St. Irene St. Richard Of Chichester

ஏப்ரல் 3

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட்

mary

mary

சிசெஸ்ட்டர் நகர தூய ரிச்சர்ட் (ஏப்ரல் 03)

“இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாய் ஏற்படுத்தியுள்ளேன்” (ஏரே 9: 10)

வாழ்க்கை வரலாறு

ரிச்சர்ட், 1197 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரிச்சர்டின் தாயார் இவரை பக்தி நெறியில் வளர்த்ததால், சிறுவயதிலே இவர் இறைப்பற்றிலும் அறிவிலும் சிறந்து விளங்கினார்.

தொடக்கக் கல்வியை தான் பிறந்த ஊரிலே பெற்ற ரிச்சர்ட், மேற்படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பாரிசிலும் அதைத் தொடர்ந்து போலோங்கோவிலும் கற்றார். இவரிடமிருந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு இவரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார்கள். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை ரிச்சர்ட் சிறப்புடனே செய்து வந்தார். இதற்கடையில் இவருக்கு குருவாக மாறி, இறைவாக்குப் பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எனவே அவர் தான் வகித்து வந்த துணைவேந்தர் பதவி மற்றும் பெரிய இடத்திலிருந்து வந்த திருமணத்திற்கான அழைப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு குருத்துவ வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தார்.

குருத்துவப் படிப்பை நல்ல முறையில் படித்து முடித்த ரிச்சர்ட் குருவாகி, தன் சொந்த ஊருக்கு அருகிலே நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இவர் சிசெஸ்டர் நகர ஆயராக உயர்த்தப்பட்டார். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. எப்படியென்றால் அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் ஹென்றி என்ற மன்னன் தனக்கு நெருக்கமான ராபர்ட் என்பவரை ஆயராக நியமித்தான். ஏற்கனவே திருச்சபை சிசெஸ்டரில் ரிச்சர்டை ஆயராக நியமித்திருக்க, அரசன் தன் பங்குக்கு ராபர்ட் என்பவரை நியமித்ததால் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மூன்றாம் ஹென்றி என்ற அந்த அரசன் ரிச்சர்டை சிசெஸ்டருக்குள் வரவிடாமல் தடுத்தான். இதனால் ரிச்சர்ட் நாடோடியாகவே அங்கும் இங்கும் அலைந்து நற்செய்திப் பணி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் மனந்தளராது இறைவாக்குப் பணியைச் செய்து வந்தார்.

இந்த நேரத்தில் ரிச்சர்டுக்கு சைமன் என்ற குருவானவரின் நட்பு கிடைத்தது. அவருடைய இடத்தில் தங்கி ரிச்சர்ட் சிலகாலம் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். இப்படி நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்த தருணத்தில் திருத்தந்தை அவர்கள் மூன்றாம் ஹென்றியிடம், அவர் நியமித்த ஆயரை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை என்றால், திருச்சபையிலிருந்தே வெளியேற்றப்படுவாய் என்று சொன்னதும் பயந்துபோய், தான் நியமித்த ஆயரை திரும்பப் பெற்றுக்கொண்டான். இதனால் ரிச்சர்ட் சிசெஸ்டர் நகர ஆயராகப் பதவி ஏற்றார். ஆயராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, ரிச்சர்ட் அற்புதமான பணிகளைச் செய்தார். ஏழை எளியவரின் நலனில் அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுடைய மேம்பாட்டிற்காக இரவும் பகலும் உழைத்தார். அது மட்டுமல்லாமல், திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் ஒருசில விசமிகளிடமிருந்தும் காப்பாற்றக் கடுமையாக உழைத்தார். இப்படி இறைவாக்குப் பணியையும் மக்கள் பணியையும் செய்து வந்த ஆயர் ரிச்சர்ட் 1253 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவரின் பணியைச் செய்தல்

தூய ரிச்சர்ட்டிடமிருந்து நாம் கற்றுக்க்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருடைய பணியைச் செய்வதாகும். ஆயராக இருக்கும்போது மன்னன் மூன்றாம் ஹென்றியிடமிருந்து ரிச்சர்ட்டுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் கண்டு அவர் பயப்படாமல், அஞ்சா நெஞ்சத்தினராய் ஆண்டவரின் பணியைச் செய்தார். அவரை நினைவுகூருகின்ற நாம் அஞ்சா நெஞ்சத்தோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர் நற்செயாளர் யோவானின் சீடரும் ஸ்மிர்னா நகர ஆயருமான போலிகார்ப். அவரிடம் எதிரிகள், “கிறிஸ்துவை மறுதலி இல்லையென்றால் உன்னை உயிரோடு எரித்துவிடுவோம்” என்றார்கள். அதற்கு அவர், “எனக்கு 86 வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் இயேசு எனக்கு எந்தவொரு கெடுதலும் செய்யவில்லை. மாறாக நன்மை மட்டுமே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். இதைக் கேட்டு சினம் கொண்ட எதிரிகள் அவரை உயிரோடு எரித்து கொன்றுபோட்டார்கள். போலிகார்ப், எதிரிகள் தன்னை மிரட்டியபோதும் அஞ்சாமல் தன்னுடைய விசுவாசக்தில் மிக உறுதியாக இருந்தார். அது போன்றுதான் தூய ரிச்சர்டும் தன்னுடைய விசுவாசத்தில் தளராமல் இருந்தார். அதனாலேயே இன்றைக்கு ஒரு புனிதராக உயர்ந்திருக்கின்றார்.

ஆகவே, தூய ரிச்சர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

image