Bl. Damien De Veuster Bl. Caesar de Bus

ஏப்ரல் 15

முத்திபேறுபெற்ற. சீசர் தே பஸ்

mary


முத்திபேறுபெற்ற. சீசர் தே பஸ் (Caesar de Bus)

சபை நிறுவுனர்

பிறப்பு 3 பிப்ரவரி 1544 கவைலன் (Cavailon), பிரான்சு

இறப்பு 15 ஏப்ரல் 1607 அவஞ்நான்(Avignon), பிரான்சு

முத்திபேறுபட்டம்: 1975 திருத்தந்தை ஆறாம் பவுல்

சீசர் 1544 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள கவைலன் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல ஆண்டுகள் ஓர் அரசனின் படையில் சேர்ந்து, படை வீரராக பணியாற்றினார். போர் முடிந்து வீடு திரும்பிய விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தன் நேரத்தை செலவழித்தார். பின்னர் பிரான்சு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட பிரெஞ்சு இராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் பஸ் தானும், கடற்படை இராணுவத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் இவர் ஒவிங்ஸ்(Owings) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார். மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படை அதிகாரி உத்தரவிட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் பஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.

பின்னர் தன் சொந்த ஊரான கவைலன்-க்கு திரும்பினார். அப்போது குருவாக பணியாற்றிய தன் உடன்பிறந்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீசர் பஸ், தான் குருவாக விரும்பி, தன் அண்ணன் ஆற்றிய இயேசுவின் சீடத்துவ பணியை தொடர விருப்பம் தெரிவித்து, உலக ஆசைகளை வெறுத்து, குருமடத்தில் சேர்ந்து 1582 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான பிறகு மறையுரை ஆற்றுவதிலும், மறைக்கல்வி போதிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

பிறகு 1592 -ல் குருமட மாணவர்கள் இறையியல் படிக்கவேண்டுமென்று, பிரான்சிலுள்ள பாரீசில், இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதன் பிறகு அக்கல்லூரியில் படித்த சில மாணவர்களைக் கொண்டு "மதச்சார்பற்ற கிறிஸ்துவ குருக்கள்" (Secular priests of Christian Doctrine) என்ற சபையை பிரான்சிலுள்ள அவிஞ்நானிலும், சுவிட்சர்லாந்திலும் நிறுவினார். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்கள் 1597 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், இச்சபை ஓர் மதசார்பற்ற சபை என்ற அங்கீகாரத்தை வழங்கினார். தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே இச்சபை நிறுவப்பட்டது. பின்னர் பெண்களுக்காகவும் கிறித்தவர்களின் மகள்கள்(Daughters of Christians) என்ற சபை நிறுவப்பட்டது. இச்சபையே சில வருடங்கள் கழித்து உருசுலின்ஸ்(Ursulines) என்று பெயர் மாற்றம் பெற்று, இன்று வரை இயங்கிவருகிறது.

சீசர் பஸ் 1607 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் பிரான்சிலுள்ள அவிஞ்நான் என்ற ஊரில் இறந்தார். 1975ஆம் ஆண்டு வத்திகானிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.

செபம்:
மன்னிப்பின் நாயகனே! தான் செய்த பாவங்களை நினைத்து மனந்திரும்பி, உம் பாதையை தொடர்ந்த சீசர் பஸ்சை போல, நாங்களும் எம் பாவங்களிலிருந்து விடுப்பட்டு, மனந்திருந்தி வாழ உம் அருளைத் தாரும்.

 

image