St. May of Egypt St. Hugh

ஏப்ரல் 1

கிரநோபல் நகர தூய கியூ

mary

mary

கிரநோபல் நகர தூய கியூ

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக் 1:38).

வாழ்க்கை வரலாறு

கியூ, 1052 ஆம் ஆண்டு, பிரான்ஸில் உள்ள வலன்ஸ் என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒடிலோ நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர். தாயார் குடும்பத்தை அன்பாய் வழிநடத்திய ஓர் இல்லத்தரசி.

அன்பான பெற்றார், அழகான குடும்பச் சூழல் என்று வளர்ந்த கியூ, சிறுவயது முதலே இறைவனிடத்தில் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்தார். தனது தொடக்கக் கல்வியை வலன்ஸ் நகரில் பெறும்போது இறைவனின் அழைப்பை உணர்ந்தார். படிப்பை முடித்ததும் குருமடத்தில் சேர்ந்து குருவானார். சில ஆண்டுகளிலே அவர் கிரநோபல் நகரின் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டு கிரநோபல் நகருக்குச் சென்றபிறகு சந்தித்த முதல் பிரச்சனை கிறிஸ்தவர்களுடைய பலதார மனம்தான். ஆயர் கியூ தன்னுடைய வல்லமையான போதனையால் கிறிஸ்தவர்களிடமிருந்த அந்த தீய பழக்கத்தை அப்புறப்படுத்தினார். இப்பிரச்சனையோடு ஆயர் இன்னொரு பிரச்சனையையும் சந்தித்தார். அதுதான் பாவ மன்னிப்புக்காக பெருந்தொகை வாங்குவது. இதனையும் அவர் அறவே ஒழித்தார்.

இப்படி அவருடைய ஆயர் பணி நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில், அவர் மீண்டுமாக துறவற மடத்தில் சேர்ந்து அங்கேயே ஒரு சாதாரண துறவியைப் போல் வாழத் தீர்மானித்தார். அதன்பேரில் அவர் அவெர்ணாவில் இருந்த துறவற மடத்திற்குச் சென்று அங்கு சிலகாலம் துறவற வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியார் கியூவின் சேவை கிரநோபல் மக்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து, அவரை மீண்டுமாக அந்நகரின் ஆயராக நியமித்தார். இரண்டாம் முறையாக கிரநோபல் நகரின் ஆயராக பதவியேற்றுக் கொண்டபிறகு ஆயர் கியூ இன்னும் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக துறவற சபைகளை அதிகமாக ஊக்கப்படுத்தி, அவர்களைத் தன்னுடைய மறைமாவட்டத்தில் நற்செய்திப் பணி செய்யப் பணித்தார். இப்படியாக ஆயர் கியூவுக்கும் தூய ப்ருனோ மற்றும் அவர்களுடைய ஆறு தோழர்களுக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

ஆயர் கியூ ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். சமயங்களில் அவர்கள் உணவின்றிப் பட்டினியாய் கிடந்தபோது திருச்சபைச் சொத்துகளையும் ஏன் ஆயருடைய மோதிரத்தையும்கூட விற்று அவர்களுடைய பசியைப் போக்கினார். அந்தளவுக்கு அவர் ஏழைகள் பால் அன்பு கொண்டிருந்தார். இப்படி அவர் இடையறாது பணி செய்ததால் அவருடைய உடல் நலம் குன்றியது. எனவே அவர் திருத்தந்தையிடம், மீண்டுமாகத் துறவற மடத்திற்குச் சென்று, அங்கே துறவியாக வாழலாமா என்று அனுமதி கேட்டார். அதற்கு திருத்தந்தை மறுப்புச் சொல்லவே, கியூ கடைவரைக்கும் ஆயராக இருந்து 1132 ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறந்த அடுத்த இரண்டாவது ஆண்டில் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கியூவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்ம்.

கீழ்படிந்து வாழ்தல்

ஆயர் தூய கியூவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த கீழ்படிதல்தான். ஆயர் பதவியை ராஜினமா செய்து அவ்வெர்ணாவில் இருந்த துறவற மடத்தில் அவர் துறவியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திருத்தந்தை ஏழாம் கிரகோரியார் மீண்டுமாக அவரை கிரநோபிலின் ஆயராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டபோது, எந்தவித மறுப்பும் சொல்லாமல், இறைவனின் திருவுளம் நிறைவேறட்டும் என்று கீழ்படிதலோடு ஆயர் பதவியை ஏற்றுக்கொண்டார். தூய கியூவிடமிருந்த கீழ்படிதல் என்ற பண்பு நம்மிடம் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிலிப்பிலியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2: 6-11 ல், இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்படிந்து வாழ்ந்தனால், தந்தைக் கடவுள் அவரை மேலும் மேலும் உயர்த்தினார் என்று பவுலடியார் கூறுவார். நாமும் இறைவனின் திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்கும்போது இறைவன் நம்மை மேலும் மேலும் உயர்த்துவார் என்று உண்மை.

சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழியிடம் சென்று, “நாங்கள் எங்களுடைய வீட்டிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறோம். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தக் சிறுமி, “நான் என்னுடைய பெற்றோரிடத்தில் கேட்டுவிட்டு அவர்கள் சரியென்று சொன்னால் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பெற்றோரிடத்தில் அனுமதி கேட்கப் போனாள். போனவள் திரும்பி வந்து தன் தோழியிடம், “என் பெற்றோர் என்னை போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் வரவில்லை” என்றாள். அதற்கு முதல் சிறுமி, “நீ உன்னுடைய பெற்றோரிடத்தில் கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால், அவர்கள் விட்டிருப்பார்கள். நீ அவர்களிடத்தில் அழுத்திக் கேட்கவில்லை போலும், அதனால்தான் அவர்கள் உன்னை விடவில்லை” என்றாள். “அப்படியில்லை, என்னுடைய பெற்றோருக்கு எது நல்லதெனத் தெரியும். அவர்கள் சொன்னதற்குக் கீழ்படிந்து நடப்பதே எனக்கும் நல்லது” என்றாள் இரண்டாம் சிறுமி.

ஆம் நாம் நமது பெற்றோரின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நடப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பது. இன்று நினைவுகூறும் தூய கியூவும் இறைவனுக்கு கீழ்படிந்து நடந்தார், அதனால் இறைவன் அவரைப் பன்மடங்கு உயர்த்தினார்.

ஆகவே, தூய கியூவை போன்று நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image