St. Perpetua

மார்ச் 7

பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள்

mary

mary

பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் (மார்ச் 07)

கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்ததற்காக பெர்பெத்துவாவும், அவருடைய பணிப்பெண்ணான பெலிசித்தம்மாளும் சிறையில் அடைபட்டு இருந்தார்கள். அப்போது ஒருநாள் பெர்பெத்துவா ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் தங்கமயமான ஓர் ஏணி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த ஏணியில் வேகவேகமாக ஏறினார். இடையே ஓரிடத்தில் கொடிய பாம்பொன்று இருப்பதையும் கண்டார். அந்த பாம்பைக் கண்டதும் அவர் பயந்து நடுங்கினார். இருந்தாலும், அவர் மனதிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பாம்போடு போராடி இறுதியில் வெற்றியும் கண்டார். பின்னர் அவர் தொடர்ந்து ஏறி, விண்ணகத்தை அடைந்தார். விண்ணகத்தில் தந்தையாம் கடவுள் அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.

பெர்பெத்துவா இந்தக் காட்சியை தனக்கு வேதம் போதித்து, திருமுழுக்குக் கொடுத்து, தன்னோடு சிறையில் அடைபட்டுக் கிடந்த வேதியர் சட்டைரஸ் என்பவரிடம் எடுத்துச் சொன்னபோது அவர் அவளிடம், “இந்தக் காட்சி, கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கத் துணிந்திருக்கும் உனக்கு, அவர் உனக்குக் கொடுக்க இருக்கும் பரிசை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது” என்று எடுத்துச் சொன்னார்.

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய பெர்பெத்துவா, ஒரு கிறிஸ்தவ தாய்க்குப் பிறந்து, பின்னாளில் துனிசியாவில் இருந்த ஓர் உரோமை அதிகாரிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். அப்போது இவருக்கு 22 வயது. இவருடைய பணிப்பெண்தான் பெலிசித்தம்மாள். இவர்கள் வாழ்ந்த காலம் மூன்றாம் நூற்றாண்டு. இவர்களுடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும் வேதகலாபனையும் அதிகமாக நிகழ்ந்தன. கிறிஸ்தவ நெறியை பின்பற்றியவர்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்கள்.

அப்போது உரோமையை ஆண்ட செப்டிமஸ் செவேருஸ் என்ற கொடுங்கோலன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒருசில கிறிஸ்தவப் பெண்களையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அந்நேரத்தில் பெர்பெத்துவாவின் தந்தை, (அவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்) பெர்பெத்துவாவிடம் வந்து, “தயவுசெய்து நீ கிறிஸ்துவை மறுதலித்துவிடு, அரசன் உன்னை விடுதலை செய்துவிடுவான். இல்லையென்றால் நீ அழிந்துவிடுவாய்” என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர், அருகே இருந்த ஒரு பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பாத்திரம் இருக்கிறதே, இதைப் பாத்திரம் என்றுதான் அழைக்கவேண்டும், வேறு எப்பெயராலும் அழைக்க முடியாது. அதைப் போன்றுதான் நான் கிறிஸ்தவள் என்றே அழைக்கப்படவேண்டும். அதில்தான் எனக்கு பெருமை இருக்கின்றது” என்று சொல்லி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

அதன்பிறகு அரசன் பெர்பெத்துவாவையும் பெலிசித்தம்மாளையும் இன்னும் அவர்களோடு இருந்த ஒரு சில பெண்களையும் கொடிய விலங்குகளுக்கு முன்பாகத் தூக்கி எறிந்தான். ஆனால் அவை அவர்களை ஒன்றுமே செய்யவில்லை. இதைக் கண்டு அரசன் வியப்புற்றான். பின்னர் அவன் அவர்களை எரியும் தீப்பிழம்பில் தூக்கி எறிந்தான். அப்போதும் அந்தத் தீப்பிழம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அந்தத் தீப்பிழம்பின் நடுவே இறைவனைப் பாடி புகழ்ந்துகொண்டிருந்தார்கள். இதைக் கண்டு சினமுற்ற அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்கி கொன்றுபோட்டான். அவர்கள் தங்களுடைய வாழ்வினாலும் இறப்பினாலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து இறந்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்பெத்துவா மற்றும் பெலிசித்தம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றல்

தூய பெர்பெத்துவாவும் பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக எதையும் ஏற்கத் தயாராக இருந்தார்கள். இதை நாம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து எளிதாகக் கண்டுணரலாம். அவர்கள் அரசனைக் குறித்தோ, சாவைக் குறித்தோ பயப்படவே இல்லை. எல்லாவற்றிற்கும் துணிவுடன் தயாராக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறுகிறார்கள்.

இன்றைக்கு அவர்களுடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு அவர்களிடமிருந்த துன்பத்தை, சவால்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் துன்பமா அது எதற்கு?, அது வேண்டவே வேண்டாம் என்று நினைக்கிறோம். துன்பங்கள்தான் இன்பத்திற்கான நுழைவாயில் என்பதை மறந்துபோய்விடுகிறோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் பாடுகளைக் குறித்து சொன்னபோது பேதுரு, “ஆண்டவரே இது உமக்கு வேண்டாம்” என்று சொல்கிறார் (மத் 16: 22). காரணம் அவர் துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைத்தார். ஆனால் இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. அவர் துன்பங்கள் தான் தூயகத்திற்கான நுழைவாயில், மீட்புக்கான வழி என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் தன்னுடைய இன்னுயிரையும் இழக்கத் துணிந்தார். இன்றைக்கு நாம் துன்பத்தை எத்தகைய மனநிலையோடு பார்க்கிறோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆப்பிள் அதிகமாக உற்பத்தியாகும் அமெரிக்காவில் உள்ள மெயினி (Maine) என்ற இடத்தின் வழியாக ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் ஆப்பிள் தோட்டத்தில் பழங்கள் அதிகமாக விளைந்திருந்தன. இதைப் பார்த்த அம்மனிதருக்கு ஆச்சரியம் தாங்க முடியில்லை. எனவே, அவர் அந்த ஆப்பிள் தோட்டத்திற்குள் சென்று, அங்கே இருந்த விவசாயியிடம், “எப்படி ஐயா! உங்களுடைய தோட்டத்தில் மட்டும் அதிகமாக பழங்கள் ஓர் மரத்தில் காய்த்திருக்கின்றன?, இதன் இரகசியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், ஆப்பிள் மரத்தின் அடிப்பகுதியில் ஆங்கங்கே கொத்தி எடுக்கப்பட்டிபருப்பதைச் சுட்டிக்காட்டினார். பின்னர் அவரிடத்தில், “இப்படி ஒவ்வொரு மரத்திலும் கொத்தப்பட்டிருப்பதன் காரணம், இவை இன்னும் நன்றாக கனிகொடுப்பதற்காகவே ஆகும். ஒருவேளை இம்மரத்தின் அடிப்பகுதியைக் கொத்தாமல் விட்டுவிட்டால், அவை நன்றாக கணிகொடுக்காமலே போய்விடும்” என்றார்.

மரம் மட்டுமல்ல, மனிதர்களும் கூட தங்களுடைய வாழ்க்கையில் வலிகளைத் தாங்கிக் கொள்கிறபோதுதான், துன்பங்களை ஏற்றுக்கொள்கிறபோதுதான் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பது உண்மை.

தூய பெர்பெத்துவாவும், பெலிசித்தம்மாளும் கிறிஸ்துவுக்காக துன்பங்களையும் பாடுகளையும், அவமானங்களையும் ஏன் இறப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் புனிதர்களாக உயர்ந்து நிற்கிறார்கள். நாமும் நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image