Bl. Artemide Zatti St. Clement Mary Hofbauer
St. Louise De Marillac St. Zachary

மார்ச் 15

தூய லூயிஸ் தே மரிலாக்

mary

தூய லூயிஸ் தே மரிலாக் (மார்ச் 15)

“சமூகத்தில் விளிம்பு நிலையிலிருப்பவர்களுக்கு சேவை புரிவதில் தீவிரம் காட்டுங்கள்; அவர்கள்மீது அன்பு மழை பொழியுங்கள்; அவர்களுக்குரிய மதிப்புக் கொடுங்கள்; கிறிஸ்துவுக்கு நீங்கள் காட்டும் மரியாதைப் போல் இவர்களுக்கும் காட்டுங்கள்” - தூய லூயிஸ் தே மரிலாக்

வாழ்க்கை வரலாறு

லூயிஸ் தே மரிலாக், 1591 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள், பாரிஸ் நகரிலிருந்த ஒரு தளபதிக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த உடனே இவருடைய தாயார் இறந்துபோக, இவருடைய தந்தை வேறொரு பெண்ணை மணந்தார். இதனால் லூயிஸ் தே மரிலாக் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிற்றன்னை இவரைக் கடுமையாகச் சித்ரவதை செய்தார். இதையெல்லாம் பார்த்த இவருடைய தந்தை, இவரை பார்சி நகரில் இருந்த சாமிநாதர் துறவுமடத்திற்கு அனுப்பி வைத்து கல்வி கற்க வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் அங்கு சிறந்த முறையில் கல்வி கற்றுவந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல லூயிஸ் தே மரிலாக்குக்கு தானும் துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் கிளாரிஸ்ட் சபை தலைமை அருட்சகோதரியிடம் சென்று, தன்னை அவர்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த தலைமை அருட்சகோதரியோ, “உன்னைப் பார்க்கின்றபோது கடவுள் உனக்கென்று வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதுபோல் தோன்றுகிறது. ஆகவே, உன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, அதன்பின் ஒருவேளை கடவுள் உன்னை இந்தப் பணிக்கென அழைத்திருந்தால் இங்கு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார். லூயிஸ் தே மரிலாக்கும் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு அரசி, இவரை தன்னுடைய அரசாங்கத்தின் ஆவணக் காப்பாளராக இருக்கக் கேட்டுக்கொண்டார். லூயிஸ் தே மரிலாக்கும் அதற்குச் சரியென்று சொல்லி, அங்கேயே பணிசெய்து வந்தார். அப்போதுதான் அவர் அன்றோய்ன் என்ற உயர்குடி இளைஞரைச் சந்தித்தார். அவர் இவர்மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். எனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்வில் மகிழ்ந்திருந்த லூயிஸ் தே மரிலாக், மிசெல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். இப்படி வாழ்க்கை இன்பமயமாகப் போய்க்கொண்டிருக்க திடிரென்று ஒருநாள் லூயிஸ் தே மரிலாக்கின் கணவர் இறந்துபோனார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இவர், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்வினை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே அன்புப் பணிகளை ‘அன்புப் பணிக் குழுவினர்’ என்ற பெயரில் செய்துகொண்டிருந்த தூய வின்சென்ட் தே பவுலின் தோழமை கிடைத்தது. அவர் லூயிஸ் தே மரிலாக்கை வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு தன்னோடு பணிசெய்ய இணைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் போய்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் ஆண்களுக்களு சேவை செய்ய ஏராளமான சபைகள் இருக்கின்றனவே, ஏன் பெண்களுக்கு சேவை செய்ய ஒரு சபையைத் தொடங்கக்கூடாது என்ற யோசனை வின்சென்ட் தே பவுலுக்குத் தோன்றியது. அதனடிப்படையில் அவர் லூயிஸ் தே மரிலாக்கிடம் பெண்களுக்கென்று ஒரு சபையைத் தொடங்கச் சொன்னார். அப்படித் தொடங்கப்பட்டதுதான் ‘அன்பின் பணியாளர் சபை’ (Sisters of Charity). இந்தச் சபையின் வழியாக, ஏழைக் குழந்தைகள், அனாதைகள், வயது முதிர்ந்தோர் இவர்களுக்குத் தொண்டு செய்யப்பட்டன. லூயிஸ் தே மரிலாக், இப்பணிகளை எல்லாம் செய்வதறிப் பார்த்து, நிறையப் பேர் இவருடைய சபையில் சேர்ந்தார்கள். இன்னொரு சமயம் போலந்து நாட்டு அரசி, லூயிஸ் தே மரிலாக்கை தன்னுடைய நாட்டிற்கு அழைத்து, சேவைகள் செய்யப் பணித்தார். அவரும் அங்கு சேவை செய்து நல்லதொரு பெயரோடு நாட்டிற்குத் திரும்பி வந்தார்.

இப்படி இறைப்பணியையும் மக்கள் பணியையும் செய்துவந்த லூயிஸ் தே மரிலாக் 1660 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1934 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

சேவை செய்து வாழ்வோம்

தூய லூயிஸ் தே மரிலாக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார் என்பது நமக்குப் புரியும். அவரைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவருக்கு சேவை செய்ய முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் வருகின்ற இறுதித் தீர்ப்பு உவமையில் ஆண்டவர் இயேசு, ‘மிகச் சிறிய சகோதர சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பார். ஆம், நாம் நம்மோடு வாழக்கூடிய எளிய எளியவருக்குச் செய்கின்ற உதவிகள் எல்லாம் இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவையே ஆகும்.

ஆகவே, தூய லூயிஸ் தே மரிலாக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குச் சேவை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image