St. Hermenegild St. Martin I

ஏப்ரல் 13

தூய முதலாம் மார்டின்

mary

தூய முதலாம் மார்டின் (ஏப்ரல் 13)

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 12: 24)

வாழ்க்கை வரலாறு

மார்டின் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டோடி என்னும் நகரில் பிறந்தார். . இவர் வளரும்போதே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கியதால், திருத்தந்தை அவர்கள் இவரை கொன்ஸ்தாந்திநோபல் நகரின் தூதுவராக ஏற்படுத்தினார். ஒருசில ஆண்டுகளிலே இவர் திருத்தந்தையாகவும் உயர்ந்தார்.

திருத்தந்தையாக உயர்ந்த பின்பு மார்டின் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து வந்தார். குறிப்பாக திருச்சபையை எதிரிகளிடமிருந்தும் தப்பறைக் கொள்கைக் கொள்கைகளிலிருந்தும் கட்டிக்காப்பாற்றி வந்தார்.. இவருடைய காலத்தில் மொனோதலிடிசம் எனப்படும் தப்பறை கொள்கை திருச்சபைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இத்தப்பறைக் கொள்கை இயேசுவுக்கு இறையியல்பு மனித இயல்பு என்ற இரு இயல்புகள் கிடையாது, ஒரு இயல்பு தான் இருக்கின்றது என்று சொல்லி வந்தது. இதனை திருத்தந்தை மார்டன் மிகக் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்லாமல் லாத்தரன் சங்கத்தைக் கூட்டி, இத்தப்பறைக் கொள்கையைப் பரப்பி வந்த கொன்ஸ்தாந்திநோபலின் மன்னன் கொன்ஸ்டண்டீனை கடுமையாக எதிர்த்தார்.

இது அரசனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவன் வெகுண்டெழுந்தான். திருத்தந்தை மார்டினைப் பிடிக்க ஒலிம்பியம்ஸ் என்பவனை அனுப்பி வைத்தான். அவனால் திருத்தந்தையைப் பிடிக்க முடியவில்லை. காரணம் திருத்தந்தையிடமிருந்த ஏதோ ஓர் ஆற்றல், அவரை அவன் நெருங்க விடாமல் செய்தது. எனவே, அவன் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டு ஓடிப்போனான். ஒலிம்பியசுக்குப் பிறகு மன்னன் தியோடர் என்பவனை அனுப்பி வைத்து, திருத்தந்தையை பிடிக்கச் செய்தான். அவன் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையைப் பிடித்துக் கொண்டுபோய் கொன்ஸ்தாந்திநோபல் நகரில் போய் இறக்கினான். ஏற்கனவே உடல் வலுவற்று இருந்த திருத்தந்தை, கப்பல் பயணத்தின்போது சரியாக உணவு கொடுக்கப்படாததால் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கொன்ஸ்தாந்திநோபல் நகருக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தந்தைக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். ஆனால், அங்கிருந்த மக்களோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனை சற்றும் எதிர்பார்த்திராத மன்னன் அவரை கெர்சோன் என்ற பகுதிக்கு நாடு கடத்தினான். அங்கு அவர் ஒன்றரை ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து போய், 655 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவர் இறந்த பின்பு, இவருடைய உடல் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில் நிறையப் புதுமைகள் நடந்தன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

துணிவோடு இருத்தல்

தூய மார்டினின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரிடம் இருந்த துணிச்சல், யாருக்கும் அஞ்சாத மன உறுதிதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய மார்டினின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்றது துணிச்சலோடு ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைக்கின்றோமா? அவருக்குச் சான்று பகற்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கல்லூரி ஒன்றில் ‘சுய முன்னேற்ற வகுப்பு’ நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரிடம், மாணவன், “துணிச்சல் என்றால் என்ன?” என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் அவனிடம், “மனத்தளர்ச்சி கொள்ளாமல், தோல்விகளையும் அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்வதே மகத்தான துணிச்சல்” என்றார். இதை கேட்டு அந்த மாணவன், வாழ்வில் வரக்கூடிய தோல்விகளையும் கஷ்டங்களையும் துணிவோடு தாங்கிக்கொள்ளத் தயாரானான். ஆமாம், நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற கஷ்டங்கள், அவமானங்கள் போன்றவற்றை எல்லாம் உறுதியான மனநிலையோடு தாங்கிக் கொண்டு, தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடப்பதுதான் உண்மையான துணிச்சல் ஆகும்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய பணி வாழ்வில் பல்வேறு எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தார். திருமுழுக்கு யோவானும் அப்படித்தான். இவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வில் எதிர்ப்புகளும் அவமானங்களும் வந்துவிட்டதே என்று தங்களுடைய முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. எப்போதும் அவர்கள் முன்னோக்கித்தான் சென்றார்கள். அதனால்தான் இன்றைக்கும் நம்மால் நினைவுகூரப் படுபடுகின்றார்கள்.

ஆகவே, தூய மார்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, அஞ்சா நெஞ்சத்தோடும் துணிச்சலோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

image