St. Ludovico Casoria St. Rupert of Salzburg

மார்ச் 29

✠தூய ரூபெர்ட்✠ (மார்ச் 29)

mary

✠தூய ரூபெர்ட்✠ (Rupert of Salzburg)

“அறிவுத்திறன் கொண்டோருக்கு நற்பயிற்சி பொன் நகையாகும்; வலக்கையில் அணிந்த கைவளையாகும்” (சீரா 21:21)

வாழ்க்கை வரலாறு

ரூபெர்ட் ஆஸ்டிரியா நாட்டில் சால்ஸ்பர்க் எனும் ஊரில் 660ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அறிவில் சிறந்தவர், தவ முயற்சிகளில் தலைசிறந்தவர், கொடுப்பதில் வல்லவர் என்பதாகும்.

ரூபெர்ட் குணமளிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார். அதனால் நிறையப் பேர் இவரிடத்தில் வந்து குணம்பெற்றுச் சென்றார்கள். இவரிடத்தில் இருந்த அறிவுத் திறன், ஆளுமைத் திறன் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இவரை வோர்ம்ஸ் நகர ஆயராக ஏற்படுத்தினார்கள். ஆயராக உயர்ந்த பின்பு ரூபெர்ட் அற்புதமான பணிகளைச் செய்தார். குறிப்பாக நற்செய்தி அறிவிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சில காலம் வோர்ம்ஸ் நகர ஆயராக இருந்துவிட்டு, பவேரியாவுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். பவேரியாவில் இவர் ஆற்றிய நற்செய்திப் பணிக்கு மிகுந்த பலன் கிடைத்தது. அங்கு மன்னனாக இருந்தவர் ரூபெர்டின் போதனையால் தொடப்பட்டு மனமாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து நிறையப் பேர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

பவேரியாவில் நற்செய்திப் பணி ஆற்றிவிட்டு ரூபெர்ட், ஜூவாவும் (சார்ல்ஸ்பர்க்) என்ற இடத்திற்குச் சென்றார். அங்கேயும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மிகச் சிறப்பான முறையில் அறிவித்து, நிறையப் பேரை இயேசுவுக்குள் கொண்டு வந்தார். இப்படி இடையறாது நற்செய்திப் பணி செய்து வந்த ரூபெர்ட், 710 ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா அன்று இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டியப் பாடம்

தூய ரூபெர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம்

தூய ரூபெர்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவரிடமிருந்த நற்செய்தி அறிவிக்கின்ற ஆர்வம்தான் நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றது. தூய ரூபெர்ட் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைத்தார், பலரை ஆண்டவருக்குள் கொண்டு வந்தார். தூய ரூபெர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகின்றபோது தம்முடைய சீடர்களைப் பார்த்து சொல்லக்கூடிய வார்த்தை, “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16: 15) என்பதாகும். ஆம், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதைதான் அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.

நம்முடைய பாசத்திற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் கூட நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றார். அவர் மூன்று நிலையில் நற்செய்தி அறிவிக்கப்படும் என்று நமக்கு எடுத்துச் சொல்கின்றார். முதல்நிலை, ஏற்கனவே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களிடம் நற்செய்தியை அறிவித்தல். இது எப்படி என்றால், பலர் கிறிஸ்தவர்களாக இருந்தும் ஏனோ தானோ என்று இருக்கிறார்கள். இவர்களிடத்தில் ஆழமாக நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை சொல்கின்றார். நற்செய்தி அறிவிப்பின் இரண்டாம் நிலை, கிறிஸ்துவை விட்டு விலகி நிற்பவர்களுக்கு நற்செய்தி அறிவித்தல், இன்றைக்கு நிறையப் பேர் இப்படித்தான் வழிபாடுகள், பக்தி முயற்சிகளிலிருந்தும் விலகியே இருக்கின்றார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு கட்டாயம் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் எடுத்துரைக்கின்றார்.

நற்செய்தி அறிவிப்பின் மூன்றாம் நிலை, கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தி அறிப்பதாகும். இப்படிப்பட்ட ஒரு பணி இன்றைக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது. பலர் கிறிஸ்துவை அறியாமல் இருக்கின்றார்கள், இவர்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைப்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகவே, இந்த மூன்று நிலைகளிலும் நாம் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்கின்றபோது எல்லாரும் இயேசுவின் நற்செய்திப் பெற்றுக்கொள்வார்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஒருமுறை மிகச் சிறந்த மறைபோதகரான ராபர்ட் ஜீ. லீயிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்களால் மகத்தான முறையில் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்ய முடிகின்றதே, அது எப்படி?” என்று கேட்டார். அதற்கு அவர் அவரிடம், “நான் இறைமக்களை முழுமையாக அன்பு செய்து, இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றேன். அதுதான் என்னுடைய வெற்றிக்கான இரகசியம்” என்றார். ஆமாம், இறைமக்களை உண்மையாக அன்பு செய்யும் ஒருவரால்தான் இறைவாக்குப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். இன்று நாம் நினைவுகூரும் ரூபெர்ட்டும் இறைமக்களை முழுமையாக அன்பு செய்தார். அதனால்தான் அவரால் இறைவாக்குப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது.

ஆகவே, தூய ரூபெர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை ஆர்வத்தோடு எடுத்துரைப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image