St. Benedict Joseph Labre St. Bernadette

ஏப்ரல் 16

தூய பெர்னதெத்

mary

mary

தூய பெர்னதெத் (ஏப்ரல் 16)

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்” (மத் 18: 3-4)

வாழ்க்கை வரலாறு

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அருகில் இருந்த நெவர்ஸ் என்னும் இடத்தில், 1844 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் பெர்னதெத் பிறந்தார். 6 பேர் அ டங்கிய இவருடைய ஏழ்மையான வீட்டில் இவள்தான் மூத்தவள். ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவள். பெர்னதெத்தின் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனது. பெர்னதெத்துக்கு சிறுவயதிலே ஆஸ்மா நோய் வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் பெர்னதெத் தன்னுடைய நண்பர்களோடு அருகிலிருந்த மசபெல் குகைக்கு ஆடு மேய்க்கச் சென்றார்.

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் அவர் இப்படி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து ஒரு பெண் தோன்றினார். அவர் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தார், இடையில் ஊதா நிறக் கச்சை அணிந்திருந்தார். கையில் ஜெபமாலை வைத்திருந்தார். இக்காட்சி பெர்னதெத்துக்கு மட்டுமே தெரிந்தது. அவருடைய நண்பர்களுக்குத் தெரியவில்லை. இதை அவர் தன்னுடைய வீட்டிலும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடமும் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை. மாறாக பெர்னதெத் பிதற்றுகிறார் என்றார்கள்.

தொடர்ந்து பெர்னதெத் மசபெல் குகைக்குச் சென்று, ஆடு மேய்க்கும்போது, வானத்திலிருந்து தோன்றிய பெண்மணி தன்னை ‘நாமே அமல உற்பவம்’ என்றும், பாவ மன்னிப்புப் பெற மனமாறவேண்டும் என்றும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்றும் அவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அதையும் பெர்னதெத் அங்கிருந்த பங்குத்தந்தையிடமும் அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னபோது அவர்கள், அதனை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னே நம்பமுடியும் என்று சொல்லிவந்தார்கள். அதற்குள் மரியன்னை பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த செய்தி மக்களுக்குத் தெரியவர பெருந்திரளான மக்கள் அங்கு வந்தார்கள்.

இதற்கிடையில் 1868 ஆம் ஆண்டு, பெர்னதெத் நெவர்ஸ் நகரில் இருந்த துறவற சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் ஜெபத்திலும் தவத்திலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல், தாழ்ச்சிக்கு இலக்கணமாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே அவர் ஆஸ்மா நோய்க்கு உள்ளாகி இருந்ததால் உடலளவில் பெரிதும் கஷ்டப்பட்டார். 1879 ஆம் ஆண்டு வந்த ஏப்ரல் மாதத்தில் அவருடைய நோய் முற்றிப்போனது. இதனால் அவர் படுத்த படுக்கையானார். ஏப்ரல் 16 ஆம் நாள், தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீளமுடியாமல் அப்படியே இறையடி சேர்ந்தார். இவருக்கு 1933 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெர்னதெத்தின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தாழ்ச்சி

தூய பெர்னதெத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடமிருந்த தாழ்ச்சிதான். அவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அவர் சொல்வார், “நான் ஒரு துடைப்பதற்குச் சமமானவள். துடைப்பம் வீட்டைச் சுத்தமாக்குகிறது என்பதற்காக அதனை வீட்டின் நடுவே யாரும் வைப்பதில்லை, அதுபோன்றுதான் மரியா தன்னுடைய திருநாமம் விளங்க என்னைப் பயன்படுத்தினார். அவருடைய திருநாமம் பரவிவிட்டது. இப்போது என்னுடைய தேவையும் முடிந்துவிட்டது. இப்போது நான் ஒரு துடைப்பத்தைப் போன்றே கிடக்கிறேன்” என்று. மரியன்னை தனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர் தலைக்கனத்தோடு இருக்கவில்லை, தாழ்ச்சியோடுதான் இருந்தார். அவரிடமிருந்த தாழ்ச்சி நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு நாம் அடுத்தவரால் உயர்வாக மதிக்கப்படவேண்டும், போற்றப்பட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முன்வருவதில்லை. இத்தகைய சூழ்நிலைதான் தாழ்ச்சியோடு வாழ்ந்த தூய பெர்னதெத் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஒரு சமயம் மிகச் சிறந்த இசைக் கலைஞராகிய லியோனார்டு பெர்ன்ஸ்டேன் என்பவரிடம் நிருபர் ஒருவர், “எந்த இசைக்கருவியை வாசிப்பது மிகவும் கஷ்டம்?” என்று கேட்டார். அதற்கு அவர், இரண்டாம் வயலின்” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று நிருபர் கேட்டதற்கு அவர், “முதலாம் வயலின் வாசிப்பவர் எல்லாருடைய கவனத்தையும் பெறுவார், இரண்டாம் வயலின் வாசிப்பவர் அப்படிக் கிடையாது, அவர் யாருடைய கவனத்தையும் பெறமாட்டார். அதனாலேயே இரண்டாம் வயலின் வாசிப்பது மிகவும் கஷ்டம். அதனை வாசிப்பதற்கு உள்ளத்தில் நிறையத் தாழ்ச்சி தேவை” என்றார். ஆமாம், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரால் மட்டுமே இரண்டாம் வயலினை வாசிக்க முடியும். இன்று நாம் நினைவுகூரும் பெர்னதெத்தும் தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, தூய பெர்னதெத்தின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

 

 

image