St. Bademus St. Fulbert St. Macarius of Antioch St. Magdalen of Canossa

ஏப்ரல் 10

தூய ஃபுல்பர்ட்

mary

mary

தூய ஃபுல்பர்ட் ( ஏப்ரல் 10)

இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

ஃபுல்பர்ட், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிகார்டி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் எந்த ஆண்டு பிறந்தார், இவருடைய குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பது போன்ற தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை.

தன்னுடைய தொடக்ககால கல்வியை ஃபுல்பர்ட், ஹெர்பர்ட் என்பவரிடம் கற்றார். இந்த ஹெர்பர்ட்தான் பின்னாளில் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டராக உயர்ந்தார். படிக்கும்போதே திறமையானவராக விளங்கிய ஃபுல்பர்ட் வளர்ந்து, பெரியவரான பிறகு மிகச் சிறந்த கல்வியாளராக மாறினார். எந்தளவுக்கு என்றால், அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள் அனைவரும் அவரை அன்போடு ‘வணக்கத்திற்குரிய சாக்ரடீஸ்’ என்றே அழைத்து வந்தார்கள்.

ஃபுல்பர்ட்டிடம் இருந்த திறமையைப் பார்த்துவிட்டு ஆயர் பேரவை இவரை சார்ட்ரஸ் என்ற இடத்திற்கு ஆயராக உயர்த்தினார்கள். ஆயராக உயர்ந்தபின்பு ஃபுல்பர்ட் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக திருச்சபையின் சொத்துகளை ஒருசில பொதுநிலையினர் நன்றாக அனுபவித்து வாழ்ந்தபோது, அதனைக் கடுமையாக விமர்சித்தார். அது மட்டுமல்லாமல், தவறு செய்த ஒருசில குருக்களையும் ஏன் ஒருசில ஆயர்களைக் கடுமையாக விமர்சித்தார். இதனால் அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஃபுல்பர்ட் அதைக் கண்டு பயப்படாமல், துணிவோடு உண்மையை எடுத்துரைத்தார். இவ்வாறு அவர் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார்.

ஃபுல்பர்ட் மிகச் சிறந்த கவிஞராகவும் விளங்கினார். அதனால் அவர் மரியாவைக் குறித்து அதிகமான கவிதைகளைப் புனைந்தார். இவரைக் குறித்து இன்னொன்றை நாம் சொல்லியாக வேண்டும். அதுதான் மரியன்னையின் பிறப்பு விழாவை முதன்முறையாகக் கொண்டாடியது இவரே ஆகும். இப்படி பல்வேறு பணிகளைச் செய்து வந்த ஃபுல்பர்ட் 1029 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருடைய உடல் சாட்ரஸ் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஃபுல்பர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கசடறக் கற்றுத் தருவோம்

தூய ஃபுல்பர்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் ஒரு கல்வியாளராக இருந்து, (ஆயராக உயர்ந்த பின்பும்கூட) ஆற்றிய பணிகள்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய ஃபுல்பர்ட்டை நினைவுகூரக்கூடிய நாம், அவரைப் போன்று நல்லவற்றை அடுத்தவருக்குக் கற்றுத் தருகின்றோமா?, அதன்மூலம் சமூகத்தில் மாற்றம் நிகழ்வதற்குக் காரணமாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வர், “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்று. ஆம், இந்த சமூகத்தில் புரட்சியோ, மாற்றமோ நிகழவேண்டும் என்று சொன்னால் அதற்குக் கற்பித்தல் பணியானது சிறப்பாக நடைபெறவேண்டும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், கற்பித்தல் பணி வியாபாரமயமாகிவிட்டதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது. கற்பித்தல் பணி வியாபாரமயமாகிய சூழ்நிலையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுவது கேள்விக்குறிதான்.

வேடிக்கையாகச் சொல்லப்படுகின்றன கதை இது. ஒரு நகரில் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தது. அதில் காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் கூட கிடைக்கும். ஓர் ஊர் நாட்டமை அந்தப் பட்டத்தை வாங்க ஆசைப்பட்டார். எனவே அவர் பல்கலைக்கழகத்தில் பேசி, ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவழித்து மூன்றே ஆண்டுகளில் எந்தவிதத் தகுதியுமின்றி டாக்டர் ஆகிவிட்டார். இது அந்த ஊரில் இருந்த தலையாரிக்குப் பிடிக்கவில்லை. உடனே அவர் பல்கலைகழகத்திற்குக் கடிதம் எழுதினர், “என்னிடம் ஐந்நூறு மாடுகள் இருக்கின்றன. அவற்றுக்கு டாக்டர் பட்டம் வேண்டும். அதற்கான பணத்தைக்கூட செலுத்திவிடுகிறேன்” என்று. சில நாட்கள் கழித்து அங்கிருந்து இப்படிப் பதில் வந்தது, “உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. உங்கள் மாடுகளுக்கு டாக்டர் பட்டம் தர எங்களுக்கு ஒன்றும் தடையில்லை; ஏனெனில், நாங்கள் ஏற்கனவே பத்துப் பதினைந்து கழுதைகளுக்குப் பட்டம் தந்துள்ளோம். கழுதைகளைவிட மாடுகள் மேலானவையே” என்று. இதைப் படித்துப் பார்த்துவிட்டு தலையாரி வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார்.

கதை வேடிக்கையாக இருந்தாலும் வியாபாரமயமாகிப் போய்விட்ட கல்வியை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் இருக்கின்றது. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் தூய ஃபுல்பர்ட்டைப் போன்று, மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்பது நமது கடமை.

எனவே, தூய ஃபுல்பர்ட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று மக்களுக்கு நல்லவற்றைப் போதித்து, இறைவனிடம் அழைத்து வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image