St. Joseph

மார்ச் 19

தூய யோசேப்பு

mary

mary

மரியாளின் கணவர் தூய யோசேப்பு

சிறப்பு : திருச்சபையின் பாதுகாவலர், மேலும் தச்சர்களின் பாதுகாவலர்.

நிகழ்வு

யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, “பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு” சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், “நான் ஆண்டவருக்கு அடிமை” என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, “யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்” என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியாளின் கணவர் தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தன்னை முன்னிலைப் படுத்தாத கணவர்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரிடத்தில், “நான் சொல்வதைதான் கேட்கவேண்டும், நான் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும்” என்று அதிகாரம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். இன்னும் ஒரு சிலர் தங்களுடைய மனைவியருக்கும் உணர்வு இருக்கிறது என்பதை அறியாதவர்களாய், புரியாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட குடும்பம் எப்படி நல்ல குடும்பமாக மாறும் என்பது இறைவனுக்குத் தான் வெட்ட வெளிச்சம்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் கதை.

ஒரு கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, ஒரு தம்பதியருக்கு திருமண வெள்ளிவிழா நடைபெற்றது. திருமண வெள்ளிவிழா மேடையில் வெள்ளிவிழா கொண்டாடும் பெண்ணுக்கு அருகே இருந்த ஒரு வயதான பாட்டி அவளிடத்தில், ”ஊரில் இருக்கின்ற எல்லாரும் உங்களுடைய குடும்பத்தை உயர்வாகப் போற்றுகிறார்களே! இந்த இருபத்தைந்து ஆண்டுகால இல்லற வாழ்வில் உனக்கும் உன்னுடைய கணவருக்கும் இடையே சண்டையே வந்தில்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், ” அது ஒரு பெரிய கதை” என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் தேனிலவுக்காக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு சென்றோம். அப்போது போக்குவரத்து வசதி எல்லாம் இன்று இருப்பது போல் கிடையாது. ஆதலால் எங்களுடைய துணிமணி மற்றும் பெட்டியை ஒரு கழுதையில் ஏற்றிவைத்து, பயணமானோம். நன்றாக மேலேறிக் கொண்டிருந்த கழுதை திடிரென்று சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்து சினமடைந்த என்னுடைய கணவர், வேகமாக கழுதையிடம் சென்று, அதன் ஒரு காதைத் திருகி “இது முதல் எச்சரிக்கை” என்றார். பின்னர் துணிமணி மற்றும் பெட்டியை அதன்மேல் ஏற்றி வைத்துவிட்டு, மீண்டுமாகப் பயணமானோம். நன்றாக மேலேறி வந்துகொண்டிருந்த கழுதை மீண்டுமாக இடறிக் கீழே விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவர் அதன் இன்னொரு காதைப் பிடித்துக்கொண்டு, “இது இரண்டாவது எச்சரிக்கை, இன்னொரு முறை கீழே விழுந்தால் அப்புறம் நடக்கிறது வேறு” என்று சொல்லி எச்சரித்துவிட்டுச் சென்றார்.

பின்னர் கழுதையின் மேல் துணிமணிகளை ஏற்றி வைத்து நாங்கள் இருவரும் மேலே பயணமானோம். நாங்கள் போகவேண்டிய இடத்திற்கு மிக அருகே வந்தபோது, மீண்டுமாக கழுதை சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவருக்கு கோபம் தலைக்கேறியது. எனவே, அவர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கழுதையை சுட்டு வீழ்த்தினார். கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. இதைப் பார்த்து பதறிப்போன நான் அவரிடம், “எதற்காக அந்த வாயில்லாத ஜீவனை இப்படிச் சுட்டுக் கொன்றீர்கள்” என்று கேட்டடேன். அதற்கு அவர், என்னுடைய காதைத் திருகி, “இது முதல் எச்சரிக்கை” என்றார். அவ்வளவுதான் இனிமேலும் ஏதாவது பேசினால் கழுதைக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும் என உணர்ந்துகொண்டு, அன்று பேச்சை நிறுத்தியவள்தான் இன்று வரைக்கும் நான் அவரிடம் எதுவும் பேசியதில்லை” என்றாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி மயங்கி விழாதுதான் தாமதம்.

இப்படியும் ஒருசில கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரை அடக்கி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால் யோசேப்பு அப்படியில்லை. அவர் தன்னுடைய மனைவியான மரியாளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். அவருக்கே அதிக முன்னுரிமை தந்தார். இன்னாருடைய மனைவி இன்னார் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் யோசேப்போ, மரியாளின் கணவர் என்று தன்னுடைய மனைவியாள் பெயராலே அடையாளப்படுத்தப்படுகிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர் எந்தளவுக்கு மனைவிக்கு முன்னுரிமை தருபவர் என்று. மேலும் குழந்தை இயேசு கோவிலில் காணமால் போய், கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தான் பேசாமல் தன்னுடைய மனைவி பேசுவதற்கு முன்னுரிமை தருகிறார். இவற்றையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தன்னுடைய மனைவிக்கு எந்தளவுக்கு முன்னுரிமை வாழ்ந்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்த கணவர்

தூய யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. திருமணத்திற்கு முன்பாக தனக்கு மண ஒப்பந்தமான மரியாள் ஏற்கனவே கருவுற்றிருப்பது தெரிந்ததும், மறைவாக விலக்கிவிட நினைத்தபோது, ஆண்டவரின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல, மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். கொலைகாரன் ஏரோது குழந்தை இயேசுவை கொல்ல இருக்கும் செய்தியை ஆண்டவரின் தூதர் அவருக்கு அறிவித்தபோது, உடனே அவர் குழந்தையையும் அதன் தாயையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடி, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார். கொடுங்கோலன் இறந்தபிறகு ஆண்டவரது தூதரின் கட்டளைப் படி தாய் சேயோடு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வருகிறார். இவ்வாறு யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் திருவுளத்திற்கு பணித்து நடந்த ஒரு கணவராக விளங்குகிறார். அவர் ஒருபோதும் தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கவில்லை, நடக்கவும் நினைக்கவில்லை.

நேர்மையாளரான கணவர் யோசேப்பு

விவிலியம் யோசேப்பைக் குறித்து சொல்கிற ஒரே ஒரு செய்தி அவர் நேர்மையாளர் என்பதாகும் (மத் 1:19). நேர்மையாளர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இறுதித்தீர்ப்பு உவமையில் நாம் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். அந்த உவமையில் நேர்மையாளர்கள் என்பவர்கள், பசியாய் இருந்தோருக்கு உண்ணக் கொடுத்திருப்பார்கள். தாகமாக இருந்தவரின் தாகத்தை தனித்திருப்பார்கள்; அன்னியராய் இருந்தோரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; ஆடையின்றி இருந்தோரை உடுத்தியிருப்பார்கள்; நோயுற்று இருந்தோரை கவனித்திருப்பார்கள்; சிறையில் இருப்போரை பார்க்கச் சென்றிருப்பார்கள். யோசேப்பு நேர்மையாளர் என்பதால் இத்தகைய காரியத்தையும், இதுபோன்று காரியத்தையும் செய்திருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

ஆகவே, தூய யோசேப்பு நேர்மையாளராய் இருந்து எல்லார்மீதும் இரக்கம்கொண்டு வாழ்ந்திருப்பார் என உண்மையாக நம்பலாம்.

எனவே, மரியாளின் கணவரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் ள் பெண்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக, அவர்களுக்கு முன்னுரிமை தருபவர்களாக, இறைத் திருவுளத்திற்கு பணிந்து நடப்பவர்களாக, நேர்மையாளர்களாக வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“தூய யோசேப்பிடம் நான் கேட்ட வரங்களை எப்போதும் அவர் தராமல் இருந்ததில்லை – தூய அவிலாத் தெரசம்மாள்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image