St. Fridolin St. Julian of Toledo St. St Colette of Corbie

மார்ச் 6

✠ புனிதர் கொலெட் ✠

mary

✠ புனிதர் கொலெட் ✠ (St. Colette of Corbie)

நிகழ்வு

ஒரு சமயம் கொலேட் இருந்த பகுதியில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை குறைமாதக் குழந்தையாக பிறந்து உடல் நலம் குன்றியிருந்தது. இதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்தால் உடல் நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினார். ஆலயத்திற்கு சென்று, அங்கிருந்த குருவானவரிடம் காட்டியபோது, அக்குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது குருவானவருக்குத் தெரியவந்தது. எனவே குருவானார், குழந்தையின் தந்தையிடம், “குழந்தை ஏற்கனவே இறந்துபோய்விட்டது. இறந்த குழந்தைக்கு திருமுழுக்குக் கொடுப்பது நல்லதல்ல” என்றார். இதைக் கேட்டு அந்த குழந்தை தந்தை கதறி அழுதார்.

அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன குருவானவர் அவரிடம், “பக்கத்தில் கொலேட் என்ற பெண் துறவி ஒருவர் இருக்கின்றார். உன்னுடைய குழந்தையை அந்தத் துறவியிடம் நீ எடுத்துக்கொண்டு போனால், கட்டாயம் அவர் உன்னுடைய குழந்தையை உயிர்பித்துத் தருவார்” என்றார். குருவானார் சொன்னதை நம்பி, அவர் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொலேடிடம் ஓடினார். அவரைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னார். உடனே அவர் தான் அணிந்திருந்த மேலாடையை (Habit) எடுத்து, அந்தக் குழந்தையின் மீது போர்த்தி, அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் ஜெபித்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “உன்னுடைய குழந்தை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதனால் இக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் குருவானவரிடம் காட்டி, திருமுழுக்குக் கொடு” என்றார்.

கொலேட் சொன்ன வார்த்தைகளை நம்பி, அந்த மனிதர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குருவானவரிடத்தில் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை போகிற வழியிலே பிழைத்துக்கொண்டது. உயிர்பிழைத்த அந்தக் குழந்தையை குருவானவரிடத்தில் காட்டி, திருமுழுக்குக் கொடுத்தார். பின்னாளில் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி, கொலேட்டின் சபையில் சேர்ந்து துறவியானது.

வாழ்க்கை வரலாறு

கொலேட், 1381 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி, பிரான்சில் உள்ள கார்பி என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர்கள் தூய நிக்கோலாசிடம் இடைவிடாது ஜெபித்துவந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களது ஜெபம் கேட்கப்பட்டது. ஆம், அவர்களது ஜெபத்தின் பயனாக கொலேட் பிறந்தார். கொலேட் பிறக்கும்போது அவருடைய தந்தைக்கு 60 வயது.

கொலேட் வளரும்போதே பக்தியோடும் ஒழுக்கத்தோடும் வளர்ந்து வந்தார். அவருடைய வளர்ச்சியைக் கண்டு, அவருடைய பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படி எல்லாமே நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், கொலேட்டின் பெற்றோர் இருவரும் இறந்துபோனார்கள். இதனால் கொலேட் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவர் மனம்தளராமல், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவற மடத்தில் இருந்த சமயத்தில், ஒருநாள் அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது தூய அசிசியார் அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அசிசியார் கொலேட்டிடம், கிளாரா சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு மறைந்துபோனார். கொலேட்டுக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் புரிந்தது. உடனே அவர் கிளாரா மடத்தில் மாற்றங்களைக் கொண்டு வரத் தொடங்கினார். அதற்கு பலரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் கொலேட் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.

கொலேட் சபையை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்ற அதே வேளையில், ஏழை எளியவரிடத்திலும் மிகவும் அக்கறை கொண்டு வாழ்ந்துவந்தார். சபையில் யாரும் செய்யத் துணியாத மிகவும் சாதாரண பணிகளையும் செய்தார். இதனால் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார். இப்படிப்பட்டவர் 1447 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பயஸ் புனிதர் பட்டம் கொடுத்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய கொலேட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்தல்

தூய கொலேட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தார் என்பது நமக்குப் புரியும். அவர் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், இறைவன் அவர் வழியாக பல வல்ல செயல்களைச் செய்தார் என்பதை அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.

ஒருமுறை அவர் திருத்தந்தை பெனடிக்டைச் சந்திக்க நைசை நோக்கிப் பயணம் செய்தபோது, நண்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். அந்த நண்பரின் மனைவியோ எப்போது வேண்டுமானால் குழந்தையைப் பிரசவிக்கும் தருணத்தில் இருந்தார். இரவில் எல்லாரும் தூங்கப் போன சிறிதுநேரத்தில் நண்பரின் மனைவி பிரசவ வேதனையில் அலறினார். உடனே கொலேட் அருகில் இருந்த ஆலயத்திற்குச் சென்று அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என்று இறைவனிடம் ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டதற்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடைபெற்றது. அதனால் எல்லாரும் இறைவனைப் போன்று மகிழ்ந்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் வழியாக கொலேட் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றவராய் இந்த உலகில் வலம்வந்தார். தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றபோது, இறைவனால் ஆசிர்வதிக்கப்படும் என்பது உறுதி.

ஆகவே, தூய கொலேட்டைப் போன்று நாமும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image