St. Teresa Of Jesus De Los Andes St. Zeno

ஏப்ரல் 12

தூய தெரசா தே லோஸ் அன்டெஸ்

mary

mary

தூய தெரசா தே லோஸ் அன்டெஸ் (ஏப்ரல் 12)

“உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை” (மத் 22: 37- 39)

வாழ்க்கை வரலாறு

தெரசா தே லோஸ் அன்டெஸ் என்ற அழைக்கப்படும் ஜுவனிட்டா பெர்னாண்டஸ் சோலார் (Juanita Fernandes Solar) 1990 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள் 13 ஆம் நாள், சிலி நாட்டில் பிறந்தார். இவர் மிகவும் அழகான பதுமையாய் விளங்கினார். ஆனாலும் அவர் தன் அழகை ஆண்டவருக்கென்றே ஒப்படைத்து வாழ்ந்து வந்தார்.

அன்டெஸின் குடும்பம் பக்தியில் சிறந்த குடும்பமாய் இருந்தது, அதனால் அவரும் பக்தி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். அன்டெசுக்கு பத்தொன்பது வயது நடக்கும்போது அதாவது 1919 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள், அவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். எனவே, அவர் தன்னுடைய பெற்றோரின் அனுமதியுடன் கார்மேல் சபையில் சேர்ந்தார். அங்கு அவர் குழந்தைத் தெரசாவின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டு தன்னுடைய பெயரை தெரசா தே லோஸ் அன்டெஸ் என மாற்றிக்கொண்டார். அது மட்டுமல்லாமல், அவரைப் போன்றே வாழ்க்கை நடத்தத் திருவுளமானார்.

கார்மேல் சபையில் இருந்த நாட்களில் எல்லாம் அன்டெஸ் உண்மையான அன்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார். உண்மையான அன்பு தன்னை மட்டும் அன்பு செய்வது கிடையாது, பிறரையும் அன்பு செய்வது என்பதை உணர்ந்தவராய் தன் சபையில் இருந்த சகோதரிகள் அனைவரையும் முழுமையாக அன்பு செய்தார். அதனால் எல்லாருடைய அன்பிற்கும் அவர் உரியவரானார். இப்படி வாழ்க்கை மிகவும் மிகழ்ச்சியாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், திடிரென்று ஒரு நாள் நிமோனியாக் காய்ச்சலால் படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். அப்போது அன்டெசுக்கு வயது வெறும் இருபது தான். அவருடைய இறப்பின்போது அவரது சபையில் இருந்த சகோதரிகளில் அழாதவர் எவரும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய தெரசா தே லோஸ் அன்டெசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறையன்பு – பிறரன்பு

தூய அன்டெசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவருடைய அன்பு மயமான வாழ்வு, அதாவது அவர் இறைவனையும் தம்மோடு வாழ்ந்த சபை சகோதரிகளையும் முழுமையாக அன்பு செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், இறைவனையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதரையும் அன்பு செய்கின்றோமா? அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனை அன்பு செய்யக்கூடிய அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யாதது, அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யாதது மிகவும் வேதனையான விஷயம். இத்தகைய சூழ்நிலையில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதும், அந்த அன்பிற்கு ஈடாக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக செயற்கைக் காலோடு ஒருவர், காது கேளாத இருவர், வலிப்பு நோயுள்ள இன்னொருவர், கண் தெரியாத ஐவர் ஆகிய ஒன்பது பேரும் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள மவுண்ட் ரானியர் என்ற சிகரத்தைத் தொட்டுவிட்டு வெற்றிகரமாய் திரும்பிய போது, பத்திரிக்கையாளர்கள் சிலர் அவர்களிடம், “குறையுள்ள உங்களால் இது எப்படி சாத்தியமானது?” என்று கேட்டதற்கு, அவர்கள், “பயணப் பாதை முழுவதும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவியால்தான்” என்றார்கள். இதைக்கேட்டு பத்திரிக்கையாளர்கள் மட்டும் கிடையாது, அங்கிருந்த பொதுமக்களும் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம், குறைபாடு உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு உதவிசெய்துகொள்ளும் போது, நல்ல நிலையில் இருக்கும் நாம் ஏன் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யாமல் இருக்கின்றோம் என்பது கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, தூய தெரசா தே லோஸ் அன்டெஸ் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனையும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் ஒவ்வொருவரையும் முழுமையாக அன்பு செய்வோம். அந்த அன்பிற்கு இலக்கணமாக அவர்களுக்கு உதவிகள் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

 

image