St. Mary Cleophas St. Waltrude St. Casilda

ஏப்ரல் 9

✠ புனித கஸில்டா ✠

mary

✠ புனித கஸில்டா ✠(St. Casilda of Toledo)

இறப்பு : கி.பி. 1050

புனிதர் கஸில்டா, ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார்.

கஸில்டா, பத்தாம் நூற்றாண்டில், ஸ்பெயின் (Spain) நாட்டின் "டோலேடோ" (Toledo) மாகாணத்தின் இஸ்லாமிய மத தலைவர் ஒருவரது மகளாகப் பிறந்தவர் ஆவார்.

இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட கஸில்டா, கிறிஸ்தவ கைதிகளின் மீது மிகுந்த இரக்கம் காட்டினார். தமது இஸ்லாமிய மதத்தின்மீது விசுவாசம் கொண்டிருந்த இவர், தினந்தோறும் கிறிஸ்தவ கைதிகளுக்கு ரொட்டிகளை மறைவாகக் கொண்டுவந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கிறிஸ்தவ கைதிகளுக்கு கொடுப்பதற்காக ரொட்டிகளை தமது ஆடையில் மறைத்து எடுத்துச் செல்கையில், எதிர்ப்பட்ட இஸ்லாமிய போர் வீரர்களால் சோதனையிடப்பட்டார். அவர்கள் அவரை சோதித்தபோது, அவரது ஆடையில் மறைவாக வைக்கப்பட்டிருந்த ரொட்டிகள் அழகிய ரோஜா மலர்களாக மாறினவாம்.

கஸில்டா தமது இளம் வயதில் நோய்வாய்ப்பட்டார். உள்ளூர் அரேபிய மருத்துவர்கள் அவரை குணப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லாதிருந்தது. அதனால், அவர் உள்ளூர் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு ஸ்பெயினிலுள்ள "ஸான் விகென்ஸோ" (San Vicenzo) திருத்தலத்திற்கு புனித பயணம் மேற்கொண்டால் தமது நோய்கள் தம்மை விட்டு விலகும், தாம் குணமடைவோம் என்று கஸில்டா நம்பினார். அவரைப் போலவே நோய்வாய்ப்பட்ட மக்கள் திருத்தல புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்களில் அநேகர் இரத்த ஒழுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கஸில்டா "ஸான் விகென்ஸோ" திருத்தலத்தின் புனித நீரை வேண்டி அருந்தினார். அவரை இந்த திருத்தலத்திற்கு இட்டுச் சென்ற சக்தி என்னவென்று இதுவரை யாருமறியார். ஆனால், வியக்கத்தக்க வகையில் அவர் குணமுற்றார்.

இதன் பிரதிபலனாக, கஸில்டா கிறிஸ்தவ மதத்தை மனமார ஏற்றார். "பர்கோஸ்" (Burgos) எனும் இடத்தில் இவர் திருமுழுக்கு பெற்றார். தனிமையிலும் தவ வாழ்வினை வாழ்ந்தார். இவர் சுமார் நூறு வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர் கி.பி. சுமார் 1050ம் வருடம் இறந்ததாக நம்பப்படுகிறது.

சரித்திரம் முழுதுமே, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே ஒரு பதட்ட சூழ்நிலையே நிலவி வந்திருக்கிறது. சில வேளைகளில் அவை இரத்தக்களறியான போர்களாகவும் வெடித்திருக்கின்றன. கஸில்டா தமது அமைதியான, எளிய வாழ்க்கை மூலம் தம்மைப் படைத்த இறைவனுக்கு - முதலில் ஒரு விசுவாசத்திற்கும் - பின்னர் வேறொன்றுக்குமாக - சேவை செய்திருந்தார்.

image