St. Gerasimus St. John Joseph of the Cross

மார்ச் 5

தூய சிலுவை யோவான் ஜோசப்

mary

mary

தூய சிலுவை யோவான் ஜோசப் (மார்ச் 05)

“மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் சிலுவை யோவான் ஜோசப், இத்தாலியில் உள்ள இஸ்கியா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1654 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலே பக்தியிலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கிய இவர், தனது பதினாறு வயதில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, 1677 ஆம் ஆண்டு குருவானார். குருவானவராக மாறிய இவர் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு நீண்டநேரம் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார். இவருடைய ஜெபவாழ்க்கை இவரை மேலும் மேலும் உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால் தொடக்கத்தில் நவதுறவிகளுக்கு பொறுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக உயர்ந்து துறவற மடத்தின் தலைவரானார்.

துறவுவாழ்க்கையில் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்தார். பணிவிடை பெறுவதல்ல, பணிவிடை புரிவதே மேலானது என்றும் தன்னையே இறைவனுக்கு முழுமையாகக் கையளிப்பதும்தான் துறவற வாழ்வின் மேலான குறிக்கோள்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து வந்தார். இவருடைய கைகளால் நிறைய வல்ல செயல்கள் நடைபெற்றன. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரிடத்தில் வந்தபோது, இவர் தனது கைகளை வைத்து ஜெபித்தபோது அவர்கள் நோய் நீங்கி நலமடைந்தார்கள். இவர் வசதியான குடும்பத்திலிருந்து வந்தபோதுகூட எப்போதும் ஏழ்மையையே கடைப்பிடித்து வந்தார்.

ஏழ்மை, தாழ்ச்சி போன்ற புண்ணியங்களில் சிறந்துவிளங்கிய சிலுவை யோவான் ஜோசப் மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் இன்னல்களும் சூழ்ந்த நேரத்தில் மரியாளிடத்தில்தான் இவர் மிகுந்த பக்திகொண்டு ஜெபித்துவந்தார். மரியாவும் இவருக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்து வந்தார். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த சிலுவை யோவான் ஜோசப் 1734 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி, மரணப்படுக்கையில் விழுந்து அப்படியே இறந்து போனார். இவருக்கு 1839 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் பயஸ் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

சேவை செய்து வாழ்தல்

தூய சிலுவை யோவான் ஜோசப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், சேவை செய்து வாழ்ந்த வாழ்க்கையாகும். ஆண்டவர் இயேசு சொன்ன, ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்காக தம் உயிரையும் கொடுக்க வந்தார்’ என்ற வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லி அதன்படியே இவர் வாழ்வதற்கு முயற்சிகள் செய்து வந்தார். இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் நல்ல மனதோடு, அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்ய முயற்சி செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றோமோ ஒழிய, நாம் அடுத்தவருக்குச் சேவை செய்ய முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் தூய சிலுவை யோவான் ஜோசப் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார்.

ஒருசமயம் ரோட்னி ஸ்மித் என்ற வெளிநாட்டுக்காரர், அன்னை தெரசா நடத்தி வந்த அனாதை இல்லத்திற்கு சென்றிருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால், அனாதை இல்லத்தில் இருந்த ஒரு பணியாளர், அங்கிருந்த நோயாளி ஒருவர் வாந்தி எடுத்து வைத்ததை கழுவிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோட்னி ஸ்மித் அந்தப் பணியாளரிடம் சென்று, “எப்படி உங்களால் இந்த வேலையெல்லாம் செய்ய முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர், “யாராவது பிள்ளைகள் ‘அசுத்தம்’ செய்து வைத்ததை சுத்தம் செய்யும்போது அதனை வேலை என்று சொல்வார்களா? இல்லைதானே... அதுபோன்றுதான் நானும் இதை வேலையாகச் செய்யாமல் கடமையாகச் செய்கின்றேன்” என்றார். அந்தப் பணியாளர் பேசும்போது வார்த்தைகளில் வெளிப்பட்ட அன்பையும் கண்களில் தெரிந்த ஒளியையும் கண்டு வியந்துபோய் நின்றார்.

தான் செய்த ‘பணியை’ ஏதோ கடமைக்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்புடன் செய்ய, அந்தப் பணியாளரின் செயல் உண்மையில் நமது பாராட்டுக்குரியதாக இருக்கின்றது. நாமும் அர்ப்பண உள்ளத்தோடு சேவை செய்யவேண்டும் என்பதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய சிலுவை யோவான் ஜோசப்பின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அர்ப்பண உள்ளத்தோடு ஆண்டவருக்கும் அவரது அன்பு மக்களுக்கும் சேவை செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image