St. Domnic Savio St. Frances Of Rome

மார்ச் 9

உரோமை நகர தூய பிரான்செஸ

mary

mary

உரோமை நகர தூய பிரான்செஸ் (மார்ச் 09)

“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25: 40)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பிரான்செஸ், 1384 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சிறுவயதிலே துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இவர் வளர்ந்து பெரியவரானபோது இவருடைய பெற்றோர் இவருடைய விருப்பத்திற்கு மாறாக லொரென்சோ என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டனர். தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என முதலில் வருத்தப்பட்ட பிரான்செஸ், பின்னாளில் அதனை இறைத்திருவுளம் என ஏற்றுக்கொண்டார்.

திருமண வாழ்க்கையில் தன்னுடைய கணவருக்கு மிகவும் பிரமாணிக்கமாகவும் எடுத்துக்காட்டான ஒரு பெண்மணியாகவும் வாழ்ந்துவந்தார். குறிப்பாக இவர் ஏழை எளிய மக்களிடத்தில் காட்டிய அன்பு எல்லாரையும் வியக்க வைத்தது. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, பிரான்செஸ் தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்தார். இன்னொரு சமயம் நாட்டில் கொள்ளை நோய் ஏற்பட்டபோது, வீடு வீடாகச் சென்று எல்லாரிடத்திலும் உணவுப் பொருட்களை வாங்கி, அதனைத் தேவையில் இருநத மக்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தக் கொள்ளைநோயில் பிரான்செசின் இரு பிள்ளைகளும் இறந்து போனார்கள். அப்போது அவர் அடைந்த துயரை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது.

பிரான்செஸ், எப்போதுமே தன்னுடைய வாழ்வில் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அவர் செய்துவந்த ஜெபம் எல்லாப் பணிகளையும் சிறப்புடன் செய்ய உதவி புரிந்தது. ஏழை நோயாளிகள் தங்க இடமில்லாமல் தவித்தபோது அவர்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தார். இப்படி அவர் எந்நேரமும் ஏழைகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவருடைய கணவர் அவருக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அத்தகைய செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கான எல்லா ஊக்கத்தையும் அளித்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் பிரான்செசின் கணவர் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் தனிமரமான பிரான்செஸ் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்குப் பணிசெய்வதையே தன்னுடைய முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.

இப்படி எந்நேரமும் ஏழைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்த பிரான்செஸ், அவர்களுக்காக ஒரு சபையை நிறுவினார். அந்த சபையின்மூலம் அவர் தன்னாலான உதவிகளை ஏழைகளுக்குச் செய்து வந்தார். இப்படி ஏழைகள் வாழ்வுபெற தன்னையே கரைத்துக்கொண்ட பிரான்செஸ், 1440 1440, மார்ச் ஒன்பது அன்று இறையடி சேர்ந்தார். திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1608, மே 29 தேதி இவரை புனிதராக உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழை எளியவரிடத்தில் அக்கறை

தூய பிரான்செசின் வாழ்வை ஒருமுறை படித்துப் பார்க்கும்போது அவர் ஏழை எளியவரிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் நமக்குப் புரியும். அவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர் என்று ஏழைகளை மையப்படுத்திய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரைப் போன்று நாமும் ஏழைகளை மையப்படுத்திய வாழ்கையை வாழ்கின்றபோது, அவரது அன்புச் சீடர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அன்னைத் தெரசா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஓர் அருமையான நிகழ்ச்சி. அன்னைத் தெரசா கன்னியர் மடத்தை விட்டுவிட்டு, கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் பணிசெய்யத் தொடங்கிய முதல் நாளன்று, சாலையோரத்தில் உடல் முழுவதும் புண்களாக இருந்த ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். அவரைப் பார்த்த அன்னைத் தெரசா அவரைத் தூக்கி எடுத்துக் குளிப்பாட்டி, அவருக்கு புத்தாடை அணிவித்தார். இவற்றையெல்லாம் பார்த்த அந்த நோயாளி, “அம்மா! என்னை நீங்கள் இந்தளவுக்குப் பரிமாரித்துக் கொள்கின்றீர்களே. எது உங்களை இவற்றையெல்லாம் எனக்கு செய்யத் தூண்டியது?” என்று கேட்டார். அதற்கு அன்னை அவரிடத்தில், “உன்மீது நான் வைத்திருக்கும் அன்புதான் என்னை இவ்வளவு காரியங்களையும் செய்யத் தூண்டியது” என்றார்.

ஆம், அன்னைத் தெரசா ஏழைகள், அனாதைகள், நோயாளிகள் போன்றோரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்புதான் அவரை எல்லாப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்ய தூண்டியது. நாமும் அன்னைத் தெரசாவைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்செஸ் போன்று ஏழை எளியவரிடம் உண்மையான அன்பு கொண்டிருக்கும்போது, நம்மால் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆகவே, பிரான்செசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image