Bl.Luigi Orione St. Seraphhina (Fina)

மார்ச் 12

தூய செராபினா (மார்ச் 12)

mary

தூய செராபினா (மார்ச் 12)

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16 :24)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் செராபினா, இத்தாலியில் உள்ள கிமிக்ஞானோ (Gimignano) என்னும் ஊரில் 1238 ஆம் ஆண்டு பிறந்தார். செராபினாவின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் நொடிந்து போனது. இந்த வருத்ததிலே செராபினாவின் தந்தை இறந்துபோனார். இதனால் குடும்பப் பொறுப்பு செராபினாவின் தலையில் விழுந்தது. செராபினாக்கு அப்போது வயது ஒன்பது. ஆனாலும் அந்த சின்ன வயதில் துணி நெய்துதருவதும் சிறு சிறு வேலைகளைச் செய்வதும் என்று குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்து வந்தார். செராபினா பகல் முழுவதும் குடும்பத்திற்காக உழைத்தாலும் இரவெல்லாம் அவள் இறைவனிடத்தில் விழித்திருந்து ஜெபித்து வந்தாள்.

வாழ்க்கை ஓரளவுக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், திடிரென்று ஒருநாள் செராபினாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்தபடுக்கையாய் ஆனாள். அப்போதெல்லாம் அவள் இறைவனிடத்தில், “இறைவா! எனக்கு ஏன் இந்தப் பக்கவாதம் ஏற்பட்டது என்று தெரியவில்லை, இருந்தாலும் இதனை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி ஜெபித்து வந்தாள்.

இதற்கிடையில் செராபினாவின் தாய், ‘கணவர் இறந்து போய்விட்டார், பெற்ற பிள்ளைக்கும் இப்படி ஆகிவிட்டதே’ என்ற வருத்தத்திலே சில நாட்கள் இருந்தார். ஆனாலும் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று மனதைத் தேற்றியவராய், குடும்பத்திற்காக தன்னால் முடிந்தமட்டும் உழைத்தார்; தன் மகள் செராபினாவை நல்லவிதமாய் பராமரித்து வந்தார். இப்படி வாழ்க்கை போய்கொண்டிருந்த சமயத்தில் செராபினாவின் தாயாரும் இறந்துபோனார். அப்போது செராபினா அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. ஆனாலும் அவள் இறைவனைப் பழிக்காமல், எல்லாவற்றையும் இறைவனிடத்தில் ஒப்புக்கொடுத்து மன்றாடி வந்தாள். செராபினாவின் தாயார் அவரை விட்டுப் பிரிந்த சமயத்தில், அவருக்கு உதவிக்கு யாருமே வரவில்லை, அவள்தான் அவளுடைய பிழைப்புக்கான எல்லா வழிகளையும் பார்த்துக்கொண்டாள். இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் அவள் திருத்தந்தை தூய கிரகோரியாரைப் பற்றி கேள்விப் பட்டாள். அவர் தன்னுடைய வாழ்வில் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தார் என்று கேள்விப்பட்ட செராபினா அவரிடத்தில் உருக்கமாக மன்றாடி வந்தாள்.

ஒருநாள் அவள் கிரகோரியாரிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது, கிரகோரியார் அவளுக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் அவர் செராபினாவிடம், “செராபினா! மண்ணகத்தில் நீ அடைந்து வரும் துன்பங்களுக்கு முடிவுவரும், மார்ச் 12 ஆம் நாள் நீ இறைவனிடத்தில் எடுத்துக்கொள்ளப்படுவாய், அதுவரைக்கும் பொறுத்திரு” என்று சொல்லிவிட்டு அவர் மறைந்துபோனார். அந்நாள் வரைக்கும் செராபினா இறைவனிடத்தில் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே வந்தாள். குறிப்பிட்ட நாளும் அதாவது 1253 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 12 ஆம் நாள் வந்தது. கிரகோரியார் சொன்னது போன்றே செராபினா இறைவனிடத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டாள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய செராபினாவின் நினைவுநாளைக் கொண்டாடும் இன்று அவரிடத்திலிருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

துன்பத்தைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல்

தூய செராபினாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது, அவர் தனக்கு வந்த துன்பங்களை எல்லாம் எவ்வளவு பொறுமையோடு தாங்கிக் கொண்டார் என்பது புரியும். அவர் துன்பங்களை பொறுமையோடு தாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுத்து மன்றாடியதால்தான் என்னவோ, இறைவன் அவரைப் புனிதையாக உயர்த்தியிருக்கின்றார். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை எத்தகைய மனநிலையோடு ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பிரபலப் பள்ளிக்கூடத்தில் நன்னெறிப் பாடத்தை எடுத்துவந்த ஆசிரியர், மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் ஓர் உண்மையை விளக்க நினைத்தார். எனவே அவர் ஒரு செங்கலை எடுத்து வந்து, “இந்த செங்கல் எப்படி செய்யப்படுகின்றது?” என்று கேட்டார். அதற்கு முன்வரிசையில் இருந்த மாணவன் ஒருவன் எழுந்து, “சார், இந்த செங்கலைச் செய்வதற்கு முதலில் ஆற்று மணலையும் களிமண்ணையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பவேண்டும், அதன்பிறகு ஒரு செவ்வக அச்சில் வைத்து வார்க்கவேண்டும், வார்க்கப்பட்டதை நெருப்பில் இட்டு இரண்டு மூன்று நாட்கள் நன்றாகச் சூடேற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த மாதிரி செங்கல் வந்துவிடும்” என்றான். “மிகச் சரியாகச் சொன்னாய்” என்று சொன்ன ஆசிரியர், அந்த மாணவனைப் பாராட்டிவிட்டு, எல்லா மாணவர்களையும் பார்த்து, “இந்த செங்கல் எப்படி அச்சில் வார்க்கப்பட்டு, அதன்பின் நெருப்பிலிட்டு சூடேற்றப்படுகின்றதோ, அது போன்று நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை பொறுமையோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து உழைத்தோம் என்றால், வாழ்வில் முன்னுக்கு வருவது உறுதி” என்றார்.

துன்பங்களைத் தாங்குவோரே, வாழ்வில் இன்பம் காண்பர் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய செராபினாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று வாழ்வில் வரும் துன்பங்களை பொறுமையோடு தாங்கிக் கொண்டு, இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image