BL. Maddalene Morano St. Ludger

மார்ச் 26

தூய லட்ஜர்

mary

தூய லட்ஜர் (மார்ச் 26)

“குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பில் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்” (லூக் 1: 76-77)

வாழ்க்கை வரலாறு

லட்ஜர், 743 ஆம் ஆண்டு, ஹாலந்தில் இருந்த ஓர் உயர்குடியில் பிறந்தார். இவருடைய தந்தை எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்டவர். லட்ஜருக்கு சிறுவயதிலே தூய போனிபசோடும் தூய கிரோகோரியாரோடும் நல்ல நட்பு இருந்தது. இதனால் அவர் பின்னவரிடம் சேர்ந்து கல்வி கற்றார். கிரிகோரியார் கற்றுக்கொடுத்த பாடங்களை மிக எளிதாகக் கற்றுக்கொண்ட லட்ஜர், அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர் ஆனார். ஒருசமயம் கிரகோரியார் லட்ஜரிடம், “பின்லாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப் போகிறாயா? என்று கேட்டதும், அவர் மறுப்பேதும் சொல்லாமல் நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார்.

லட்ஜர் பின்லாந்து நாட்டில் நற்செய்தி அறிவிக்கச் சென்ற சமயத்தில் அவருக்கு அங்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, துணிவுடன் நற்செய்தி அறிவித்து வந்தார். இந்த நேரத்தில்தான் பின்லாந்தின் மீது சாக்சனி என்ற பிரிவினர் படையெடுத்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களையெல்லாம் நாடுகடத்தினார். லட்ஜரை அவர்கள் பார்த்துபோது அவரிடம், “ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுபோட்டுவிடுவோம்” என்று மிரட்டினார்கள். இதனால் அவர் பின்லாந்திலிருந்து உரோமைக்குச் சென்று, அங்கிருத்த திருத்தந்தையிடம் தன்னுடைய நிலையை அவரிடத்தில் எடுத்துசொல்ல, திருத்தந்தை அவரிடம், “கொஞ்ச காலத்திற்கு காசினோ மலைக்குச் சென்று, அங்கு தங்கியிரு” என்றார். லட்ஜரும் திருத்தந்தை சொன்னதற்கிணங்க காசினோ மலைக்குச் சென்று அங்கு ஜெப தவத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் பின்லாந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சாக்சனியர்மீது சால்மோன் அரசர் படையெடுத்து வந்தார். அவர் சாக்சனியர்களைத் துவம்சம் செய்து பின்லாந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். விஷயம் அறிந்த லட்ஜர் மீண்டுமாக பின்லாந்திற்கு வந்து தன்னுடைய நற்செய்திப் பணியைத் தொடங்கினார். லட்ஜர் செய்து வந்த பணிகளைப் பார்த்து வியந்த சால்மோன் அரசர் அவரிடத்தில் ஆலயம் கட்டுகின்ற பணிகளையும் இன்ன பிற பணிகளையும் செய்யக் கொடுத்தார். அவரும் அப்பணிகளைச் செவ்வனே செய்து வந்தார்.

லட்ஜர் பின்னர் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். இதனால் நாட்டு மக்களை பல்வேறு அழிவிலிருந்து காப்பாற்றினார். இப்படி இறைப்பணியை மிகத் துணிச்சலோடும் வல்லமையோடு செய்து வந்த லட்ஜர், 809 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 26ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய லட்ஜரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குப் பணிசெய்தல்

தூய லட்ஜரின் வாழ்க்கை வரலாற்றை நாம் படித்துப் பார்க்கும்போது, அவர் அஞ்சா நெஞ்சத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணி செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. எதிர்ப்பு வருகின்றதே, உயிருக்கு ஆபத்து வருகின்றதே என்று நினைத்து லட்ஜர் தான் செய்துவந்த பணியை விட்டுவிடவில்லை, மாறாக, துணிவோடும் அதே நேரத்தில் நேர்மையோடும் ஆண்டவருக்குப் பணிசெய்து வந்தார்.

லட்ஜரின் நேர்மைக்கும் அஞ்சா நெஞ்சத்திற்கும் சான்றாக அவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.

லட்ஜர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்துவிட்டு, ஆலயம் கட்டுகின்ற பொறுப்பை சால்மோன் அரசன் அவரிடம் ஒப்படைத்தார். லட்ஜரும் அந்தப் பணியினைச் செவ்வனே செய்துவந்தார். இதற்கிடையில் அவருடைய வளர்ச்சி பிடிக்காத ஒருசிலர் அரசரிடத்தில் சென்று, “லட்ஜர் பணத்தை வீணடிக்கின்றார், தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்” என்று போட்டுக் கொடுத்தார்கள். உடனே அரசன் தன்னுடைய பணியாளர்களைக் கூப்பிட்டு, லட்ஜரை அழைத்து வரச் சொன்னான். பணியாளர்கள் வந்த நேரம் லட்ஜர் தியானத்தில் இருந்தார். அதனால் அவர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மூன்று முறை அரசன் தன்னுடைய பணியாளர்களை அனுப்பி, லட்ஜரைக் கூப்பிட்டு வரச் சொன்னபோதும் இதே நிகழ்ந்தது.

இதனால் சினம்கொண்ட அரசன், லட்ஜர் தன்னை அவமதித்துவிட்டார் என்று அவரைக் கொல்வதற்காக லட்ஜர் இருக்கும் இடத்திற்குச் சென்றார். “லட்ஜரே என்னை அவமத்தித்துவிட்டாய், அதனால் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று அரசன் தன்னுடைய வாளை ஓங்கினார். அப்போது லட்ஜர் அவரைப் பார்த்து, “அரசே! உம்மை விட இந்த உலகைப் படைத்த இறைவன் பெரியவர் அல்லவா... உம்முடைய பணியாளர்கள் என்னைக் கூப்பிட வந்த சமயத்தில் நான் இறைவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் உடனே வர முடியவில்லை” என்றார். லட்ஜர் இவ்வளவு அறிவுத் தெளிவோடு பேசியதைப் பார்த்த மன்னர், அவர் பணத்தைக் கையாடல் செய்திருக்கமாட்டார். அவர்மீது இருக்கும் பொறாமையால்தான் ஒருசிலர் இப்படி குற்றம் சுமத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு அந்தக் கயவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்தார்.

லட்ஜர் எப்போதும் நேர்மையோடும் அதே நேரத்தில் ஆண்டவரைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாது வாழ்ந்தனால்தான் ஒருதீங்கும் அவரை அணுகவில்லை.

ஆகவே, தூய லட்ஜரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடும் நேர்மையோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image