St. Gabriel Lalemant St. Gertrude
St. Patric St. Jan Sarkander

மார்ச் 17

தூய பேட்ரிக்

mary

mary

தூய பேட்ரிக் (மார்ச் 17)

நிகழ்வு

தூய பேட்ரிக் அயர்லாந்தில் உள்ள சால் என்ற பகுதியில் நற்செய்திப் பணியை ஆற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு அங்கே இருந்த மக்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஒருசமயம் மக்கள் அவரிடம் “நீர் போதித்துக்கொண்டிருப்பது உண்மையான கடவுள்தான் என்பதை எங்களுக்கு நிருபித்துக்காட்டும்” என்றார்கள். உடனே அவர் அருகே இருந்த “Shamrock” என்ற பாறையைச் சுட்டிக்காட்டி, இந்த ஒரு பாறையிலிருந்து மூன்று பாறைகள் தோன்றியிருக்கின்றன. இந்தப் பாறை மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவியைச் சுட்டிக்காட்டுகிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். இச்செய்தி அங்கிருந்த அரசரின் காதுகளை எட்டியது. அவன் பேட்ரிக்கை, தன்னுடைய ஆளுகைக்குள் உட்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானலும் போதித்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவருக்கு அனுமதி அளித்தார்.

வாழ்க்கை வரலாறு

பேட்ரிக் பிரிட்டனில் உள்ள ஓர் உயர்குடியில் 390 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை கல்போனியஸ், இவருடைய தாய் கோன்செஷ்சா என்பவர் ஆவார்கள். பேட்ரிக் சிறுவயது முதல் கடவுள் மீது பக்தியில்லாமலே வாழ்ந்து வந்தார். இவருக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அயர்லாந்தைக் சேர்ந்த ஒருசில முகமூடிக் கொள்ளையர்கள் இவரைக் கடத்திச் சென்று, அங்கே இருந்த ஒரு கணவானிடம் விற்றுவிட்டார்கள். அங்கே பேட்ரிக் கணவானிடம் இருந்த ஆடுகளை மேய்த்துவந்தார். அந்தக் காலகட்டத்தில் எல்லாம் பேட்ரிக் போதிய உணவில்லாமல், சரியான ஆடையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவர் கடவுளை மறந்து இப்படி வாழ்ந்ததனால்தான், அவர் இப்படித் தன்னை தண்டித்துவிட்டார் என்று மனம் வருந்தி அழுதார். அதனால் அன்றிலிருந்து அவர் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவர் அங்கிருந்து தப்பித்து, சொந்த நாட்டுக்குப் போகும்படியாக வந்தது. எனவே, அவர் தான் வேலைபார்த்துக் கொண்டிருந்த கணவானிடமிருந்து தப்பித்து, ஒரு கப்பல் வழியாக தன்னுடைய சொந்த நாட்டிற்குச் சென்றார். தன்னுடைய பெற்றோர்களோடு அங்கே மகிழ்ச்சியாக இருந்தார்.

நாட்கள் சென்றன. அவருக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் குருவாகப் படித்து பிரான்ஸ் நாட்டில் சில காலம் பணிசெய்தார். ஒருநாள் அவருக்கு மீண்டுமாக ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அவரை அணுகிவந்து, “எங்களுடைய நாட்டிற்கு வந்து கிறிஸ்துவைப் பற்றி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். கனவிலிருந்து விழித்தெழுந்த பேட்ரிக், அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் ஜெலஸ்டின் என்பவரைத் சந்தித்து தன்னுடைய கனவை, விருப்பத்தை எடுத்துரைத்தார். இதற்கிடையில் ஏற்கனவே அயர்லாந்து நாட்டிற்கு மறைபோதகப் பணியை ஆற்றச் சென்ற பலேடியஸ் என்பவர், அங்கு பல்வேறு எதிர்ப்பு வந்ததால் நாடு திரும்பி இருந்தார். இப்போது பேட்ரிக் அயர்லாந்துக்கு சென்று, மறைபோதகப் பணியை ஆற்றப் போவதாகச் சொன்னதைக் கேட்டதும் அவர் பெரிதும் மகிழ்ந்து போனார். எனவர் திருத்தந்தை பேட்ரிக்கை உளமகிழ்வோடு அனுப்பி வைத்தார்.

பேட்ரிக் கப்பில் பயணம் செய்துசெய்து அயர்லாந்தில் உள்ள தென்பகுதிச் சென்றார். தென்பகுதில் இருந்த மக்கள் அவரை விரட்டிவிட்டார்கள். எனவே அவர் வடபகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியிலும் அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் அங்கு மன உறுதியோடு இருந்து பணிசெய்தார். ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்தார். நோயாளிகளைக் குணப்படுத்தினார். பார்வைஇழந்தவர்களுக்கு பார்வை அளித்தார். இறந்த ஒன்பது பேரை உயிர்த்தெழச் செய்தார் (அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது). இப்படியாக அவர் அயர்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் படிப்படியாக பரவுவதற்குக் காரணமாக இருந்தார்.

அயர்லாந்தில் வேற்று தெய்வ வழிபாடு அதிகமாகவே இருந்தது. எனவே பேட்ரிக் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார். இவருடைய பணிகளைப் பார்த்த திருத்தந்தை மேலும் மூன்று கர்தினால்களை அங்கு அனுப்பி வைத்து, அவருக்குப் பேருதவியாக இருக்கச் செய்தார். பேட்ரிக் செய்த மிகச் சிறப்பான காரியம், அந்த நாட்டிலேயே குருக்கள், துறவறத்தாரை தோன்றச் செய்து அந்நாடு முழுவதும் நற்செய்தி பரவக் காரணமாக இருந்தார். இதற்காக அவர் பல்வேறுமுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ்துவின் மீது கொண்ட பற்றினால் எல்லாவற்றையும் மிகவும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். இப்படியாக தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் அயர்லாந்து மண்ணில் நற்செய்தி பரவுவதற்காக அர்பணித்த பேட்ரிக் 461 ஆண்டு தன்னுடைய எழுபத்தில் இரண்டாம் வயதில் இந்த மண்ணுலக வாழ்வு விட்டுப் பிரிந்து சென்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

‘அயர்லாந்து நாட்டின் அப்போஸ்தலர்’ என அழைக்கப்படும் தூய பேட்ரிக்கின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஜெப வாழ்வு

தூய பேட்ரிக் சிறுவயதில் கடவுள் பக்தி இல்லாமல் வாழ்ந்தாலும் கூட, அவர் அயர்லாந்திற்கு நாடு கடத்திச் செல்லப்பட்ட பிறகு, அங்கே அவர் தனிமையை, வெறுமையை உணர்ந்துபோது இறைவனிடத்தில் அதிகமாக ஜெபிக்கத் தொடங்கினார். அந்த ஜெபம்தான் அவருக்கு புதுத் தெம்பூட்டியது. அவருடைய ஜெபத்தினால் நிறைய வல்ல செயல்கள் நடந்தன. இதோ ஒருசில:

பேட்ரிக் அயர்லாந்திலிருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு கப்பல் வழியாக தப்பி வந்தபோது, இடையில் மோசமான சீதோசன நிலை காரணமாக கப்பல் ஒரு தீவில் போய் ஒதுங்கியது. கப்பலை ஓட்டிவந்த மாலுமிகள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்போது பேட்ரிக் கடவுளிடத்தில் உருக்கமாக மன்றாடினார். உடனே வானத்தில் வெளிச்சம் பிறந்தது. இதனால் மாலுமி கப்பலை பாதுகாப்பாக ஓட்டிச் சென்று, மக்கள் போகவேண்டிய இடத்தில் போய் இறக்கினார். இன்னொருமுறை அயர்லாந்து நாட்டில் பேட்ரிக் நற்செய்திப் பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது, மக்களில் ஒருசிலர் அவரிடத்தில் வந்து, “நச்சுப் பாம்பில் தங்களுக்கு அதிகமான தொல்லைகள் ஏற்படுவதாகக்” கூறினார்கள். அவர் கடவுளிடத்தில் மன்றாடிய பிறகு நச்சுப் பாம்புகளின் தொல்லைகள் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள். இன்றைக்கும் கூட அயர்லாந்து நாட்டில் பாம்புத் தொல்லை இல்லை என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி.

இப்படியாக தூய பேட்ரிக் தன்னுடைய ஜெபத்தினால் பல்வேறு அற்புதங்களை அதிசயங்களைச் செய்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் ஜெப வீரர்களாக வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு கூறுவார், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி வேறு எதனாலும் வெளியேறாது” (மத் 17:21). நாம் தூய பேட்ரிக்கைப் போன்று ஜெபிக்கும் மனிதர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறைவனின் ஆசிரை அதிகதிகமாகப் பெறுவோம்.

எல்லாவற்றையும் நல்லதாக, இறைத்திருவுளுமாக ஏற்றுக்கொள்வோம்.

தூய பேட்ரிக்கிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடம் அவர் எல்லாவற்றிலும் இறைத்திருவுளம் இருக்கின்றது என்று உணர்ந்து வாழ்ந்ததாகும். தூய அவிலா தெரசா அடிக்கடி குறிப்பிடுவார், “நீங்கள் எல்லா நிகழ்வுகளிலும் கடவுளின் திருவுளத்தைக் கண்டுகொள்ளுங்கள்’ என்று. தூய பேட்ரிக் தான் சிறுவயதில் அயர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டதைக் கூட, பின்னாளில் இறைத் திருவுளமாகவே, நல்லதாகவே கண்டார். எப்படி பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டது நல்லதாக விளங்கியதோ, அதுபோன்று பேட்ரிக் அயர்லாந்திற்கு கடத்திச் சொல்லப்பட்டது பிற்காலத்தில் அம்மக்களுக்கு மத்தியில் பணியாற்ற பேருதவியாக இருந்தது.

நம்முடைய வாழ்வில் நடைபெறுவதை நாம் கடவுளின் திருவுளமாகப் பார்க்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்காட்லாந்தில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில் இருந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள். அவர்களுக்கு பிரிட்டனிலிருந்து அமெரிக்கவிற்கு முதன்முறையாக செல்லக்கூடிய ஒரு சொகுசுக் கப்பலில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை. அதற்காக அவர் கஷ்டப்பட்டு பணத்தைத் திரட்டி, அந்த கப்பலில் பயணம் செய்ய தயாராக இருந்தார்கள். அவர்கள் கப்பலில் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த குடும்பத்தில் இருந்த ஒரு மகனுக்கு ராபிஸ் எனப்படும் வெறிநாய் கடிப்பினால் ஏற்பட்ட நோய்வந்துவிட்டது. அவனை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் பார்த்தபோது, அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர், இரண்டு வாரங்களுக்கு அவனை மருத்துவமனையில் வைத்து பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இத்தனை நாட்களும் கஷ்டப்பட்டு பணம் சேகரித்து, இறுதியில் அந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று அந்த சிறுவனின் தந்தை அவனை அதிகமாகவே கடிந்துகொண்டார்.

சொகுசுக் கப்பல் புறப்படும் நாள் வந்தது. ஆனால் அந்தக் குடுப்பத்தினரால் அதில் பயணம் செய்யமுடியவில்லை. அவர்கள் மிகவும் ஏக்கத்தோடு அந்தக் கப்பல் புறப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஐந்து நாட்கள் கழித்து, அமெரிக்க்க நோக்கிச் சென்ற அந்த சொகுசுக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி, அதில் பயணம் செய்த அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி அந்தக் குடும்பத் தலைவனின் காதுகளை எட்டியது. உடனே அவர் தன்னுடைய குடும்பம் முழுவதையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்டார். அவரோடு சேர்ந்து அந்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தது. (பனிப்பாறையில் மோதி நெருங்கிய கப்பல் வேறொன்றும் கிடையாது டைடானிக் என்ற கப்பல்தான்)

சில நேரங்களில் நம்முடைய வாழ்வில் நடைபெறுவது நமக்கு வருத்தத்தைத் தரலாம், கஷ்டத்தைத் தரலாம். ஆனாலும் அவற்றை இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்டு வாழப் பழகினால், நம்முடைய வாழ்வில் என்றும் மகிழ்ச்சிதான். பேட்ரிக் அப்படித்தான் வாழ்ந்தார்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image