St. Cyril Of Jerusalem St. Edward St. Frigdiano

மார்ச் 18

எருசலேம் நகர தூய சிரில்

mary

எருசலேம் நகர தூய சிரில் (மார்ச் 18)

நிகழ்வு

எருசலேமின் ஆயராக தூய சிரில் இருந்த காலகட்டத்தில், எருசலேமில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவின்றிப் பட்டினியில் தவித்தார்கள். இதைப் பார்த்த சிரில் ஆலய உடைமைகளை விற்று, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு மக்களின் பசியைப் போக்கினார். இது பிடிக்காத ஒருசில தலைவர்கள், சிரில் ஆலயச் சொத்துகளை வீணடிக்கின்றார் என்று குற்றம் சுமத்தினார்கள். அப்போது அவர் அவர்களுக்கு அளித்த பதில், “திருச்சபையும் மக்களும் வேறு வேறா என்ன... மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதற்கு திருச்சபையின் – ஆலயத்தின் – உடைமைகளை விற்றுக்கொடுப்பதிலே என்ன தவறு இருக்கின்றது?” என்றார். இதற்கு அவருடைய எதிரிகளால் ஒன்றும் பேச முடிவில்லை.

நல்மனதோடு நாம் மக்களுக்கு நல்லது செய்கின்றபோது, அதற்கு எதிராக ஒருசிலர் பேசித்திரிவார்கள். அத்தகையவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை சிரிலின் வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

சிரில், எருசலேம் நகரில் 315 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். சிரிலின் தந்தை அவர்மீது அதிகமான அன்பு வைத்திருந்த படியாலும் அவருக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பதாலும் அன்றைய காலத்தில் எருசலேமில் தலைசிறந்த ஆசிரியராக இருந்த ஒருவரிடம் அனுப்பி வைத்து, அவருக்கு கல்வியறிவைக் கொடுத்தார். சிரிலும் கல்வியில் சிறந்தவராய் விளங்கி வந்தார். குறிப்பாக சிரிலின் விவிலிய அறிவைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தார்கள்.

படிப்பை நிறைவு செய்த சமயத்தில், சிரிலுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படியே அவர் குருவானவராக மாறினார். அப்போது சிரிலிடம் இருந்த அறிவையும் ஞானத்தையும் கண்ட எருசலேம் நகர ஆயர் மார்க்கஸ் அவரை புகுமுக பயிற்சி பெறுவோருக்குப் பொறுப்பாளராக நியமித்தார். சிரிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்புடனே செய்தார். சிரில் புகுமுகப் பயிற்சி பெறுவோருக்கு பொறுப்பாளராக இருந்த சமயத்தில், திருமுழுக்குப் பெறுகின்றபோது எத்தகைய மனநிலையோடு பெறவேண்டும், அதற்காக ஒருவர் எப்படியெல்லாம் தன்னைத் தயார் செய்யவேண்டும் என்பதை பற்றிய நிறைய எழுதினார். அது மட்டுமல்லாமல், நற்கருணை வாங்குகின்றபோதும் எத்தகைய நிலையோடு வாங்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய எழுதினார். இன்னும் சொல்லப்போனால் சிரில் அளவுக்கு நற்கருணையைக் குறித்து யாரும் அதிகமாகப் பேசியதில்லை என்று சொல்லலாம்.

இப்படி பல்வேறு கருத்துகளை குறித்து திறம்பட எழுதியும் புகுமுகப் பயிற்சிபெறுவோருக்கு நல்லவிதமாகப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எருசலேமின் ஆயர் மார்க்கஸ் இறந்துபோனார். இதனால் சிரில் எருசலேம் நகர ஆயராகப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில்தான் கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்துப் பேசும் ஆரியபதம் தலைவிரித்து ஆடியது. இதனை சிரில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசினார். இதனால் ஆரிய பதத்தைத் தூக்கிப் பிடித்த அக்கரியாஸ் என்ற செசாரிய நகர், அவரோடு சேர்ந்து ஒருசிலர் சிரிலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இதனால் சிரில் மூன்று முறை நாடு கடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும்பொருட்டு, ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிரிலின் வாதம் சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டுமாக எருசலேமின் ஆயராக உயர்ந்தார். சில காலம் ஆயர் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு 386 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தகுதியான நிலையோடு நற்கருணையை உட்கொள்ளுதல்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் இந்த சமயத்தில், அவர் சொல்லக்கூடிய ஒரே ஒரு செய்தியை மட்டும் நம்முடைய மனதில் இருத்திக்கொள்வோம், அது வேறொன்றுமில்லை நற்கருணையை தகுதியான உள்ளத்தோடு உட்கொள்வது என்பதாகும். நற்கருணையை உட்கொள்ளும் நாம், சில நேரங்களில் ஏனோ தானோவென்று அதற்குரிய மரியாதை கொடுக்காமல் உட்கொள்கின்றோம். இந்த நேரத்தில் நாம் தகுதியான உள்ளத்தோடுதான் நற்கருணையை உட்கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குகொள்வோர் பாவம் செய்கின்றார் என்று சொல்வார். ஆகவே, தகுதியான விதத்தில் நற்கருணை உட்கொள்வதே சரியான ஒரு வழிமுறையாகும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், தகுதியான உள்ளத்தோடு நற்கருணை உட்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image