St. Ananias St. Caesarius St. Walburga
St. Nestor Bl. Sebastian

பிப்ரவரி 25

தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

mary

mary

தூய வால்பர்க்கா (பிப்ரவரி 25)

நிகழ்வு
தூய போனிபசின் அழைப்பின் பேரில், நம் புனிதர் வால்பர்க்காவும் அவரோடு இணைந்து ஒருசில அருட்சகோதரிகளும் இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்குச் சென்று, இறைப்பணிசெய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் இத்தாலிக்கு செல்லத் தேர்ந்துகொண்டதோ பாய்மரக் கப்பல். அவர்கள் சென்ற நேரம் கடலில் சரியாகக் காற்று வீசவில்லை. எனவே, கப்பலானது எங்கும் செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வால்பர்க்கா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினார். அவர் வேண்டிய சில மணித்துளிகளிலேயே கடலில் காற்று வேகமாக வீசியது. அது பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதற்கு ஏதுவாக இருந்தது. அதனால் ஒருசில நாட்களிலேயே கப்பல் இத்தாலியை அடைந்தது.

எல்லாரும் கப்பலை விட்டு இறங்கியதும் கப்பலை ஓட்டிவந்த மாலுமி, வால்பர்க்காவிடம் வந்து, “அம்மா நீ சாதாரண பெண்மணி, இறைவனால் ஆசிர்வத்திக்கப்பவள், உண்மையில் உன்னுடைய ஜெபத்தில்னால்தான் எல்லாரும் கரையை பாதுகாப்பாக அடைந்திருந்திருக்கிறார்கள்” என்று சொல்லி வணங்கி நின்றார். வால்பர்க்கா, உண்மையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

வாழ்க்கை வரலாறு
வால்பர்க்கா, இங்கிலாந்து நாட்டில் 710 ஆம் ஆண்டு, புனித ரிச்சர்ட், புனித வின்னா என்ற தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு வில்லிபால்ட், வினிபால்ட் என்ற சகோதரர்கள் இருவர் இருந்தனர். வால்பர்க்காவிற்கு 11 ஆவது வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருக்கு இருந்த ஆர்வத்தையும், திறமையையும் பார்த்துவிட்டு, அவருடை சகோதரர்கள் அவரை விம்பார்ன் என்ற இடத்தில் இருந்த துறவுமடத்தில் சேர்த்தார்கள். அங்கே வால்பர்க்கா 26 ஆண்டுகள் தங்கியிருந்து, ஞானத்திலும் அறிவிலும் இறையன்பின்லும் தன்னையே வளர்த்துக்கொண்டார். இந்த நேரத்தில்தான் தூய போனிபஸ், இத்தாலிக்கு வந்து பணிசெய்ய ஆர்வமுள்ள அருட்சகோதரிகள் அனுப்பி வைக்குமாறு வால்பர்க்கா இருந்த துறவுமட தலைமை அருட்சகோதரியிடம் கேட்டார். உடனே அவர் வால்பர்க்காவையும் அவரோடு சேர்த்து லியோபா இன்னும் ஒருசில அருட்சகோதரிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் இத்தாலிக்கு சென்று, இறைப்பணியையும் சமூகப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து வால்பர்க்கா தங்கியிருந்த துறவுமடத்திற்கு லியோபா தலைமை அருட்சகோதரியாக மாறினார். அவருக்குப் பிறகு வால்பர்க்கா அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். வால்பர்க்கா தலைமை அருட்சகோதரியாக உயர்ந்தபிறகு பல்வேறு பணிகளைச் சிறப்புடன் செய்து வந்தார். ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், சமூகப் பணிகளையும் அவர் பாங்குடனே செய்துவந்தார். இதற்கிடையில் வால்பர்க்கா சகோதரர் வில்லிபால்ட் இறந்துபோனார். அவருடைய உடலை வால்பர்க்கா, தான் இருந்த துறவுமடத்திற்கு அருகிலேயே அடக்க செய்தார். எப்போதெல்லாம் தனிமையை உணர்ந்தாரோ, அப்போதெல்லாம் வால்பர்க்கா, தன் சகோதரரின் கல்லறைக்குச் சென்று, ஜெபித்துவிட்டு உற்சாகத்தோடு திரும்பி வந்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வால்பர்க்கா திடிரென ஒருநாள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி அப்படியே இறந்துபோனார். அவருடைய உடலை அவருடைய சகோதரரின் உடலுக்கு அருகிலே அடக்கம் செய்தார்கள். வால்பர்க்காவிற்கு 870 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

வால்பர்க்காவின் கல்லறைக்கு இன்றைக்கு நிறையப்பேர் வந்து போகிறார்கள். காரணம் அவருடைய கல்லறையிலிருந்து வழிந்தோடும் எண்ணையை பூசினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இன்னலில் இறைவனைத் துணைக்கு அழைத்தல்

தூய வால்பர்க்காவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே இன்னலில் இறைவனை துணைக்கு அழைப்பதுதான். மேலே குறிப்பிட்ட நிகழ்வு ஒன்றே போதும், அவர் எப்படி, தன்னுடைய வாழ்வில் இன்னல் வந்த வேளையில் இறைவனைத் துணைக்கு அழைத்து, அதிலிருந்து மீண்டார் என்று சொல்வதற்கு. நம்முடைய வாழ்வில், நாம் எப்போதும் இறைவனைத் துணைக்கு அழைக்கின்றோமா? அல்லது நம்முடைய திறமையில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். திபா 50:15 ல் வாசிக்கின்றோம், “துன்ப வேளையில் நீங்கள் என்னைக் கூப்பிடுங்கள்; நான் உங்களை காத்திடுவேன்” என்று. ஆம், இறைவனை நம் துன்பவேளையில் அழைக்கின்றபோது, அவர் நமக்கு உதவிட விரைந்து வருவார் என்பது உண்மை.

ஆகவே, தூய வால்பர்க்காவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று, இறைவழியில் நடப்போம், இடுக்கண் வேளையில் இறைவனை அழைப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்


 

image