St. John Climacus St. Peter de Regalado

மார்ச் 30

தூய யோவான் கிளிமாக்கஸ்

mary

mary

தூய யோவான் கிளிமாக்கஸ்

“உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைகுரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார். (1 கொரி 10 13)

வாழ்க்கை வரலாறு

யோவான் கிளிமாக்கஸ் பாலஸ்தினத்தில் பிறந்தவர். இவருடைய குழந்தைப் பருவம் குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை, யோவான் கிளிமாக்கசுக்கு பதினாறு வயது ஆனபோது சீனாய் மலையில் இருந்த துறவற மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெப, தவ வாழ்வில் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டு இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மடத்தில் இவர் துறவியாக வாழ்ந்த சமயத்தில் சாத்தான் இவரைப் பலவிதமாக சோதித்தது. அத்தகைய சமயங்களில் எல்லாம் இவர் இறைவனுடைய வல்லமையால் எல்லாவிதமான சோதனைகளையும் வெற்றிகொண்டார். யோவான் கிளிமாக்கஸ் எப்போதும் நாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்தார். அதனால் நிறையப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார். இவர் விவிலியத்தை நன்றாகக் கற்றுத்தெரிந்திருந்தார். அதனால் இவருடைய போதனையைக் கேட்பதற்கு துறவிகள், இறைமக்கள் என ஏராளமான மக்கள் அவருடைய இருப்பிடம் தேடி வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆண்டவருடைய நற்செதியை மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்து வந்தார். இவர் எழுதிய ‘Ladder Of Perfection’ என்ற புத்தகம் இன்றைக்கும் மக்களால் விரும்பிப் படிப்படக்கூடிய புத்தகமாக இருந்து வருகின்றது.

யோவான் கிளிமாக்கசுக்கு 74 வயது நடக்கும்போது அவரை ஆதீனத் தலைவராக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் அந்தப் பொறுப்பை விரும்பே இல்லை. இருந்தாலும் அதனை இறைத்திருவுளமென ஏற்றுக்கொண்டு தன்னால் இயன்ற மட்டும் அப்பணியைச் சிறப்புடனே செய்து வந்தார். இவர் 649 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 30 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டியா பாடம்

தூய யோவான் கிளிமாக்கசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நாவடக்கம்

தூய யோவான் கிளிமாக்கசிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவருடைய நாவடக்கம்தான். அவர் நாவை அடக்கி ஆண்டார். அதனாலேயே அவர் நிறையப் பிரச்சனைகள் வராதவாறு பார்த்துக்கொண்டார். தூய யோவான் கிளிமாக்கசை நினைவுகூரும் நாம் அவரைப் போன்று நாவை அடக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஓர் ஊரில் ரவீந்திரன் என்ற ஒரு வேலையில்லாப் பட்டதாரி இருந்தான். அவன். எத்தனையோ நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றும், நாவடக்கமின்றி பதில் கூறியதால் எங்குமே வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தான். இது குறித்து அவன் தந்தை அவனுக்கு எத்தனையோ முறை அறிவுரை அளித்தும், தேர்வு நேரத்தில் அவனையும் அறியாமல் ஏதாவது ஏடாகுடமாக பதில் அளித்து அவமானப்பட்டு வெளியே வந்தான்.

இப்படியே நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் ரவீந்திரன் ஒருநாள் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தான். கேள்வி கேட்பவர் தாறுமாறாகக் கேட்டாலும், பொறுமையுடனும் பணிவுடனும் பதில் அளிக்கத் தீர்மானித்தான். சில நாட்களிலேயே அவனுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. அவன் பயந்தபடியே தேர்வாளர் இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்டார். “என்னப்பா! பட்டம் பெற்று ஓராண்டு ஆகியுமா வேலை கிடைக்கவில்லை?” என்றார். “ஆமாம் சார்!” என்று சொன்னான் ரவீந்திரன். “இதற்கு முன் வேலை செய்த அனுபவம் உண்டா?” என்றார் அந்தத் தேர்வாளர். “இல்லை! வேலையே இதுவரை கிடைக்காததால் அனுபவத்திற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்றான் அவன்.
“அனுபவம் இல்லாத உன்னை எப்படி வேலைக்குச் சேர்த்து கொள்ள முடியும்?” என்று தேர்வாளர் இழுத்ததும் அவன், “தயவு செய்து ஒரு வாய்ப்புக் கொடுங்கள்! என் திறமை, உழைப்பு ஆகியவற்றை நிரூபிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்!” என்றான் ரவீந்தரன். “சரிதான்! நீ அனுபவம் பெறவே ஆறு மாசம் ஆகும். அதுவரை நான் தண்டச்சம்பளம் கொடுக்க வேண்டுமா?” என்றார் தேர்வாளர். அதற்கு அவன், “முதல் ஆறு மாதம் சம்பளமின்றியே வேலை செய்யத் தயாராயுள்ளேன்” என்றான்.

ரவீந்திரனின் இந்த அடக்கமான அதே சமயம் தன்னம்பிக்கையுடன் கூடிய பதில்கள் தேர்வாளருக்குத் திருப்தி உண்டாக்கியது. இருந்தாலும் அவன் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பினார். “உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ சொல்வதை நம்பி உனக்கு எவ்வாறு வேலை கொடுக்க முடியும்?” என்று அவனைச் சீண்டினார். அதுவரை பணிவுடன் பதிலளித்த ரவீந்திரன் திடீரென பொறுமை இழந்தான். “உங்களைப் போன்ற ஒரு சாதாரண நபர் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும்போது, திறமையுள்ள என்னால் வேலை செய்ய முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு அறையை விட்டு ரவீந்திரன் வெளியேறினான்.

அவன் வெளியே வந்தபின்தான் உணர்ந்தான். ஒரு நிமிடம் பொறுமை காக்காமல் நாவடக்கத்தை மறந்து பேசியபேச்சினால் நல்ல வேலை கிடைக்காமல் போய்விட்டதே” என்று. பலரும் இப்படித்தான் நாவை அடக்க முடியாமல் அழிவினைச் சந்திக்கின்றார்கள். ஆனால் தூய யோவான் கிளிமாக்காசோ நாவடக்கத்தோடு வாழ்ந்தார். அதனால் பலருடைய நன்மதிப்பைப் பெற்றார்.

ஆகவே, தூய யோவான் கிளிமாக்கசின் நினைவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம். நாவை அடக்கி ஆளக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image