St. Caesarius of Nazianzus Bl. Josepha Naval Girbes St. Ethelbert

பிப்ரவரி 24

புனித செசாரியஸ்

mary

புனித செசாரியஸ்

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். (எபி 13:1)

நசியான்சஸ் நகர ஆயர் புனித கிரகோரி மற்றும் புனித நோன்னா இருவருக்கும் 331ஆம் ஆண்டு பிறந்த இளைய மகன் செசாரியஸ். சிறுவயது முதலே சுறுசுறுப்புடன் இருந்த இவரை எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியா நகருக்குப் படிக்க அனுப்பினார்கள். அங்கே வானியல், மருத்துவம் போன்றவற்றைக் கற்று புகழ்மிக்க மாணவராகத் திகழ்ந்தார். மருத்துவ பணியாற்ற கொண்ஸ்தாந்தினோபிளுக்கு 355ஆம் ஆண்டு சென்றார். தமது வசீகரமான புன்னகையாலும், நேர்த்தியான கவனிப்பு மற்றும் துல்லியமான அவதானிப்பினாலும் அப்பகுதி முழுவதும் கைராசி மருத்துவராக மாறினார். பெயரையும், புகழையும் விரும்பாமல் நசியான்சஸ் வந்து தமது பெற்றோருடன் தங்கினார்.

கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலித்த ஜூலியன், செசாரியசைத் தமது தனிப்பட்ட மருத்துவ ஆலோசகாராக வைத்துக் கொள்ள விரும்பி செசாரியசை அழைத்தார். பெற்றோர் மறுப்பு தெரிவித்த போதும் ஜூலியனிடம் சென்றார். தன்னையும் அவர் பக்கம் இழுப்பதை உணர்ந்தபோது ஜூலியனை விட்டு விலகினார் செசாரியஸ்.

பேரரசர் வாலன்ஸ் பிர்த்தினியா நாட்டின் கருவூலக் காப்பாளராகவும், நாட்டின் வரிகளை வசூல் செய்து நாட்டின் பொருள் வளத்தைப் பேணும் வருவாய் அதிகாரியாகவும் செசாரியசை நியமித்தார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென 368ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று நிகாயே பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. எங்குப் பார்த்தாலும் அழுகுரல் நெஞ்சைப் பிளந்தது.

அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட செசாரியஸ் மனக்கலக்கத்துடன் இருந்தார். தந்தையின் பெயரையே தாங்கியிருந்த செசாரியசின் சகோதரர் கிரகோரி செசாரியசைச் சந்தித்தார். மேலும் அரசியல் வாழ்க்கையைத் துறந்துவிட்டு ஆண்டவரைத் தேடுமாறு அறிவுறுத்தி கடிதம் ஒன்றை எழுதினார். அண்ணனின் கூற்றில் இருந்த உண்மையை ஏற்றுச் சிந்தித்த செசாரியஸ் தன் பதவியைத் துறந்தார். நல்ல கிறிஸ்தவராக வாழ ஆரம்பித்தார். திருமுழுக்குப் பெற்றார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பிளேக் என்னும் தொற்று நோய் பரவியது. இந்நோய்க்கு ஆளான சொhரியஸ் திருமுழுக்குப் பெற்ற சில நாட்களிலேயே 369-ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். அடக்கத் திருப்பலியில் தம்பியின் ஆசையைச் சொல்லி உரையாற்றிய அண்ணன் கிரகோரி, செசாரியசுக்கென இருந்த பெருந் தோட்டத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து தம்பியின் ஆசையை நிறைவேற்றினார்.

சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி தம் உடன் பிறப்புக்களை வழிநடத்தும் சகோதர சகோதரிகள் பேறுபெற்றோர்.

image