St. John of Egypt St. Lazarus of Bethany

மார்ச் 27

எகிப்து நாட்டின் யோவான் (மார்ச் 27)

mary

mary

எகிப்து நாட்டின் யோவான் (மார்ச் 27)

“உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா?” (1 கொரி 6: 7)

வாழ்க்கை வரலாறு

யோவான், எகிப்து நாட்டில் 300 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவர் தன்னுடைய வாழ்வின் முதல் இருபத்து ஆண்டுகளை தனது தந்தையோடு இருந்து, அவருக்கு தச்சு வேலையில் ஒத்தாசை புரிவதில் செலவழித்தார். இந்தக் காலக்கட்டத்தில் இவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே எல்லாவற்றையும் துறந்து, ஒரு காட்டிற்குச் சென்று, அங்கிருந்த ஒரு துறவியிடத்தில் சீடராகச் சேர்ந்து பயிற்சிகள் பெற்று வந்தார்.

அந்தத் துறவியோ யோவானிடம் பெரிய பெரிய பாறைகளை ஓரிடத்திலிருந்து உருட்டி, இன்னொரு இடத்திற்குக் கொண்டு சேர்த்தல், காய்ந்த சருகுகளை பொருக்கி ஓரிடத்தில் குவித்தல் போன்ற பல கஷ்டமான வேலைகளைக் கொடுத்து அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கினார். அந்த வேலைகளை எல்லாம் யோவான் மிகப் பொறுமையாகச் செய்து வந்தார். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் அவரோடு இருந்து பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் யோவான் அவரிடமிருந்து விடைபெற்று, ஓர் மலை உச்சிக்குச் சென்று, அங்கு கடுந்தவம் செய்துவந்தார்.

யோவான் மலை உச்சிக்குச் சென்ற பின்னர், யாரையும் பார்க்காமல் கடுந்தவம் செய்து வந்தார். அவர் மலை உச்சியில் இருந்து தவம் செய்துகொண்டிருக்கின்றார் என்று அறிந்து, அவரைப் பார்ப்பதற்கு நிறையப் பேர் போனார்கள். ஆனால், அவர் யாரையும் நேராகப் பார்க்காமல், தனது அறையின் ஜன்னல் வழியாகப் பேசி அனுப்பி வைத்தார். ஒரு சமயம் பார்வையற்ற பெண்மணி ஒருத்தி, தனக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என்று யோவானிடத்தில் வேண்டினார். யோவானோ அவருக்கு அற்புதமான முறையில் பார்வை கொடுத்து அவரைக் குணப்படுத்தினார். இப்படி பல்வேறு மனிதர்கள் அவரால் நலம் பெற்றார்கள்.

யோவானுக்கு பின்னர் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளக் கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு, அவர் எதிர்காலத்தில் நடக்க இருந்த பல ஆபத்துகளை எடுத்துச் சொல்லி, மக்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அதைப் போன்று மன்னர் முதலாம் தியோடசியஸ் போரில் வெற்றி பெறுவார் என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே மன்னர் போரில் வெற்றி பெற்றார்.

நாட்கள் ஆக, ஆக, யோவானுக்கு உடல் நலம் குன்றியது. அதனால் அவர் யாரையும் பார்க்கவிரும்பாமல், அறையில் தன்னை அடைத்துக்கொண்டு இறைவனிடத்தில் எப்போதும் ஜெபித்து வந்தார். 390 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய சாவு நெருங்கிவிட்டது என்பதை அறிந்த யோவான் முழந்தாள் படியிட்டு இறைவனிடத்தில் ஜெபிக்கத் தொடங்கினார். அவர் ஜெபித்துக்கொண்டிருந்த நிலையிலே அவருடைய உயிர் அவருடைய உடலை விட்டுப் பிரிந்தது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, மக்கள் அவரை நல்லடக்கம் செய்தார்கள்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பொறுமையோடு இருத்த
தூய யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த பொறுமைதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. அவருக்குத் தலைவராக இருந்த துறவி அவருக்குக் கடினமான வேலைகளைக் கொடுத்த போதும் அதனைப் பொறுமையோடு செய்து வந்தார். யோவானை நினைவு கூரும் நாம், அவரைப் போன்று பொறுமையோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் இருந்த துறவியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் அவரிடம் தனக்கு ஞான உபதேசம் செய்யும்படி வேண்டினான். அந்தத் துறவியோ அவனை வேறொரு துறவியிடம் அனுப்பி வைத்தார். இளைஞனும் அவர் சொன்ன துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை இன்னொரு துறவிடத்தில் அனுப்பி வைத்தார். இளைஞனுக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இருந்தாலும் அவர் சொன்னபடி இன்னொரு துறவியிடத்தில் சென்றான். அவரோ அவனை மற்றொரு துறவியிடத்தில் அனுப்பி வைத்தார். இப்படியே அவன் 15 துறவிகளைப் பார்த்துவிட்டு கடைசியில் பொறுமை இழந்து போனான்.

எனவே அவன் முதலில் சந்தித்த துறவியிடத்தில் சென்று, தனக்கு யார்தான் ஞான உபதேசம் செய்வார் என்று முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டான். அதற்கு அந்தத் துறவி, “ஒருவனுக்கு ஞானம் கிடைக்கவேண்டும் என்றால், முதலில் பொறுமை தேவை. பலர் பலவிதமாகப் பேசுவை பொறுமையாகக் கேள். இறுதியில் உனக்கு எது சரியானது என்பது தெரிந்து விடும். அதுவே ஞானம். நானும் அப்படித்தான் ஞானத்தை அடைந்தேன்” என்றார்.

ஆமாம், நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பொறுமையானது தேவையான ஒன்றாக இருக்கின்றது. யோவானும் அப்படித்தான் பொறுமையாக இருந்து இறைஞானத்தை அடைந்தார்.

ஆகவே, தூய யோவானை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image