல் :
காது வலியால் அவதியுறுவோர், இரத்தக்கழிசல்

*குறிப்பிடத்தக்க படைப்புகள் :

பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம்

நிகழ்வு

போலிகார்ப் வாழ்ந்த காலத்தில் தப்பறைக் கொள்கைகள் அதிகமாகப் பரவியிருந்தன. அவற்றையெல்லாம் நம் புனிதர் மிகவும் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிகொண்டார். ஒருசமயம் மார்சியோன் என்பவன் தப்பறைக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டு வந்தான். ஒருநாள் அவன் போலிக்கார்ப் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தான். அவர் அவன் செய்வதையெல்லாம் மிகப் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் அவன் அவரிடத்தில், “நான் யாரென்று தெரிகிறதா?” என்று மிகவும் ஆணவத்தோடு கேட்டான். அதற்கு போலிகார்ப், “நீ சாத்தானின் மூத்த மகன், உனக்கு அழிவு மிக அண்மையிலேயே உள்ளது” என்றார். இதைக் கேட்ட மார்சியோன் தலை தெறிக்க ஓடினான். அதன்பிறகு அவன் தப்பறைக் கொள்கைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு, மனம் திருந்திய மனிதனாக வாழ்ந்து வந்தான்.

வாழ்க்கை வரலாறு

போலிக்கார்ப் கி.பி.69 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நற்செய்தியாளரான தூய யோவானின் சீடர். அவராலேயே 96 ஆம் ஆண்டு ஸ்மிர்னா என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயராக உயர்ந்த பிறகு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இறைமக்களுக்கு மறைக்கல்வியைப் போதித்து, அவர்களை இறைநம்பிக்கையில் நாளும் வளர்த்தார். இவரிடமிருந்து மறைகல்வி கற்று புனிதர்களாக உயர்ந்தவர்கள்தான் தூய எறரனியுஸ் மற்றும் பப்பியாஸ் என்பவர்கள்.

புனிதர் பொலிகார்ப் 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த, "ஸ்மைரனா" (Smyrna) நகரின் ஆயராவார். "பொலிகார்ப்பின் மறைசாட்சியம்" (Martyrdom of Polycarp) என்னும் நூலின்படி, அடுக்கப்பட்ட விரகுகளின்மீது இவரை வைத்து உயிருடன் தீயிட்டு கொளுத்த முயன்றபோது, தீ இவரை தொட தவறியதால், இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஓரியண்டல் மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் மற்றும் லூதரனியம் இவரை புனிதர் என ஏற்கின்றன.

போலிகார்ப் வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை அதிகமாக நடைபெற்றது. அத்தகைய தருணத்தில் இவர் மக்கள் அனைவரையும் விசுவாசகத்தில் உறுதிபடுத்தினார். ஒருசிலர் இவரைக் கேட்டுக்கொண்டதால் சில காலத்திற்கு இவர் மறைவாக இருந்தார். அப்போது இவர் ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் இவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய தலையணை தீப்பற்றி எரிந்தது. எதற்கு இப்படி தலையணை தீப்பற்றி எரிகிறது என்று யோசித்துப் பார்த்த அவர், தான் தீயில் போட்டு எரிக்கப்படப் போகிறோம் என்பதை அறிந்துகொண்டார். அன்றிலிருந்து அவர், தான் அடைய இருக்கும் மறைசாட்சிப் பட்டத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் இவர் இருக்கும் இடத்தை ஒற்றன் ஒருவன் காட்டிக்கொடுக்க, படைவீரர்கள் இவரை சூழ்ந்துகொண்டார்கள். ஆனாலும் இவர் தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கு விருந்தொன்று தயாரித்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த அந்தப் படைவீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். இருந்தாலும் அரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் இவரைக் கைதுசெய்து, அரசன் முன்பாக நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்த அரசன் போலிக்கார்ப்பிடம் “நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, சீசருக்கு வணக்கம் செலுத்து, உன்னை நான் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்” என்றார். அதற்கு இவர், எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆண்டவராகிய இயேசு ஒருதீமையும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இறைவனனை நான் எப்படி மறுதலிப்பது?” என்றார். இதைக் கேட்ட அரசன் சினமுற்று அவரை தீப் பிழம்புக்குள் தூக்கிப்போட்டான். ஆனால் தீயின் நாவுகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் அந்தத் தீயின் நடுவே இறைவனைப் பாடிப் புகழ்ந்துகொண்டிருந்தார். பின்னர் அரசர் அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். பின்னர் போலிகார்பின் சீடர்கள் வந்து, அவருடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். அவர் மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் துறந்த ஆண்டு கி.பி. 155. போலிகார்பின் மறைசாட்சிய வாழ்வு குறித்து, அவருடைய இறப்புக்குப் பிறகு, அவருடைய சீடர்களால் எழுதப்பட்ட Acts Of Policarp” என்ற புத்தகத்திலிருந்து நாம் இவற்றையெல்லாம் வாசிக்கின்றோம்.

இவரால் எழுதப்பட்டதாக தற்போது உள்ள ஒரே ஆவணம், பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம் (Letter to the Philippians) ஆகும். இதனை முதன் முதலில் பதிவு செய்தவர் இரனேயு (Irenaeus of Lyons) ஆவார்.

பொலிகார்ப், ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலருள் இவரது எழுத்துக்கள் இன்னமும் இருக்கின்றன. இவர், கிறிஸ்தவ திருச்சபைகளை நிறுவுவதில், பெரும் பங்களிப்பாக இருந்த ஒரு முக்கிய சபையின் மூப்பராவார். முக்கிய மரபுகளைக் கொண்டிருந்த இவருடைய சகாப்தம் அனைத்து திருச்சபைகளாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. விவிலிய அறிஞரான "டேவிட் ட்ரோபிக்" (David Trobisch) என்பவரின் கூற்றுப்படி, பொலிகார்ப் புதிய ஏற்பாட்டினை தொகுத்து, திருத்தி, வெளியிட்டவர்களுள் ஒருவராக இருந்திருக்கலாம். இவையனைத்தும், இவரது எழுத்துக்களை பெரும் ஆர்வம் கொண்டவைகளாக ஆக்கின.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

கிறிஸ்துவுக்காக, கிறிஸ்தவ மறைக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்த தூய போலிக்கார்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் காற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. சாட்சிய வாழ்வு

தூய போலிக்கார்ப் கிறிஸ்துவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தவர்களில் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாது. அவர் தான் மறைசாட்சியாக உயிர் துறக்கவேண்டும் என்று மிக ஆவலாக இருந்தார். அதற்காக அவர் ஒவ்வொருநாளும் காத்துக்கொண்டிருந்தார். ஒருசமயம் அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியாரின் இறந்த உடலை முத்திசெய்துவிட்டு, “இத்தகைய பேற்றினை நான் அடையப்போகும் நாள் எந்நாளோ” என்று மிகவும் ஏக்கத்தோடு சொன்னார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும், ஏன் நம்முடைய உயிரையும் கூட இழக்கத் துணிகிறோமா?” என சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “ஏனெனில், நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” (பிலி 1:21). நாம் கிறிஸ்துவுக்காக வாழ்கிறோமா?, அவருக்காக நம்முடைய உயிரையும் தர முன்வருகிறோமா? என சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். தூய போலிக்கார்ப் கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார், இறந்தார். அதனால் அவர் கிறிஸ்துவிடமிருந்து ஆசிரைப் பெற்றார். நாமும் கிறிஸ்துவுக்காக வாழும்போது அவரிடமிருந்து எல்லா ஆசிரையும் பெறுவோம் என்பது உறுதி.

2. தீமை செய்வோருக்கு நன்மை.

தூய போலிக்கார்ப் தனக்குத் தீமை செய்தோருக்கும் நன்மை செய்த நல்ல உள்ளம் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தன்னைக் கைதுசெய்ய வந்த படைவீரர்களைப் பார்த்து பயப்படவில்லை, மாறாக அவர் அவர்களை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து, அவர்களுக்கு விருந்தொன்று படைத்தார். அந்தளவுக்கு இவர் தனக்கு தீமை செய்ய வந்தவர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல உள்ளத்தைக் கொண்டிருந்தார். நம்மிடத்தில் தீமை செய்வோருக்கும் நன்மை செய்யும் நல்ல உள்ளம் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” (மத் 5:44). நாம் பகைவர்களையும், நமக்கு எதிராகத் தீமை செய்பவர்களையும் அன்பு செய்யும், அவர்களுக்காக ஜெபிக்கும் நல்ல உள்ளத்தினைக் கொண்டிருக்கிறோமா? என சிந்தித்துப் பார்ப்பபோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கோலோரடோ (Colorado) என்ற இடத்திற்கு மேலே பரந்த விமானமானது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த நாற்பத்தியோரு விமானப் பயணிகள் உயிரிழந்தார்கள். பிரான்சு நாட்டில் உள்ள மிகப் பிரபலமான பள்ளியான தூய கபிரியேல் பள்ளிக்கூடத்தில் படித்த ஒருசில மாணவர்களின் பெற்றோர்களும் அதில் பயணம் செய்து உயிரிழந்திருந்தார்கள். இச்செய்தியைக் கேட்டு அம்மாணவர்கள் கதறி அழுதார்கள். பள்ளி நிர்வாகமானது, இறந்த அந்த மாணவர்களின் பெற்றோர்களது ஆன்மா அமைதியில் இளைப்பாற பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியது. அதில் இறந்த மாணவர்களின் பெற்றோர்களுக்காக ஜெபிக்கப்பட்டது. அப்போது தன்னுடைய பெற்றோரை விமான குண்டுவெடிப்பில் பறிகொடுத்த மாணவன் ஒருவன், “இறந்த பெற்றோர்களுக்காக ஜெபிக்கின்ற நாம், அவர்களுடைய இறப்புக்குக் காரணமாக இருக்கும் தீவிரவாதிகளுக்காக ஜெபித்தால் இன்னும் நன்றாக இருக்குமே” என்றார். இதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் வியப்புக்குள்ளாகி நின்றார்கள்.

தன்னை வெட்டுவோருக்கு நிழல் தரும் மரம்போல, தன்னுடைய பெற்றோருக்கு தீமை செய்த தீவிரவாதிகளுக்கும் ஜெபிக்கத் துணிந்தது அந்த மாணவரின் உள்ளம். அதுதான் உண்மையான கிறிஸ்தவ மனப்பான்மை. நாம் நமக்கெதிராக தீமை செய்தவருக்கு நன்மை செய்கிறபோது நாம் விண்ணகத் தந்தையின் மக்களாவோம் என்பது உண்மை. ஆகவே, தூய போலிக்கார்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று சாட்சிய வாழ்வு வாழ முற்படுவோம். அதைப் போன்று நமக்கெதிராகத் தீமை செய்வோருக்கு நன்மை செய்யும் நல்ல மனத்தைக் கொண்டுவாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image