St. Heldrad St. Euphrasia

மார்ச் 13

புனித யூஃப்ராசியா

mary

புனித யூஃப்ராசியா

மகளே, துணிவோடிரு: உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று (மத் 9:22)

கொண்ஸ்தாந்தினோபிளில் 380-ஆம் ஆண்டு பிறந்தவர் பெண் நிலவு யூஃப்ராசியா. இவருடைய தந்தை பெயர் அன்டிகோனஸ். இவர், பேரரசர் தியோடோசியசின் உறவினர். அதனால் நகர ஆளுநராக இருந்தார். அரசவை உறுப்பினராகவும் இருந்தார். யூஃப்ராசியா சிறுமியாக இருந்தNபுhதே தந்தை இறந்தார். அரசன் எவ்வளவோ வற்புறுத்தியும் அரச மரியாதையுடன் அங்கு வாழ யூஃப்ராசியாவின் தாய்க்கு விருப்பம் இல்லை. மகளை அழைத்துக்கொண்டு தங்களுக்கொன்று எகிப்தில் இருந்த ஒரு தோட்டத்திற்குச் சென்றார். துறவிகள் போலவே தன்னொடுக்கத்திலும், செபத்திலும் வாழ்க்கை நடத்தினார்.

இவர்கள் தங்கி இருந்த தோட்ட வீட்டிற்கு அருகிலேயே துறவு மடம் ஒன்று இருந்தது. அவ்வப்போது அங்கு செல்லும் தாய் தன் மகளையும் அங்கு அழைத்துச் செல்வது வழக்கம். துறவு மடத்தின் ஒழுங்குகளும், செபங்களும் யூஃப்ராசியாவிற்கு பிடித்துப்போனது. யூஃப்ராசியாவிற்கு ஏழு வயது நடந்தபோதுதான் அங்கேயே தங்கத் தாயிடம் விருப்பம் தெரிவித்தார். தாய் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். வாரி அணைத்து முத்தமிட்டு தன் மகளை மடத்திலே சேர்த்துவிட்டாள்.

மகளை விட்டு விட்டுத் தனிமையில் இறைவனைத் துதித்த தாய் இறந்தார். இறந்த செய்தி கேள்விப்பட்ட பேரரசர் தியோடோசியன், யூஃப்ராசியா தனியாகத் தவிப்பாளே என நினைத்து அவளை அழைத்துவர ஆளனுப்பினார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மணமுடிக்க யூஃப்ராசியா சிறுமியாக இருந்தபோதே அரசர் முடிவு செய்திருந்தார். எனவே அவர் திருமண ஏற்பாட்டையும் ஆரம்பித்தார்.

“பேரரசரின் முடிவுக்கு தான் உடன்பட முடியாதபடிக்கு இறைவன் என்னைத் தேர்ந்துள்ளார்” என்று கடிதம் எழுதிய யூஃப்ராசியா தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கும்படியாகவும், தனது தோட்டத்தில் உள்ள அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கும்படியாகவும் கடிதம் எழுதினார். மனதார சம்மதம் தெரிவித்த பேரரசர் தான் இறப்பதற்குச் சிலநாள்கள் முன்பாக யூஃப்ராசியாவின் எண்ணத்தை நிறைவேற்றி 395-ஆம் ஆண்டு இறந்தார்.

தாழ்ச்சி, இரக்கம், கனிவு போன்ற பண்புகளுக்குச் சொந்தக்காரி யூஃப்ராசியா. சோதனைக்கு உட்பட்ட நேரங்களில் தன் தலைமைச் சகோதரியிடம் சென்று வழிகாட்டுதல்களைப் பெற்று அதன்படி வாழ்ந்தார். சில நேரங்களில் கடினமான வேலைகளைப் பரிகாரமாக கொடுத்தபோதுகூட புன்னகையுடன் தாழ்ச்சியுடன் செய்து தன்னைத் திருத்திக்கொண்டார். ஒரு முறை பெரிய பாராங்கல்லை ஒவ்வொரு இடமாக தள்ளி நகர்த்திக் கொண்டே இருக்க தண்டனை கொடுக்கப்பட்டது. அந்தச் சூழலிலும் சாந்தமாக இருந்தார். இதைக்கண்ட சாத்தானே இவருக்கு கீழ்படிந்து ஓடிவிட்டது.

சாத்தானின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பலரை இவர் குணமாக்கினார். முடக்குவாதமுற்றவர்கள், பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள், ஆகியோர் மீது சிலுவை அடையாளம் வரைந்து குணப்படுத்தினார். சிலுவை அடையாளம் வரையும்போது, “உன்னைப் படைத்த ஆண்டவர் உன்னை நலமாக்குவாராக” என்று செபித்தார். இறப்பிற்கு முன்பே பல புதுமைகள் செய்த யூஃப்ராசியா 410-ஆம் ஆண்டில தம் 30-ஆவது வயதில் இறந்தார். இறப்பிற்குப் பிறகும் புதுமைகளால் மக்களின் நலம் தரும் நாயாகியானார்.

நம்மைப் படைத்த ஆண்டவர் நலன்களால் நம்மை நிரப்புவார் நலிவுற்றாலும் நாம் நலமோடு வாழ நம்மைத் தேற்றுவார்.

image